இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பொதுவாகவே பெண்கள் தைரியமும், துணிச்சலும் மிக்கவர்களாக மட்டுமின்றி போராட்ட குணம் உடையவர்களாகவும் காணப்படுவர். அப்படியான பெண்களின் வரிசையில் மிக முக்கியமானவராக தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரக்கூடியவர்தான் நடிகை சமந்தா. காரணம் ஒரு சிறந்த நடிகை என்பதை தாண்டி மிகுந்த மன வலிமை மிக்க பெண்ணாகவும் இவர் இருப்பதால்தான். சாதாரண குடும்பத்தில் பிறந்து, ஒரு மாடலாக கலைத்துறையில் களமிறங்கி, பின்னர் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக அசுர வளர்ச்சி பெற்ற சமந்தா வெறும் வெற்றிகளை மட்டுமே சுவைத்தவர் அல்ல. பல தோல்விகளையும், தனிப்பட்ட வாழ்க்கையில் பல சறுக்கல்களையும், மோசமான விமர்சனங்களையும், உடல் ரீதியாக பல போராட்டங்களையும் கடந்து வந்தவர். இப்படியான தருணத்தில் இனி சமந்தா நடிக்கவே மாட்டார் என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்க பீனிக்ஸ் பறவையை போல மேலே பறந்து மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர ஆரம்பித்தார். அதுமட்டுமின்றி, இன்று தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ள சமந்தா சொந்தமாக “ட்ரா-லா-லா மூவிங் பிக்சர்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, அதில் ‘மா இண்டி பங்காரம்’ என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இப்படம் குறித்தும், படத்தில் சமந்தாவின் வேடம் என்ன என்பது குறித்தும், ஒரு நடிகையாக சமந்தா கண்ட வெற்றிகள் குறித்தும் இந்த கட்டுரையில் காணலாம்.

சமந்தாவின் போராட்ட குணம்


நடிக்க வந்த துவக்க காலத்தில் சமந்தா

கெளதம் வாசுதேவ் மேனனின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்திருந்தாலும், சோலோ ஹீரோயினாக சமந்தா தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானது என்னவோ அதர்வா முரளியின் ‘பாணா காத்தாடி’ திரைப்படத்தில்தான். இங்கு ஆரம்பித்த சமந்தாவின் திரைப்பயணம் அடுத்தடுத்து ‘மாஸ்கோவின் காவேரி’, ‘நடுநிசி நாய்கள்’, ‘நீதானே என் பொன்வசந்தம்’ என பயணித்து வந்தாலும் தமிழில் குறைந்த அளவிலான படங்களிலேயே நடித்தார். காரணம் தெலுங்கு திரையுலகில் அவர் தன் முதல் படத்திலேயே வெற்றி முத்திரையை பதித்து அங்கு பிஸியானதால்தான். தமிழில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கெளதம் வாசுதேவ் மேனன் அப்படத்தினை தெலுங்கில் எடுத்தார். தமிழ் பதிப்பில் ஒரு சிறிய ரோலில் நடித்த சமந்தாவை, தெலுங்கில் ஹீரோயினாக, நாக சைதன்யாவிற்கு ஜோடியாக நடிக்க வைத்து அங்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார். தமிழில் வெற்றி பெற்றது போலவே தெலுங்கிலும் இப்படம் வெற்றி பெற சமந்தாவின் மார்க்கெட் அங்கு உயர்ந்தது. இதனால், தொடர்ந்து தமிழை விடவும் தெலுங்கில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடிக்க தொடங்கினார். ஆனாலும், எத்தனை முன்னணி ஹீரோக்களுடன் சமந்தா நடித்திருந்தாலும், யார் மீதும் ஏற்படாத காதல், தன் முதல் தெலுங்கு பட ஹீரோவாக தன்னுடன் கை கோர்த்த நாக சைதன்யா மீது மட்டும் ஏற்பட்டது.


முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் சமந்தா

அந்த காதல் 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி அன்று திருமணத்திலும் முடிந்தது. திருமணம் செய்துகொண்டாலும் கணவர் மற்றும் குடும்பத்தினரின் அனுமதியுடன் தமிழில் விஜய், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் வெற்றிகரமாக நடித்து வந்தார். இருந்தும் என்ன பயன் என்பதுபோல் தெலுங்கில் பல படங்களில் இணைந்து வெற்றியை கொடுத்த சைதன்யா - சமந்தா ஜோடி, நிஜ வாழ்க்கையில் மட்டும் தோல்வியை தழுவி 2021-ஆம் ஆண்டு அதே அக்டோபர் மாதம் 2ஆம் தேதி விவாகரத்து பெற்றது. இந்த விவாகரத்தால் பல நெகட்டிவான, அதிலும் மோசமான விமர்சனங்களையும் சமந்தா சந்திக்க தவறவில்லை. அதிலும், நாக சைதன்யா - சமந்தா ஜோடியின் விவாகரத்திற்கு பிறகு இனி சமந்தாவிற்கு பட வாய்ப்புகள் ஏதும் பெரிதாக இருக்காது. இனி அவ்வளவுதான் என பலரும் பலவிதமாக பேச ஆரம்பிக்க, அதற்கு நேர் எதிராக யோகா செய்வது, நண்பர்களுடன் சுற்றுலா செல்வது, இன்ஸ்டாவில் பதிவுகளை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவது என தன் சிந்தனைகளை திசை திருப்பி அதில் இருந்து மீள முயற்சி செய்தார். இந்த நேரம், பட வாய்ப்புகளும் வர அவற்றையும் ஏற்று நடித்து ஒரு ரவுண்ட் வர ஆரம்பித்த சமந்தாவிற்கு அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தில் வந்த “ஊ சொல்றியா மாமா” பாடலும் சரி, சர்வானந்துடன் நடித்த ‘ஜானு’ திரைப்படமும் சரி வெற்றிபடிக்கட்டுகளாக அமைந்தன. இப்படங்களில் நடித்த சமயங்களில் ஒருபுறம் நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தாலும், மற்றொருபுறம் அவரை ஊக்கப்படுத்தும் விதமாக அவரது ரசிகர்கள் எங்கு திரும்பினாலும் சாம், சாம் என கொண்டாடி தீர்த்தனர். இப்படி புகழ் மேல் புகழ் சேர்த்து மேலே எழ ஆரம்பித்தவருக்கு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயும் ஏற்பட்டு அவர் மொத்தமாக முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

மயோசிடிஸை வென்ற ஃபீனீக்ஸ் பறவை


ஒரு நேர்காணலில் சமந்தா வருத்தப்பட்டு அழுதபோது

பொதுவாகவே போராடும் குணம் கொண்ட சமந்தா, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அவரை பிரிந்து அதில் இருந்து மீண்டு வந்த சிறிது காலத்திலேயே மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். அதிலும் வெற்றிகரமாக தன் திரை பயணத்தை தொடங்கிய சிறிது நாட்களிலேயே இப்படியான ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் அறிவித்தது சமந்தாவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 2022-ஆம் ஆண்டு தெலுங்கு படமான ‘யசோதா’-வில் நடித்து முடித்து அதன் டப்பிங் பணியை தொடங்கியிருந்த சமயத்தில் தனக்கு மயோசிடிஸ் எனும் நோய் பாதிப்பு இருப்பதாக கூறி, சிகிச்சை பெற்றுக் கொண்டே டப்பிங் பணியில் ஈடுபடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இதனை பார்த்து அவரது ரசிகர்கள் வருத்தப்பட, நெட்டிசன்கள் சிலர், மிகவும் மோசமான அரியவகை நோய் இது என்பதால் இதில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம், இனி சமந்தாவால் நடிக்க முடியாமல் போய்விடும் என்று பேச ஆரம்பித்தனர். இருப்பினும் 'குஷி' படம் முதல் பல குஸ்தி படங்கள்வரை அனைத்திலும் வேகம் காட்டி வந்தார் சமந்தா. அவ்வப்போது சமூக வலைதளங்களில் தன் பதிவுகள் வாயிலாக சீக்கிரம் இந்த நோயில் இருந்து மீண்டு வந்துவிடுவேன், மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள் என்று ரசிகர்களை சமாதானப்படுத்தியும் வந்தார். அவர் சொன்னது போலவே கொஞ்சம் கொஞ்சமாக அந்த நோயில் இருந்து மீண்டு வந்தவர் மறுபடியும் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.


'சாகுந்தலம்' படத்தில் நாயகன் தேவ் மோகனுடன் சாகுந்தலாவாக நடிகை சமந்தா

அப்படி கடந்த ஆண்டு அவர் நடித்து தெலுங்கில் வெளிவந்த ‘சாகுந்தலம்’ படத்தின் பிரமோஷனுக்காக பாலிவுட் ஊடகத்திற்கு பேட்டியளித்த சமந்தாவிடம் மயோசிடிஸ் நோயில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சமந்தா, இன்னும் அந்த நோயில் இருந்து முழுமையாக குணமாகவில்லை. ஆனால், முன்பை விட இப்போது என்னுடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இவ்வளவு பிரச்சினையிலும் நடிப்பை விடாது ஒருபுறம் சிகிச்சை எடுத்துக்கொண்டே மிகவும் ரிஸ்க் நிறைந்த காட்சிகளான சண்டை காட்சிகளிலும் சில படங்களில் நடித்து பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தார் சமந்தா. இதுதவிர, ’சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் நடித்த சமயத்திலும் சண்டை பயிற்சி மற்றும் குதிரை பயிற்சியையும் எடுத்துக்கொண்ட சமந்தா, பயிற்சியின்போது விபத்தில் ஏற்பட்ட காயங்களை புகைப்படத்துடன் பகிர்ந்து, மீண்டும் மீண்டும் எழுவேன் என்று கூறியிருந்தார். அவரின் இந்த போராட்ட குணம்தான் அவரை இத்தனை தடைகளிலிருந்தும் மீண்டு எழவைத்து ஃபீனிக்ஸ் பறவையை போன்று பறக்க வைத்துள்ளது.

துப்பாக்கி ஏந்தி கலக்கல் போஸ்

இவ்வளவு பிரச்சினைகளுக்குப் பிறகும் வெற்றிகரமாக கடந்த 13 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் சமந்தா, நடிகையாக மட்டுமில்லாது கடந்த 2023-ஆம் ஆண்டு “ட்ரா-லா-லா மூவிங் பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி தயாரிப்பாளராகவும் புதுப் பரிமாணம் பெற்றார். இதுதொடர்பான அறிவிப்பினை வெளியிட்ட அந்த தருணத்தில், புதிய சிந்தனைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும், பல சாதனைகளை நிகழ்த்த விரும்பும் படைப்பாளிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் வகையிலும் இந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டிருப்பதாக சமந்தா கூறியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி அன்று தனது 37வது பிறந்தநாளை முன்னிட்டு புதிய படம் குறித்த அப்டேட் ஒன்றை சமந்தா வெளியிட்டிருந்தார். அதில், 'மின்னுவதெல்லாம் பொன்னல்ல' என்ற தலைப்பில் தான் சொந்தமாக தயாரித்து நடித்துவரும் ‘மா இண்டி பங்காரம்’ என்ற படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். மேலும், அந்த போஸ்டரில், நடிகை சமந்தா கையில் துப்பாக்கியுடன் இருப்பதுபோல் நிற்கும் போஸ், பார்க்க டெரராக இருப்பதுடன், அடுத்த பாய்ச்சலுக்கு சமந்தா தயாராகிவிட்டார் என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது. தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவரும் இந்த படம் குறித்த அறிவிப்பில், யார் இயக்குனர்? எந்ததெந்த நடிகர், நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்தெல்லாம் எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் விரைவில் துவங்கி, படம் குறித்த விவரங்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Updated On 13 May 2024 11:30 PM IST
ராணி

ராணி

Next Story