இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இசை, பாடல் இரண்டையும் எப்படி தனித்தனியாக பிரித்து பார்க்க முடியாதோ அப்படித்தான் இந்த காதல் ஜோடியும் தமிழ் திரையுலகில் பிரித்து பார்த்திட முடியாத படி இசையும், குரலுமாக ஒன்றாக வலம்வந்து பலரையும் பொறாமைப்பட வைத்தனர். இசை என்ற ஒற்றை புள்ளியில் ஆரம்பித்த இவர்களின் அறிமுகம் நண்பர்கள் என்ற நிலையில் இருந்து காதலாக மாறி, பின்னர் கசிந்துருகி திருமணம் என்ற அழகான பந்தத்திற்குள் நுழைந்தது. குரல் இனிதாய், இசை அமுதாய் ஆழ்மனதை தொட்டு இசையும், குரலுமாக அமைதியாக அசைபோட வைத்த இந்த காதல் ஜோடிகள் இணைந்தாலே அந்த பாடலும் சரி, இசையும் சரி வெற்றிதான் என சொல்லும் அளவுக்கு வெற்றியாளர்களாகவே பலராலும் பார்க்கப்பட்டனர். ஆனால், யார் கண் பட்டதோ இந்த அழகான ஜோடி இன்று தங்களின் 11 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளது. அவர்கள் வேறு யாரும் இல்லை. தமிழ் திரையிசையின் தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரரான பாடகி சைந்தவியும், தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர், நடிகர் என்ற பன்முகங்களை கொண்ட ஜி.வி.பிரகாஷும்தான். இதில் குறிப்பாக தற்போது ஜி.வி.பிரகாஷ், இசை, நடிப்பு என பிஸியாக வலம் வருவதால் இந்த பிரிவின் வலியை அவர் எந்த அளவுக்கு உணர்ந்தாரோ தெரியவில்லை, நிச்சயம் சைந்தவி மனதளவில் வெகுவாக கலக்கத்தை சந்தித்திருப்பார். பள்ளி பருவத்தில் தொடங்கிய இவரது காதல், திருமணம்வரை வந்தது எப்படி? இசையில் தனிப்பட்ட முறையிலும், தனது கணவருடன் இணைந்து இவர் நிகழ்த்திக்காட்டிய சாதனைகள் என்னென்ன? 23 ஆண்டுகள் நல்ல தோழியாகவும், 11 ஆண்டுகள் நல்ல மனைவியாகவும் கணவர் ஜி.வியுடன் இவர் இணக்கத்துடன் வாழ்ந்திருந்தாலும், இருவரும் இணைந்து பிரிந்துவிடலாம் என்கிற திடீர் முடிவு எடுக்க காரணம் என்ன? போன்ற பல விஷயங்களை இந்த பதிவில் காணலாம்.

சைந்தவியின் ஆரம்பகாலம்


மேடை கச்சேரியில் சைந்தவி

குரல் இசை செல்வி, குரல் இசை சுடர் என்று அன்போடு அழைக்கப்படும் சைந்தவி, 1989-ஆம் ஆண்டு ஜனவரி 03-ஆம் தேதி சென்னை மேற்கு மாம்பலத்தில் ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் டாக்டர் ஸ்ரீவத்சன் - ஆனந்தி தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு விஜய் கார்த்திக், வினோத் கிருஷ்ணா என்ற இரண்டு சகோதரர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர். சைந்தவியின் தந்தை ஸ்ரீ வத்சன் மருத்துவராகவும், அம்மா ஆனந்தி வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாகவும் பணியாற்றியவர்கள். பெற்றோர்கள் இருவரும் இசை கச்சேரிகள், பஜனை நிகழ்ச்சிகள் போன்ற எந்த நிகழ்வுகளுக்கு சென்றாலும் மகள் சைந்தவியையும் கூடவே அழைத்துச் செல்வது வழக்கம். அப்படி இசை கச்சேரிகளுக்கு சென்ற இடத்தில், தான் கேட்டு ரசித்த கர்நாடக சங்கீதத்தின் மீது அதீத ஆர்வம் ஏற்பட்டு அதனை முறைப்படி கற்றுக்கொள்ள முடிவு செய்தார் சைந்தவி. இசை பின்புலம் உள்ள குடும்பம் இல்லை என்றாலும் தன் மகளின் விருப்பத்தினை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று சைந்தவியின் பெற்றோர்களும், மகளை டி.கே.பட்டம்மாள், திருமதி சுப்புலட்சுமி போன்ற சங்கீத ஜாம்பவான்களிடம் இசை கற்றுக்கொள்ள அனுப்பிவைத்தனர். அப்படி கற்றுக்கொண்டு மகள் பாடுவதை கேட்டு ஆச்சரியப்பட்ட சைந்தவியின் தாயார், மகளின் திறமையை மேலும் ஊக்குவிக்க வேண்டும், மற்றவர்களை போன்று மகளையும் இசை கச்சேரிகளில் பாட வைக்க வேண்டும், அவரின் முழு திறமையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று, தான் பார்த்துக் கொண்டிருந்த வங்கி வேலையை விட்டுவிட்டு முழுநேரம் மகளுடன் பயணிக்க ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து சைந்தவி வெறும் இசை கற்றலோடு மட்டும் நின்றுவிடாமல் கற்றுக்கொண்ட இசையை கச்சேரிகளிலும், தனது பள்ளியில் நடைபெறும் நிகழ்வுகளிலும் பாடி பரிசுகளை வென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஜீவியுடன் மலர்ந்த காதல்


ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்

சைந்தவி சென்னையில் செயல்பட்டுவரும் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில்தான் படித்து வந்துள்ளார். அங்குதான் சைந்தவியின் கணவர் ஜி.வியும் படித்து வந்தார். பள்ளியில் சைந்தவி, ஜி.வியை விட 1 வருடம் ஜூனியராம். பள்ளியில் இருவருக்குமான அறிமுகம் என்பது அவரவர் இசை மூலமாகத்தான் ஏற்பட்டுள்ளது. சைந்தவி ஒருபுறம் பாடுவது, மறுபுறம் ஜி.வி.இசையமைப்பது என்று அவரவர் பாதையில் தங்களின் திறமையை வெளிப்படுத்திவர, அதன் மூலம் கிடைத்த அறிமுகத்தின் வாயிலாகத்தான் இருவரும் நண்பர்களாக மாறியுள்ளனர். ஒரு சிரிப்பு, ஹாய், பை என்று ஆரம்பித்த இவர்களின் நட்பு நீண்ட நாட்களாக அப்படியே தொடர்ந்துள்ளது. பள்ளியில் இருக்கும் லைட் மியூசிக் இசைக்குழுவிற்கு ஜி.விதான் கேப்டனாம். அதனால் பள்ளியாக இருக்கட்டும், வெளியில் நடைபெறும் இன்டர் ஸ்கூல் காம்படேஷன் நிகழ்ச்சியாக இருக்கட்டும் அதில் முதல் ஆளாக கலந்துகொள்வது ஜி.வியின் இசை குழுவாகத்தான் இருக்குமாம். அந்த குழுவில் முக்கிய பாடகியாக சைந்தவி இருந்தாராம். இவர்கள் இருவரின் காம்போ இணைகிறது என்றாலே அந்த நிகழ்ச்சியில் இவர்கள்தான் வெற்றியாளர்களாக இருப்பார்களாம். அந்த அளவுக்கு இவ்விருவரும் வெற்றி இணையாகவே பள்ளியில் அறியப்பட்டு பிரபலமாக, ஒரு கட்டத்தில் சைந்தவிக்கு ஜி.வி.மீது கொஞ்சம் கொஞ்சமாக காதல் ஏற்பட ஆரம்பித்துள்ளது. அந்த காதலை எப்படி வெளிப்படுத்துவது என்பது தெரியாமல் இருந்த சமயத்தில்தான் ஜி.வி 10-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது, சைந்தவியிடம் தானாக அவரே வந்து காதலை வெளிப்படுத்தியுள்ளார். இங்கு ஆரம்பித்த இவர்களின் காதல் தனி சுவாரஸ்யம் என்றில்லாமல் எப்போதும் போன்று நட்பாகவே சென்றுள்ளது. அதிலும் எங்கு வெளியில் சென்றாலும் காதலர்களாக செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து சென்றுதான் வைப் செய்வார்களாம்.


பட்டுச்சேலையில் அழகான தோற்றத்தில் பாடகி சைந்தவி

இந்த நேரம், சைந்தவியை நோக்கி தமிழ் சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகளும் வர, ஜி.வி. பிரகாஷ் 'வெயில்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன்பாகவே 2005-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில், சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘அந்நியன்’ படத்தில் ‘அண்டங்காக்கா கொண்டக்காரி’ பாடலை பாடகி ஸ்ரேயா கோஷல் உடன் இணைந்து பாடி பாடகியாக தன் திரைப்பயணத்தை தொடங்கினார். முதல் பாடலிலேயே ஓரளவு நல்ல வரவேற்பினை பெற்ற சைந்தவி தொடர்ந்து ‘தொட்டி ஜெயா’, ‘ABCD’, ‘சரவணா’, ‘பட்டியல்’, ‘ஆதி’, ‘வரலாறு’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘படிக்காதவன்’, ‘பையா’, ‘சுறா’ என வரிசையாக பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் பாடி பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இதில் 2006 -ஆம் ஆண்டு விஜய்யின் நடிப்பில் வெளிவந்த ‘ஆதி’ படத்தில் வித்யாசாகர் இசையில் வரும் ”ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்’, அஜித்தின் ‘வரலாறு’ படத்தில் “இன்னிசை அளபெடையே”, ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் ரகுமான் இசையில் “கேளாமல் கையிலே”, கார்த்தியின் ‘பையா’ படத்தில் “அடடா மழைடா அட மழைடா”, விஜய்யின் ‘சுறா’ படத்தில் “தஞ்சாவூர் ஜில்லாக்காரி” ஆகிய பாடல்கள் என்றென்றும் கேட்டு ரசிக்கும் படியாக தன் அழகான வசிய குரலால் ரீங்காரமிட்டு ஒட்டுமொத்த சினிமா இசை ரசிகர்களையும் கட்டிப்போட்டார். இப்படி ஹிட் பாடல்களாக கொடுத்துவந்த நேரத்தில்தான் முதல் முறையாக தன் நண்பன் மற்றும் காதலனான ஜி.வியின் இசையில் ‘மதராசபட்டினம்’ படத்தில் “ஆருயிரே ஆருயிரே” பாடலை பாடியிருந்தார். இதனை தொடர்ந்து இவ்விருவர் கூட்டணியில் வெளிவந்த 'யாரோ இவன்... யாரோ இவன்...', 'பிறை தேடும் இரவிலே', 'யார் இந்த சாலையோரம்' போன்ற அத்தனை பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆக ஜிவி, சைந்தவி ஜோடி காதலில் மட்டும் அல்ல பாடலிலும் தேன் என இனித்தனர்.

திருமணமும், மனக்கசப்பும்

இப்படி இசையுலகில் ஆளுக்கொரு பக்கமாக வளர்ந்துவந்த வேளையில், தங்களின் காதலை வீட்டில் பெரியவர்களிடம் சொல்ல, முதலில் யோசித்த பெ்றறோர், பிறகு சம்மதம் தெரிவித்துள்ளனர். இருவீட்டாரின் சம்மதத்துடன் 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி எப்பவும் லக்கியான ஜோடியாக, பலரும் பார்த்து பொறாமைப்படும் ஜோடியாகவே இருந்து வந்தது. ஆரம்பத்தில் இருந்தே காதலர்கள் என்பதை தாண்டி நல்ல நண்பர்களாக இருந்ததாலோ என்னவோ இருவருக்குமிடையே நல்லதொரு புரிதல் என்பது இருந்தது. அதனால்தான் திரைத்துறையில் எந்தவித தடையும் இன்றி தன் திருமணத்திற்கு பிறகும் கணவர் ஜி.வியின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து பாட ஆரம்பித்தார். அதிலும் கணவரின் இசையில் பெரும்பாலான பாடல்களை அவருடன் சேர்ந்தே பாடியிருக்கிறார். அப்பாடல்கள் அனைத்தும் வெற்றி பாடல்களாகவும் அமைந்திருக்கின்றன. இந்த காதல் ஜோடிகளின் புரிதல் மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை பார்த்த நா.முத்துக்குமார் கூட, நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் இயக்கிய கதை, திரைக்கதை, வசனம் படத்தில், தான் எழுதிய பாடலான “பெண் மேகம் போலவே” பாடலில் ''இசையாலே காதல் ஜீவியாகும் சைந்தவியே'' என்ற வரிகளை எழுதி அப்பாடலை அவர்களையே பாட வைத்திருந்தார். இவ்விருவரும் பாடிய அந்த பாடலை இன்றும் தேடிச்சென்று கேட்டால், இவர்களின் குரல் ஒலி, ஒளிக்கவிதையாய் அவ்வளவு அழகாக தேன் மழை கொட்டுவதுபோல் இருக்கும்.


ஜி.வி. பிரகாஷ் - சைந்தவியின் திருமண புகைப்படம்

அந்த அளவுக்கு அழகான காதல் இசையாய் சென்று கொண்டிருந்த இந்த தம்பதிகளின் வாழ்க்கை யாருமே எதிர்பார்க்காத வகையில் இன்று விவாகரத்து என்னும் ஒற்றை புள்ளியில் வந்து நிற்கிறது. இதற்கு பலரும் பல காரணங்களை சொல்லி வந்தாலும், அவர்களாக மனம் திறந்து பேசாதவரை மணமுறிவிற்கான உண்மையான காரணத்தை அறிய முடியாது. ஜி.வி. இசையமைப்பாளர் என்ற நிலையில் இருந்து நடிகராக உயர்ந்தது சைந்தவிக்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. நடிகராக அவதாரம் எடுக்கும்போதே நிறைய கண்டிஷன்கள் போட்டதாகவும், ஆனால் அதில் ஒன்றை கூட அவர் கடைபிடிக்கவில்லை என்று சைந்தவியே சமூக வலைதள பக்கத்திற்கு அளித்திருந்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இதனாலும் அவர்களுக்குள் நிறைய மனக்கசப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இன்னொருபுறம் சைந்தவியின் அம்மாவாலும் இது நடந்திருப்பதாக கூறி வருகின்றனர். எது எப்படியோ 12 ஆண்டுகள் நல்ல நண்பர்களாக, 11 ஆண்டுகள் நல்ல தம்பதிகளாக உருகி உருகி காதலித்து வாழ்ந்த இந்த ஜோடி இன்று பிரிந்துவிட்டதாக கடந்த 13-ஆம் தேதி அவரவர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு நீண்ட நாட்களாக அல்லது அவ்வப்போது வந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தெளிவுபடுத்தியுள்ளனர்.

இவர்களின் இந்த பிரிவு அவர்களின் ரசிகர்கள், திரைத்துறையினர், ஜி.வி - சைந்தவி நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் 11 ஆண்டுகால மணவாழ்க்கைக்கு அடையாளமாக அன்வி என்ற ஒரு மகள் உள்ளார். திருமணமாகி 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தையால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். என் மகள் பிறந்த நேரம் ஜி.வி. நிறைய மாறியிருக்கிறார், இப்போதுதான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார் என்று கூட சைந்தவி கூறி வந்தார். ஆனால், அந்த பிஞ்சு குழந்தை விவரம் அறிந்து அப்பா - அம்மா என்று அழைப்பதற்குள்ளாகவே இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளது பலருக்குள்ளும் சொல்ல முடியாத வலியை கொடுத்திருக்கிறது.

Updated On 28 May 2024 12:08 AM IST
ராணி

ராணி

Next Story