இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சமீபத்தில் உலகமே வியந்துபார்க்கும் அளவிற்கு கோலாகலமாக நடந்து முடிந்தது ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம். அந்த திருமணத்தில் உலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். குறிப்பாக, பாலிவுட் நடிகர்கள் பெரும்பாலானோரை இந்த திருமணத்தில் குடும்பங்களுடன் பார்க்க முடிந்தது. அதில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் குடும்பம் குறித்த சர்ச்சைகள்தான் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் விவாகரத்து பெறப்போவதாக வந்ததிகள் பரவிவந்தன. அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், இந்த தம்பதி அதுகுறித்து வாய் திறக்காமல் இருந்துவந்தனர். இந்நிலையில்தான் அம்பானி வீட்டு திருமணத்தில் அமிதாப் தனது மனைவி, மகள் குடும்பம் மற்றும் அபிஷேக்குடன் வர, ஐஸ்வர்யாவும் அவருடைய மகள் ஆராத்யாவும் தனியாக வந்தனர். இதனால் இந்த தம்பதி விவாகரத்து பெறுவது உறுதியாகிவிட்டதாக திரை வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக, அபிஷேக் பச்சன், விவாகரத்து குறித்த போஸ்ட் ஒன்றை சமூக ஊடக பக்கத்தில் லைக் செய்திருப்பதை மேற்கோள்காட்டி நெட்டிசன்கள் பேசி வருகின்றனர். அபிஷேக் - ஐஸ்வர்யா தம்பதியின் காதல் மற்றும் பிரிவுக்கு என்ன காரணம்? என்பது குறித்து பார்க்கலாம்.

ஐஸ்வர்யா - அபிஷேக் காதல்

1990களின் இறுதியில் பாலிவுட்டில் டாப் ஹீரோயினாக இருந்த ஐஸ்வர்யாவிற்கும், சல்மான் கானுக்கும் இடையே பல்வேறு காரணங்களால் காதல் முறிவு ஏற்பட்டது. குறிப்பாக, ஐஸ்வர்யாவின் ஷூட்டிங் ஸ்பாட் மற்றும் வீட்டிற்கு சென்று பிரச்சினை செய்வது போன்ற சல்மான் கானின் மோசமான நடவடிக்கைகளால் இந்த ஜோடி பிரிந்ததாக பாலிவுட் வட்டாரங்களில் அப்போது பரவலாக பேசப்பட்டது. அதன்பின்பு விவேக் ஓபராயும் ஐஸ்வர்யாவும் காதலித்து வருவதாக செய்திகள் பரவிய நிலையில், இருவரும் சத்தமில்லாமல் தங்களது உறவை முறித்துக்கொண்டனர்.


காதலித்து திருமணம் செய்துகொண்ட அபிஷேக் - ஐஸ்வர்யா ஜோடி

இதைத் தொடர்ந்து 2000ஆம் ஆண்டு ‘தாய் அக்‌ஷர் ப்ரேக் கே’ என்ற படத்தில் நடித்தபோது அபிஷேக்கிற்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே நல்ல நட்பு உருவானது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஜோடி சேர்ந்ததால் இவர்களுடைய நட்பு காதலாக மலர்ந்து பின்னர் 2007ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். தங்களது காதல் குறித்து இருவரும் பல்வேறு நேர்க்காணல்களில் மனம் திறந்திருக்கின்றனர். அவற்றில் அபிஷேக் கூறும்போது, “நான் நியூயார்க்கில் ஷூட்டிங்கில் இருந்தபோது, அங்கு நான் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் பால்கனியில் நீண்டநேரம் செலவிடுவேன். அது எனக்கு மிகவும் பிடித்தமான இடம். ஒருநாள் ஐஸ்வர்யாவை அங்கு அழைத்துச்சென்று, ப்ரபோஸ் செய்தேன். அவரும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் அதற்கு முன்பே நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தோம். அப்போதே எங்களுக்கிடையே நல்ல புரிதல் இருந்தது. அவர் உலக அழகி என்பதற்காகவோ அல்லது என்னைவிட திரைத்துறையில் முன்னணியில் இருக்கிறார் என்பதற்காகவோ எனக்கு அவரை பிடிக்கவில்லை. அடிப்படையில் ஐஸ்வர்யாவுக்கு நல்ல உள்ளம் இருக்கிறது. அது பிடித்துப்போனதால்தான் காதல் வந்தது. நாங்கள் இருவரும் நிறைய பேசுவோம். பல நேரங்களில் மிகவும் மாறுபட்ட கோணங்களில் ஐஸ்வர்யா யோசிப்பார். ஆனால் அவற்றை எந்த தயக்கமுமின்றி இருவரும் கலந்தாலோசிப்போம். ஏனென்றால் அவர் என்னை நன்றாக புரிந்துகொள்வார்” என்று கூறியிருக்கிறார். அதேபோல் ஐஸ்வர்யாவும் “நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும்போது மிகவும் சௌகர்யமாக உணர்கிறோம். எங்கள் இருவருக்குமிடையே நல்ல நட்பை பகிர்ந்துகொள்கிறோம்” என்று தங்களுடைய உறவுப் பற்றி பகிர்ந்திருக்கிறார்.


பொதுவெளிகளில் மகள் ஆராத்யாவுடன் வலம்வந்த அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா

இப்படி பொதுவெளிகளில் மகிழ்ச்சியாக சுற்றிவந்த இத்தம்பதியின் காதலுக்கு அடையாளமாக ஆராத்யாவும் பிறந்தார். எப்போதும் குடும்பத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஐஸ்வர்யா, விருது விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு குழந்தை மற்றும் கணவருடன்தான் வருவார். குறிப்பாக, திரைத்துறையில் அபிஷேக்கைவிட மிகவும் வெற்றிகரமான ஹீரோயினாக வலம்வந்தாலும். தனது கணவர் குடும்பத்தை கவனித்துக்கொள்வதில் எந்த குறையும் வைத்ததில்லையாம். இதை அமிதாப் பச்சனே பலமுறை தெரிவித்திருக்கிறார். அந்த அளவுக்கு குடும்பத்தின் அன்பும் ஆதரவும் கிடைத்தும், அடிக்கடி ஐஸ்வர்யா - அபிஷேக் விவாகரத்து குறித்த செய்திகள் பரவி வருகின்றன. அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஐஸ்வர்யா - அபிஷேக் வாழ்க்கையில் விழுந்த விரிசல்

என்னதான் ஐஸ்வர்யா - அபிஷேக் பச்சன் தம்பதியிடையே நல்ல நெருக்கம் இருந்தாலும் ஆரம்பத்திலிருந்தே அபிஷேக்கின் அக்கா ஸ்வேதா பச்சனுக்கு ஐஸ்வர்யாவை பிடிக்கவில்லை என்பதே இவர்களுடைய விவாகரத்து குறித்த சர்ச்சை வெடித்ததிலிருந்து பாலிவுட்டில் ஒரு டாக்காக இருக்கிறது. ஏனென்றால் ஸ்வேதாவும் கரிஷ்மா கபூரும் நல்ல தோழிகள். அபிஷேக்கிற்கும், கரிஷ்மாவிற்கும் நிச்சயதார்த்தம் நடந்தபோதிலும் ஏதோ சில ரகசிய காரணங்களால் அமிதாப் பச்சனே அந்த திருமணத்தை நிறுத்திவிட்டார். இதனால் அப்பாவுக்கும் மகளுக்குமிடையே மனஸ்தாபம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான் அபிஷேக், ஐஸ்வர்யா ராயை காதலித்திருக்கிறார். ஆனால் ஆரம்பத்திலிருந்தே இந்த காதல் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறிவந்த ஸ்வேதா, இவர்களுடைய திருமணத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தாராம். ஆனால் ஒருவழியாக இவர்களுடைய திருமணம் நடந்துவிட, பாலிவுட்டின் டாப் ஜோடியாக வலம்வந்தனர்.


அமிதாப் பச்சன் மகள் ஸ்வேதா மற்றும் ஐஸ்வர்யா ராய்

இதற்கிடையே தனது திருமண வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு கணவரை பிரிந்து, குழந்தைகளுடன் தனது அப்பா வீட்டில் வாழ்ந்துவந்த ஸ்வேதாவிற்கு, அபிஷேக் - ஐஸ்வர்யாவின் நெருக்கம் பிடிக்கவில்லையாம். குறிப்பாக, திரை வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலுமே ஐஸ்வர்யா தன்னைவிட மேல் இருக்கிறார் என்பதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதாலேயே குடும்பத்தினரை ஐஸ்வர்யாவுக்கு எதிராக திருப்பிவிட்டதாக சொல்லப்படுகிறது. தனது தம்பியின் குடும்பத்தில் சிக்கல் ஏற்பட்டு பிரியும் நிலை உருவாகியிருக்கிற சமயத்தில், ஸ்வேதா தனது கணவர் நிகில் நந்தாவுடன் சேர்ந்திருக்கிறார். அதனை உறுதிசெய்யும் விதமாக அம்பானி வீட்டு திருமணத்தில் தனது பெற்றோர், மகன், மகள் மற்றும் கணவருடன் கலந்துகொண்டார் ஸ்வேதா.

ரேகாவுடனான நெருக்கமும் மற்றொரு காரணமா?

அமிதாப் குடும்பமே ஐஸ்வர்யாவை புறக்கணிப்பதற்கு மற்றொரு காரணமும் முக்கியமானதாக சொல்லப்படுகிறது. அது நடிகை ரேகாவுடனான நெருக்கம்தான். ரேகா - அமிதாப் காதல் பற்றி தெரியாதவர்கள் இருக்கமுடியாது. நடிகை ஜெயா பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டாலும் அமிதாப்பிற்கு ரேகா மீதான காதல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் தனது குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காக ரேகாவை வேண்டாம் என நிராகரிக்கும் ஒரு கடினமான சூழலுக்கு தள்ளப்பட்டார் அமிதாப். வேறொருவருடன் ரேகாவுக்கு திருமணம் ஆகிவிட்டாலும், பாலிவுட்டில் இன்றுவரை பேசப்படும் காதல் கதைகளில் இதுவும் ஒன்று. கொரோனா காலத்திற்கு பிறகு திரைப்படங்களில் கமிட்டாவதை குறைத்துவரும் ஐஸ்வர்யா, அவ்வபோது சில நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொள்கிறார்.


நடிகை ரேகா மற்றும் ஐஸ்வர்யாவுக்கு இடையேயான நெருக்கமும் அமிதாப் குடும்பத்தில் பிரச்சினைக்கு காரணம்?

பெரும்பாலும் ரேகா கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் ஐஸ்வர்யா கலந்துகொள்வதும், இருவரும் ஆரத்தழுவி அணைத்துக்கொண்டு பரஸ்பரம் அன்பை பகிர்ந்துகொள்வதும் பச்சன் குடும்பத்திற்கு துளியும் பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அம்பானி வீட்டு திருமணத்திலும் பச்சன் குடும்பம் தனியாக போஸ் கொடுத்துவிட்டு செல்ல, தனது மகள் ஆராத்யாவுடன் தனியாக வந்த ஐஸ்வர்யா, நடிகை ரேகாவை கட்டியணைத்து முத்தமிட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் இன்றுவரை சுழன்று கொண்டிருக்கின்றன. குறிப்பாக, 2019ஆம் ஆண்டு உருது கவிஞர் கைஃபி அஸ்மியின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ரேகாவும் ஐஸ்வர்யாவும் ஒன்றாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தது முதல் பச்சன் குடும்பத்தில் ஐஸ்வர்யா மீது வெறுப்பு பற்றிக்கொள்ள ஆரம்பித்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இருவருக்குமிடையே இன்றுவரை நல்ல நட்புறவு இருக்கத்தான் செய்கிறது.

விவாகரத்தை உறுதிசெய்யும் அபிஷேக்!

இப்படி அபிஷேக் - ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து செய்திகள் ஒருபுறம் பரவிக்கொண்டிருக்க, அதனை உறுதிசெய்யும்விதமாக அபிஷேக், இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றை லைக் செய்திருக்கிறார். அதுதான் இப்போது ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.


அபிஷேக் பச்சன் லைக் செய்திருந்த விவாகரத்து குறித்த இன்ஸ்டாகிராம் போஸ்ட்

‘காதல் சுலபமாவது எப்போது நிற்கிறதோ’ என குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த போஸ்ட்டில், “விவாகரத்து என்பது யாருக்கும் எளிதல்ல. யாருக்குத்தான் வயதான காலத்திலும் கைகோர்த்துக்கொண்டு நடக்கும் தம்பதியர்களின் வீடியோக்களை பார்க்கும்போது அதை தாங்களும் செய்யவேண்டும் என்ற கனவு இருக்காது? ஆம், சில நேரங்களில் வாழ்க்கை நாம் நினைப்பதைப் போன்று இருக்காது. ஆனால் பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துவிட்டு, பெரிய மற்றும் சிறிய விஷயங்களுக்கு ஒருவரை ஒருவர் சார்ந்திருந்துவிட்டு எப்படி பிரிகின்றனர்? அப்படி பிரியும்போது என்னென்ன சவால்களை சந்திக்கின்றனர்?” என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படி ஆழமான கருத்தைக் கொண்ட ஒரு போஸ்ட்டை அபிஷேக் பச்சன் லைக் செய்திருக்கிறார் என்றால் கண்டிப்பாக விவாகரத்துக்கு தன்னை தயார்படுத்தி வருகிறார் என்று சொல்கின்றன பாலிவுட் வட்டாரங்கள். எனவே இவர்கள் இருவர் தரப்பிலிருந்தும் விரைவில் இதுகுறித்து முறையான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On 29 July 2024 11:44 PM IST
ராணி

ராணி

Next Story