இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஒரு ஹீரோவுக்கான அத்தனை விஷயங்களையும் கற்றுத் தேர்ந்து சாக்லேட் பாயாக, கனவு கண்ணனாக, டாப் ஸ்டாராக 90-களில் கோலிவுட்டையே கலக்கியவர்தான் பிரசாந்த். நடிகர் தியாகராஜனின் மகன் என்ற அடையாளத்துடன் ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரசாந்த், அரும்பு மீசையுடன் தன் பயணத்தை தொடங்கி பிறகு பாலிவுட் ஹீரோவை போன்ற தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்து, மீண்டும் மீசை, தாடியுடன் ஒரு ஆண் மகனுக்கே உண்டான அழகுடன் வலம் வந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். இந்த பக்கம் மும்பையிலிருந்து தென்னிந்திய சினிமாவிற்கு வந்து ஒரு கலக்கு கலக்கிய நடிகைதான் சிம்ரன். வி.ஐ.பி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய சிம்ரன், நடிப்பு, அழகு, ஹீரோக்களுக்கு நிகராக நடனமாடக்கூடிய திறன் போன்ற பல திறமைகளைக் கொண்டவர். கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன் உடல்மொழியில் அசத்தும் நடிகை என்ற பெயரும் பெற்றவர். இவ்விரு நட்சத்திரங்களுமே உச்ச ஹீரோக்கள் தொடங்கி உலக அழகி வரை எத்தனையோ பேருடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும், டாப் ஸ்டார் பிரசாந்துக்கும் சரி, சிம்ரனுக்கும் சரி பொருத்தமான இணை யார் என்று கேட்டால் இன்றும் ரசிகர்கள் கூறுவது பிரசாந்த் - சிம்ரன் ஜோடியைதான். அதற்கு உதாரணமாக பல படங்கள் இருப்பதோடு, பிரசாந்த் பாப்புலராக இருந்த சமயத்தில் ‘ஸ்டார் நைட்’ என்றொரு நிகழ்ச்சியை ஒவ்வொரு ஊர்களிலும் நடத்திய நேரங்களில் அவருடன் நடித்த அத்தனை நடிகைகளும் கலந்துகொண்ட போதும், அங்கு ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்டது பிரசாந்த் - சிம்ரன் ஜோடிதான் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. அந்த வகையில், பிரசாந்த் - சிம்ரன் ஜோடி இதுவரை இணைந்து நடித்த படங்கள் என்னென்ன..? தமிழ் சினிமாவில் எத்தனையோ ஜோடிகள் கொண்டாடப்பட்டிருந்தாலும் பிரசாந்த் - சிம்ரன் ஜோடி மட்டும் மற்றவர்களிடம் இருந்து எப்படி வேறுபடுகிறார்கள்? நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் 'அந்தகன்' படத்தில் இவர்கள் இணைந்திருப்பது எப்படியானதொரு வரவேற்பை கொடுக்கும் போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

காதலில் கச்சிதம்

‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படம் தொடங்கி ‘செம்பருத்தி’, ‘திருடா திருடா’, ‘ராசாமகன்’, ‘செந்தமிழ் செல்வன்’, ‘கல்லூரி வாசல்’ என பிரசாந்த் வரிசையாக நடித்துக் கொண்டிருந்த போதுதான் அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி நட்சத்திர ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றுதந்த படமாக இயக்குநர் ஷங்கரின் ‘ஜீன்ஸ்’ திரைப்படம் அமைந்தது. இந்த நேரம், அதே காலகட்டத்தில் வி.ஐ.பி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி ‘ஒன்ஸ்மோர்’, ‘நேருக்கு நேர்’, ‘அவள் வருவாளா’, ‘நட்புக்காக’ என்று தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து குறுகிய காலத்திலேயே நட்சத்திர ஹீரோயினாக மாறிக்கொண்டிருந்தார் நடிகை சிம்ரன். இப்படியான நேரத்தில் இந்த இரண்டு பேரையும் இணைக்கும் விதமாக வந்து அமைந்ததுதான் ‘கண்ணெதிரே தோன்றினால்’ திரைப்படம். முதல் முறையாக இப்படத்தில் இணைந்த இந்த ஜோடிக்கு முதல் படமே என்றுமே மறக்க முடியாத வகையில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்துபோனது. 1998-ஆம் ஆண்டு ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் வசந்த் என்ற கதாபாத்திரத்தில் வரும் பிரசாந்த், ஒரு பக்கம் தான் அதிகமாக நேசிக்கும் நண்பன், இன்னொரு பக்கம் நண்பனின் தங்கையான தனது காதலி என இருமாறுபட்ட காட்சிகளில் தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் ரசிக்க வைத்திருப்பார். அதேபோன்று பிரியாவாக வரும் சிம்ரனும் பிரசாந்துக்கு இணையாக தன் அழகால் பலரையும் கட்டிப்போட்டதோடு, படத்தின் இறுதியில் தன் காதலன், நட்புக்காக காதலே வேண்டாம் என்று தன்னை விட்டுச் செல்லும்போது தன் உயிரையே விடத்துணியும் காட்சியில் படம் பார்த்த அனைவரையும் கலங்க வைத்து ஸ்கோர் செய்திருப்பார். இப்படி இருவரும் மாறி மாறி ஸ்கோர் செய்து நடிப்பில் அசரடித்தது மட்டுமின்றி முதல் படத்திலேயே சூப்பர் ஜோடி என்ற பெயரையும் பெற்றனர். இப்படத்தில் இந்த ஜோடிக்கு கிடைத்த வரவேற்பால் அடுத்த ஆண்டே 'ஜோடி' என்றொரு படத்தில் மீண்டும் இணைந்தனர்.


இணைந்த முதல் படத்திலேயே சூப்பர் ஜோடி என்று பெயரெடுத்த பிரசாந்த் - சிம்ரன்

1999-ஆம் ஆண்டு முரளி மனோகர் தயாரிப்பில், பிரவீன்காந்த் என்பவரின் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜோடி’ திரைப்படத்தில் கண்ணனாக பிரசாந்தும், காயத்ரியாக சிம்ரனும் நடித்திருந்தனர். அழகான காதல் திரைப்படமாக வெளிவந்த இப்படத்தில் இவர்களுடன் விஜயகுமார், நாசர், ஸ்ரீவித்யா, ஜனகராஜ், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். காதலர்களாக இருக்கும் பிரசாந்த் மற்றும் சிம்ரன் இருவரும் பெற்றோர்களின் சம்மதத்திற்காக, பிரசாந்த் வீட்டிற்கு சிம்ரனும், சிம்ரன் வீட்டிற்கு பிரசாந்தும் மாறி செல்வர். தாங்கள் நேசிப்பவரின் பெற்றோர்களின் மனதில் இடம் பிடிக்க ஆள்மாறாட்டம் செய்யும் காட்சிகளில் உண்மையிலேயே இருவரும் நடிப்பில் ரசிக்க வைத்திருப்பர். பிரசாந்தின் 25-வது படமாக வெளிவந்த இதில் சிம்ரன் நடித்த வேடத்தில் முதலில் ஐஸ்வர்யா ராய்தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால், கால்ஷீட் பிரச்சினையால் அவர் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதால், ஏற்கனவே ‘கண்ணெதிரே தோன்றினால்’ படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக வந்த சிம்ரனையே நடிக்க வைத்து இப்படம் மிகப்பெரிய வெற்றிக் கண்டது. குறிப்பாக இப்படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளிவந்த அத்தனை பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆகி, இன்றும் எவர் கீரீன் ஹிட் லிஸ்ட் வரிசையில் முக்கிய பாடல்களாக உள்ளன.

உரசலில் உச்சம்


'பார்த்தேன் ரசித்தேன்' திரைப்படத்தில் ஷங்கர் மற்றும் பானுவாக வரும் பிரசாந்த் - சிம்ரன்

முதல் இரண்டு படங்களிலும் காதலில் உருகி உருகி நடித்த இந்த ஜோடி அடுத்த ஆண்டே மூன்றாவதாக 'பார்த்தேன் ரசித்தேன்' என்ற படத்தில் மீண்டும் இணைந்தது. முக்கோண காதல் கதையை மையமாக வைத்து சரண் இயக்கத்தில் 2000-வது ஆண்டு வெளியான இந்த படத்தில் பிரசாந்த் ஷங்கர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வழக்கம்போல் தன் நடிப்பில் ஸ்கோர் செய்ய, சிம்ரன் முதல் முறையாக பானு என்ற கதாபாத்திரத்தில் அதுவும் நெகட்டிவ் ரோலில் வந்து அதகளப்படுத்தி இருந்தார். சிம்ரன் கதாநாயகியாக கலக்கி வந்த இதே காலகட்டத்தில், இந்தப்படத்தில் துணிந்து எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்தது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கவர்ந்தது. மேலும் இவர்களுடன் நடிகை லைலாவும் சரிகா என்னும் கதாபாத்திரத்தில் வந்து அழகில் அசத்தி இருந்தார். குறிப்பாக ஒரே படத்தில் இரண்டு நாயகிகளுக்கு ஜோடியாக யாரை போட்டால் சரியாக இருக்கும் என்ற குழப்பம் படம் தொடங்கப்படுவதற்கு முன்பாக சரணுக்கு ஏற்பட்டபோது முதலில் நினைவில் வந்தது நடிகர் பிரசாந்த்தானாம். அன்றைய காலகட்டத்தில் தன் அழகாலும், நடிப்பாலும், நடனத்தாலும் இளம்பெண்கள் பலரையும் பிரசாந்த் தன் பக்கம் ஈர்த்து வைத்திருந்ததால், இரண்டு நாயகிகளுக்கு சரியான ஜோடி அவர்தான், அதற்கான அத்தனை தகுதிகளும் அவரிடம் மட்டும்தான் இருக்கிறது என்று அவரை தேர்வு செய்தாராம் இயக்குநர் சரண். இப்படி பிரசாந்த், சிம்ரன், லைலா என்று மூன்று பேரின் நடிப்பில் இப்படம் வெளிவந்திருந்தாலும் மிகப்பெரிய பலமாக அமைந்தது சிம்ரனின் நெகடிவ் வேடம்தான். நல்ல நண்பர்களாக இருக்கும் பிரசாந்தும் - சிம்ரனும் அவரவர் காதலுக்காக ஒருவரை ஒருவர் உரசி, முட்டி மோதிக்கொள்ளும் காட்சிகளில் இருவரும் அசாத்தியமான நடிப்பு திறனை வெளிப்படுத்தியிருப்பர். இதுதவிர பரத்வாஜின் இசையில் வெளிவந்த பாடல்களும் அன்று பட்டிதொட்டியெல்லாம் ஒரு கலக்கு கலக்கி இன்றும் பல இடங்களில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

ஆக்சனில் அதகளம்


‘தமிழ்’ திரைப்படத்தில் தாலி கட்ட சொல்லி சிம்ரன், பிரசாந்திடம் கேட்கும் காட்சி

காதல், செண்டிமென்ட், குடும்பம் என எப்போதும் பெண்களை கவரும் வகையிலான படங்களிலேயே தொடர்ந்து நடித்துவந்த பிரசாந்த் முதல் முறையாக முழு ஆக்சன் படமாக நடித்தது இயக்குநர் ஹரியின் ‘தமிழ்’ திரைப்படத்தில்தான். இயக்குநர் ஹரிக்கும் இதுதான் முதல் படம் என்றாலும், பிரசாந்தை ஒரு அதிரடி ஆக்சன் நாயகனாக காட்டிய விதத்தில் நல்ல பாராட்டை பெற்றிருந்தார். காரணம் இதற்கு முன்பாக பிரசாந்த் நடித்த படங்களில் ஆக்சன் காட்சிகள் இருந்தாலும் 'தமிழ்' படம் அளவுக்கு வேறு எந்த படங்களும் பேசப்பிடவில்லை. அது மட்டும் அல்லாமல் இந்த படத்தின் வெற்றிதான் அடுத்து 'சாமி' என்கிற மெகாஹிட் படத்தினை இயக்கும் வாய்ப்பையும் இயக்குநர் ஹரிக்கு பெற்று தந்தது .அந்த அளவுக்கு பிரசாந்திற்கு ஹிட் படமாக அமைந்த இப்படத்திலும் சிம்ரன்தான் ஜோடி. மீனாட்சியாக சிம்ரனும், தமிழாக பிரசாந்தும் இப்படத்தில் நடிப்பில் பிரித்து மேய்ந்திருப்பார்கள். 'தமிழ்' படத்திலும் குடும்ப செண்டிமெண்ட், காதல் என அத்தனையும் இருந்தாலும், குடும்பத்திற்காக ஆக்சனில் இறங்கும் காட்சிகளில் பிரசாந்த் டூப் போடாமல் தனக்கே உரிய ஸ்டைலில் சண்டை செய்து மிகவும் ரசிக்க வைத்திருப்பார். 2002-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படமும் பிரசாந்த் - சிம்ரன் இருவருக்கும் நல்லதொரு வெற்றியை கொடுத்த படமாக மட்டுமின்றி நான்காவது முறையாகவும் வெற்றியை பதிவு செய்த சிறந்த ஜோடி என்ற பெயரையும் பெற்றுக்கொடுத்தது.

திரும்பவும் திரில்லரில்


மகன் பிரசாந்தை வைத்து 'அந்தகன்' படத்தை இயக்கியுள்ள தந்தை தியாகராஜன்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் கண்டுபிடிப்பு என்ற அறிமுகத்தோடு ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற திரைப்படம் வாயிலாக ஒரு நடிகராக தமிழ் திரையுலகில் நுழைந்த தியாகராஜன் இன்று தயாரிப்பாளர், வசனகர்த்தா, கலை இயக்குநர், திரைப்பட இயக்குநர் என்று பல அவதாரங்களை எடுத்துள்ளார். அந்த வகையில், தன் மகனை வைத்து ஏற்கனவே தன் சொந்த தயாரிப்பில் ‘பொன்னர் சங்கர்’, ‘மம்பட்டியான்’, ‘ஜானி’ போன்ற படங்களை இயக்கி இருக்கும் நிலையில், தற்போது மீண்டும் தன் மகனுக்காக ஹிந்தியில் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் உரிமையை பெற்று தமிழில் ‘அந்தகன்’ என்ற பெயரில் சொந்தமாக தயாரித்து இயக்கியுள்ளார். வருகிற 9-ஆம் தேதி (9.8.24) திரைக்கு வரவுள்ள இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், சிம்ரன், ஊர்வசி, மனோபாலா, சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டையொட்டி கடந்த ஜூலை 24-ஆம் தேதி அன்று ‘அந்தகன் ஆந்தம்’ பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரசாந்த் கேட்டுக்கொண்டதற்காக நடிகர் விஜய் வந்து கலந்துகொண்டது மட்டுமின்றி அப்பாடலையும் வெளியிட்டார்.


'அந்தகன்' திரைப்பட போஸ்டர் காட்சிகள்

இப்படி பல எதிர்பார்ப்புகளோடு நீண்ட இடைவேளைக்குப் பிறகு டாப் ஸ்டார் பிரசாந்தின் நடிப்பில் வெளிவரவுள்ள இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரசாந்த் ஒருபுறம் கலக்கிவரும் அதே வேளையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 5-வது முறையாக இப்படத்தில் இணைந்துள்ள பிரசாந்த் - சிம்ரன் ஜோடி குறித்த பேச்சுகளும், அவர்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே தமிழ் சினிமாவில் எந்த ஜோடிகளும் நிகழ்த்திக்காட்டாத காதல், மோதல், ஆக்சன் என பல ஜானர்களில் நடித்து கலக்கியுள்ள இந்த ஜோடி இம்முறை க்ரைம், திரில்லர் ஜானரில் புதிய அவதாரம் எடுத்துள்ளது. கண் தெரியாதவரை சுற்றி நடக்கும் விஷயங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் பிரசாந்த் க்ரிஷ் என்ற கதாபாத்திரத்திலும், சிம்ரன் சிமி என்ற வேடத்திலும் நடித்துள்ளனர். இதுவரை இவர்கள் இருவரும் இணைந்த படங்கள் தோல்வி அடைந்தது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்பதால், நிச்சயம் இந்த முறையும் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையை படைத்து இருவரும் ஹிட் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அவர்களின் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த எதிர்பார்ப்பு மெய்ப்பட நாமும் வாழ்த்துவோம்.

Updated On 12 Aug 2024 6:33 PM GMT
ராணி

ராணி

Next Story