இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கடந்த சில நாட்களாகவே எங்கு திரும்பினாலும் ‘முகுந்தே...’ ‘மின்னலே’, ‘சக்கரே’ போன்ற வார்த்தைகளை அதிகம் கேட்கமுடிகிறது. ஆம். ‘அமரன்’ படத்தில் சிவ கார்த்திகேயன் - சாய் பல்லவியின் காதல் வசனங்கள்தான் இவை. ‘அமரன்’ படம் குறித்த பேச்சு ஆரம்பித்திலிருந்தே 2014ஆம் ஆண்டு நடந்த ராணுவப் போரில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகம் மற்றும் வீரம் குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது. அவருடைய வாழ்க்கை வரலாறுதான் இப்படம் என்றாலும், படம் முழுக்க போரை மட்டுமே மையமாக கொண்டிருக்காது, அதில் அழகிய காதல் கதை முக்கியமானதாக இருக்கும் என்று ஏற்கனவே சொல்லிவிட்டார் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்ற ஆசை ஒருபுறம் இருந்தாலும், தனது கல்லூரி கால காதலியை கரம்பிடிக்க, மற்றொரு பாசப்போராட்டமே நடத்தியிருக்கிறார் முகுந்த் வரதராஜன். ‘அமரன்’ திரைப்படத்தின் முக்கிய அம்சமே இந்து ரெபேக்கா வர்கீஸ். இந்த கதாபாத்திரத்திற்கு திரையில் உயிரூட்டி இருக்கிறார் சாய் பல்லவி. ரியல் மற்றும் ரீல் இந்து ரெபேக்கா வர்கீஸ் இருவரும் ஒரே மேடையில் தங்களது அனுபவங்களை பகிர்ந்த வீடியோக்கள் தற்போது ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. அமரன் படம் உண்மையிலேயே மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அர்ப்பணிப்பாக அமைந்ததா? இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற இரும்பு பெண்மணியின் மறுபக்கம் என்ன? என்பது குறித்த ஓர் பகிர்வு இது!

‘அமரன்’ - சிறப்பு பார்வை

சிறுவயதிலிருந்தே ராணுவ வீரன் ஆகவேண்டும் என்ற கனவுடன் இருக்கும் முகுந்த் வரதராஜன், கல்லூரியில் படிக்கும்போது இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற பெண்ணை காதலிக்கிறார். காதல் ஒருபுறம் நன்றாக போய்க்கொண்டிருக்க, தனது சிறுவயது ஆசையான ராணுவத்தில் சேர பயிற்சிகள் பெற்றுவரும் நேரத்தில் முகுந்தின் வீட்டிற்கு அவருடைய காதல் தெரியவருகிறது. அவர்கள் ஓகே சொல்லிவிட, ராணுவத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கிறது. ராணுவ வீரனுக்கு தங்களது மகளை திருமணம் செய்துகொடுக்க இந்துவின் பெற்றோர் சம்மதிக்க மறுக்கின்றனர். ஒருவழியாக பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இருவீட்டார் சம்மதத்துடன் தனது நீண்டநாள் காதலியை கரம்பிடிக்கிறார் முகுந்த். ஆரம்பத்தில் லெஃப்டினன்ட் ஆக ராணுவத்தில் இணைந்து பின்னர் கேப்டனாக பதவி உயர்வு பெறுகிறார். இதற்கிடையே இவர்கள் காதலுக்கு அடையாளமாக ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அதனைத் தொடர்ந்து 44 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் சீட்டா கம்பெனியில் மேஜராக பதவியேற்கிறார் முகுந்த். ஜம்மு காஷ்மீரில் கிளர்ச்சியை ஏற்படுத்தி, கொடூர தாக்குதல்களுக்கு காரணமான முக்கிய குற்றவாளியான அல்டாஃப் பாபா எனும் பயங்கரவாதியை போரில் கொல்கிறார் முகுந்த். அதன் தொடர்ச்சியாக நடந்த போர், அதில் சாவின் விளிம்பிலும் எதிரிகளை சுட்டுக்கொன்றுவிட்டு உயிர்நீத்த முகுந்தின் வீரம் என கதை துடிப்பாக செல்கிறது.


‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி ஜோடி

இந்த முக்கிய கதைக்குள் ஒரு ஆழமான அழகிய காதல் கதையை காட்டியிருக்கிறார் இயக்குநர். அதுதான் கல்லூரி காலம் முதல் முகுந்தின் இறப்புக்கு பிறகும் இந்துவுக்கு முகுந்தின்மீது இருக்கும் காதல். ஒரு காதலனை பிரிந்த காதலியின் பார்வையில்தான் மொத்த கதையும் நகர்கிறது. இந்த படம் முழுக்க, ஒரு ராணுவ வீரனுக்கு நாட்டுபற்று ஒருபுறமிருக்க, குடும்பத்தின்மீதான பாசம் எப்படியிருக்கும் என்பது முகுந்த் வரதராஜனின் கதாபாத்திரத்தின்மூலம் அழகாக காட்சிபடுத்தப்பட்டிருக்கிறது. திருமணத்திற்கு பிறகு தனது காதல் மனைவி, பெற்றோர் மற்றும் சகோதரிகளை பிரியும்போது முகுந்திடம் இருக்கும் ஏக்கம், ஒவ்வொரு முறை பதவி உயர்வு பெறும் தனது கணவனை பார்த்து பெருமிதம் கொள்ளும் மனைவி இந்து, போர்க்களத்தில் முகுந்தின் கடைசி நிமிடங்களில் இந்துவுக்குள் இருக்கும் பரிதவிப்பு, இறந்தபிறகும் கண்ணீர் சிந்தக்கூடாது என்ற அன்புக்கணவனின் கட்டளையை ஏற்று உணர்ச்சிகளை அடக்கிவைத்திருக்கும் மனைவி என உண்மையான முகுந்த் - இந்துவை நம் கண்முன் நிறுத்துகின்றனர் சிவகார்த்தியேகன் - சாய்பல்லவி. மிடுக்கான ராணுவ வீரனாக சிவகார்த்திகேயன் ஒருபுறம் படத்திற்கு பலம் சேர்க்க, இந்து ரெபேக்கா வர்க்கீஸாக மொத்த படத்தையும் தாங்கி நிறுத்துகிறார் சாய் பல்லவி. மற்ற படங்களில் இல்லாத அளவிற்கு இந்த படத்தில் காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்கள் எப்படி செயல்படுகின்றனர்? அங்குள்ள மக்களுக்கும் ராணுவத்துக்கும் பயங்கரவாதிகளால் அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன? காஷ்மீர் மக்களில் சிலர் தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவது போன்ற உண்மை சம்பவங்கள் மக்கள் மனதில் நிற்கும்படி காட்சிபடுத்தப்பட்டிருக்கின்றன. மொத்த படத்தையும் விறுவிறுப்பாக கொண்டுசெல்கிறது ஜி.வி. பிரகாஷ்குமாரின் இசை. ஒட்டுமொத்தமாக ‘அமரன்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.


மேஜர் முகுந்த் - இந்து கதாபாத்திரங்களின் திரை பிரதிபலிப்பு

இந்து ரெபேக்கா வர்கீஸாக சாய் பல்லவி!

சரி, ‘அமரன்’ திரைப்படத்தில் பல கேரக்டர்கள் இருந்தாலும் இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரம்தான் மொத்த படத்திற்கும் உயிர்நாடியாக அமைந்திருக்கிறது. அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியை தேர்ந்தெடுத்தது படத்திற்கு ஒரு ப்ளஸ் பாயிண்ட்டாக அமைந்திருக்கிறது. இந்து கதாபாத்திரம் குறித்து சாய் பல்லவி பல நேர்காணல்களில் பகிர்ந்திருக்கிறார். அவற்றில், “முதலில் இயக்குநர் ராஜ்குமார் இந்து கதாபாத்திரத்திற்காக என்னை அணுகியபோது, எப்படியும் ராணுவ வீரனை மையமாகக் கொண்ட கதை என்றால் அதில் எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்காது என்று நினைத்து வேண்டாம் என்று கூறினேன். குறிப்பாக, படம் முழுக்க ஆக்‌ஷன் சீன்கள் நிறைய இருக்கும் என்பதால் படத்தின் நீளத்தைக் குறைக்க எதையாவது கட் பண்ண வேண்டுமென்றால் அது கதாநாயகியின் பகுதியைத்தான் கட் செய்வார்கள். அதுபோல் என்னுடைய பகுதியை குறைத்தால் என்ன செய்வது? என்பது போன்ற கேள்விகளை முன்வைத்தேன். அவர் படத்தின் கதையை என்னிடம் சொல்லி, இந்துவுக்கு முகுந்த் மீது இருக்கும் காதல் பற்றி என்னிடம் எடுத்துச் சொன்னார். மேலும் ஒருமுறை இந்து ரெபேக்கா வர்க்கீஸை நேரில் சந்தித்து பேசினால் தெளிவு கிடைக்கும் என்று ராஜ்குமார் என்னிடம் கேட்டுக்கொண்டார். அதனால் படம் தொடங்குவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு இந்துவை நேரில் சென்று சந்தித்தேன். அப்போதுதான் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு கிடைத்திருக்கும் பாக்கியம் என்று நான் புரிந்துகொண்டேன்.


ரியல் மற்றும் ரீல் இந்து ரெபேக்கா வர்கீஸ்

இந்த படம் ஒரு கதையை எப்படி அணுகவேண்டும் என்பதை எனக்கு சொல்லிக்கொடுத்தது. இதுவரை பயோபிக்கில் நான் நடித்திராததால், இதுகுறித்து எனக்கு ஒரு யோசனை இருந்தது. ஆனால் நிஜ வாழ்க்கையின் இந்துவைப் போலவே நீங்கள் பண்ண வேண்டியதில்லை. அவர்களை நன்றாக கவனித்துக்கொண்டு உங்களுக்கு ஏற்றபடி செய்தால் போதும் என்று இயக்குநர் கூறியிருந்ததால் நான் அதற்கேற்றபடி செய்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு உணர்ச்சிகளையும் என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக செய்திருக்கிறேன். நான் இந்துவை நேரில் சந்தித்தபோது, அவருடைய மனநிலையைத்தான் புரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். அதனால் அவரிடம் பேசியபோது, ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்து, இந்த நேரத்தில் ஏன் இப்படி செய்தீர்கள்? என்ன யோசித்தீர்கள்? என்றெல்லாம் கேள்வி கேட்டேன். நம் அனைவருக்குமே சுயநலமற்ற அன்பு என்றால் என்னவென்று தெரியும். ஆனால் ஒருவரை இந்த அளவிற்கு காதலிக்க முடியுமா? என்று எனக்கு தெரியவில்லை. அதுகுறித்துதான் இந்துவிடம் நிறையக் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தேன்” என்று பகிர்ந்திருந்தார்.

தனது காதல் குறித்து இந்து ரெபேக்கா வர்கீஸ்!

முகுந்த் வரதராஜன் வீட்டில் காதலுக்கு ஓகே சொல்லியிருந்தாலும் இந்துவின் வீட்டிலோ அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தனது காதல் தொடங்கியது முதல் இன்றுவரை முகுந்தனின் நினைவுகளோடு இருக்கும் அனுபவத்தை பகிர்ந்துள்ளார் இந்து ரெபேக்கா வர்கீஸ். “கல்லூரி முடிந்து எங்களது காதல் வீட்டிற்கு தெரிந்தபோது என்னுடைய அப்பா மற்றும் இரண்டு அண்ணன்களை ஒப்புக்கொள்ள வைக்க நிறைய போராடவேண்டி இருந்தது. அதுவும் முகுந்த் ராணுவத்தில் சேரப்போகிறார் என்று சொன்னதால் ஸ்ட்ரிக்டாக நோ சொன்னார்கள். ஆனால் நான் பிடிவாதமாக இருந்ததால் வீட்டில் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தனர். அந்த நேரத்தில் என்னுடைய மாமா கடற்படையிலிருந்து ஒய்வுபெற்று வீட்டிற்கு வந்திருந்தார். அவர் முகுந்த் நல்ல பையன். இருவரும் காதலிக்கிறார்கள். திருமணம் செய்துவைத்து விடுங்கள் என்று என் பெற்றோரிடம் கூறினார்.


முகுந்துடன் இந்து ரெபேக்கா வர்கீஸ்

முகுந்தும் தன்னை தயார்படுத்திக்கொள்ள 3 வருடங்கள் எடுத்துக்கொண்டு பிறகு என் அப்பாவிடம் வந்து பேசினார். ஒருவழியாக வீட்டிற்குள்ளே பலகட்ட போர்களுக்குப் பிறகு எங்களது திருமணம் முடிந்தது. அதன்பிறகும் எங்களுடைய காதல் முழுக்க முழுக்க long distance relationship-ஆகத்தான் இருந்தது. போரில் முகுந்த் இறந்தபிறகு, முதல் இரண்டு வருடங்களில் நான் நிறைய நிகழ்ச்சிகளுக்கு செல்லவேண்டி இருந்தது. ஒவ்வொரு முறை கொடியேற்ற நிகழ்வில் பங்குபெறும்போதும், முகுந்திற்கு பெருமை கிடைத்தாலும், அவரை இழந்த துக்கத்திற்குள் மீண்டும் மீண்டும் எங்களை கொண்டுசென்றது. அதன்பிறகு நான் துக்கத்திலேயே இருக்கக்கூடாது, என்னுடைய குடும்பத்தையும் மகளையும் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தேன். அதனால் நிகழ்ச்சிகளுக்கு செல்வதை முற்றிலும் நிறுத்திவிட்டேன். இந்த படத்திற்காக ராஜ்குமார் சார் என்னிடம் வந்து பேசியபோது, எனக்கு முதலில் ஞாபகத்திற்கு வந்தது முகுந்த், கமல்ஹாசன் சாரின் மிகப்பெரிய ரசிகன் என்பதுதான். இதை பார்க்கும்போது கேட்கும்போது முகுந்த் மிகவும் சந்தோஷப்படுவார் என்று நினைத்தேன். இந்த முடிவை நான் எடுத்திருந்தாலும் 8 வருடங்கள் முகுந்தை பற்றி வெளியே எதுவும் பேசாதது குறித்து எனக்குள் குற்ற உணர்வு ஏற்பட்டது. படம் எடுப்பது குறித்து என்னிடம் கேட்டபோது, இது எனக்கு கிடைத்த மற்றொரு தருணமாக உணர்ந்தேன். இந்த படம் முகுந்திற்கு மிகவும் மகிழ்ச்சியை தரும். அவர் சிரித்துக்கொண்டே இதை பார்த்துக்கொண்டு இருப்பார்” என்று முகுந்துடனான தனது நினைவலைகளை பகிர்ந்துள்ளார். இப்படி இன்றும் தனது காதல் கணவர் உலகைவிட்டு மறைந்தாலும் தனது பக்கத்திலேயே இருப்பதாக நினைத்து சுயநலமற்ற அன்பிற்கு அடையாளமாக வாழ்ந்துவருகிறார் இந்து ரெபேக்கா வர்கீஸ்!

Updated On 11 Nov 2024 6:09 PM GMT
ராணி

ராணி

Next Story