விஜய் தேவரகொண்டாவை மணக்கும் ராஷ்மிகா மந்தனா?
விஜய் தேவரகொண்டா தெலுங்கில் 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் வெற்றிக்கு பிறகு அங்கு அதிகமான படங்களில் நடித்து முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக மாறியுள்ளார். இவர் தமிழில் 'நோட்டா' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாரான 'குஷி' படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இவரும், நடிகை ராஷ்மிக மந்தனாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தியுடன் சுல்தான், விஜய்யுடன் வாரிசு ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் அல்லு அர்ஜூனுடன் நடித்த புஷ்பா திரைப்படம் திருப்புமுனையாக அவருக்கு அமைந்தது. ஏற்கனவே விஜய் தேவரகொண்டாவும் , ராஷ்மிகாவும் 'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' தொடங்கி பலப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த போதே இருவரும் காதலிப்பதாக கிசு கிசுக்கள் வெளிவந்தன.
ஆனால் இருவரின் தரப்பில் இருந்தும் இந்த வதந்திகளுக்கு எந்த பதிலும் அளிக்காமல் இருந்த நிலையில், தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் 'குஷி' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை சமந்தா விஜய் தேவரகொண்டா ஒரு பெண்ணை காதலிக்கிறார். மூன்று மாதங்களில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகின்றனர் என்று கூறியிருந்தார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் தனித்தனியாக புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது அந்த புகைப்படங்கள் விஜய் தேவரகொண்டா வீட்டில் எடுக்கப்பட்டவை என்றும், இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவது உறுதியாகியுள்ளதாவும் அவர்களின் ரசிகர்கள் தகவல்கள் பரப்பி வருகின்றனர்.
நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா
அரசியலுக்கு வருகிறாரா நடிகை சமந்தா?
நடிகை சமந்தா அரசியலில் ஈடுபடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இவர் பிரதியுஷா என்ற அமைப்பை தொடங்கி ஏழைகளுக்கு உதவிகள் செய்து சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தெலுங்கானாவில் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறார். இதனால் இவரை நெசவாளர்களால் தயாரிக்கப்படும் துணிகளுக்கு விளம்பர தூதுவராக அரசு நியமித்துள்ளது. இந்த நிலையில், இவர் கே.சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபடப்போவதாக தெலுங்கு இணையதளங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இது உண்மையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அந்த கட்சியின் நிர்வாகிகள் சமந்தாவை தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக இருவரது தரப்பில் இருந்தும் எந்தவித அதிகாரபூர்வ தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சமந்தா
நேரில் சென்று உதவி செய்யும் ராகவா லாரன்ஸ்
நடிகர், இயக்குனர், நடனக் கலைஞர் என்று பன்முகக் கலைஞராக வலம் வரும் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே மருத்துவம், படிப்பு என்று கஷ்டபப்டும் குழந்தைகளுக்கு உதவிகள் செய்து வருகிறார். இதுதவிர, கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு நேரில் சென்று உதவவும் தயார் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், தன்னிடம் கோரிக்கை வைத்திருந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றும் விதமாகவும், தான் கூறிய வார்த்தைகளை உண்மையாக்கும் விதமாகவும் பள்ளிக்கரணை, மயிலை, பாலாஜி நகர், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சிலரது குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு தேவையான தொகையை சம்மந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கினார். அப்போது பேசிய அவர், இந்த குழந்தைகளுக்கு உதவும் சேவகனாக என்னை படைத்த கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனது இந்த நேரடி பயணம் தொடரும் என்று கூறியுள்ளார். இயக்குனர் பி.வாசு இயக்கத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'சந்திரமுகி 2' திரைப்படம், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளுடன் நடிகர் ராகவா லாரன்ஸ்
எம்.ஜி.ஆர் ரசிகர் வேடத்தில் கார்த்தி
'குக்கூ', 'ஜோக்கர்', 'ஜிப்ஸி', ஆகிய படங்களை இயக்கிய ராஜு முருகன் தற்போது கார்த்தியை வைத்து 'ஜப்பான்' என்ற படத்தை இயக்கியுள்ளார். கார்த்தியின் 25 வது படமான இதில் அவருக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற படங்களை இயக்கிய நலன் குமாரசாமியின் இயக்கத்தில் தனது 26வது படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். இப்படத்தில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் வேடத்தில் நடிப்பதுடன், சில ஹிட் படங்களில் எம்.ஜி.ஆர் ஏற்றிருந்த கெட்டப்பிலும் தோன்றுகிறாராம். அதற்கான தனி போட்டோ சூட் சென்னையில் அண்மையில் நடந்துள்ளது. அந்த போட்டோக்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. தற்காலிகமாக 'கார்த்தி 26' என்று பெயரிடப்பட்டு, அதற்கான படப்பிடிப்பு பணிகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தியுடன் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு 'வா வாத்தியாரே', 'ரத்தத்தின் ரத்தமே' ஆகிய தலைப்புகளில் ஏதாவது ஒன்று வைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.
எம்ஜிஆர் வேடத்தில் நடிக்கப்போகும் நடிகர் கார்த்தி
சேரன் இயக்கத்தில் கிச்சா சுதீப்
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என்ற பன்முகங்களை கொண்டவர் இயக்குனர் சேரன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு 'திருமணம்' என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இதன்பிறகு 2021ல் 'ஆனந்தம் விளையாடும் வீடு' என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவரது நடிப்பில் கடந்த 7ஆம் தேதி 'தமிழ்க்குடிமகன்' என்ற படமும் வெளிவந்து திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 4 வருட இடைவெளிக்குப் பிறகு சேரன் புதிதாக இயக்க உள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த படத்தில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இப்படம் கிச்சா சுதீப்பிற்கு 47வது படமாகும். கன்னடத்தில் உருவாகும் இப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் படத்திற்கான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் தனது கையினுள் கத்தியுடன், உடம்பில் ரத்தம் வழிந்த நிலையில் கிச்சா சுதீப் அமர்ந்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர், நடிகையர், தொழிநுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சேரன், நடிகர் கிச்சா சுதீப்பிற்கு போட்டுள்ள ஒரு பதிவில், பிறந்த நாள் வாழ்த்துக்கள். விரைவில் 'ஆட்டோகிராஃப்' போன்ற ஒரு மறக்க முடியாத பரிசை உங்களுக்கு மீண்டும் வழங்க காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். 2004ல் சேரன் இயக்கி, நடித்த ஆட்டோகிராஃப் படத்தினை கன்னடத்தில் கிச்சா சுதீப் 'மை ஆட்டோகிராஃப்' என்ற பெயரில் இயக்கி, நடித்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கிச்சா சுதீப்புடன் இயக்குனர் சேரன்
கங்கனா ராணாவத்தின் தோற்றத்தை பாராட்டிய ஜோதிகா
லைகா நிறுவனம் சுபாஸ்கரன் தயாரிப்பில், பி.வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'சந்திரமுகி 2' திரைபபடம் வரும் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளிலும் வெளியாக உள்ள இப்படத்தில் சந்திரமுகியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். படத்தில் இவரின் தோற்றம் மற்றும் கேரக்டர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 'சந்திரமுகி' பாகம் ஒன்றில் சந்திரமுகியாக நடித்திருந்த நடிகை ஜோதிகா, 'சந்திரமுகி 2' படத்தில் ஒரிஜினல் சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கனாவை பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்திய சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவரான கங்கனா சந்திரமுகியாக நடிப்பதை அறிந்து பெருமைப்படுகிறேன். சந்திரமுகி தோற்றத்தில் நீங்கள் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறீர்கள். நான் உங்கள் ரசிகை. படத்தில் உங்களின் நடிப்பை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். லாரன்ஸ் மாஸ்டருக்கும், பி. வாசுவுக்கும் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றி கிடைக்க வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.
நடிகைகள் கங்கனா ராணாவத், ஜோதிகா
விஜய் படத்தில் பிரசாந்த், பிரபு தேவா
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கவுள்ள ''விஜய் 68' படத்திற்கான எதிர்பார்ப்புகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளதால், அவருக்கு ஜோடியாகவும், அம்மாவாகவும் நடிக்க ஜோதிகா, சிம்ரன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை தொடர்ந்து தற்போது சினேகா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விஜய்க்கு தம்பியாக ஜெய் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது புதிதாக இப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த் மற்றும் பிரபு தேவா ஆகிய இருவரும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
'விஜய் 68' படத்தில் நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த்