முன்பெல்லாம் ‘நேஷனல் க்ரஷ்’ என்று சொன்னால் எல்லாரும் கூகுள் செய்துதான் யாரென்று சொல்வார்கள். ஆனால் இப்படியொரு வார்த்தையை முன்பு கேட்டிராதவர்களும்கூட கடந்த சில ஆண்டுகளில் நேஷனல் க்ரஷ் என்ற வார்த்தையையே ஒரு நடிகையால் ட்ரெண்டாக்கினர். அவர் வேறு யாருமல்ல; டோலிவுட், பாலிவுட் என இந்திய அளவில் பல மொழிப்படங்களில் நடித்து அசத்திவரும் நடிகை ராஷ்மிகா மந்தனாதான். சமீபத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ‘புஷ்பா’ முதல் பாகத்தைப் போன்றே இந்த படமும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்துவந்தாலும் அதைவிட ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது இவருடைய காதல். ‘புஷ்பா’ பட நிகழ்ச்சியில் ராஷ்மிகா கொடுத்த ஹிண்ட்தான் இப்போது டோலிவுட் முதல் பாலிவுட் வரை பரவலாக பேசப்பட்டு வருகிறது. காரணம், ‘கீதா கோவிந்தம்’ படத்தின்போதிருந்தே விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இருவருமே அதுகுறித்து வாய்திறக்காவிட்டாலும் அவ்வப்போது ஒரே இடத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஹிண்ட் கொடுத்துவந்தனர். இந்நிலையில் ‘புஷ்பா’ பட புரமோஷன் நிகழ்ச்சியில் அதுகுறித்து கேட்கப்பட்டபோது ‘எல்லாருக்குமே தெரியும்’ என்று ஓப்பனாகவே சொல்லிவிட்டார். அதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவின் குடும்பத்துடன் ராஷ்மிகா இருக்கும் புகைப்படங்கள் வெளியானதுடன், இவர்கள் இருவரும் மீண்டும் ஜோடிசேரும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவருகிறது. ராஷ்மிகா - தேவரகொண்டா காதல் விரைவில் திருமணத்தில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா நட்பு!
2018ஆம் ஆண்டு பரசுராம் இயக்கத்தில் வெளியான தெலுங்கு படமான ‘கீதா கோவிந்தம்’ படத்தில் இடம்பெற்ற ‘இன்கேம் இன்கேம்’ பாடல் தெலுங்கு மட்டுமல்லாமல் இந்திய அளவில் ரசிகர்களை பெற்றது. அந்த ஒரே பாடலால் மிகவும் பிரபலமடைந்த ஜோடிதான் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா. இந்த ஆன்ஸ்க்ரீன் ஜோடியின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர, ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூ.132 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபீஸ் வெற்றிபெற்றது. இந்த படத்திற்கு பிறகு பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நேர்க்காணல்களில் ஒன்றாக பங்கேற்ற இந்த ஜோடி காதலிப்பதாக வதந்திகள் பரவின. ஆனால் அதற்கு முந்தைய வருடம்தான் தனது அறிமுகப்படத்தில் தன்னுடன் நடித்த கன்னட நடிகரான ரக்ஷித் செட்டியை காதலித்து அவருடன் வெகு விமரிசையாக நடந்திருந்த நிச்சயதார்த்தத்தையும் கேன்சல் செய்திருந்தார் ராஷ்மிகா. அதனாலேயே விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்தபோது ஏற்பட்ட நெருக்கத்தால்தான் ரக்ஷித் ஷெட்டியை பிரிந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அதுகுறித்து ராஷ்மிகா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ‘இங்கேம்’ பாடலுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல மொழி படங்களில் நடிக்கும் வாய்ப்பும் இருவருக்கும் தேடிவந்தது. குறிப்பாக, தனது பெரிய கண்கள், அழகிய சிரிப்பு என அனைவரையும் கிறங்கடித்த ராஷ்மிகாவோ ‘நேஷனல் க்ரஷ்’காக அனைவரையும் ஈர்த்தார். இதனால் தமிழ், இந்தி என பிற மொழிப்படங்களிலும் அறிமுகமாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
'கீதா கோவிந்தம்’ படத்தின்மூலம் பிரபலமான ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா
காதலாக மாறியது இப்படித்தானா!
என்னதான் பல முன்னணி ஹீரோ ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்தாலும் மக்கள் விரும்பியது என்னவோ தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடியைத்தான். அதனாலேயே 2019ஆம் ஆண்டு ‘டியர் காம்ரேட்’ படத்தில் இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்தனர். முதலில் நல்ல நண்பர்களாக இருந்தாலும் காதலிப்பதாக பரவிய வதந்திகளாலேயே இந்த படத்தில் நடித்தபோது இருவருக்குமிடையே காதல் மலர்ந்ததாக திரைத்துறைக்கு நெருக்கமானவர்களால் சொல்லப்பட்டது. அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், இந்த ஜோடி குறித்த பேச்சு மட்டும் அணையா நெருப்பாக திரையுலகில் பரவியவண்ணமே இருந்தது. அதற்கு காரணம், இருவருமே ஒரே இடத்திற்கு ஒன்றாக சென்று தனித்தனியாக புகைப்படங்களை எடுத்து, அவரவருடைய சமூக ஊடகங்களில் பதிவிட்டது. இதுபோன்ற போஸ்ட்டுகளை ஒப்பிட்ட ரசிகர்கள், இருவரும் டேட்டிங் செய்வதாக கூறிவந்தனர். இந்நிலையில், நீங்கள் சிங்கிளா? என விஜய் தேவரகொண்டாவிடம் கேட்டபோது, தனக்கு 35 வயதாகியும் இன்னும் யாருடனாவது டேட்டிங் செய்யாமல் இருப்பேனா? என பதிலளித்தார். மேலும் தான் காதலிப்பதற்கு முன்பு ஆழமான நட்பை வளர்த்துக்கொள்ள விரும்புவதாகவும், ஒருவரைப்பற்றி ஒருவர் நன்கு புரிந்துகொண்டபிறகு, அந்த நபருடன் காதலை வளர்த்துக்கொள்ள விரும்புவதாகவும் கூறினார். இப்படி 5 ஆண்டுகள் சீக்ரெட்டாக டேட்டிங் செய்துவந்த ராஷ்மிகா - தேவரகொண்டா ஜோடி ஒருவழியாக காதலை வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறது.
‘டியர் காம்ரேட்’ படத்தின்போது வளர்ந்த காதல்
காதலை ஒத்துக்கொண்டாரா ராஷ்மிகா!
‘புஷ்பா’ முதல் பாகத்தில் சாமி சாமி என ஆட்டம்போட்ட ராஷ்மிகா, இரண்டாவது பாகத்தில் என்ன செய்யப்போகிறார் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு படத்தைவிட சூப்பர் ஷாக் கொடுத்தார் ராஷ்மிகா. சென்னையில் நடந்த ‘புஷ்பா 2’ படத்தின் புரமோஷனில் கலந்துகொண்ட ராஷ்மிகாவிடம், உங்களை திருமணம் செய்பவர் சினிமாத்துறையில் இருக்கவேண்டுமா? அல்லது வேறு துறையில் இருக்கவேண்டுமா? என கேள்வி கேட்டதற்கு, ‘அது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தானே!’ என்று அசால்ட்டாக சொல்ல, அரங்கமே கைதட்டல்கள் மற்றும் விசில் சத்தங்களால் அதிர்ந்தது. இந்த கேள்விக்குப் பிறகு விஜய் தேவரகொண்டாவுடனான தனது காதலை ராஷ்மிகா உறுதி செய்துவிட்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் தீயாய் பரவின. இந்த தகவலை மேலும் உறுதிபடுத்தும்விதமாக விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து ராஷ்மிகா லஞ்ச் சாப்பிட்ட புகைப்படம் ஒன்று வெளியானது. கடந்த சில வருடங்களாக இருவரும் மாறி மாறி தங்களது காதலை மறைமுகமாக வெளிப்படுத்திவந்த நிலையில், தற்போது வெளிப்படையாகவே ராஷ்மிகா தெரிவித்துவிட்டதால் விரைவில் இவர்களுடைய திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ராஷ்மிகாவின் ‘புஷ்பா 2’ திரைப்படமானது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தேவரகொண்டாவும் தனது VD 12 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் தனது 12வது படத்தில் பிஸியாக நடித்துவருகிறார். ‘ஜெர்சி’ படத்தின்மூலம் பிரபலமான இயக்குநர் கௌதம் தின்னு இப்படத்தை இயக்குகிறார்.
விஜய் தேவரகொண்டாவுடனான காதலை ஒத்துக்கொண்ட ராஷ்மிகா
மீண்டும் இணையும் காதல் ஜோடி!
விஜய், அல்லு அர்ஜுன், ரன்பீர் கபூர் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிபோட்டு பான் இந்தியா நடிகையாக ராஷ்மிகா வலம்வரும் அதே வேளையில், ‘குஷி’ படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டாவின் மார்க்கெட் குறைந்திருக்கிறது. குறிப்பாக, அந்த படம் வெளியான சமயத்தில் அவர் ராஷ்மிகாவை கழற்றிவிட்டுவிட்டு சமந்தாவை காதலிப்பதாக செய்திகள் பரவிய நிலையில், ஒரு பெண்ணின் கையை பிடித்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அது ராஷ்மிகாவின் கை என்று அவருடைய ரசிகர்கள் விளக்கமளித்தனர். இருப்பினும் ‘குஷி’க்கு பிறகு வெளியான படங்கள் எதுவும் தேவரகொண்டாவிற்கு கைகொடுக்காததால் மீண்டும் ரியல் காதல் ஜோடியையே ரீலிலும் இறக்க முடிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராகுல் சங்கரித்யன். இவர் ‘ஷியாம் சிங்கா ராய்’ போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர். ராஷ்மிகாவிடம் இவர் கதைசொல்ல அவருக்கு மிகவும் பிடித்துப்போனதாகவும், அதனால் அந்த படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படம் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடியின் கெரியரில் முக்கியப்புள்ளியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதனிடையே ‘புஷ்பா 2’ திரைப்படம் உலகெங்குமுள்ள திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், தனது காதலர் விஜய் தேவரகொண்டாவின் அம்மா மாதவி மற்றும் சகோதரர் ஆனந்த் ஆகியோருடன்சென்று படம் பார்த்துள்ளார் ராஷ்மிகா. ஹைதராபாத்திலுள்ள ஒரு திரையரங்கில் இவர்கள் படம் பார்த்துவிட்டு ஒன்றாக வெளியேவந்த புகைப்படங்கள் வெளியாகி சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. இதற்கு முன்பே தீபாவளி பண்டிகையை விஜய் தேவரகொண்டாவின் வீட்டில்தான் ராஷ்மிகா கொண்டாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.