இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது இருபதுகளில் ஆரம்பித்து 70 வயதை தாண்டியும் இன்றும் விடாமல் தொடர்ந்து படங்களில் நடித்துவரும் இவர் கிட்டத்தட்ட மூன்று தலைமுறையைச் சேர்ந்த வெறித்தனமான ரசிகர்களை தனக்கென சம்பாதித்து வைத்திருக்கிறார். பொதுவாக திரைத்துறையைச் சேர்ந்தவர்களிடையே போட்டி இருக்கும். ஆனால் இந்திய திரையுலகைச் சேர்ந்த பெரிய ஸ்டார்கள் பலரும் சூப்பர் ஸ்டாருக்கு ரசிகர்களாக இருப்பதை பல மேடைகளில் சொல்லியிருக்கின்றனர். ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா’, ‘டைகர் க ஹுகூம்’ போன்ற பாடல்கள் ரஜினியின் வெறித்தனமான ரசிகர்களான பாடலாசிரியர்களால் எழுதப்பட்டவை. இப்படி வயசானாலும் ஸ்டைலும் அழகும் குறையாமல் இருக்கும் ரஜினியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பட ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டது. இதனிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படமான ‘கூலி’ படத்திலும் நடித்துவந்த ரஜினிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் லோகியின் தொடர் ஷூட்டிங்கால்தான் இப்படி நடந்தது என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. ‘வேட்டையன்’ பட ரிலீஸுக்கு சிக்கல் ஏன்? ரஜினிக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்டது எதனால்? இந்த பிரச்சினைகள் எல்லாம் சரியாகிவிட்டனவா? என்பது குறித்து பார்க்கலாம்.

ரஜினி 170!

கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளாக ரஜினி நடிப்பில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், அவை அனைத்திற்கும் ஆறுதலாக அமைந்தது கடந்த ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம். இந்த திரைப்படத்தின்மூலம் களையிழந்திருந்த மாஸ் ஹீரோ என்ற தனது அந்தஸ்தை மீட்டெடுத்தார் ரஜினி. அதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாவதற்கு முன்பு எக்கச்சக்க ஹைப் கொடுக்கப்பட்ட நிலையில், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் மீண்டும் ‘ஜெயிலர்’ பாணியையே கையிலெடுத்தார் ரஜினி. ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவானது ‘ரஜினி 170’. ரஜினியின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது. ‘வேட்டையன்’ என்ற பெயரை பார்த்ததுமே படம் தாறுமாறாக இருக்கப்போகிறது என ரசிகர்கள் உற்சாகமடைந்த நிலையில், அதனை உறுதிசெய்யும்விதமாக அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி என பான் இந்தியா ஸ்டார்கள் உட்பட பலர் படத்தில் இறக்கப்பட்டனர்.


‘தலைவர் 170’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட ‘வேட்டையன்’ ஷூட்டிங்

தன்னை ரஜினியின் வெறித்தனமான ரசிகர் என்று சொல்லிக்கொள்ளும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைப்பதால் பாடல்கள் தரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும்விதமாக முதல் சிங்கிளாக வெளியானது ‘மனசிலாயோ’ பாடல். படம் வெளியாவதற்கு ஒருசில வாரங்களுக்கு முன்பிருந்தே படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் தீம் வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துவந்தது லைகா நிறுவனம். அதற்கு முன்பு சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கங்குவா’ திரைப்படமும் அக்டோபர் 10ஆம் தேதிதான் ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சூப்பர் ஸ்டார் படத்துடன் மோதுவது சரியாக இருக்காது என வெளிப்படையாகவே கூறி படத்தின் ரிலீஸை நவம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளிவைத்துவிட்டனர். இப்படி பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘வேட்டையன்’ படத்தின் ட்ரெய்லரானது அக்டோபர் 2ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து பிரச்சினையும் உருவானது.

‘வேட்டையன்’ ரிலீஸுக்கு தடை கோரி வழக்கு

வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாகவும், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாகவும் வருகிறார் ரஜினிகாந்த். நிறைய சீன்களில் மாஸான டயலாக்குகள் மற்றும் ஆக்‌ஷன் ஃப்ரேம்கள் ரஜினிக்கு வைக்கப்பட்டிருப்பதால் ட்ரெய்லரே ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் படத்தின் ரிலீஸுக்கு தடை விதிக்கக்கோரி, மதுரையைச் சேர்ந்த உலகனேரி பழனிவேலு என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், படத்தின் ட்ரெய்லரில் கிரிமினல்கள்மீது போலீசார் நடத்தும் என்கவுண்டர் தொடர்பான வசனங்கள் இடம்பெற்றிருப்பதாகவும், அது சட்டவிரோதமானது என்றும், அதை ஏன் தணிக்கைக்குழு நீக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் பொழுதுபோக்கு அம்சம் என்ற பெயரில் இதை அனுமதிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், என்கவுண்டர் என்ற பெயரில் போலீசார் நடத்தும் சட்டவிரோதமான கொலையை நியாயப்படுத்த முடியாது என்றும், எனவே பட ரிலீஸுக்கு இடைக்கால தடைவிதித்து, அதுபோன்ற வசனங்களை நீக்கவேண்டும் அல்லது மியூட் செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஆர். சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி நீதிபதிகள் அமர்வு, ‘வேட்டையன்’ பட ரிலீஸுக்கு இடைக்கால தடை விதிக்கமுடியாது என்று கூறி, திரைப்பட தணிக்கைக் குழு, தமிழக தலைமைச் செயலர் மற்றும் லைகா நிறுவனம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.


பிரச்சினைகள் முடிந்து ரிலீஸுக்கு தயாரான ‘வேட்டையன்’

இதனால் பட ரிலிஸுக்கு ஏற்பட்ட சிக்கல் முடிந்தது என படக்குழு மகிழ்ச்சியடைந்த நிலையில், மற்றொரு பிரச்சினை கிளம்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 2020ஆம் ஆண்டு லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவான ‘தர்பார்’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து லைகா நிறுவனத்திடம் பேசியபோது, ரஜினியை வைத்து இயக்கும் அடுத்த படத்தில் இந்த நஷ்டத்தை சரிசெய்வதாகக் கூறி சமாதானப்படுத்தியிருக்கின்றனர். இப்போது மீண்டும் ரஜினியை வைத்து படம் இயக்கி, ஓரிரு நாட்களில் படமும் வெளியாகவிருக்கும் நிலையில், இதுவரை லைகா நஷ்ட ஈடு குறித்து வாய்திறக்கவில்லை என்பதால் அதுகுறித்து விநியோகஸ்தர்கள் கேட்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஒரு பிரச்சினை ஓய்ந்திருக்கும் நிலையில், புது பிரச்சினைகள் வந்துவிடக்கூடாது என ரஜினி கண்டிப்பாக சொல்லிவிட்டதால், லைகா இதை சுமுகமாக முடித்துக்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது.

இதயத்தில் பாதிப்பா?

‘வேட்டையன்’ பட ரிலீஸ் வழக்கு ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரஜினி, செப்டம்பர் 30ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதயத்தை விட்டு வெளியேறும் முக்கிய ரத்தநாளம் வீக்கமடைந்ததால் அறுவைசிகிச்சை அல்லாத ட்ரான்ஸ்கதீட்டர் முறைமூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 3 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த சிகிச்சையில், ரத்தக்குழாயில் ஸ்டண்ட் வைக்கப்பட்டு வீக்கம் சரிசெய்யப்பட்டது. மூத்த இதயநோய் நிபுணர் சாய் சதீஷ் சிகிச்சை அளித்த நிலையில், அக்டோபர் 4ஆம் தேதி ரஜினி வீடு திரும்பினார். இதனிடையே ரஜினி பூரண குணமடையவேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, இளையராஜா, வைரமுத்து, விஜய் உட்பட பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்ததுடன், ரஜினியின் தீவிர ரசிகர்கள் பலர் கோவில்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்து, பூச்சட்டி ஏந்தி வழிபட்டனர்.

இந்நிலையில் குணமடைந்து வீடுதிரும்பிய ரஜினி, அரசியல் தலைவர்களுக்கு தனது எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்து நன்றி தெரிவித்ததுடன், ரசிகர்களுக்கு மனதார நன்றி தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், “நான் மருத்துவமனையில் இருந்தபோது, சீக்கிரம் உடல்நலம் பெறவேண்டி என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்படத்துறையை சேர்ந்தவர்களுக்கும், எனது அனைத்து நண்பர்களுக்கும், நலவிரும்பிகளுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்” எனக் கூறியுள்ளார். மேலும் “நான் நலம்பெற பிரார்த்தனை செய்த, மனதார வாழ்த்திய, என்மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

விமர்சனங்களுக்கு உள்ளான லோகி!

ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில், ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான் காரணம் என்று சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூபர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் லோகி. ஏனென்றால் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு முடிந்த கையோடு, தனது 171வது படமான ‘கூலி’ திரைப்படத்தில் கமிட்டானார் ரஜினி. இந்த படத்தின் படப்பிடிப்பானது விசாகபட்டினம் பகுதிகளில் நடந்துவரும் நிலையில், தொடர்ந்து ஷூட்டிங்கில் பிஸியாக ஓடிக்கொண்டிருந்தார். ‘வேட்டையன்’ ரிலீஸுக்கு முன்பே ‘கூலி’ படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்ஸ்கள் வெளிவந்துகொண்டிருந்தன. இந்நிலையில் திடீரென ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், இரவு, பகல் பாராமல் லோகேஷ் கனகராஜ் வேலை வாங்கியதால்தான் இவ்வாறு ஏற்பட்டது என்றும், என்னதான் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், அவருடைய வயதையும் உடல்நிலையையும் கருத்தில்கொண்டு காட்சிகளை எடுக்கவேண்டும் என்றும் பேசிவந்தனர். இதுகுறித்து ரஜினி தரப்பிலிருந்தோ அல்லது படக்குழு தரப்பிலிருந்தோ எந்த கருத்தும் வெளியிடப்படாத நிலையில், படப்பிடிப்பை முடித்துவிட்டு அக்டோபர் 4ஆம் தேதி சென்னை திரும்பிய லோகேஷ் கனகராஜ் இதுகுறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார்.


ரஜினி உடல்நலம் மற்றும் சிகிச்சை குறித்து லோகேஷ் கனகராஜ் விளக்கம்

“படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயத்தில் பான் இந்தியா ஸ்டார்கள் நிறையப்பேர் இந்த படத்தில் இருப்பதால், டேட்ஸ் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 40 நாட்களுக்கு முன்பே தனக்கு ஒரு சிறிய சிகிச்சை செய்யவேண்டியிருக்கிறது என்று ரஜினி சார் முன்கூட்டியே சொல்லியிருந்தார். அதை வைத்துதான் நாங்கள் ஷூட்டிங்கையே திட்டமிட்டோம். அதன்படி செப்டம்பர் 28ஆம் தேதி அவருடைய ஷூட் முடிந்துவிட்டது. அடுத்தநாள் சிகிச்சைக்காக அவர் மருத்துமனையில் அட்மிட் செய்யப்பட்டார். ஏற்கனவே பேசியபடிதான் இது நடந்தாலும், வேறு மாதிரி வைரல் ஆகிவிட்டது. நாங்களும் அங்கு ஷூட்டிங்கில் இருந்ததால் லேட்டாகத்தான் இதுகுறித்து எங்களுக்கு தெரியவந்தது. அதற்குள் என்னென்னவோ எழுதிவிட்டார்கள். யூடியூபிலும் நிறைய பேசியிருக்கிறார்கள். எங்களுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. ரஜினி சார் ஹெல்த்தை மீறி படம் கிடையாது. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்கு ஏதேனும் அசௌகர்யம் ஏற்பட்டிருந்தால் மொத்த படக்குழுவுமே மருத்துவமனையில்தான் நின்றிருக்கும். சன் பிக்சர்ஸ் படப்பிடிப்பையே நிறுத்தியிருப்பார்கள். ஏற்கனவே திட்டமிட்டபடி நடந்த சிகிச்சை எப்படி இதுபோல் தவறாக மாறி வைரலானது என்று தெரியவில்லை. மீடியாவில் பேசும் அனைவருமே கிட்ட இருந்து பார்த்ததுபோலவே பேசுகிறார்கள். இதை பார்க்கும்போது எங்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்று அவர்கள் யோசிக்கவில்லை. ரஜினி சார் மிகவும் நலமாக உள்ளார். மீடியா, யூடியூப் போன்றவை எதையாவது கூறி மற்றவர்களை பதட்டப்படுத்தவேண்டாம்” என்று கூறியிருந்தார். ஒருவழியாக அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், அக்டோபர் 10ஆம் தேதிக்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

Updated On 14 Oct 2024 9:57 PM IST
ராணி

ராணி

Next Story