இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் சினிமாவில் அன்றைய ரஜினிகாந்த் துவங்கி இன்றைய விஜய் சேதுபதிவரை பல நடிகர்கள் கண்டெக்டராக, கணக்காளராக என தங்களுடைய வாழ்க்கை பயணத்தை துவங்கி இன்று உச்ச நட்சத்திங்களாக மிளிர்ந்து வருகிறார்கள். இந்த வாய்ப்பு லட்சத்தில் சிலருக்கே அமையும் என்றாலும், முயற்சி செய்தால் எவராலும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக இவர்கள் விளங்குகிறார்கள். அந்த வகையில் வங்கி ஊழியராக பணியாற்றி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து, தானும் நடிப்பில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் பல படங்களில் நடித்து வருபவர்தான் நடிகர் குணா பாபு. நன்கு படித்து வங்கியில் உயரதிகாரியாக பணியாற்றி வந்த இவருக்கு நடிப்பின் மீது எப்படி ஆர்வம் வந்தது. இவரின் அடுத்தடுத்த திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து நம்முடன் பகிர்ந்துக் கொண்ட தொகுப்பின் முதல் பகுதியை இங்கே காணலாம்.

ராணி நேயர்களுக்காக உங்களை பற்றி சொல்லுங்களேன்?

என்னுடைய பெயர் குணா பாபு. நான் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக திரைத்துறையில் ஒரு நடிகராக பயணம் செய்து கொண்டிருக்கிறேன். இதற்கு முன்பாக நான் வங்கி ஊழியராக பணியாற்றி கொண்டிருந்தேன். எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக கற்றுக்கொண்டு அதில் ஈடுபட வேண்டும் என்று நினைப்பேன். அப்படித்தான் நடிப்பின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள நடிப்பு பயிற்சி பள்ளியில் சேர்ந்து நடிப்பு தொடர்பாக சான்றிதழ் படிப்பை முடித்தேன். பிறகு தியேட்டர் ஆர்டிஸ்டாக எனது பயணத்தை தொடங்கினேன். இதுவரை தமிழ், மலையாளம் என சுமார் 27 படங்களில் நடித்து முடித்துள்ளேன்.

வங்கி ஊழியராக இருந்த உங்களுக்கு நடிகராக வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?


வங்கி ஊழியராக இருந்து நடிகராக மாறிய குணா பாபு

உடனே நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஏனென்றால் திரைத்துறைக்குள் நுழைந்துவிட்டால் நீண்ட காலம் நீடித்து நிலைத்து இருக்க வேண்டியது அவசியம். அதனால் வெளியில் இருந்து சரியான நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்தேன். அந்த நேரமும் வந்தது. அதன்படி, தமிழில் 2017-ஆம் ஆண்டு எச்.வினோத் எழுதி இயக்கி, கார்த்திக் நடிப்பில் வெளிவந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் என்னை அழைத்து பேசும்போது ராஜஸ்தானில் 45 நாட்கள் படப்பிடிப்பு இருக்கும். நடிகர் கார்த்தியுடன் கூடவே பயணிப்பீர்கள். நிறைய மெனக்கெடல்கள் இருக்கும். சிரமப்பட்டுதான் நடிக்க வேண்டும் என்று கூறினார். முதலில் கொஞ்சம் பயம் இருந்தாலும் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக நிறைய ஆடிஷன்கள் அட்டன் செய்து ஒரு தைரியம் இருந்ததால் முழுமையாக இறங்கினால்தான் முடியும் என்ற என் யோசனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, வீட்டில் பேசி அனுமதி பெற்றுக்கொண்டு, வங்கி வேலையையும் வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டு தீரன் அதிகாரம் ஒன்றில் ஒரு நடிகராக களமிறங்கினேன். இப்படித்தான் என் பயணம் தொடங்கியது.

நீங்கள் வீட்டில் பேசியவுடன் சினிமாவில் நடிக்க ஒத்துக்கொண்டார்களா?

அவ்வளவு எளிதாக யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். என் விஷயத்திலும் அப்படித்தான் இருந்தது. ஆனால், நான் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்திருந்தேன். அதுபற்றி வீட்டில் பகிர்ந்து இருந்தேன். அதுவரை என்னை கவனித்து என் மீது ஏற்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று கேட்டதும் சரி சொல்லிவிட்டார்கள். இரண்டு வருடங்கள் முயற்சி செய்து பார்க்கிறேன் என்று கூறிவிட்டுதான் வந்தேன். இப்போது ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. சின்ன வேடம், பெரிய வேடம், லீடு ரோல் என வித்தியாச வித்தியாசமான தோற்றங்களில் இதுவரை 27 படங்களில் நடித்து முடித்துள்ளேன்.


'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தில் நடிகர் குணா பாபு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த அந்த தருணம் எப்படி இருந்தது?

உண்மையிலேயே அதுவொரு கூஸ்பம்ஸ் மொமெண்ட் என்றுதான் சொல்ல வேண்டும். யாருக்கும் அமையாத ஒரு வாய்ப்பு எனக்கு அவருடன் ‘லால் சலாம்’, ‘வேட்டையன்’ என இரண்டு படங்களில் அமைந்தது. அவர் வந்தாலே ஓர் பாசிட்டிவ் வைப் வரும். படப்பிடிப்பு தளங்களில் சின்ன பையன் மாதிரி துறுதுறுன்னு இருப்பார். அவருடன் பணியாற்றியது நல்லதொரு அனுபவம் எனக்கு.

நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் அளவுக்கு எப்படி உங்களால் சாத்தியப்படுத்த முடிந்தது?

கேட்டவுடன் எதுவும் எளிதாக கிடைத்துவிடாது. நாம் கடின உழைப்பை தொடர்ந்து போட்டால்தான் எதையும் சாத்தியப்படுத்த முடியும். ‘வேட்டையன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு குறைந்தது ஆடிஷனில் கலந்துகொள்ள மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தார்கள். அவர்களில் நானும் ஒருவன். அத்தனை பேருக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்றால் அதுவொரு பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும்.


இருமாறுபட்ட தோற்றங்களில் குணபாபு

லால் சலாமில் நடிக்க சொல்லி அழைப்பு வந்த அந்த முதல் நாள் உங்களுக்கு எப்படி இருந்தது?

லால் சலாம் படத்தில் நடிக்க போகிறேன் அதில் ரஜினி சார் இருக்கிறார் என்று தெரியும். ஆனால், ரஜினி சாருடன் இணைந்து நடிப்பது போன்ற காட்சிகள் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. யாரும் சொல்லவும் இல்லை. போக போகத்தான் தெரிந்தது அவருடன் நான் வர போகிறேன் என்று. அடுத்த நாள் ரஜினி சார் வருகிறார் என்று தெரிந்தவுடன் எனக்கான ஆர்வம் அதிகமானது. முதல் காட்சியே ஒரு கிரிக்கெட் மைதானத்தில் ரஜினி சார் வந்து டாஸ் போடுவது போன்ற காட்சிதான். இதை படமாக்குவதற்கு முன்பாகவே ரஜினி சார் வர போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அங்கிருந்த அனைவரிடத்திலும் இருந்தது. பின் அவர் தூரத்தில் இருந்து வரும்போதே எனக்குள் சந்தோசம் பொங்கி வழிந்தது. பிறகு போட்டியாளர்கள் அனைவருக்கும் ரஜினி சார் கை கொடுப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டபோது, எனக்கும் அவர் வந்து கை கொடுத்தார். அந்த சமயம் ‘சாதிச்சிட்டடா மாறா!’ என்கிற எண்ணம்தான் என் மனதில் ஓடியது. இதற்கு பின் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நான், காலில் விழுந்து ஆசிர்வாதமும் பெற்றேன். இந்த நிகழ்வை என்னால் என்றுமே மறக்க முடியாது.

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளீர்கள், அந்த அனுபவம் பற்றி சொல்லுங்கள்?

விஜய் சேதுபதி சாரை நான் ஒரு சுயம்புவாகத்தான் பார்க்கிறேன். அவர் ஒரு பிறவி நடிகர். அந்த வகையில் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்ததும் ஒரு மறக்க முடியாத அனுபவம் தான். குறிப்பாக அதில் இடைவேளைக்கு முன்பாக வரும் சண்டை காட்சியின் இறுதியில் கமல் சாரின் அறிமுகம் மாஸாக இடம் பெற்றிருக்கும். அப்போது விஜய் சேதுபதியும் வேறு ஒரு கல்யாண சூழல் மிகுந்த பகுதியில் சண்டை போடுவார். பொதுவாக இப்படியான காட்சிகள் படமாக்கப்படும்போது, மானிட்டரை பார்க்கும் வாய்ப்பு சாதாரணமாக யாருக்கும் கிடைத்து விடாது. ஆனால் விக்ரம் பட குழுவினர் நண்பர்களாக என்னுடன் பழகியதால் விஜய் சேதுபதி சார் நடித்த அந்த காட்சியை மானிட்டரில் பார்க்க முடிந்தது. அப்போது அவரின் நடிப்பை பார்த்து நான் அசந்து விட்டேன். உடனே அவரிடம் சென்று சூப்பரா இருந்தது ப்ரோ உங்க நடிப்பு என சொன்னபோது, அப்படியா ஐ லவ் யூ செல்லம் என கூறினார். அவர் அப்படி பேசியது எனக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகவும், மிக சந்தோஷத்தையும் கொடுத்தது.


'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம் - குணா பாபு

அடுத்தடுத்து என்ன மாதிரியான படங்களில் நடிக்க இருக்கிறீர்கள்? கதாநாயகனாக நடிக்கக் கூடிய வாய்ப்பு உங்களை தேடி வருகிறதா?

ஏற்கனவே நான் இரண்டு பாடங்களில் லீட் ரோலில் நடித்து இருக்கிறேன். இருந்தும் சில பொருளாதார சிக்கல் காரணமாக படம் இன்னும் வெளிவரவில்லை. தற்போது மூன்றாவதாக ‘தடை அதை உடை’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளேன். இப்படம் டிசம்பர் அல்லது ஜனவரியில் வெளிவரும் என எதிர்பார்க்கிறேன். இது தவிர ‘திருக்குறள்’ என்கிற படத்திலும் லீட் ரோலில் நடித்துள்ளேன். இந்த படமும் ஜனவரியில் வெளிவரும் என எதிர்பார்க்கிறேன். மேலும் ‘ரிவால்வர் ரீட்டா’, ‘மாஸ்க்’ ஆகிய படங்களில் சப்போர்டிங் ரோலிலும் நடித்துள்ளேன்.

உங்களை போலவே சினிமா துறைக்குள் நுழைந்து சாதிக்க வேண்டும் என எண்ணுபவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

என்னுடைய சொந்த அனுபவத்தில் நான் சொல்ல விரும்புவது. சினிமாவுக்குள் நுழைய முடிவு செய்தீர்கள் என்றால் எந்த சூழ்நிலையிலும் சோர்வடையாமல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். அதோடு, கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்தி சினிமாவில் முடிந்தவரை நண்பர்கள் வட்டாரத்தை பெருக்கி கொள்ள வேண்டும். இதில் மிக முக்கியமாக நம்முடைய தனி திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். இதுதவிர நம் சினிமாவை தாண்டி உலக சினிமா வரை நிறைய படங்கள் பார்க்க வேண்டும். அதன் மூலம் பிற நடிகர்கள் எப்படி நடிக்கிறார்கள், அவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். இப்படி பல விஷயங்களை பின்பற்றி விடாமுயற்சியோடு செயல்பட்டால் நிச்சயம் ஒருநாள் வெற்றி கிடைக்கும் என்பதே எனது நம்பிக்கை.

Updated On 27 Nov 2024 5:38 PM IST
ராணி

ராணி

Next Story