இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் சினிமாவை பொருத்தவரை பெரும்பாலான கதாநாயகிகள் வட இந்திய வரவாகத்தான் இருப்பார்கள். ஆனால் அதற்கு எதிர்மாறாக ஸ்ரீதேவி, வைஜெயந்தி மாலா, ரேகா போன்றோர் இங்கிருந்து சென்று பாலிவுட்டில் தனக்கென தனியிடத்தை பிடித்து பேரையும் புகழையும் சம்பாதித்தனர். அவர்களுக்குப் பிறகு இங்கிருந்து பாலிவுட்டுக்கு சென்ற நடிகைகளுக்கான வெற்றிடம் ஏற்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்த இடத்தை ஒரு நடிகை நிரப்பினார். அவர் வேறு யாருமல்ல; அனைவராலும் முத்தழகு என அன்பாக அழைக்கப்படும் பிரியாமணிதான். ‘முத்தழகு’ என்ற பெயரை கேட்டதுமே தாவணி பாவாடை, பின்னிய தலைமுடி, மேக்கப் இல்லாத அழகிய, தைரியமான கிராமத்து பெண் என்ற தோற்றத்துடன் நம் அனைவரின் கண்முன்னும் வந்துநிற்பார், இவர். பொதுவாக, நடித்தால் கதாநாயகியாக மட்டும்தான் நடிப்பேன் என அடம்பிடிக்கும் பல நடிகைகளுக்கு மத்தியில், பேரும் புகழும் இருந்த போதிலும், கதைக்கும் தனது கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் மட்டும்தான் நடிப்பேன் என முடிவெடுத்து, அதற்கேற்றாற்போல், பலதரப்பட்ட கதாபாத்திரங்களிலும் நடித்தும் வருகிறார் இவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பலமொழிகளில் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் பிரியாமணி, வட இந்திய தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பிறகு மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். வேறு மதத்தவரை திருமணம் செய்துகொண்டதால் அவரைப்பற்றி பல கடுமையான விமர்சனங்களும் வதந்திகளும் பரவிய நிலையில் அவற்றிற்கு நச் பதிலடி கொடுத்திருக்கிறார் பிரியாமணி.

பிரியாமணி அறிமுகம்

தொழிலதிபர் வாசுதேவன் மற்றும் தேசிய பேட்மிண்டன் வீராங்கனை லதாமணி ஆகியோரின் மகள்தான் பிரியாமணி. பாலகாட்டைச் சேர்ந்த தமிழ் பின்னணியை கொண்டிருந்தாலும், இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூரு. இவர் நடிகை வித்யா பாலன் மற்றும் பின்னணி பாடகி மால்குடி சுபா ஆகியோரின் உறவினரும்கூட. அதனாலேயே விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கினாலும் நடிப்பின்மீது ஒருபக்கம் ஆர்வம் வளர்ந்துகொண்டே இருந்தது. அதனாலேயே தனது பள்ளிப்பருவத்திலிருந்தே பல விளம்பரங்களில் மாடலாக வந்தார். அப்போதே நடிக்க வாய்ப்புகள் வந்தபோதிலும் படிப்பில் மட்டும் கவனம் செலுத்திவந்த பிரியாமணி, இளங்கலை படிப்பை முடித்தார். பல நடிகைகளுக்கு மொழிப்பிரச்சினை இருக்கும். ஆனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் சரளமாக பேசக்கூடிய இவருக்கு அது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை.


'அது ஒரு கனா காலம்’ திரைப்படத்தில் தனுஷுடன் பிரியாமணி

முதலில் ‘எவரே அடங்காது’ என்ற தெலுங்கு படத்தின்மூலம் 2003ஆம் ஆண்டு திரைத்துறையில் காலடி எடுத்துவைத்தார். அடுத்த ஆண்டே ‘கண்களால் கைது செய்’ மற்றும் ‘சத்யம்’ ஆகிய படங்களின்மூலம் தமிழ் மற்றும் மலையாளத்திலும் அறிமுகமானார். இப்படி 3 படங்களில் நடித்திருந்தாலும் அவை அனைத்துமே சுமாராக ஓடியதால் பிரியாமணியை ஒரு நடிகையாக பலரும் அடையாளம் காணவில்லை. அதன்பிறகு தனுஷுடன் இவர் ஜோடிசேர்ந்த ‘அது ஒரு கனா காலம்’ திரைப்படம் இவரை ஓரளவு நினைவுகொள்ளும் நாயகியாக காட்டியது. ஒவ்வொரு நடிகர், நடிகைகளின் வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு படம் திருப்புமுனையாக அமையும். அப்படி பிரியாமணிக்கும் திருப்புமுனையாக அமைந்தது ‘பருத்திவீரன்’.

தேசிய விருதால் தேடிவந்த வாய்ப்புகள்

அமீர் இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு வெளியானது ‘பருத்தி வீரன்’. கார்த்திக்கு இது அறிமுகப்படம் என்றாலும், பிரியாமணிக்கு பெயர்சொல்லும் படமாக அமைந்தது. 80களில் கிராமத்து கதைகளுக்கு இருந்த மவுசு, அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டே சென்ற சமயத்தில் அமீர் இயக்கத்தில் வெளியான இப்படம் பலரையும் கிராமத்து கதைகளுக்கு ரசிகராக்கியது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை தனது அப்பா காதலித்து திருமணம் செய்ததால் ஊராரால் ஒதுக்கப்பட்ட பருத்திவீரன், அவன்மீது காதல்வயப்பட்டு, அவனை திருமணம் செய்தே ஆகவேண்டுமென்ற பிடிவாதமும் துணிச்சலுமிக்க முத்தழகு என கிராமத்து காதலை அழகாக எடுத்துக்காட்டிய இப்படத்தில் பருத்திவீரனாக கார்த்தியும், முத்தழகாக பிரியாமணியும் நடித்தனர். சோஷியல் மீடியாவின் பயன்பாடு இல்லாத அந்த சமயத்திலேயே இந்த படத்திற்கு பிறகு பலரும் தங்களது காதலியை ‘எலேய் முத்தழகு’ என்று செல்லமாக அழைக்கும் அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்தது இந்த கதாபாத்திரம். முத்தழகு கதாபாத்திரம் பிரியாமணியின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியதாக அவரே பலமுறை சொல்லியிருக்கிறார். ‘மௌனம் பேசியதே’ மற்றும் ‘ராம்’ என்ற இரண்டு படங்களில் சேர்ந்து பணியாற்றிய அமீர் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணிதான் இந்த படத்திலும் இணைந்தது. துணிச்சலான கிராமத்து பெண்ணுக்கு குரல் இருக்கவேண்டுமென டைரக்டர் கேட்க, எந்த மாடுலேஷனாக இருந்தாலும் நான் கொடுக்கிறேன் என தனது சொந்த குரலிலேயே டப்பிங்கும் செய்தார் பிரியாமணி. அதுதான் கடைசியில் படத்திற்கு பக்கபலமாக அமைந்ததாக பலராலும் பாராட்டப்பட்டார். இந்த படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றார்.


பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுத்தந்த ‘முத்தழகு’ கதாபாத்திரம்

‘பருத்தி வீரன்’ படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிக்குப்பிறகு, பல மொழிகளிலிருந்தும் பிரியாமணிக்கு வாய்ப்புகள் தேடிவந்தன. தமிழில் ‘மலைக்கோட்டை, ‘தோட்டா’, ‘ஆறுமுகம்’ ‘நினைத்தாலே இனிக்கும்’ என அடுத்தடுத்த ஆண்டுகளில் படங்கள் வெளியான போதிலும் அவை எதுவும் பெரிதளவில் கைகொடுக்கவில்லை. அதுபோலவே தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பெரிதளவில் படங்கள் வெற்றிபெறாததால் தனது ரூட்டை மாற்றினார் பிரியாமணி. 2010ஆம் ஆண்டு ‘ராவணன்’ என்ற இந்தி படத்தில் நடித்து பாலிவுட்டுக்குள் நுழைந்தார். அங்கும் பெரிதளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன்பிறகுதான், கதாநாயகியைவிட தனக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் நடிப்பது என முடிவெடுத்தார். குறிப்பாக, 2013ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஷாருக்கானுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டதையடுத்து, தெலுங்கு மற்றும் கன்னடத்தில் சில வாய்ப்புகள் கிடைத்தன. தொடர் சறுக்கல்களை சந்தித்துவந்த பிரியாமணிக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் அவை சிறிய பட்ஜெட் படங்களாகவே அமைந்தன. குறிப்பாக பெரிய ஸ்டார்களின் படங்களில் நடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “நான் ஸ்டார் நடிகர்களுடன் நடிக்க முடியாததற்கான காரணத்தை இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும்தான் சொல்லவேண்டும்” என்று பதில் கூறியதுடன், தனது பெரிய ஸ்டார்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தொடர்ந்து கைவசம் படங்கள் இருந்துகொண்டே இருப்பதாகவும், தான் பிஸியாக நடித்துக்கொண்டேதான் இருப்பதாகவும் கூறினார். மேலும் பல ரியாலிட்டி ஷோக்களிலும் இணைந்து பணியாற்றினார்.

கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கிய திருமணம்

தென்னிந்திய படங்களில் நடித்துவந்தாலும் மும்பையில் தங்கிவந்த பிரியாமணிக்கும், தொழிலதிபர் முஸ்தபா ராஜ் என்பவருக்குமிடையே காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அப்போதிருந்தே பல்வேறு ட்ரோல்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு ஆளாகிவரும் பிரியாமணி அடிக்கடி தனது திருமணம் குறித்து பேசுபவர்களுக்கு பதிலடி கொடுத்துவருகிறார். குறிப்பாக, முஸ்தபாவின் முதல் மனைவி ஆயிஷா, பிரியாமணியுடனான முஸ்தபாவின் திருமணம் செல்லாது என்றும், அவர் தன்னை அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்யவில்லை என்றும் சர்ச்சையை கிளப்பினார்.


தனது காதல் கணவர் முஸ்தபா ராஜுடன் பிரியாமணி

ஆனால், அந்த நேரத்தில் முஸ்தபா, தனது கையை பிடித்து ஆறுதல் கூறியதாகவும், அந்த சர்ச்சைகள் அனைத்தையும் தான் சரிசெய்வதாக வாக்குறுதி அளித்ததாகவும் கூறினார். இப்படி ஒருவழியாக திருமண சர்ச்சை முடிந்தபிறகு, தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்திவந்தார் பிரியாமணி. குறிப்பாக, கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ஜவான்’ திரைப்படத்தில் மீண்டும் ஷாருக்கானுடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன்பிறகு தமிழ் ரசிகர்களால் நினைவுக்கூரப்பட்ட பிரியாமணிக்கு மீண்டும் தமிழ் படவாய்ப்புகள் கிடைத்துள்ளன. இப்போது விஜய்யின் கடைசிப்படமான ‘தளபதி 69’இல் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. பிரியாமணியை அவரது கணவர் முஸ்தபா முஸ்லீமாக மதம் மாற்றிவிட்டார் என வதந்திகள் பரவியது குறித்து அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அதில், “நான் ஒரு முஸ்லீமை திருமணம் செய்துகொண்டதால் நானும் மதம் மாறிவிட்டேன் என சிலர் வதந்திகளை பரப்பிவருகிறார்கள். நான் மதம் மாறிவிட்டேன் என்று அவர்களுக்கு எப்படி தெரியும்? நான் மதம் மாறமாட்டேன் என்று என் கணவரிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன். அவரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அவரவர் மதத்தை பின்பற்றுகிறோம், அவரவர் நம்பிக்கையை மதிக்கிறோம். மேலும் எனக்கு பிறக்கு குழந்தைகள் பயங்கரவாதிகளாகத்தான் இருப்பார்கள் என்று சிலர் எனக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார்கள். அது என்னை மிகவும் பாதித்தது. ஜாதி, மதத்தை தாண்டி திருமணம் செய்துகொண்ட பலர் இன்றும் காதலித்து வரும் நிலையில், ஏன் இந்த அளவுக்கு வெறுப்பு காட்டப்படுகிறது என்று எனக்கு புரியவில்லை” என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

Updated On 21 Oct 2024 9:15 PM IST
ராணி

ராணி

Next Story