(3.03.1985 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)
சிரிப்பு நடிகர் ஜனகராஜ் காதல் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்!
"ஒரு கைதியின் டைரி", “கன்னிராசி", "மண்ணுக்கேத்த பொண்ணு" மற்றும் பல படங்களில் நடித்து இருப்பவர் ஜனகராஜ். இவருக்கும் ஒரு கல்லூரி மாணவிக்கும் காதல் மலர்ந்து இருக்கிறது. அது விரைவில் கல்யாணத்திலும் முடியப்போகிறது!!
ஜனகராஜின் காதல் வலையில் சிக்கிய கல்லூரி மாணவியின் பெயர் மாலதி. தெலுங்குப் பெண். ஜனகராஜ் வீட்டுப் பக்கத்தில் உள்ள விடுதியில் தங்கிப் படித்தார்.
புன்னகை தோற்றத்தில் நடிகர் ஜனகராஜ்
காதல் திருமணம் பற்றி ஜனகராஜ் சொன்னதாவது:
"நான் எங்க வீட்டு மொட்டை மாடிக்குப் போகும் போது, மாலதியும் விடுதியின் மொட்டை மாடிக்கு வருவாள். இருவரும் மாடியில் நின்று, பார்வையாலே முதலில் சந்தித்தோம். அப்புறம் படிப்படியாக எங்கள் காதல் வளர்ந்தது. எங்கள் காதலுக்கு 2 பேர் வீட்டிலும் ஆரம்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. பெற்றோர்களின் சம்மதத்துக்காகத்தான் இத்தனை நாட்களும் காத்திருந்தோம்.
சமீபத்தில் அவளுடைய அம்மாவும், அப்பாவும் பிஜி தீவில் இருந்து சென்னைக்கு வந்தார்கள். (மாலதியின் பெற்றோர்கள் பிஜி தீவில் இருக்கிறார்கள்) என்னை சந்தித்து பேசினார்கள். என் அம்மா அப்பாவிடமும் பேசினார்கள். திருமணம் நிச்சயமானது. இன்னும் 2 வாரத்தில் எங்கள் திருமணம் நடக்கும். தேதி இன்னும் நிச்சயிக்கப்படவில்லை. நான் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் பற்றுள்ளவன். அதனால் சாஸ்திரம் சம்பிரதாயங்களை நம்பமாட்டேன்.
'அக்னி நட்சத்திரம்' படத்தில் ஒரு காட்சியில் ஜனகராஜ்
அதனால் மிக எளிய முறையில் எங்கள் வீட்டில் திருமணம் நடைபெறும். தாலிகட்டி, மாலை மாற்றியபின் எங்கள் திருமணத்தை பதிவு செய்து கொள்வோம்" என்றார் ஜனகராஜ். "காதலியோடு நீங்கள் படம் எடுத்துக் கொள்ளவில்லையா?" என்று கேட்டதற்கு, ''நாங்கள் மனதாலே படம் பிடித்துக் கொண்டோம்" என்று சிரித்தார் ஜனகராஜ்.