பொதுவாகவே சினிமா மொழியில் இன்றைய குழந்தை நட்சத்திரங்களை வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று கூறுவார்கள்.காரணம், குழந்தை நட்சத்திரங்களாக நடித்து புகழ் பெற்ற பலர், எதிர்காலத்தில் மிகப்பெரிய நடிகர், நடிகைகளாக மாறியதால் தான். இதற்கு உதாரணமாக, நம் தமிழ் சினிமாவிலேயே நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவியின் திரைப்பயண வளர்ச்சியை கூறலாம். இருப்பினும் அவர்களில் சிலர் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போது வாங்கியப் பெயர் அளவுக்கு, வளர்ந்து வாய்ப்பு கிடைத்தும் பிரகாசிக்காமல் போனவர்களும் உண்டு. இது ஒருபுறம் இருக்க தமிழ் சினிமாவை பொறுத்தவரை குழந்தை நட்சத்திரங்களுக்கு கொடுக்கப்படும் வாய்ப்பு மற்றும் முக்கியத்துவம் என்பது அன்றைய கருப்பு வெள்ளைக் காலம் தொடங்கி இன்றைய டிஜிட்டல் யுகம் வரை எப்போதுமே சிறப்பானதாகவே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண் குழந்தை நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவிற்கு பல வகையில் பெருமை தேடி தந்துள்ளதோடு, பலமுறை தேசிய விருதினையும் வென்று வந்து நமக்கு புகழையும் பெற்று தந்துள்ளனர். அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் மிகவும் கவனம் பெற்ற பெண் குழந்தை நட்சத்திரங்கள் குறித்த சுவாரஸ்யமான தொகுப்பை கீழே காணலாம்...
தமிழுக்கு பெருமை தந்த முதல் தேசிய விருது
1950-60களில் மிகப்பிரபலமான குழந்தை நட்சத்திரமாக விளங்கியவர் 'டெய்சி இராணி'. 1954 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த 'பந்திஷ்' என்கிற படத்தின் மூலம் இவர் பாலிவுட்டில் அறிமுகமாகி இருந்தாலும், தமிழில் 'யார் பையன்' போன்ற படங்களில் நடித்து மிகவும் திறமை வாய்ந்த சிறுமியாக அடையாளம் காணப்பட்டார். இவரது காலகட்டத்திலேயே அறிமுகமான மற்றும் ஒரு குழந்தை நட்சத்திரமான 'பேபி ராணி' இவரையே மிஞ்சும் வகையில் 'பேசும் தெய்வம்', 'குழந்தைக்காக', 'கண்ணே பாப்பா', 'கண்காட்சி' போன்ற படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து பலரின் உள்ளங்களையும் கொள்ளைக் கொண்டார். இதில் குறிப்பாக 'கண்ணே பாப்பா' திரைப்படத்தை அன்றைய ரசிகர்களால் அத்தனை எளிதில் மறக்க இயலாது. அதே போல் 'குழந்தைக்காக' படத்திற்காக இந்தியாவிலேயே முதல் முறையாக குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்ற பேபி ராணி, இதன் மூலம் தமிழ் சினிமாவிற்கும் பெருமையை தேடித் தந்தார். இவர்கள் தவிர பேபி சாவித்ரி, பேபி ஷகிலா, ரோஜா ரமணி போன்ற சிறுமிகளும் 'கைதி கண்ணாயிரம்', 'பக்த பிரகலாதா', 'இருமலர்கள்', 'சித்தி', 'என் தம்பி', 'சாந்தி நிலையம்' போன்ற பல படங்களில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, பிரபலமான குழந்தை நட்சத்திரங்களாக அந்த சமயம் வலம் வந்தனர்.
குழந்தை நட்சத்திரத்துக்கான முதல் தேசிய விருது பெற்ற பேபி ராணி
இந்த நேரத்தில் தான், 'அபலை அஞ்சுகம்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற குட்டி பத்மினி தன் அழகாலும், துறுதுறு நடிப்பாலும், வண்டு கண்களாலும் அனைவரது உள்ளங்களையும் கவர்ந்தார். அதிலும் குறிப்பாக, 1965 ஆம் ஆண்டு ஏ.வி.எம் தயாரிப்பில் வெளிவந்த 'குழந்தையும் தெய்வமும்' படத்தில் லல்லி, பப்பி எனும் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்த குட்டி பத்மினி அன்று பலரது பாராட்டையும் பெற்றார். இவர் நடித்து வந்த இதே காலகட்டத்தில் இவருக்கு தங்கையாக, தம்பியாக என பல படங்களில் நடித்திருந்த ஸ்ரீதேவியும், 'கந்தன் கருணை', 'பாபு', 'நம் நாடு' போன்ற பல படங்களில் தனித்துவமான குழந்தை நட்சத்திரமாக அடையாளம் பெற்றார். பிறகு பின்னாளில் இந்திய சினிமாவே பிரமிக்கும் படியான லேடி சூப்பர் ஸ்டாராகவும் மாறிப்போனார்.
1950-60களில் பிரபலமாக விளங்கிய குழந்தை நட்சத்திரங்கள்
80,90-களில் கியூட்டாக நடித்து அசத்திய குட்டிஸ்
80-களின் தொடக்கத்தில் முந்தைய கருப்பு வெள்ளை காலம் அளவுக்கு பெரிய அளவில் குழந்தை நட்சத்திரங்களை முன்னிறுத்திய படங்கள் கவனம் பெறாமல் இருந்தாலும், மகேந்திரன் போன்ற தனித்துவமான இயக்குனர்கள் குழந்தைகளின் சிரிப்பையும், அழுகையையுமே தனி திரை மொழியாக மாற்றி நம்மை கலங்க வைத்திருந்தனர். இதற்கு உதாரணமாக 'உதிரிப்பூக்கள்' அஞ்சு கதாபாத்திரத்தை சொல்லாம். இந்த படத்தில் சிறுமி அஞ்சு சிரிக்கின்ற ஒவ்வொரு இடங்களிலும், அன்று திரையரங்கில் கண்ணீர் விடாத உள்ளங்களே இல்லை எனலாம். அதே போல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனாவும், இதே காலகட்டத்தில் 'நெஞ்சங்கள்' என்ற படத்தில் சிவாஜியுடன் இணைந்து நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதோடு, 'எங்கேயோ கேட்ட குரல்', 'அன்புள்ள ரஜினிகாந்த்' போன்ற படங்களில் தனது தனித்துவமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி பலரது கவனத்தையும் பெற்றார்.
இந்த நேரத்தில்தான், மலையாள சினிமாவில் சிறந்த குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருந்த பேபி ஷாலினி, 1984 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஓசை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தன் முதல் படத்திலேயே கியூட்டான நடிப்பால் பலரையும் கவர்ந்த இவர், பல பெற்றோர்கள் விரும்பும் குழந்தை நட்சத்திரமாக மாறியதோடு, அடுத்தடுத்து 'பந்தம்', 'பிள்ளை நிலா', 'நிலவே மலரே', 'சிறைப்பறவை', 'சங்கர் குரு' போன்ற பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டையும் பெற்றார். இவரைப்போலவே 90-களின் தொடக்கத்தில் 'ராஜநடை' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவரது தங்கை ஷாமிலி, 'அஞ்சலி', 'துர்கா', 'தைப்பூசம்', 'செந்தூர தேவி' போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளைக் கொண்டார். இதில் குறிப்பாக 1990 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'அஞ்சலி' படத்திற்காக தேசிய விருது பெற்ற இவர், அதன் மூலம் இந்திய அளவில் பெரும் கவனம் பெற்றார். இவர்கள் தவிர 'பூவிழி வாசலிலே' படத்தில் நடித்த சுஜிதா, 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு' படத்தில் வரும் கீத்து மோகன்தாஸ், 'கேளடி கண்மணி' படத்தில் நடித்த நீனா, 'ரிக்சா மாமா' போன்ற படங்களில் நடித்த ஸ்ரீதேவி விஜயகுமார், 'அழகி ' மோனிகா, 'சூர்யவம்சம்' ஹேமா, 'நேருக்கு நேர்' ஜெனிபர், 'அள்ளி தந்த வானம்' கல்யாணி உட்பட பல குழந்தை நட்சத்திரங்களும் இதே காலகட்டத்தில் தான் அறிமுகமாகி பிரபலமானார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
80,90-களில் நடிப்பில் அசத்திய குழந்தை நட்சத்திரங்கள்
தேசிய அளவில் கவனம் பெற்ற சிறுமிகள்
1968 ஆம் ஆண்டு வெளிவந்த 'குழந்தைக்காக' படத்தில் நடித்த பேபி ராணியை தொடர்ந்து, 22 வருட இடைவெளிக்கு பிறகு 1990 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த 'அஞ்சலி' படத்திற்காக ஷாமிலி, தருண் மற்றும் சுருதி ஆகிய மூன்று குழந்தை நட்சத்திரங்களுக்கு தேசிய விருது கிடைத்தது. இதனை தொடர்ந்து 90-களின் இறுதி துவங்கி பல்வேறு தேசிய விருதுகளை தமிழ் சினிமாவை சேர்ந்த குழந்தை நட்சத்திரங்கள் இன்று வரை பெற்று வருகின்றனர். அதில் குறிப்பாக, 1998 ஆம் ஆண்டு சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த 'மல்லி' திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்ற பேபி ஸ்வேதா, பிறகு மீண்டும் 2001 ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர்கள் சந்திக்கும் வாழ்க்கை சிக்கலை மையமாகக் கொண்டு வெளிவந்த 'குட்டி' திரைப்படத்திற்காக மற்றும் ஒரு தேசிய விருதினை பெற்றார். இதன் மூலம் இரண்டாவது முறையாக தேசிய விருதினை பெற்ற முதல் தமிழ் குழந்தை நட்சத்திரம் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. இதற்கு பிறகு 2002 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'கன்னத்தில் முத்தமிட்டாள்' திரைப்படத்திற்காக நடிகரும் இயக்குனருமான பார்த்திபனின் மகள் கீர்த்தனா குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதினை பெற, 10 ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஒரு பெண் குழந்தை நட்சத்திரமாக கடந்த 2013 ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளிவந்த 'தங்க மீன்கள்' திரைப்படத்திற்காக, பேபி சாதனா தேசிய விருதினை பெற்றார்.
தேசிய விருது பெற்று தமிழுக்கு பெருமை சேர்த்த சிறுமிகள்
இதனிடையே 2011 ஆம் ஆண்டு வெளிவந்த 'தெய்வத்திருமகள்' படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்திருந்த பேபி சாரா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருது கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பு கைநழுவிப் போனது. இவர்கள் தவிர, நடிகர் அஜித்திற்கு மகளாக 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அங்கிதா, விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'தெறி' திரைப்படத்தில் விஜய்யின் மகளாக நடித்திருந்த மீனாவின் மகள் நைனிகா, எட்டு வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி பெற்றோர் முன் கூனிக்குறுகி நிற்கும் பரிதாபமான வேடம் ஏற்று பலரின் கவனம் பெற்ற 'நிசப்தம்' சாதன்யா, ஏன் சமீபத்தில் வெளிவந்து பலரின் கவனம் பெற்றுள்ள 'சித்தா' படத்தில் சித்தார்தின் அண்ணன் மகளாக வரும் சஹஸ்ர ஸ்ரீ என ஒவ்வொரு காலகட்டத்திலும் அறிமுகமாகும் பல பெண் குழந்தை நட்சத்திரங்கள் தனித்துவம் வாய்ந்த திறமையாளர்களாகவே இருந்து வருகின்றனர். அந்த வகையில், இனி வரும் காலங்களிலும் தேசிய விருதினை கடந்த சாதனைகளை இத்தகைய பெண் குழந்தை நட்சத்திரங்கள் நிச்சயம் நிகழ்திக்காட்டுவார்கள் என நம்பலாம்.
2010க்கு பிறகு தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற குழந்தை நட்சத்திரங்கள்