
அந்த காலக்கட்டத்தில் உடல் கவர்ச்சியை மையமாகக் கொண்டு நடிப்பதை முதன்மைப்படுத்திய நடிகைகள் பலருக்கு மத்தியில், தனது தேர்ந்த நடிப்பின் மீது முழு நம்பிக்கையை வைத்து திரையுலகில் வெற்றியுடன் பயணித்தவர்தான் சங்கீதா. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பன்மொழித் திரைப்படங்களில் 60-க்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர், தனக்கென தனியொரு இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ஆவார். 2000-களுக்குப் பிறகு திரையுலகில் அதிக கவனம் செலுத்தாமல், குறைந்த அளவிலான திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய சங்கீதா, 14 ஆண்டுகளுக்கு பிறகு தனது தாய்மொழியான மலையாளத் திரையுலகில் மட்டும் சில படங்களில் தோன்றினார். தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் மீண்டும் தனது திரைப்பயணத்தை தொடங்க இருக்கிறார் சங்கீதா. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்க இருக்கும் சங்கீதாவின் திரைப்பயணம், அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவல்களை இந்தக் கட்டுரையில் விரிவாக காணலாம்.
குழந்தை நட்சத்திரமாக சங்கீதா
குழந்தை நட்சத்திரமாக சங்கீதா
திரைப்பட உலகில் தன் திறமையால் மக்களின் மனதில் நிலைத்திருக்கும் அளவில் முதன்மையான இடத்தைப் பிடித்த சங்கீதா, 1976ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் தேதி, கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள கோட்டக்கல் பகுதியில் பிறந்தார். இவரது பெற்றோர் மாதவன் நாயர், பத்மா தம்பதியர் ஆவர். இவருக்கு மல்லிகா, ஷாரு என்ற இரண்டு பெரிய சகோதரிகள், நித்திஷ் என்ற ஒரு சகோதரரும் உள்ளனர். ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்த சங்கீதாவின் தந்தை, தொழிலின் காரணமாக குடும்பத்துடன் கேரளாவில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார். மாதவன் நாயருக்கு திரையுலகில் சில நண்பர்கள் இருந்ததால், சங்கீதா ஒரு வயது கடந்திருந்தபோது, 1978ஆம் ஆண்டு சுவர்ணா ஆட்ஸ் தயாரிப்பில் என்.சுகுமாரன் நாயர் இயக்கத்தில் வெளியான ‘ஸ்னெஹிக்கன் ஒரு பொண்ணு’ என்ற மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, ‘மஞ்சு’, ‘வர்தா’, ‘என்னென்னும் கண்ணோட்டண்டே’ போன்ற படங்களில் மம்முட்டி, மோகன்லால் போன்ற பிரபல நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இருந்தும் திரைப்படத்திற்கே முழுமையாக நேரத்தை ஒதுக்காமல் கல்விக்கும் முக்கியத்துவம் அளித்த சங்கீதா, தனது பள்ளி படிப்பை சென்னை ஸ்ரீ குஜராத்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் தொடங்கினார். படிப்புடன் சேர்த்து பிற கலைகளிலும் திறமையை வெளிப்படுத்த, பெற்றோரின் அனுமதியுடன் பாரம்பரியமான நாட்டியக் கலை கற்றுத் தேர்ந்தார். பின் ஒரு கட்டத்தில் சங்கீதாவின் அழகும் திறமையும் தமிழ் திரையுலகினரின் கவனத்தையும் ஈர்த்ததை தொடர்ந்து, குழந்தை நட்சத்திரமாக தமிழ்த் திரையுலகிலும் அறிமுகமானார். சுஜாதா சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில், சுந்தர் கே.விஜயன் இயக்கத்தில், கே.பாக்யராஜ் நடித்த ‘என் ரத்தத்தின் ரத்தமே’ திரைப்படத்தில் பாக்யராஜ் தத்தெடுத்து வளர்க்கும் குழந்தைகளில் ஒருவராக நடித்த இவர், அதற்குப் பிறகு, 1991ஆம் ஆண்டு சந்திரகாந்த் இயக்கத்தில் ரமேஷ் அரவிந்த், மீனா நடிப்பில் வெளியான ‘இதய வாசல்’ படத்தில் டெல்லி கணேஷின் மகளாகவும், மீனாவின் தங்கையாகவும் ‘உமா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதைத் தொடர்ந்து, சங்கீதா தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து அங்கும் பலரையும் கவர்ந்தார்.
கதாநாயகியாக அறிமுகம்
நடிகர் ராஜ்கிரணின் ‘எல்லாமே என் ராசாதான்’ திரைப்பட காட்சிகள்
பல மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்ற சங்கீதா, தமிழில் சிவாஜி கணேசன் தொடங்கி சரத்குமார், அரவிந்த்சாமி ஆகியோருடனும் இணைந்து நடித்து கவனம் பெற்றார். இருப்பினும் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தையும், புகழையும் பெற்றுக் கொடுத்த திரைப்படம் என்றால், அது உலக நாயகன் கமல்ஹாசனுடன் நடித்த ‘மகாநதி’ படம்தான். 1994ஆம் ஆண்டு அம்மன் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், சந்தான பாரதி இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கிருஷ்ணசாமியாக வரும் கமல்ஹாசனின் மகளாக காவேரி எனும் கதாபாத்திரத்தில் நடித்தார். இதில் மூன்று கால கட்டங்களில் வரும் காவேரி கதாபாத்திரத்தில், இளநங்கை வேடம் ஏற்று நடித்திருந்த சங்கீதா இறுதிக்காட்சியில் வந்து நம் மனதை நெகிழ வைத்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு, இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் இயக்கிய ‘சரிகமபதநி’ படத்தில், ஒரு ஏமாற்றத்தால் மனநிலை பாதிக்கப்படும் கதாபாத்திரத்தில் ‘சங்கீதா’ என்ற பெயரிலேயே நடித்து ரசிக்க வைத்திருந்தவர், தொடர்ந்து மகள், தங்கை போன்ற துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்த சமயத்தில்தான் சங்கீதாவின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை தந்த படமாக, நடிகர் ராஜ்கிரண் இயக்கிய ‘எல்லாமே என் ராசாதான்’ திரைப்படம் அமைந்தது. இதில், முதல் முறையாக கதாநாயகியாக அறிமுகமான சங்கீதா, ராஜ்கிரணின் மனைவியாக ‘ராணி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். குறிப்பாக, படத்தின் இறுதி பகுதியில் மறைந்து போகும் போது தனது உணர்வுபூர்வமான நடிப்பால் அனைவரின் மனதையும் உலுக்கியவர், கணவர் மீது அன்பு காட்டும் காட்சிகளிலும், தீய பழக்கத்திலிருந்து கணவரை மீட்க முயலும் முயற்சிகளிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இப்படி நடிப்பு மட்டும் இல்லாமல், இளையராஜாவின் இசையில் வெளிவந்த இப்படத்தின் பாடல்களும் சங்கீதாவிற்கு மேலும் பெரும் புகழைக் கொண்டு வந்து சேர்க்க அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தன. அதில் நடிகர் பார்த்திபனுடன் நடித்த ‘புள்ளகுட்டிக்காரன்’, இயக்குநர் சுந்தர்ராஜன் இயக்கத்தில், பிரபு நடிப்பில் வெளியான ‘சீதனம்’ ஆகிய திரைப்படங்கள் மிகுந்த கவனத்தை பெற்றுத்தரவே தொடர்ந்து நடிகர் ராமராஜனுடன் ‘அம்மன் கோவில் வாசலிலே’, ‘நம்ம ஊரு ராசா’, விஜயகாந்துடன் ‘அலெக்சாண்டர்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
பூவே உனக்காக தந்த புகழ்
'பூவே உனக்காக' திரைப்படத்தில் விஜய்யுடன் சொல்லாமலே பாடலில் சங்கீதா
ராஜ்கிரண் துவங்கி பார்த்திபன், விஜயகாந்த், பிரபு, ராமராஜன் என வரிசையாக அப்போதைய முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நடித்து வந்த சங்கீதாவுக்கு விஜய்யுடன் நடித்த ‘பூவே உனக்காக’ திரைப்படம் மிகப்பெரிய புகழையும், பாராட்டுகளையும் பெற்றுக்கொடுத்தது. 1996-ஆம் ஆண்டு சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில், விக்ரமன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த இப்படம் சங்கீதாவுக்கும் சரி, விஜய்க்கும் சரி அவர்களின் திரை வாழ்க்கையில் மிக முக்கிய படமாக இன்றுவரை இருந்து வருகிறது. காதல், நகைச்சுவை என ஜனரஞ்சக படமாக வெளிவந்த இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியதர்ஷினியாக வரும் சங்கீதா, நிர்மலா மேரி என்ற வேடத்திலும் எதார்த்தமாக நடித்து நகைச்சுவையில் கலக்கியிருப்பார். இதற்கு முன் அவர் எத்தனையோ படங்களில் நடித்து அடையாளம் பெற்றிருந்தாலும், 250 நாட்களுக்கு மேல் ஓடிய இப்படத்தின் வெற்றி வாயிலாக இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து ‘பூவே உனக்காக சங்கீதா’ என்றே நிலை பெற்றுவிட்டார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சத்யராஜின் ‘வள்ளல்’ திரைப்படத்தில் செல்ல கிளியாக, அருண்குமாருடன் ‘கங்கா கௌரி’யில் கௌரியாக நடித்தவர், குடும்பங்கள் கொண்டாடிய இயக்குநரான வி .சேகரின் இயக்கத்தில் வெளிவந்த ‘காலம் மாறிப்போச்சு’ என்ற திரைப்படத்தில் பாண்டியராஜனுக்கு மனைவியாக இந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து நடிப்பில் மிளிர்ந்தார். இதற்கு பிறகு ‘பொங்கலோ பொங்கல்’, ‘கல்யாண வைபோகம்’, ‘ரத்னா’, ‘எதிரும் புதிரும்’ என நடித்தவர் 2000-ஆம் ஆண்டு வெளிவந்த ‘கண் திறந்து பாரம்மா’ என்ற படத்துடன் திரையுலகில் இருந்து ஒதுங்கினார். பூவே உனக்காக திரைப்படத்தில் போட்டோகிராபராக பணியாற்றிய சரவணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த சங்கீதா, தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.
25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையில்
‘காளிதாஸ் 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
திரைப்பட இயக்குநர் ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, ‘காதல்’ திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் பரத், தற்போது திரையுலகில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார். அவரின் சமீபத்திய திரைப்படமான ‘காளிதாஸ் 2’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இத்திரைப்படத்தை இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கியுள்ளார். இதில், பரத்துடன் நடிகர்கள் அஜய் கார்த்திக், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ, அபர்னதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ‘பூவே உனக்காக’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை சங்கீதா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகுக்கு திரும்பியுள்ளார். 2019ஆம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. அதன் தொடர்ச்சியாக, ‘காளிதாஸ் 2’ திரைப்படம் குற்றவியல் திரில்லர் வகையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி, நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த போஸ்டரில், நடிகர் பரத் போலீஸ் அதிகாரியாக, அருகில் ஒரு நாயுடன் அமர்ந்திருக்கும் தோற்றத்தில் காணப்படுகிறார். அவருடன் நடிகை அபர்னதி ஓர் அழகிய தோற்றத்தில் நிற்பதும், நடிகை சங்கீதா ராணியை ஒத்த முந்தைய காலத்தின் பாரம்பரிய உடையில் அமர்ந்திருப்பதும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, சங்கீதாவின் புதிய தோற்றம் ரசிகர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம், அவரின் திரையுலக வாழ்க்கையில் ‘காளிதாஸ் 2’ திரைப்படம் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
