இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

‘என்ன மாமா சௌக்கியமா’ இந்த வார்த்தைக்கு சொந்தக்காரர் யார் என்றால் அது நடிகர் கார்த்தியாக மட்டும்தான் இருக்க முடியும். ஒரு ஆகச்சிறந்த நடிகராக ‘பருத்திவீரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்தார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற பழமொழியை நாம் பலருக்கும் உதாரணமாக சொல்லி கேட்டிருப்போம். ஆனால் சினிமாவே வேண்டாம் என்றிருந்த இவரோ தந்தை சிவகுமாரையும் மிஞ்சிய நடிகராக இன்று தமிழ் திரையுலகில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவுக்குள் வந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள கார்த்தி தனது 25 வது படமான ‘ஜப்பான்’ னில் நடித்து முடித்துள்ளார். இந்த ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளிவரவுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நடிகர் கார்த்தியின் 20 ஆண்டுகால திரை வாழ்க்கை மற்றும் அவர் கண்ட வெற்றி தோல்விகள் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே காணலாம்…

கார்த்தியின் ஆரம்பகால வாழ்க்கை

ஒரு சாதாரண கிராமத்து இளைஞனாக அறிமுகமாகி நம் மனதில் அப்படியே பசுமரத்தாணி போல் பதிந்து போன நடிகர் கார்த்தி தந்தை சிவக்குமார் வழியில் கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். 1977 ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி பிறந்த கார்த்தியுடன் உடன்பிறந்தோர் நடிகர் சூர்யா மற்றும் பிருந்தா ஆகியோர் ஆவர். அண்ணன் சூர்யாவும் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகர் மட்டுமின்றி அவரது அண்ணி ஜோதிகாவும் ஒரு காலத்தில் தமிழ் இளசுகளின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டு போனவர். இப்படிப்பட்ட குடும்ப பின்னணியை கொண்ட கார்த்தியின் அப்பா சிவகுமார் தன்னை போன்று தன் பிள்ளைகள் யாரும் சினிமாவுக்குள் வந்து விடக்கூடாது என்று படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வேறு பணிகளுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார். ஆனால் விதி வலியது என்பதை போல் அண்ணன், தம்பி இருவரும் சினிமாவிற்குள் வந்துவிட்டனர். சென்னையில் படித்து முடித்த கையோடு ஸ்காலர்ஷிப் மூலம் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்குச் சென்று படித்து அங்கையே பணியாற்றத் தொடங்கியவர் , பின்னர் என்ன நினைத்தாரோ அண்ணனே சினிமாவுக்கு வந்து விட்டார் பிறகென்ன என்று தந்தை சிவகுமார் வழியிலேயே நேராக வந்து தன் மனதிற்கு மிகவும் நெருக்கமான இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அப்படி 2004 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மாதவன், சித்தார்த் நடித்து வெளிவந்த ஆயுத எழுத்து படத்தில் மைக்கேல் கதாபாத்திரத்தில் வரும் சூர்யாவிற்கு நண்பனாக ஒரு காட்சியில் நடித்திருப்பார்.


நடிகர் கார்த்தி அப்பா, அண்ணன் மற்றும் இயக்குனர் மணிரத்தினத்துடன் பணியாற்றிய தருணங்கள்

உதவி இயக்குனர் டு நடிகர் அவதாரம்

உதவி இயக்குனராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய கார்த்தி, திடீரென இயக்குனர் அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பருத்திவீரன்’ படத்தில் பக்காவான கிராமத்து இளைஞனாக பருத்திவீரன் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனார். இவருடன் நடிகை பிரியாமணி, சரவணன், கஞ்சா கருப்பு, சம்பத்ராஜ், சுஜாதா சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்த இந்த படத்திற்கு, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், உயர் வகுப்பை சேர்ந்த ஆணுக்கும் மகனாக பிறக்கும் பருத்திவீரன் தனக்கு சித்தப்பாவாக செவ்வாழை என்ற கதாபாத்திரத்தில் வரும் சரவணனின் அரவணைப்பில் வாழ்ந்து வருவார். அந்த ஊரில் பெரிய மனிதராக மதிக்கப்படும் கழுவன் என்ற கதாபாத்திரத்தில் வரும் பொன்வண்ணன் பருத்திவீரனான கார்த்தியின் அத்தையை மணந்திருப்பார். இவர் மிகவும் சாதி வெறிபிடித்தவராக இருப்பதால் பருத்திவீரனையும், அவரது குடும்பத்தையும் வெறுப்பதோடு, தனது மகளாக வரும் பிரியாமணி பருத்திவீரனை காதலிப்பது தெரிந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார். அதனை சமாளித்து இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? கார்த்தி விலை மாதுகளுடன் தொடர்பு வைத்ததால் முத்தழகான பிரியாமணியை கரம் பிடிக்கலாம் என நினைத்து முயற்சிக்கும் போது அவர் உயிர் எப்படி பறிபோகிறது? என்பதுதான் படத்தின் கதை என்றாலும், இயக்குனர் அமீர் அதனை படம்பிடித்துக் காட்டியிருந்த விதம் அன்று பலரையும் கண்கலங்கச் செய்தது. தனது இயல்பான நடிப்பால் அன்று ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனங்களையும் கொள்ளை கொண்ட நடிகர் கார்த்தி இந்த ஒரு படத்திலேயே புகழின் உச்சத்திற்கு சென்றார்.


பருத்திவீரனாக நடிகர் கார்த்தி

மேலும் முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் விருது, பிலிம்பேர் விருது, விஜய் விருது என வரிசையாக அத்தனை விருதுகளையும் அள்ளிக் குவித்தார். 300 நாட்களை கடந்து ஓடி மாபெரும் வெற்றியை பெற்ற இத்திரைப்படம் வெளியாகி 16 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இதனை கொண்டாடும் விதமாக கடந்த பிப்ரவரி மாதம் ரீ ரிலீஸும் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த நடிகர் கார்த்தி “ ‘பருத்திவீரன்’ படத்தில் இருந்து எனது திரைவாழ்க்கை தொடங்கியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். என்னுடைய ஒவ்வொரு அசைவும் அமீர் சாரால் வடிவமைக்கப்பட்டது. நான் இன்று இந்த இடத்தில இருக்கிறேன் என்றால் அந்த எல்லாப் புகழும் அமீர் சாரையே சேரும். அவர் கற்றுக்கொடுத்த பாடங்களையும், அவர் காட்டிய வழியையும்தான் நான் இன்றும் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருந்தார். இப்படி முதல் படத்திலேயே முரட்டுத்தனமான கிராமத்து கதாநாயகனாக அறிமுகமாகியிருந்த கார்த்தி பின்னாளில் பெண்கள் தொடர்ந்து வரும் அழகு நாயகனாகவும், ரொமான்டிக் மற்றும் ஆக்சன் ஹீரோவாகவும் வலம் வர தவறவில்லை.

கார்த்தி தந்த வெற்றிப்படங்கள்

முதல் படமான ‘பருத்திவீரன்’ வெற்றியால் நிறைய பட வாய்ப்புகள் தேடி வர அப்படங்கள் அனைத்தையும் ஓகே செய்துவிடாது, கிடைத்த இடத்தை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும் என்று சிறந்த கதைகளாக தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார். அப்படி மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு 2010ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ‘ஆயிரத்தில் ஒருவன்’, லிங்குசாமி இயக்கத்தில் ‘பையா’, சுசீந்திரன் இயக்கத்தில் ‘நான் மகான் அல்ல’, சிவா இயக்கத்தில் ‘சிறுத்தை’ என நடித்த அத்தனை படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தன. இதற்குப் பிறகு நடித்த ‘சகுனி’, ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’, ‘அலெக்ஸ் பாண்டியன்’, ‘பிரியாணி’ ஆகிய படங்கள் பெரிய அளவில் கவனம் பெறாத நிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘மெட்ராஸ்’ திரைப்படம் கார்த்திக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்த படமாகவும், பல்வேறு விருதுகளை அள்ளிக்குவித்த படமாகவும் அமைந்தது. இந்த நேரம் குறிப்பிட்ட காலமாகவே ரொமான்டிக் மற்றும் ஸ்டைலிஷான ஹீரோவாக நடித்து வந்த கார்த்தி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ‘கொம்பன்’ என்ற படத்தின் மூலம் கிராமத்து நாயகனாக நடித்து பலரின் மனங்களிலும் இடம் பெற்றார். இதன் பிறகு ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘கைதி’, ‘தம்பி’, ‘சுல்தான்’, ‘விருமன்’ என நடித்தவருக்கு மீண்டுமொரு மறக்க முடியாத வெற்றியைத் தந்த வரலாற்று படமாக வந்து அமைந்ததுதான் இயக்குனர் மணிரத்தினத்தின் ‘பொன்னியின் செல்வன்’ பாகம் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய படங்கள். இப்படங்களில் வந்தியத்தேவனாக வந்து நடித்து நடிப்பில் மிரட்டியிருந்த நடிகர் கார்த்தி தற்போது தனது 25 வது படமாக ‘ஜப்பான்’ என்ற படத்தில் நடித்து முடித்து தீபாவளி வருகைக்காக காத்துள்ளார்.


வித்தியாசமான கதாபாத்திரங்களில் தோன்றி வெற்றிக்கொடி நாட்டிய கார்த்தி

கை கொடுக்குமா ‘ஜப்பான்’

நடிகர் கார்த்தி தற்போது ‘குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘தோழா’ ஆகிய படங்களை இயக்கிய ராஜு முருகனுடன் இணைந்து ‘ஜப்பான்’ என்றொரு படத்தில் நடித்துள்ளார். நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி 10ஆம் தேதி திரைக்கு வர உள்ள இப்படம் திருச்சியில் நடந்த உண்மை சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ‘ஜப்பான்’ திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனையொட்டி இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த அக்டோபர் 28ஆம் தேதி அன்று நடைபெற்றது. அப்போது இந்நிகழ்ச்சியை இசை வெளியீட்டு நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல் ‘கார்த்தி 25’ நிகழ்ச்சியாகவும் கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது இந்த நிகழ்ச்சியில் ‘ஜப்பான்’ படத்தின் இயக்குனர் ராஜூ முருகன் , தயாரிப்பாளர் எஸ். ஆர்.பிரபு, நடிகர்கள் சூர்யா, பொன்வண்ணன், சத்யராஜ் , தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர் ஹெச்.வினோத், லோகேஷ் கனகராஜ், சுசீந்திரன் மற்றும் பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


'ஜப்பான்' திரைப்பட போஸ்டரில் வித்தியாசமாக காட்சியளிக்கும் நடிகர் கார்த்தி

அப்போது நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, “மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்த நான் இன்று திரையுலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்து 25 படங்களில் நடித்து முடித்துள்ளேன் என்றால் அது உங்களால் மட்டுமே சாத்தியமானது. அதற்கு உந்துதலாக இருந்த எனது ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு என்னை இதுவரை அழைத்துவந்த ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் நன்றி. எப்போதும் போன்று உங்களது ஆதரவை எனக்கு கொடுங்கள்” என கூறினார். தமிழ் திரையுலகில் துவக்க காலத்தில் இருந்தே பல ஏற்ற இறக்கங்களை நடிகர் கார்த்தி சந்திருந்தாலும், அவர் பெற்ற தோல்வி படங்களுக்கு நிகராகவே, வெற்றி படங்களையும் கொடுத்து இவர் பருத்துவீரனாக, விருமானாக, கொம்பனாக, கடைக்குட்டி சிங்கமாக என பல பரிமாணங்களில் ரசிகர்களின் மனதில் நிரந்தரமான ஒரு இடத்தை தக்கவைத்துளளார். அதைப்போலவே ‘ஜப்பான்’ சரவெடியாய் தீபாவளிக்கு திரைக்கு வந்து அனைவரையும் மகிழ்விக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

Updated On 14 Nov 2023 12:04 AM IST
ராணி

ராணி

Next Story