
தீபாவளிக்கு வெளியான ‘ஜப்பான்’ திரைப்படத்தை தொடர்ந்து தனது 27வது படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் கார்த்தி.
இயக்குநர் மணிரத்னமிடம் உதவி இயக்குநராக இருந்து, ‘பருத்திவீரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி, பின்னர் ‘பையா’, ‘நான் மகான் அல்ல’, ‘சிறுத்தை’, ‘மெட்ராஸ்’, ‘தோழா’ என்று பல திரைப்படங்களில் நடித்துள்ளார் கார்த்தி. அதுவும் இவர் நடித்த ‘கைதி’ திரைப்படம் இவருக்கு பெரிய பேரையும், புகழையும் பெற்று தந்தது. நக்கலும், நையாண்டியும், சீரியசும் கலந்த கதாபாத்திரத்தில் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தும் படமாக கார்த்திக்கு ‘பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2’ படங்கள் அமைந்திருந்தன. இப்படி பல திரைப்படங்களில் நடித்த இவர் சவுத் ஃபிலிம்பேர் விருதுகள், எடிசன் விருது, SIIMA விருது மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருது பெற்றுள்ளார்.
தனது வித்தியாசமான நடிப்பால் ஹிட் நாயகனாக வளர்ந்து வரும் கார்த்தி, தனது 25 வது படமாக ‘ஜப்பான்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அது அவ்வளவு வரவேற்பை பெறவில்லை. இப்படியிருக்க நடிகர் கார்த்தி தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இதில் கார்த்தி நடிக்கும் 27வது படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடங்கியுள்ளது. ஒரு மாதம் வரை கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. கார்த்தியின் 27வது படத்தை, விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்த ‘96’ படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்குகிறார். மேலும் இத்திரைப்படத்தில் கார்த்தியுடன் அரவிந்த்சாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘கைதி’ திரைப்படத்தை போலவே இத்திரைப்படத்திலும் கார்த்தி ஜோடி இல்லாமல் சோலோவாக அசத்த உள்ளார். இந்த 27வது படத்தை சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. கோவிந்த் வசந்தா இசையமைக்க, மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிடப்பட உள்ளது.
