மறைந்த விஜயகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள ‘ஊமை விழிகள் 2' - எப்படி சாத்தியம்?
கதாநாயகனாக ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சாதனை படைத்தவர் கேப்டன் விஜயகாந்த். இவரால் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னாளில் புகழின் உச்சத்திற்கு சென்ற இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஏராளம். மேலும் திரைப்படக் கல்லூரி மாணவர்களை வைத்து யாரும் படம் எடுக்க முன்வராத நேரத்தில், அவர்கள் மீது நம்பிக்கை வைத்து முதல் வாய்ப்பை வழங்கியது மட்டுமின்றி யாரையும் சாதாரணமாக எடைபோட்டுவிடக்கூடாது என்று சொல்லாமல் செய்து காட்டிய பெருமையும் விஜயகாந்திற்கு மட்டுமே உண்டு. அப்படி 1986-ஆம் ஆண்டு அடையாறு திரைப்படக் கல்லூரி மாணவர்களுடன் கைகோர்த்து ஆபாவாணன் தயாரிப்பில், அரவிந்தராஜ் இயக்கத்தில், விஜயகாந்த் மாஸாக நடித்து வெளிவந்த படம்தான் 'ஊமை விழிகள்' திரைப்படம். டிஎஸ்பி தீனதயாளனாக திரையில் தோன்றிய விஜயகாந்திற்கு இப்படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி சரித்திர சாதனை படமாக அமைந்தது.
நடிகர் விஜயகாந்த் மற்றும் இயக்குநர் ஆபாவாணன்
ஆக்சன் திரில்லர் படமாக வெளிவந்த இப்படத்தின் வெற்றிக்கு பிறகுதான் விஜயகாந்த் நிறைய போலீஸ் அதிகாரி கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதுமட்டுமின்றி இதே கூட்டணியுடன் அடுத்தடுத்த படங்களிலும் நடித்தார். இப்படி பல பெருமைகளையும், புகழையும் பெற்ற விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி மறைந்தார். இந்த நிலையில், அவருக்கு மரியாதையை செய்யும் விதமாக 'ஊமை விழிகள்' படத்தினை இயக்கிய ஆபாவாணன் மீண்டும் AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் விஜயகாந்துக்கு உயிர்கொடுத்து நடிக்க வைத்து 'ஊமை விழிகள்' பாகம் 2 மற்றும் பாகம் 3 ஆகியவற்றை இயக்க இருப்பதாகவும், அதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து 7 படங்கள் வெற்றி கொடுத்த மாஸ் நடிகர்!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னிலையில் இருப்பவர் நடிகர் விஜய். ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் ஹீரோவாக திரையுலகில் காலடி எடுத்து வைத்த இவர் இன்று தென்னிந்திய திரை உலகமே வியந்து பார்க்கும் நடிகராக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருகிறார். ‘இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோவுக்கு செட் ஆகுமா’? என்று வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்து, இன்று பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்துள்ளார் என்றால் அது அனைத்தும் அவரது விடா முயற்சிக்கும், கடின உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரம் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தானோ என்னவோ சமீபகாலமாக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் விஜய்யிடம் ஒரு வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று தேடி ஓடும் அளவுக்கு அவரது நிலை உயர்ந்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு பெரிய நிலைக்கு உயர்ந்துள்ள விஜய் 2013-ஆம் ஆண்டு வெளிவந்த ‘துப்பாக்கி’ படத்திற்கு பிறகு பெரிய அளவில் வெற்றி கொடுக்காமல், சுமாரான அளவிலேயே வெற்றி, தோல்வி என மாறி மாறி பயணித்து வந்தார்.
விஜய்யின் 'GOAT' திரைப்பட போஸ்டர்
இந்த நிலையில், 2017-ஆம் ஆண்டிற்கு பிறகு அட்லீயின் ‘மெர்சல்’ படத்தில் தொடங்கி ‘சர்கார்’, ‘பிகில்’, ‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’, ‘வாரிசு’, ‘லியோ’ என 7 படங்களை வெற்றிப்படங்களாக கொடுத்தது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் நல்ல படங்களை கொடுத்தார். குறிப்பாக அட்லி இயக்கத்தில் வெளிவந்த 'மெர்சல்' படம் உலக அளவில் ரூ.220 கோடியும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 'சர்கார்' படம் உலக அளவில் ரூ.252 கோடியும், அட்லீயும், விஜய்யும் சேர்ந்தாலே அந்த படம் ஹிட்தான் என்று ரசிகர்கள் பேசும் அளவுக்கு வெற்றி பெற்ற 'பிகில்' படம் உலக அளவில் ரூ.295 கோடியும் வசூல் செய்தன. அதேபோன்று கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு இடையே ரிலீசான மாஸ்டர் படம் உலக அளவில் ரூ.223 கோடியும், நெல்சனின் இயக்கத்தில் வந்த 'பீஸ்ட்' ரூ.250 கோடியும், கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த 'வாரிசு' ரூ.300 கோடியும், லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த 'லியோ' ரூ.600 கோடியும் வசூலித்தன. இப்படி தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து முன்னனியில் இருக்கும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படமும் திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிசில் முன்னிலை வகிக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் காத்துள்ளனர்.
பொங்கல் ரேஸில் மோதவிருக்கும் படங்கள்!
சிவகார்த்திகேயனின் 'அயலான்', தனுஷின் 'கேப்டன் மில்லர்', விஜய் சேதுபதியின் 'மெரி கிறிஸ்துமஸ்' ஆகிய படங்களின் போஸ்டர்கள்
பண்டிகை காலங்கள் என்றாலே கொண்டாட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும், தீபாவளியா? பொங்கலா? எந்த ஹீரோவின் படம் வெளிவரப்போகிறது… எப்படி இருக்கப்போகிறது? என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் தொற்றிக்கொள்ளும். அதற்கு ஏற்றாற்போல் புது படங்களும் திரைக்கு வந்து மக்களை மகிழ்விக்க வரிசைகட்டி நிற்கும். அந்த வகையில் பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டின் முதல் மாதமான ஜனவரி 15 அன்று தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12-ஆம் தேதி அன்று ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' திரைப்படம், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'கேப்டன் மில்லர்' திரைப்படம், பாலிவுட் இயக்குநர் ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப், ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்துள்ள 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம், இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ள மிஷன் - Chapter 1 திரைப்படம் ஆகியவை ஒரே நாளில் திரைக்கு வந்து மோதவுள்ளன. இந்த நான்கு படங்களுமே ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோக்களின் படங்கள் என்பதால், பொங்கல் ரேஸில் முன்னிலை வகிக்கப்போவது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அவரவர் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
விஜய்யின் அரசியல் வருகை குறித்து சிவராஜ்குமார்
நடிகர் விஜய் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம்தான் ‘கேப்டன் மில்லர்’. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களுடன் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் சிவராஜ்குமாருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் பிரபல தமிழ் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்த சிவராஜ்குமார், நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதிலில், “விஜய் ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் ஆகவில்லை. மிகவும் கடினமாக உழைத்துதான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். விஜய்யை எனக்கு மிகவும் பிடிக்கும். எனது அழைப்பை ஏற்று என்னுடைய 100வது நாள் பட விழாவில் நடிகர் சூர்யாவுடன் வந்து கலந்துகொண்டார். விஜய் தனது படங்களுக்கு கதைகளை தேர்வு செய்வதிலும் சரி, அதற்கு ஏற்றவாறு தனது மேனரிசங்களை மாற்றி ரசிகர்களை கவரும் விதத்திலும் சரி அவரிடம் ஏதோ ஒரு மேஜிக் இருக்கிறது என்பது காட்டும். மேலும் அதில் அவரது கடின உழைப்பும் தெரியும். அப்படி கடினமாக உழைத்து முன்னேறுபவர்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர் மாணவர்களை சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசுகள் வழங்கிய வீடியோவை பார்த்தேன். அதை நல்லவிதமாகவே பார்க்கிறேன். பொதுவாகவே நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? என்று கேட்கிறார்கள். ஏன் வரக்கூடாது? என்பது புரியவில்லை. அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் விஜய்யிடம் நிறையவே இருக்கிறது. அதற்கான திறமையும், ஆளுமையும் அவரிடம் இருக்கிறது. மக்கள் விரும்பி அவரை ஏற்றுக் கொண்டால் வரட்டும்” என தெரிவித்துள்ளார்.
ரஜினியா? விஜய்யா? நடிகர் ஜெயராம் சொன்ன பதில்
நடிகர்கள் விஜய், ஜெயராம், ரஜினி
கடந்த ஆண்டு திரைக்கு வந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘வாரிசு’, ‘லியோ’ படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்யுடன் நடிகர்கள் பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல் அமீர், நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி என பலர் நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் சீனியர் நடிகரான மைக் மோகன் வில்லன் கதாபாத்திரத்திலும், மலையாளத்தில் தற்போதும் முன்னணி நடிகராக உள்ள ஜெயராமும் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய் இரட்டை வேடம் ஏற்றுள்ளார் என்பது சமீபத்தில் பட டைட்டில் குறித்து வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ‘The Greatest of All Time’ - GOAT என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் நடித்து வரும் ஜெயராம் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘வேட்டையன்’ படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. அதே நேரம் விஜய்யின் ‘GOAT’ அதாவது அவரின் 68-வது படத்திலும் நடிக்க அழைப்பு வந்தது. எல்லோரும் ரஜினியுடன் நடிக்கத்தான் மிகவும் ஆசைப்படுவார்கள். ஆனால், நான் எதைப்பற்றியும் யோசிக்காமல் டிக் செய்தது விஜய்யைத்தான். இதில் இருந்தே நீங்களே தெரிந்துகொள்ளுங்கள் எனக்கு விஜய்யை எவ்வளவு பிடிக்கும் என்று” என தெரிவித்துள்ளார். நடிகர் ஜெயராம் ஏற்கனவே விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் இணைந்து நடித்து காமெடியில் கலக்கியிருந்தார். இதையடுத்து விஜய் - ஜெயராம் காம்போ தளபதி 68-லும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.