இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் திரையுலகில் 1990 கால கட்டங்களில் மக்களின் மனதை கவர்ந்த எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் இருந்தாலும், இன்றும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் தனது க்யூட்டான நடிப்பின் மூலம் ரசிக்க வைத்து மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தவர்தான் பேபி ஷாமிலி. பேபி ஷாலினி, ரிச்சர்ட் ஆகியோரின் தங்கை என்ற அறிமுகத்தோடு, குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய 2-வது வயதிலேயே திரைப்பயணத்தை தொடங்கியவரின் சுட்டித்தனமான நடிப்புக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே அன்று இருந்தது. அதிலும் குறிப்பாக சுருட்டை தலைமுடியை எப்போதுமே விரித்து போட்டபடி அஞ்சலி படத்தில் சிறப்புக் குழந்தையாக நடித்திருந்த பேபி ஷாமிலியையும், குரங்கு, நாய் போன்ற செல்ல பிராணிகளுடன் இணைந்து கலக்கிய துர்கா பாப்பாவையும் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. அப்படிப்பட்ட பேரழகியான பேபி ஷாமிலி, நாளை(10.07.24) தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அந்த வகையில், பேபி ஷாமிலியின் திரைப்பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

ஷாமிலி, பேபி ஷாமிலியாக மாறியது எப்படி?


அக்கா பேபி ஷாலினி - 'ராஜநடை' படத்தில் பேபி ஷாமிலி

திரையில் பேரழகும், குறும்புத்தனங்களும் நிறைந்த குழந்தையாக வந்து நம்மை வியக்கவைத்த ஷாமிலி, 1987-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி பாபு - அலிஸ் தம்பதியருக்கு கடைக்குட்டி மகளாக சென்னையில் பிறந்தார். இவருடன் பிறந்தது ரிச்சர்டு என்ற அண்ணனும், ஷாலினி என்ற அக்காவும் ஆவர். நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்ட ஷாமிலியின் தந்தை பாபு, கேரள மாநிலம் கொல்லத்தில் வசித்து வந்தபோது, சினிமா மீது இருந்த மோகத்தில் குடும்பத்தோடு சென்னைக்கு குடிபெயர்ந்தார். ஆனால், அவரின் ஆசை நிறைவேறாமல் போக ஃபேன்சி சாதனங்கள் மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்யும் ஜெனரல் ஸ்டோர் ஒன்றை சென்னையில் நடத்தி வந்துள்ளார். இந்த ஸ்டோருக்கு வாடிக்கையாளராக வந்த இயக்குநர் பாசில் மூலமாக ஷாலினிக்கு குழந்தை நட்சத்திர வாய்ப்பு கிடைக்க அதன் மூலம் அவர் மலையாள திரையுலகில் நுழைந்து அடுத்தடுத்து தமிழ் ,தெலுங்கு கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு கலக்கு கலக்கி வந்த போதுதான் தமிழில் ‘ஆனந்த கும்மி’, ‘நிலவே மலரே’ ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்தார். அப்படி 1986-ஆம் ஆண்டு ‘நிலவே மலரே’ படத்தில் நடிக்கும் போதுதான் ஷாலினி குடும்பத்தினருடன் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டு நல்ல குடும்ப நண்பராகவும் மாறிப்போனாராம். அப்படி அடிக்கடி ஷாலினியின் வீட்டிற்கு எஸ்.ஏ. சந்திரசேகர் சென்று வந்த சமயத்தில்தான் அவரின் தங்கை ஷாமிலியையும், அவரது சேஷ்டைகளையும் பார்க்க நேர்ந்து மிகவும் பிடித்துப்போய், தான் எடுக்க இருந்த ‘ராஜநடை’ படத்தில் நடிக்க வைக்க கேட்டுள்ளார். ஷாலினியின் தந்தை பாபுவும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அப்படி 1989-ஆம் ஆண்டு விஜயகாந்த் ஹீரோவாக நடித்து வெளிவந்த அப்படத்தில் விஜயகாந்துக்கு மகளாக ஷாமிலி என்ற அவரது நிஜ பெயரிலேயே நடித்திருந்தார். இரண்டு வயதே ஆகியிருந்த ஷாமிலி, இப்படத்தில் மிகவும் எதார்த்தமாக, சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிப்பையும், அழ வேண்டிய இடத்தில் அழுகையையும், பேச வேண்டிய இடத்தில் சரியான வசன உச்சரிப்பையும் வெளிப்படுத்தி, அந்த வயதிற்கே உரிய இயல்போடு மிக அழகாக நடித்திருந்தது படம் பார்த்த அனைவரையும் கவர்ந்திருந்தது.

தேசிய விருதை பெற்று தந்த ‘அஞ்சலி’

எஸ்.ஏ. சந்திரசேகரின் அறிமுகம் என்ற பெருமை பேபி ஷாமிலிக்கு கிடைத்திருந்த அந்த நேரத்தில், இரண்டாவதாக ஒரு பெரிய இயக்குநரின் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்தது. அந்த படம்தான் அவருக்கு தேசிய விருதை பெற்று தந்த ‘அஞ்சலி’ திரைப்படம். 1990-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் ரகுவரன், ரேவதி, பிரபு ஆகியோரது நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் படத்தின் பெயரான அஞ்சலி என்னும் கதாபாத்திரப் பெயரிலேயே சிறப்பு குழந்தையாக நடித்து ரசிக்க வைத்திருந்தார். ரகுவரன் - ரேவதிக்கு மகளாக வரும் ஷாமிலி படம் முழுவதும் வெள்ளை டிரஸ், வெள்ளை ஷூ, சுருட்டை முடியை எப்போதும் விரித்துப் போட்டபடி இருப்பது என வசனமே இல்லாமல் நடித்து அசத்தியிருந்தார். படத்தில் ஷாமிலியின் நடிப்பை பார்த்த அனைவருமே யாரு இந்த குழந்தை? இந்த வயதிலேயே, மனவளர்ச்சி குன்றிய குழந்தையாக நடிப்பில் இப்படி மிரட்டியிருக்கு என்று வியந்துபோகும் அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இப்படி தனது இரண்டாவது படத்திலேயே உலகமே கொண்டாடும் குழந்தையாக மாறிய பேபி ஷாமிலி, தேசிய விருது மட்டுமின்றி சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தமிழக அரசின் விருதையும் பெற்றார்.


'அஞ்சலி' மற்றும் 'துர்கா' திரைப்படத்தில் பேபி ஷாமிலி

இதனை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக கலக்க ஆரம்பித்தார். அப்படி ‘அஞ்சலி’ திரைப்படம் வெளிவந்த அதே ஆண்டில் மலையாளத் திரையுலகில் பரதன் இயக்கத்தில் ‘மாலூட்டி’ என்ற படத்தில் ஜெயராமுக்கு மகளாகவும் நடித்தார். ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து மாட்டிக்கொள்ளும் குழந்தையாக நடிப்பில் மிரட்டியிருந்தார். உண்மையாகவே ஒரு போர்வெல்லுக்குள் குழந்தை மாட்டிக்கொண்டால் அதன் உணர்வும், பதட்டமும் எப்படி இருக்குமோ அதை அப்படியே தனது நடிப்பில் வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருந்தார் ஷாமிலி. அதேபோல் அதே 90-ஆம் ஆண்டில் கன்னட திரையுலகிலும் ‘மாதே ஹதிது கோகிலே’ என்ற படத்தில் விஷ்ணுவர்தனுக்கு மகளாக பல்லவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அங்கும் அசத்தியிருந்தார். இவ்விரு மொழிப் படங்களிலுமே தனது சிறந்த நடிப்பிற்காக அம்மாநில அரசுகளின் விருதுகளை பெற்றார். இப்படி மூன்று வயதிற்குள்ளாக தேசிய விருது, மாநில அரசுகளின் விருது என அள்ளிக்குவித்த ஷாமிலி தொடர்ந்து தமிழில் கொஞ்சம் வித்தியாசமாக நாய், குரங்கு போன்ற செல்ல பிராணிகளுடன் நடித்து அசத்தினார். அதிலும் அந்த வயதிற்கே உரிய பய உணர்வு எதுவும் இல்லாமல் நடித்திருந்தார். அதுதான் ராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த ‘துர்கா’ என்ற திரைப்படம். இப்படத்தில் தனக்கே உரிய குறும்புத்தனத்துடன் துர்கா, மல்லிகா என்ற இரட்டை வேடத்தில் நடித்து ரசிக்க வைத்திருந்தார். இப்படத்தில் வரும் “பாப்பா பாடும் பாட்டு” பாடல் அன்று ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஷாமிலியை இன்னும் கொண்டாட வைத்தது. அதுதவிர படமும் மாபெரும் வெற்றி பெற்று வசூலையும் வாரி குவிக்க, அதனால் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பிறமொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு அங்கும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதனால் அந்த சமயம் இன்னொரு குழந்தை நட்சத்திரமாக வலம் வந்துகொண்டிருந்த தனது அக்காவான ஷாலினியையே பின்னுக்கு தள்ளி முன்னேறும் அளவுக்கு புகழின் உச்சத்திற்கு சென்றார் ஷாமிலி.

நடிப்புக்கு முழுக்கு போட்டது ஏன்?


‘தேவர் வீட்டு பொண்ணு’ பட காட்சி மற்றும் அக்கா ஷாலினியுடன் பேபி ஷாமிலி

‘துர்கா’ படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து ராமநாராயணன் இயக்கத்திலேயே ‘தைப்பூசம்’, ‘செந்தூர தேவி’, ‘சிவசங்கரி’, ‘தேவர் வீட்டு பொண்ணு’ என வரிசையாக நடித்துவந்த அதே வேளையில், ஆர். அரவிந்தராஜ், ரகு போன்ற பிற இயக்குநர்களின் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இப்படி ஷாமிலி நடித்த அனைத்து படங்களுக்கும் கிடைத்த வரவேற்பால், அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. இதனால் மிகவும் பிஸியான குழந்தை நட்சத்திரமாக வலம்வந்த ஷாமிலியால் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் பட வாய்ப்புகளை குறைத்துக்கொண்டு ஐந்தாம் வகுப்புவரை நடிப்பு படிப்பு என்று மாறி மாறி பயணித்தவர், ஆறாம் வகுப்பிற்கு பிறகு முழுமையாக திரைத்துறையில் இருந்து விலகி படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினார். இதற்கிடையில், படிப்பை தாண்டி இசை, நடனம் போன்றவற்றிலும் பயிற்சி பெற்று எல்லோரின் பாராட்டையும் பெற்றுவந்துள்ளார். இப்படி பன்முகத் திறமைகளோடு வலம்வந்த ஷாமிலிக்கு இடையிடையே திரைப்படங்களில் நடிக்க கேட்டு வாய்ப்புகளும் வர, ஷாமிலியின் பெற்றோர்களோ ஷாலினிதான் டிகிரி வாங்கவில்லை, இந்த மகளாவது டிகிரி வாங்க வேண்டும், அவளும் அதைத்தான் விரும்புகிறாள் என்று மறுத்துவிட்டார்களாம். இதனால் எந்தவித இடையூறும் இன்றி பள்ளி படிப்பை முடித்த கையோடு சென்னையிலேயே காட்சி தொடர்பியல், அதாவது விசுவல் கம்யூனிகேஷன் பிரிவில் சேர்ந்து இளநிலை பட்ட படிப்பை முடித்தார். மேற்கொண்டு ஃபிலிம் புரொடக்சன் தொடர்பாக மேல் படிப்பை தொடர விரும்பிய ஷாமிலி, பெற்றோர்களின் அனுமதியுடன் சிங்கப்பூர் சென்று அங்கு முதுநிலை படிப்பை முடித்தார்.

மீண்டும் கதாநாயகி அவதாரம்.. நோ சொன்ன அஜித்!


ஷாமிலி கதாநாயகியாக நடிக்க நடிகர் அஜித் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாராம்!

படிப்பை முடித்துவிட்டோம், மீண்டும் திரையுலகில் நுழைந்து கதாநாயகியாக ஒரு ரவுண்ட் வரலாம் என்ற ஆசை ஷாமிலிக்கு ஏற்பட, அதை தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். ஆனால், ஷாமிலியின் அக்கா கணவரான அஜித், நீ கதாநாயகியாக எல்லாம் நடிக்க வேண்டாம். வேண்டுமானால் கேமராவுக்கு பின்னால் ஏதாவது ஒரு துறையில் பணியாற்று என்று கூறி முதலில் மறுப்பு சொன்னதாகவும், பின்னர் ஷாமிலியின் தீவிரமான ஆசையை புரிந்துகொண்ட அஜித் சம்மதம் சொன்னதை தொடர்ந்து, ஷாமிலி கதாநாயகியாக நடிக்க ஒட்டுமொத்த குடும்பமும் பச்சை கொடி காட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், அந்த சமயம், அஜித்தே தனது மச்சினிச்சியான ஷாமிலியை அலங்காரம் செய்து நிற்க வைத்து வித்தியாச வித்தியாசமான போஸ்களில் போட்டோ ஷூட்டும் நடத்தி, மிக அழகான புகைப்படங்களை எடுத்து தந்தாராம். அதன் பிறகுதான் 2009-ஆம் ஆண்டு ‘ஓயே’ என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக, சித்தார்த்துடன் இணைந்து நடித்தார். இப்படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றதால் இந்த படத்திற்கு தெலுங்கில் மா தொலைக்காட்சி வழங்கிய சிறந்த அறிமுக கதாநாயகிக்கான சினிமா விருதை முதல் படத்திலேயே பெற்றார். இதற்கு பிறகு 2015-ஆம் ஆண்டு ‘வல்லீம் தெட்டி புல்லீம் தெட்டி’ என்ற மலையாளப் படத்திலும், தமிழில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து ‘வீர சிவாஜி’ படத்திலும் நடித்தார். இதனால் மீண்டும் கதாநாயகியாக ஒரு ரவுண்டு வந்து கலக்கலாம் என்று நினைத்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


அக்கா ஷாலினியின் மகள் அனுஷ்காவுடன் ஷாமிலி - அஜித்

2018-ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் ‘அம்மம்மகரில்லு’ படத்திற்கு பிறகு இப்போது வரை ஷாமிலி நடிக்கவில்லை. மாமா அஜித்தை பின்பற்றி அவரைப்போலவே அனைத்து துறைகளிலும் சாதிக்க நினைக்கும் ஷாமிலி, அவரின் ஆலோசனைகளோடு மாடலிங், ஓவியம், போட்டோகிராபி போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், முதல் முயற்சியாக ஓவியங்கள் வரைய ஆரம்பித்த ஷாமிலி, தான் வரைந்த சில ஓவியங்களை 2019-ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் காட்சிப்படுத்தினார். அதில் ஷாமிலி வரைந்திருந்த பெண்கள் தொடர்பான ஓவியங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமின்றி பலரின் பாராட்டுகளையும் பெற்றது. தற்போது சென்னை நீலாங்கரையில் பெற்றோருடன் வசித்துவரும் ஷாமிலிக்கு, ஒருபுறம் மாப்பிள்ளை தேடும் படலமும் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இதுதவிர, அக்கா ஷாலினி மற்றும் அவரது குழந்தைகளோடு நேரத்தை செலவிடுவது, தனக்கு விருப்பமான விஷயங்கள் மற்றும் வெளி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என இருக்கும் ஷாமிலி, நாளை தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். குழந்தை நட்சத்திரமாக நம்மை மகிழ்வித்த இந்த அஞ்சலி பாப்பா இன்றுபோல் என்றும் நிறைவானதொரு வாழ்வை வாழ நாமும் அவரை வாழ்த்துவோம்.

Updated On 15 July 2024 6:10 PM GMT
ராணி

ராணி

Next Story