இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(25.05.1975 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

சிரிப்பேன்! சிரிப்பேன்! சிரித்துக் கொண்டு இருப்பேன்!! என்கிறார், புதுமுகம் ராணிசந்திரா!. “தேன் சிந்துதே வானம்” என்ற படத்தில், கமலகாசனுக்கு ஜோடியாக வந்து, ரசிகர்களுக்கு கிளுகிளுப் பூட்டுகிறவர்தான், ராணிசந்திரா.

"ஓகோ" என்று ஆக வேண்டும் என்று கலை உலகுக்கு வந்த இவருக்கு, “தேன் சிந்துதே வானம்” படத்தில்தான், ரசிகர்கள் நினைவில் நிற்கும்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது வேறு பல படங்களிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். கே.ஆர். விஜயா போன்று, அழகு சிரிப்பை உதிர்க்கும் ராணி சந்திரா, அந்த சிரிப்பாலேயே "ராணி" நிருபரை வரவேற்றார்.

நிருபர்: உங்கள் சிரிப்பைப் பார்த்தால், கே.ஆர். விஜயாவைப் பார்த்தது போல இருக்கிறதே!

ராணி சந்திரா: உண்மையாகவா? மிக்க மகிழ்ச்சி. அப்படி என்றால், நானும் கே.ஆர். விஜயாவைப் போல புகழ் பெறுவேன் என்று சொல்லுங்கள்!


அழகிய இருவேறு தோற்றங்களில் ராணி சந்திரா

நிருபர் : "தேன் சிந்துதே வானம்” படத்துக்குப் பிறகு, வேறு தமிழ்ப்படங்களில் நடிக்கிறீர்களா?

சந்திரா: நடிக்கிறேன். ஆனால் நான் எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து சேரவில்லை. மலையாளத்தில் அதிகமான படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன்.

நிருபர் : அழகும், நடிப்பாற்றலும் இருந்தும், அதிகமாக வாய்ப்பு இல்லாமல் இருப்பதற்கு என்ன காரணம்?

சந்திரா: தயாரிப்பாளர்களைத்தான் கேட்க வேண்டும். அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ, யாருக்குத் தெரியும்!. என்னைப் பொருத்த மட்டில், தயாரிப்பாளர்களுக்கோ, டைரக்டருக்கோ முழு ஒத்துழைப்பு கொடுக்கத் தவறுவது நடிகர்-நடிகைகள் இல்லை. உயர்வதும், தாழ்வதும் ரசிகர்களால்தான் என்றாலும், எங்களை போன்றவர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பொறுப்பு, தயாரிப்பாளர், டைரக்டரிடம்தானே இருக்கிறது?

நிருபர்: சினிமா உலகில் எத்தனையோ புது முகங்கள் வருகிறார்கள். சில பேர் மட்டும் எடுத்த எடுப்பிலேயே "ஒகோ" என்று ஆகிவிடுகிறார்களே, அது எப்படி?

சந்திரா: அது என் போன்றவர்களுக்கும் தெரியாத கலைதான்! அது எப்படி என்று அவர்களிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வயது என்ன?


‘செம்பரத்தி’ மலையாளப் படத்தில் ராணி சந்திரா

நிருபர் : உங்கள் வயது என்ன?

சந்திரா: நடிகைகள் தங்கள் உண்மையான வயதை ரசிகர்களிடம் மறைக்கலாம். ஆனால் தயாரிப்பாளர், டைரக்டரிடம் மறைக்க முடியாது. ஏனென்றால், அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள். ஆனாலும் எல்லா நடிகைகளைப் போல நானும் வயதை சொல்லப்போவது இல்லை. ஒன்று மட்டும் சொல்லுகிறேன். நான் இன்னும் ஓட்டுப்போடும் உரிமையைப் பெறவில்லை.

நிருபர் : இப்பொழுது வரும் புதுமுகங்கள் எல்லாம் எப்படியும் நடிக்கத் தயாராக இருக்கிறார்களே, நீங்கள் எப்படி?

சந்திரா: சினிமா உலகுக்கு வந்த பிறகு, எல்லாவற்றையுமே நடிப்பாகத்தான் கொள்ள வேண்டும். ரசிகர்கள் ரசிக்கும்படி எப்படி நடித்தாலும் தவறு இல்லை என்பதுதான் என் கருத்தும்!

நிருபர் : சினிமாவில் முன்னுக்கு வர எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்கிறார்களே!

சந்திரா: சாதாரணமாக காலை-மாலை நேரங்களில், பெண்கள் பஸ்சில் செல்ல வேண்டும் என்றாலே, அவர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டியிருக்கிறது!. சினிமா உலகில் சொல்லவா வேண்டும்!. நான் எதைப் பற்றியும் கவலைப்படுவது இல்லை. எல்லாவற்றுக்கும் ஒரு சிரிப்புதான்! எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பேன்.


“விவாஹ சன்மானம்” திரைப்படத்தில் ராணி சந்திரா

நிருபர்: சினிமா உலகுக்கு வந்த பிறகு ஏற்பட்ட புதிய அனுபவம் எதுவும் உண்டா?

சந்திரா: உங்களிடம் சொல்லக் கூடிய அனுபவம் எதுவும் இதுவரை ஏற்படவில்லை.

நிருபர் : ரசிகர்களுக்கு என்ன கூறுகிறீர்கள்?

சந்திரா: “தேன் சிந்துதே வானம்” படத்தை பார்த்து விட்டு, ஏராளமான ரசிகர்கள் பாராட்டி கடிதம் எழுதினார்கள். அந்த ஆதரவு எப்பொழுதும் நீடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Updated On 22 July 2024 5:20 PM GMT
ராணி

ராணி

Next Story