இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தென்னிந்திய மொழிகளிலும், பாலிவுட்டிலும் நடிப்பு, நடனம், அழகு என ஒரே நேரத்தில் பட்டி தொட்டியெல்லாம் ஒரு கலக்கு கலக்கி அன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. ஹிந்தி திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவரான இவர் இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் அவரின் புகழ் மட்டும் என்றுமே ஓயவில்லை. அப்படிப்பட்ட ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இருந்து தெலுங்கில் 'தேவரா' படத்தின் வாயிலாக தென்னிந்திய சினிமாவில் நுழைந்துள்ளார். அம்மா, மகள் இருவரின் திரைப்பயணமும் நேரெதிர் துருவங்களாக இருந்தாலும், இருவருக்குள்ளும் ஒரு சில ஒற்றுமைகளும் இருக்கின்றன. அது என்ன? அம்மாவை போலவே மகளும் இங்கு சாதிப்பாரா? ஜான்வி கபூரின் தென்னிந்திய திரைபிரவேசம் எப்படியான மாற்றத்தை அவரது வாழ்வில் பெற்று தரப்போகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் காண்போம்.

ஸ்ரீதேவியின் விடாமுயற்சி

1980-களில் இருந்து 90-களின் இறுதிவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்தான் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமாவில் அப்போதைய உச்ச நட்சத்திரங்களாக இருந்த ரஜினி மற்றும் கமல் இருவருக்கும் ஜோடியாக அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர், தெலுங்கிலும் அன்றைய சூப்பர் ஸ்டார்களாக விளங்கிய என்.டி.ஆர், கிருஷ்ணா, சோபன் பாபு, சிரஞ்சீவி போன்ற பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஹிந்தியிலும் ஜிதேந்திரா, அமிதாப்பச்சன், ராஜேஷ் கன்னா, அனில் கபூர் என அனைத்து உச்ச நட்சத்திரங்களுடனும் நடித்து, மிக குறுகிய காலத்திலேயே நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஸ்ரீதேவி, தொட்டு பார்க்காத உயரங்களும் இல்லை, பெற்றிடாத விருதுகளும் இல்லை. இருப்பினும் இந்த வெற்றிகள் அனைத்தும் அவருக்கு மிக எளிதாக கிடைத்துவிடவில்லை. தமிழ் சினிமாவில் இருந்து தெலுங்கு திரையுலகிற்குள் நுழைவது ஸ்ரீதேவிக்கு எளிதான ஒன்றாக இருந்திருந்தாலும், அவரின் ஹிந்தி திரையுலக பிரவேசம் என்பது கடினமான முள்பாதைகளை கடந்துதான் நிகழ்ந்தது. இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் 16 வயதினிலே திரைப்படம் இங்கு சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து, அதே படத்தை ஹிந்தியிலும் ஸ்ரீதேவியை வைத்தே 'சொல்வா சவான்' என்ற பெயரில் மீண்டும் எடுத்தார். இந்த படம்தான் ஸ்ரீதேவி பாலிவுட்டில் நடித்த முதல் திரைப்படம். அமோல் பலேகர், ஸ்ரீதேவி கூட்டணியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறாமல் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க, பல கனவுகளோடும், ஆசைகளோடும் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்த ஸ்ரீதேவிக்கு பெருத்த ஏமாற்றத்தையும், வேதனையையும் பெற்று தந்தது.


ரஜினி மற்றும் என்.டி.ஆருடன் நடித்த ஸ்ரீதேவி

பிறகு தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில், குறிப்பாக தெலுங்கில் கவனம் செலுத்தி ஸ்ரீதேவி நடித்துவந்த நேரத்தில்தான் நான்கு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஹிந்தியில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. ஸ்ரீதேவி ஹிந்தி திரையுலகின் இரண்டாவது இன்னிங்சில் நடிகர் ஜிதேந்திராவுக்கு ஜோடியாக 'ஹிம்மத்வாலா' என்ற படத்தில் கைகோர்க்க அப்படம் இருவருக்கும் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த வெற்றியால் ஸ்ரீதேவிக்கு நிறைய பட வாய்ப்புகள் ஹிந்தியில் வரவே, தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு ஹிந்தி திரையுலகில் மட்டும் கவனம் செலுத்த துவங்கினார். ஆனால் ஸ்ரீதேவிக்கோ துவக்கத்தில் மொழிப்பிரச்சினையும், கலாச்சார அணுகுமுறையில் சில சிக்கல்களும் ஏற்பட ஏற்கனவே தென்னிந்தியாவில் இருந்து வந்து முன்னணி நடிகையாக பாலிவுட்டில் வளம் வந்த ரேகா உதவியோடு தனது படங்களில் தானே டப்பிங் பேச வேண்டும் என்று முதலில் ஹிந்தியை கற்றுக்கொண்டதோடு, பிறகு அவரிடமே ஹிந்தி திரையுலகிற்கு ஏற்றார்போல் நடை, உடை, பாவனை, மேக்கப் போன்ற விஷயங்களையும் கேட்டு கற்றுக்கொண்டார். இப்படி ஹிந்தி திரையுலகிற்கு ஏற்ற கதாநாயகியாக தன்னை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி வந்தவர் அடுத்தடுத்த உச்சத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார். துவக்கத்தில் ஜெயப்பிரதா, பின்னர் மாதுரி தீட்சித், திவ்ய பாரதி என எத்தனையோ நடிகைகள் ஸ்ரீதேவியின் இடத்தை பிடிக்க முயற்சித்தாலும், எவராலும் பாலிவுட்டில் இவருக்கு நிகராக சாதிக்க முடியவில்லை. இதனால் அதுவரை தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று கனவு கன்னி என்ற பட்டத்தை வாங்கியிருந்த ஹேமமாலினிக்கு பிறகு, இந்தியாவின் இரண்டாவது கனவு கன்னி என்ற பட்டம் ஸ்ரீதேவிக்கு கிடைத்தது. இது தவிர ஹிந்தி திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் ஸ்ரீதேவி தன்வசப்படுத்தினார்.


ஹிந்தி திரையுலகில் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தன்வசப்படுத்திய ஸ்ரீதேவி

கைகொடுக்காத பாலிவுட்

ஸ்ரீதேவியின் பாலிவுட் என்ட்ரி என்பது சில தோல்விகளுக்கும், பல வலிகளுக்கும் பிறகே நடந்தது என்றாலும், அவரது திரைப்பயண வெற்றி என்பது எவராலும் தொட்டுப் பார்க்க முடியாத உச்சம் என்றே சொல்லலாம். ஆனால் ஸ்ரீதேவியின் மகள் என்ற டிரம்ப் கார்டோடு பாலிவுட்டில் மிக எளிதில் என்ட்ரி கொடுத்த ஜான்வி கபூரின் திரைப்பயணமோ, அம்மாவின் வெற்றிகளுக்கு நேர் எதிரானது. முதன் முதலாக கரண் ஜோஹரின் ‘தடக்’ படம் மூலம் 2018-ஆம் ஆண்டு கதாநாயகியாக பாலிவுட்டில் அறிமுகமான ஜான்வி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதனாலேயே இப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்திருந்தாலும், வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் பிறகு போட்டோ ஷுட் செய்து சமூக வலைதள பக்கங்களில் பகிர்வது, விளம்பர படங்களில் நடிப்பது என இருந்தவருக்கு தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் தேடி வந்தன. இதனால் 2020-ஆம் ஆண்டு மீண்டும் கரண் ஜோஹர் மற்றும் பல இயக்குநர்கள் இணைந்து மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து எடுத்த ஹாரர் த்ரில்லர் படமான ‘கோஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற படத்தில் சமீரா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் ஜான்வி நடித்தார். பிறகு அதே ஆண்டில் போருக்குச் சென்று பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய முதல் இந்திய விமானப்படை பெண் அதிகாரியான குஞ்சன் சக்சேனாவைப் மையமாக வைத்து சரண் ஷர்மா இயக்கியிருந்த 'குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள்' என்ற படத்தில் குஞ்சன் சக்சேனாவாக நடித்து பலரது பாராட்டையும் பெற்றார்.


‘தடக்’ திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ஜான்வி கபூர்

இதனை தொடர்ந்து வெளிவந்த 'ரூஹி', 'மிலி', 'பவால்', 'குட்லக் ஜெர்ரி', 'மிஸ்டர் அன்ட் மிஸஸ் மஹி' போன்ற அத்தனை படங்களுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதே தவிர ஜான்விக்கு வெற்றியை பெற்று தரவில்லை. ஏன் கடந்த வாரம் வெளியான 'உலாஜ்' திரைப்படம்கூட பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. ஸ்ரீதேவி பாலிவுட்டில் அறிமுகமான முதல் படம் தோல்விப்படம்தான். இருந்தும் நான்கு வருடங்களுக்கு பிறகு அவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவந்த அத்தனை படங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றன. ஆனால் ஜான்விக்கோ முற்றிலும் நேரெதிராக முதல் படம் தவிர மற்ற அத்தனை படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் பெரியளவில் கைக் கொடுக்கவில்லை. இதனால்தானோ என்னவோ அம்மாவை பின்னப்பற்றியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்கிற முனைப்பில் ஜான்வி தற்போது தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். ஏற்கனவே பல பேட்டிகளில் தமிழில் நடிகர் விஜய் சேதுபதியுடனும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடனும் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக ஜான்வி கபூர் கூறி வந்த நிலையில், தற்போது இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் ‘தேவரா’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவிற்குள் நுழைந்துள்ளார். செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'பத்த வைக்கும்' பாடல் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூரின் அல்டிமேட் ரொமான்ஸோடு வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.


தென்னிந்திய சினிமாவில் ஜான்விக்கு பிடித்த ஹீரோக்களான விஜய் சேதுபதி மற்றும் ஜூனியர் என்.டி.ஆர்

அம்மா பாணியில் மகள்

என்னதான் ஸ்ரீதேவி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்தியளவில் பிரபலமாகி இருந்தாலும், அவரை பாலிவுட் வரை அழைத்து சென்றது தெலுங்கு திரையுலகம்தான். காரணம், 70-களின் இறுதியில் ஸ்ரீதேவி தமிழில் கதாநாயகியாக அறிமுகமான சமயத்தில் அவர் தேர்வு செய்து நடித்திருந்த 'மூன்று முடிச்சு' படம் துவங்கி '16 வயதினிலே', 'காயத்ரி', 'மனிதரில் இத்தனை நிறங்களா', 'சிவப்பு ரோஜாக்கள்', 'பிரியா' போன்ற அத்தனை படங்களுமே வெற்றிப்படங்களாக இருந்தாலும், முழுக்க முழுக்க நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட திரைப்படங்களாகவே அமைந்திருந்தன. ஆனால் அதேநேரம் தெலுங்கில் அவர் நடித்திருந்த பெரும்பாலான படங்களில் நடிப்பை தாண்டி கிளாமருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தார். இந்த கவர்ச்சி பிம்பம்தான் ஸ்ரீதேவிக்கு பாலிவுட்டில் இரண்டாம் வாய்ப்பையும் பெற்று தந்தது. குறிப்பாக தெலுங்கில் அந்த சமயம் என்.டி.ஆர், நாகேஸ்வர ராவ், கிருஷ்ணா, சோபன் பாபு என வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்திருந்த ஸ்ரீதேவி, அவர்களுடன் ரொமான்ஸிலும் கலக்கி இருந்தார். இதற்கு உதாரணமாக என்.டி.ஆருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்த 'வேடகாடு' திரைப்படத்தை சொல்லலாம். இதில் வரும் 'அக்கு சாட்டு' பாடலில் ஸ்ரீதேவி மழையில் நனைந்தவாரு ஆடும் ஆட்டம் இன்றும் சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமான ஒன்று. இதே யுக்தியை கையில் எடுத்துள்ள ஜான்வி கபூர் ‘தேவரா’ படத்தில் அதை வெளிப்படுத்தியுள்ளார்.


'16 வயதினிலே' திரைப்படத்தில் கமலுடன் மற்றும் 'வேடகாடு' திரைப்படத்தில் என்.டி.ஆருடன் ஸ்ரீதேவி

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள ‘தேவரா’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'பத்த வைக்கும்' பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. அதில் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து ஆடும் ஜான்வி கபூர் கவர்ச்சி மழையை பொழியும் விதமாக தோன்றி கெமிஸ்ட்ரியில் கிறங்கடித்து இருக்கிறார். இந்த மாற்றம் அடுத்த ரவுண்டிற்கான புதிய முயற்சி என சிலர் கூறினாலும், அடுத்து ராம் சரணுடன் ஒரு படம், நானியுடன் மற்றொரு படம் என வரிசையாக பல படங்கள் ஜான்வியின் கைவசம் இருப்பது அவருக்கு மேலும் நம்பிக்கையை அளித்துள்ளது. பாலிவுட், ஏமாற்றத்தை தந்தாலும் தெலுங்கில் பெரிய வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கும் ஜான்வி, அம்மா ஸ்ரீதேவியை போலவே தென்னிந்திய மொழிகளில் வெற்றி பெற்று, பின் ஹிந்தியிலும் அந்த வெற்றியை தொடர்வார் என நம்புவோம்.

Updated On 27 Aug 2024 12:16 AM IST
ராணி

ராணி

Next Story