ஆண்களே பொறாமைப்படும் ஆணழகன், 90-களில் பெரும்பாலான பெண்கள் விரும்பிய கனவு நாயகன், மணிரத்னம் அறிமுகப்படுத்திய நவரத்தினம் என பல சிறப்புகளை கொண்டவர்தான் அரவிந்த் சுவாமி. தளபதி படத்தில் பூத்த அழகிய ‘ரோஜா’-வான அரவிந்த் சுவாமி, பாலு மகேந்திரா, மகேந்திரன், பரதன், ப்ரியதர்ஷன் , ராஜிவ் மேனன் போன்ற மிகப்பெரிய ஆளுமைகளோடு இணைந்து பணியாற்றிய பெருமையை பெற்றவர். ஒரு திறமையான நடிகராக மட்டுமின்றி மனதில் பட்டத்தை எப்போதும் வெளிப்படையாக பேசும் மனோபாவம் கொண்ட இவர் திரையுலகில் சம்பள விஷயத்தில் யாரிடமும் கறார் காட்டாமல், கதை பிடித்திருந்தால் படத்தினை முழுமையாக முடித்துக்கொடுக்கும் பழக்கம் கொண்ட நல்ல மனிதாபியும் கூட. திரையுலகை தாண்டி தொழில்நுட்ப துறையிலும் பல்வேறு சாதனைகளை செய்து அதன் மூலம் பல்வேறு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்து சிறந்த தொழிலதிபராகவும் அறியப்படுகிறார். திரையுலகில் இருந்து சிறிதுகாலம் விலகி தன் தொழிலை கவனித்துவந்த போதுதான் எதிர்பாராத விதமாக மோசமான விபத்து ஒன்றில் சிக்கி, பின்னர் அதில் இருந்து மீண்டெழுந்து தற்போது விஸ்வரூபமும் எடுத்து வலம்வரத் தொடங்கியிருக்கிறார். ‘தனி ஒருவன்’ வெற்றிக்குப்பிறகு அரவிந்த் சுவாமி தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படங்களுமே அவரின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வலு சேர்க்கும் வகையிலும், அவரின் பாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்படும் வகையிலும்தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது, பிரேம் குமார் இயக்கத்தில், நடிகர் கார்த்தியுடன் இணைந்து ‘மெய்யழகன்’ படத்தில் நடித்துவரும் அரவிந்த் சுவாமி, இதுவரை கண்ட வெற்றி தோல்விகள் என்னென்ன? இவரது குடும்ப பின்னணி எப்படிப்பட்டது? வசதியான குடும்பத்தில் பிறந்த இவர் திரையுலகிற்குள் நுழைந்தது எப்படி? தனிப்பட்ட வாழ்க்கையில் இவர் சந்தித்த பிரச்சினைகள்… சவால்கள் என்னென்ன? சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தவர் 13 வருட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரையுலகில் நுழைந்து வளர்ச்சிக் கண்டது எப்படி? போன்ற பலருக்கும் தெரியாத இந்த நம்பிக்கை மனிதன் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அவரது பிறந்தநாள் சிறப்பு தொகுப்பாக இங்கே காணலாம்.
அரவிந்த் சுவாமியின் ஆரம்பகால வாழ்க்கை
'தளபதி' படத்தில் நடிகர் அரவிந்த் சுவாமி
1990-களில் தமிழ் சினிமாவின் அழகனாக வர்ணிக்கப்பட்ட அரவிந்த் சுவாமி, 1970-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி சென்னையில் பிறந்தார். தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் என்ற கிராமத்தை சேர்ந்த வி.டி. சுவாமி, சி.வி.எஸ். வசந்தா ஆகியோர் அரவிந்த் சுவாமியின் பெற்றோர். ஆனால் இவரின் உண்மையான அப்பா, நடிகர் டெல்லி குமார்தானாம். தனது அக்காவிற்கு குழந்தை இல்லை என்பதால், அரவிந்த் சுவாமி பிறந்ததுமே, தன் அக்காவிற்கு தத்து கொடுத்துவிட்டாராம் டெல்லி குமார். இதனை அவரே நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். இருந்தும் வி.டி. சுவாமி, சி.வி.எஸ். வசந்தா தம்பதிகள் ஒருநாளும் அரவிந்த் சுவாமியை தத்துப்பிள்ளையாக நினைத்தது கிடையாதாம். கடைசிவரை அவரை அவர்களது பிள்ளையாகவே பார்த்து வளர்த்துள்ளனர். வி.டி. சுவாமி ஒரு மிகப்பெரிய தொழிலதிபர். அம்மா சி.வி.எஸ். வசந்தா ஒரு மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞர். தொழில் நிமித்தமாக சென்னையில் வந்து குடியேறிய இவரது தந்தை இங்கு வி.டி. என்ற இரும்பு ஏற்றுமதி நிறுவனத்தை ஆரம்பித்து அதை சிறப்பான முறையில் வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளார். அரவிந்த் சுவாமி தனது தொடக்க கல்வியை சென்னை அடையாறில் உள்ள சிஷ்யா பள்ளியிலும், மேல்நிலை கல்வியை எழும்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியிலும் முடித்தார். உயர்கல்வியை சென்னை லயோலா கல்லூரியில் தொடர்ந்தவர், அங்கு வணிகவியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டமும், அதனை தொடர்ந்து அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் இயங்கி வரும் வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச பிசினஸில் மாஸ்டர் பட்டமும் பெற்றார். அப்பா வி.டி. சுவாமி ஒரு மிகப்பெரிய தொழிலதிபராக இருந்தாலும், மகன் வழிதவறி போய்விடக் கூடாது என்பதற்காகவே சிறு வயதில் இருந்தே மிகவும் கட்டுப்பாடுகளுடன்தான் அரவிந்தை வளர்த்தாராம். அதிலும் வி.டி. சுவாமி வீட்டில் வேலைக்கு ஆட்கள், வெளியில் சென்றுவர கார் போன்ற வசதி வாய்ப்புகள் இருந்தாலும், மகன் அரவிந்தை 8-ஆம் வகுப்பில் இருந்து பள்ளிக்கு சென்றுவர கூட்டம் நிறைந்த பேருந்தில்தான் அனுப்பி வைப்பாராம். இதுபோக கல்லூரியில் படித்த காலங்களில் பைக், அதற்கு பெட்ரோல் எல்லாம் போட்டு கொடுத்து அனுப்பினாலும், ஒருநாளைக்கு வெறும் 10 ரூபாய் மட்டுமே பாக்கெட் மணியாக கொடுத்து அனுப்புவாராம். இதனால் அவர் கொடுக்கும் பணம் போதவில்லை என்று படித்துக்கொண்டே மாடலிங் துறையிலும் ஈடுபட்டு சிறு சிறு விளம்பர படங்களில் நடித்து வந்துள்ளார் அரவிந்த் சுவாமி.
மணிரத்னம் கண்டுபிடித்த நவரத்தினம்
அரவிந்த் சுவாமி, மதுபாலா இடம்பெறும் ரோஜா திரைப்பட காட்சி மற்றும் இயக்குநர் மணிரத்னம்
அரவிந்த் சுவாமி நடித்த விளம்பர படம் ஒன்றினை எதேச்சையாக பார்த்த இயக்குநர் மணிரத்னம், தனது ‘தளபதி’ படத்தில் வரும் கலெக்டர் வேடத்திற்கு இவர் சரியாக இருப்பார் என்று நேரில் அழைத்து ஆடிஷன் நடத்தியுள்ளார். அந்த ஆடிஷனில் தேர்வாகிய அரவிந்த் சுவாமி, தனது அப்பா நிச்சயம் திரைப்படத்தில் நடிக்க சம்மதிக்க மாட்டார், நீங்களே நேரில் வந்து பேசி ஓகே வாங்கிவிடுங்கள் என்று மணிரத்னத்திடம் கூறியிருக்கிறார். இயக்குநர் மணிரத்னமும் வி.டி. சுவாமியை சந்தித்து அனுமதி கேட்டுள்ளார். அப்போது வி.டி. சுவாமியோ அரவிந்தை பார்த்து என்னப்பா இதைத்தான் முழுநேர கெரியரா தேர்ந்தெடுக்க போறீங்களா? என்று கேட்டதும், இல்லை இப்போது இதை எடுத்து பண்றேன். பிறகு நீங்கள் சொன்னதுபோல் மேல்படிப்புக்கு சென்றுவிடுகிறேன் என்று கூறினாராம். இப்படி அப்பாவின் அனுமதியுடன் 1991-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கி, ரஜினி, மம்மூட்டி, ஸ்ரீ வித்யா ஆகியோர் நடித்து வெளிவந்த தளபதி படத்தில் ரஜினிக்கு தம்பியாக, ஸ்ரீவித்யாவிற்கு மகனாக அர்ஜுன் என்னும் கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அரவிந்த் சுவாமி. முதல் படத்திலேயே தன் சிறப்பானதொரு நடிப்பால் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கவர்ந்தது மட்டுமின்றி, எடுத்த எடுப்பிலேயே ரஜினி, மம்மூட்டி என்ற இரண்டு ஜாம்பவான் நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருந்தது அவருக்கு மிகப்பெரிய அடையாளமாகவும் மாறியது. இதனால் மணிரத்னம், அரவிந்த் சுவாமியை தனது அடுத்த படத்தில் சோலோ ஹீரோவாக களமிறக்கினார். அந்த படம்தான் 1992-ஆம் ஆண்டு வெளிவந்து தமிழ் சினிமா வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த 'ரோஜா' திரைப்படம். இப்படத்தில் இந்திய உளவுத்துறையின் RAW நிறுவனத்தில் பணிபுரியும் கிரிப்டாலஜிஸ்ட் ரிஷிகுமாராக வரும் அரவிந்த் சுவாமி காதல், தேசப்பற்று என்று இரு வெவ்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி தன் இயல்பான நடிப்பால் படம்பார்த்த அனைவரையும் கவர்ந்ததோடு, இந்திய அளவிலும் மிகப்பெரிய கவனம் பெற்றார். அதிலும் குறிப்பாக, இந்த ஒரு படத்திலேயே அரவிந்த் சுவாமியை பார்த்து அவரது அழகில் மயங்கிய அன்றைய இளம் பெண்கள் அனைவரும் இவரை போன்ற ஒரு கணவர் நமக்கு அமைய மாட்டாரா என்று ஏங்க ஆரம்பித்தனர்.
அரவிந்த் சுவாமி நடித்த 'பம்பாய்' மற்றும் 'மின்சார கனவு' திரைப்பட காட்சிகள்
அந்த அளவுக்கு அரவிந்த் சுவாமியின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக்கொடுத்த இப்படத்தின் வெற்றிக்குப்பிறகு தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அதன்படி தமிழில் தொடர்ந்து ‘தாலாட்டு’, ‘மறுபடியும்’, ‘பாசமலர்கள்’, ‘டூயட்’, ‘பம்பாய்’, ‘இந்திரா’, ’மின்சார கனவு’, ‘புதையல்’, ‘தேவராகம்’, ‘என் சுவாச காற்றே’, ‘அலைபாயுதே’, ‘சாசனம்’ ஆகிய படங்களில் வரிசையாக நடித்தார். இதில் பெரும்பாலான படங்கள் இவருக்கு மாஸ் ஹிட் படங்களாக அமைந்ததோடு, நல்ல நடிகர் என்ற பெயரையும் வாங்கி கொடுத்தன. குறிப்பாக 1993-ம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த ‘மறுபடியும்’, மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘பம்பாய்’, சுஹாசினி மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘இந்திரா’, ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ’மின்சார கனவு’ ஆகிய படங்கள் சூப்பர்ஹிட் படங்களாக அமைந்தன. அதிலும் ‘பம்பாய்’ படத்தில் காதலனாக, நல்ல கணவனாக, சிறந்த தந்தையாக என பல பரிமாணங்களில் சேகர் என்னும் கதாபாத்திரத்தில் வந்து நடித்து இந்திய அளவில் சிறந்த நடிகர் என்ற மற்றுமொரு அங்கீகாரத்தை பெற்றார். இப்படி வரிசையாக நடித்துக்கொண்டிருந்த அந்த இடைப்பட்ட வேளையில் அதாவது அவரது 23-வது வயதில் தன்னை மிகவும் நேசித்து வளர்த்த தாய், தந்தை இருவரும் எதிர்பாராத விதமாக இறந்துவிட மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானதோடு செய்வதரியாது திகைத்து நின்றார். இதனால் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு தன் தந்தை பார்த்துவந்த தொழில்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
தொழிலில் கொடிகட்டிப் பறந்த அரவிந்த் சுவாமி
தனி ஒருவன் திரைப்படத்தில் அரவிந்த் சுவாமியின் தோற்றம்
23 வயதில் தாய், தந்தை மறைவு, 24 வயதில் திருமணம் என மிக சீக்கிரமே தன் தனிப்பட்ட வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்திக்க ஆரம்பித்த அரவிந்த் சுவாமி, சினிமாவில் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் இனி சினிமாவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார். இந்த நேரத்தில் சேரனின் 'ஆட்டோகிராஃப்', உலக நாயகன் கமல்ஹாசனுடன் 'அன்பே சிவம்' ,'தெனாலி' உள்ளிட்ட மூன்று படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு இவரை தேடி வந்தது. ஆனால் அப்போதைய சூழ்நிலை ஒத்து வராததால் எந்த படங்களிலுமே அவரால் நடிக்க முடியாமல் அனைத்தையும் மறுத்துவிட்டாராம். இருந்தும், தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குநராக பார்க்கப்படும் மகேந்திரன் வற்புறுத்தி கேட்டுக்கொண்டார் என்பதற்காக, அவரது இயக்கத்தில் 2006-ஆம் ஆண்டு வெளிவந்த ‘சாசனம்’ படத்தில் மட்டும் நடித்துவிட்டு மீண்டும் திரையுலகில் இருந்து ஒதுங்கினார். தொடர்ந்து தன் அப்பா நடத்திவந்த தொழில் நிறுவனத்தின் இயக்குநராக செயல்படுத் தொடங்கியவர் அதோடு நின்றுவிடாமல் பன்னாட்டு வர்த்தகத்திலும், கட்டடக்கலை சார்ந்த வணிகத்திலும் ஈடுபட்டார். மேலும், ப்ரோ ரிலீஸ் என்ற நிறுவனத்தின் இயக்குனராகவும், இன்டெர்ப்ரோ என்ற நிறுவனத்தின் தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார். பின்னர் தானே சொந்தமாக டேலண்ட் மாக்சிமஸ் என்ற கன்சல்டன்சி நிறுவனத்தை நிறுவினார். அதன் மூலமாக பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தார். இப்படி 3300 கோடி ரூபாய் அளவுக்கு தொழில்களில் முதலீடுகளை ஈட்டியவர், திடீரென ஒருநாள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மிகப்பெரும் விபத்து ஒன்றை சந்தித்தார். சினிமாவில் மீண்டும் நடிக்க வரலாம் என்றிருந்தபோது ஏற்பட்ட இந்த விபத்தினால் முதுகு தண்டில் காயம் ஏற்பட்டு அவரது வாழ்க்கையே தலைகீழாக மாறியது. ஒரு வருடம் படுத்த படுக்கையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதோடு, அதில் இருந்து முழுமையாக மீண்டு வர நான்கு வருடங்கள் ஆனதாம். சொல்லப்போனால் விபத்தினால் ஏற்பட்ட காயங்களால் கடுமையான வலி இருந்ததோடு மட்டும் அல்லாமல், படுக்கையில் இருந்து எழ முடியாத சூழல், ஒரு கால் சரியாக செயல்படாத நிலை, மேலும் தான் எடுத்துக்கொண்ட மாத்திரைகளால் முடி உதிர்வு, உடல் எடை அதிகரிப்பு என அந்த நாட்களில் அவர் பட்ட வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த நேரம், அவரை அந்த வலியில் இருந்து முழுமையாக வெளியேவர வழிகாட்டியது அரவிந்த் சுவாமியின் ஆஸ்தான இயக்குநரான மணிரத்னம்தானாம்.
மீண்டும் நடிக்க அழைத்த மணிரத்னம்
விபத்தில் இருந்து முழுமையாக குணம்பெற்ற பிறகு சிறிது நாட்களிலேயே மணிரத்னம் மீண்டும் அரவிந்த் சுவாமியை தனது இயக்கத்தில் நடிக்க அழைத்துள்ளார். அதற்காக அவர், குண்டாக இருந்த தனது உடல் எடையை குறைத்து 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு புதிய லுக்கில் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். அப்படி 2013-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில், கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த அந்த படம்தான் ‘கடல்’. இப்படத்தில் பாதிரியார் சாம் பெர்னாண்டோ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த அரவிந்த் சுவாமிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து, மோகன் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவியுடன் இணைந்து ‘தனி ஒருவன்’ படத்தில் நடித்தார். 2015-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் சித்தார்த் அபிமன்யூ என்னும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அரவிந்த், வில்லத்தனத்திலும் புது முத்திரை பதித்தார். ‘தனி ஒருவன்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ‘போகன்’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘செக்க சிவந்த வானம்’ என பல படங்களில் நடித்தவர், ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான ‘தலைவி’ படத்திலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். இதற்கிடையில், விஜய் தொலைக்காட்சியில் ஏற்கனவே நடிகர்கள் சூர்யா ,பிரகாஷ் ராஜ் ஆகியோர் தொகுத்து வழங்கிய ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியை அரவிந்த் சுவாமி தொகுத்து வழங்கினார். அப்போது அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுபவர் யாரேனும் ஓரளவு பணம் சம்பாதித்து பாதியிலேயே வெளியேற நேர்ந்தால், அவர்களது குடும்ப பின்னணியை அறிந்து தனது சம்பள பணத்திலிருந்து ஒரு பகுதியை அவர்களுக்கு கொடுத்து அனுப்பி வைக்கும் மனிதாபிமானியாகவும் இருந்துள்ளார் அரவிந்த் சுவாமி. இதுமாதிரியான நிகழ்வு இங்கு மட்டுமல்ல, தான் நடிக்கும் படங்களில் சம்பள விஷயத்தில் தயாரிப்பாளர் தரப்பில் ஏதேனும் பண சிக்கல் இருந்தால், அவர்களிடமும் கறார் காட்டாமல் இவ்வாறுதான் நடந்துகொள்வாராம்.
இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். ரகுமானுடன் நடிகர் அரவிந்த் சுவாமி
இப்படி வாழ்க்கையில் எப்போதும் நேர்மையாகவும், பாசிட்டிவாகவும் இருக்கும் அரவிந்த் சுவாமி திரைவாழ்க்கையில் எப்படி பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தாரோ அதேபோன்று தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல இன்ப துன்பங்களை கடந்து வந்துள்ளார். 1994-ஆம் ஆண்டு அவரது 24-வது வயதில் காயத்ரி ராமமூர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஆதிரா என்ற மகளும், ருத்ரா என்ற மகனும் பிறந்தனர். மனைவி, குழந்தைகள் என்று மிகவும் சிறப்பாக சென்றுகொண்டிருந்த இவரது வாழ்க்கையில் திருஷ்டி ஏற்பட்டது போன்று இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். விபத்தில் சிக்கிய நேரத்தில் கணவரின் வலியை கண்டுக்கொள்ளாமல் பாதியிலேயே மனைவி காயத்ரி விட்டுச்சென்றபோது, தனது தோழியாகவும், ஆலோசகராகவும் இருந்த அபர்ணா முகர்ஜி என்ற பெண்தான் இவரையும், இவரது குழந்தைகள் இருவரையும் பார்த்துக்கொண்டாராம். அதனால் விவாகரத்து பெற்று இரண்டு ஆண்டுகள் கழித்து அப்பெண்ணையே இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். தற்போது மனைவி, குழந்தைகளோடு மிகவும் சந்தோஷமாக வாழ்ந்துவரும் அரவிந்த் சுவாமி தொழிலில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறாரோ, அதே அளவுக்கு திரைப்படங்களிலும் தன்னை தேடிவரும் வாய்ப்புகளை, கதை பிடித்திருந்தால் மறுக்காமல் ஏற்று நடித்து வருகிறார்.
கார்த்தி, அரவிந்த் சுவாமி இடம்பெறும் ‘மெய்யழகன்' திரைப்பட போஸ்டர்
அப்படி தற்போது ‘96’ திரைப்பட புகழ் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து ‘மெய்யழகன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதாக சொல்லப்படும் நிலையில், கடந்த மே 24-ஆம் தேதி அன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரில் நடிகர் அரவிந்த் சுவாமி சைக்கிள் ஓட்ட, கார்த்தி பின்பக்கம் திரும்பியவாறு அமர்ந்துள்ளார். மேலும், போஸ்டரின் பின்னணியில், கோயில் ஒன்றும் உள்ளதை பார்க்கும்போது கிராமத்து சூழலில் வெள்ளந்தி மனிதர்களின் வாழ்க்கையை கூறும் குடும்ப சென்டிமென்ட் படமாக உருவாகி உள்ளதாக தெரிகிறது. அந்த வெள்ளந்தி மனிதரில் ஒருவராக அரவிந்த் சுவாமியும் இருப்பார் என்பதுபோல் அவரது கதாபாத்திரத்தின் தோற்றமும் வெளிப்படுகிறது. எப்போதுமே தன் அழகின் மீது கர்வம் கொள்ளாத அரவிந்த் சுவாமி, அக அழகே மெய்யழகு என்ற வாக்கியத்தின் மீது பெரும் நம்பிக்கைக் கொண்டவர். அந்த வகையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள 'மெய்யழகன்' தலைப்பை போலவே மெய்யான அழகனாக வாழ்ந்து வரும் அரவிந்த் சுவாமி இன்று தனது 54-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவர் இன்றுபோல் என்றும் பல வெற்றிகளை பெற அவரது ரசிகர்கள் சார்பாக நாமும் வாழ்த்துவோம்.