இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பொதுவாக ஒரு தந்தைக்கு மகனை விட மகளைத்தான் அதிகம் பிடிக்கும் என்பார்கள். ஆனால், மகனையும் உயிருக்கு மேலாக நேசிக்கும் தந்தைகளும் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மகள், மகன் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. எல்லாமே நம்மால் இந்த பூமிக்கு வந்த உயிர்கள்தான். நாம் இருக்கும்வரை அவர்களை நன்கு பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்றுதான் தினமும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி உண்மையிலேயே நிஜத்தில் இந்த உலகத்தில் ஒருவர், பலரும் பார்த்து பொறாமைப்படும் படியான தந்தையாக வாழ்ந்து வருகிறார் என்றால் அது நடிகர் நெப்போலியனாக மட்டும்தான் இருக்க முடியும். காரணம் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள தன் மகன் தனுஷிற்காக அவர் முன்னெடுத்த பல முயற்சிகளும், இன்று வரை அவருக்காகவே வாழ்ந்து வரும் வாழ்க்கையுமே இதற்கு சாட்சிகளாக இருக்கின்றன. இதில் உச்சகட்டமாக தற்போது பல கட்ட போராட்டங்களை கடந்து இன்று 25 வயதாகும் தனுஷிற்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ள நிகழ்வு, பல தரப்பினரிடையே வரவேற்பையும் , சிலரிடம் விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இது குறித்த முழு தகவலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

சினிமா டு அரசியல்


இருமாறுபட்ட தோற்றங்களில் நடிகர் நெப்போலியன்

தமிழ் திரையுலகில் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி கதாநாயகனாக பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக திகழ்ந்தவர்தான் நெப்போலியன். இவர் பாரதிராஜாவின் இயக்கத்தில் 1991ல் வெளிவந்த 'புது நெல்லு புது நாத்து' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். முதல் படமே இயக்குநர் இமயத்தின் படம் என்பதால் நடிப்பை சரியாகவே கொடுத்திருந்தார். அதற்கு பிறகு 'எஜமான்', 'சீவலப்பேரி பாண்டி', 'கிழக்கு சீமையிலே', 'எட்டுப்பட்டி ராசா' என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் மிகச்சிறப்பாக செய்யக்கூடிய இவர், போக்கிரி படத்தில் கூட விஜய்யுடன் இணைந்து குணசித்திர வேடத்தில் கலக்கியிருந்தார். பிறகு நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் தனது தடத்தை பதித்தவருக்கு அங்கும் வெற்றியே கிடைத்தது. 35 ஆண்டுகளாக திமுகவில் அங்கம் வகித்து வந்த நெப்போலியன், சட்டமன்ற உறுப்பினராக மட்டும் அல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து மத்திய இணை அமைச்சராக மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இருந்தார். அந்த சமயம் டெல்லியில் நட்பு வட்டாரத்தை வளர்த்துக் கொண்ட அவர், வெளிநாடுகளிலும் தொழில் அடிப்படையில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். பின் திமுகவில் தன்னை செயல்படவிடாமல் ஓரங்கட்டுவதாக குற்றஞ்சாட்டி அதிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

அமெரிக்கா சென்றது ஏன்?


மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் நடிகர் நெப்போலியன்

சினிமா, அரசியல் என பரபரப்பாக இயங்கி வந்த நெப்போலியன் ஒரு கட்டத்தில் அனைத்திலும் இருந்து விலகி அமெரிக்காவில் தொழில் நிறுவனம் துவங்கி அங்கு ஒரு தமிழராக வெற்றிக்கொடி நாட்டினார். பிறகு தன்னுடைய மனைவி ஜெயசுதா மற்றும் 2 மகன்களுடன் அமெரிக்காவில் செட்டில் ஆன நெப்போலியன், அங்கு தற்போது ஜீவன் டெக்னாலஜீஸ் என்கிற ஐடி கம்பெனி ஒன்றை நிர்வகித்து வருகிறார். இது தவிர 3,000 ஏக்கரில் விவசாய பண்ணை ஒன்றையும் துவங்கி நடத்தி வரும் அவர், பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி ஒரு தனித்துவமான நபராக திகழ்கிறார். தீவிர தமிழ் பற்றாளராக இருந்தபோதும் அவர், அமெரிக்கா சென்று அங்கேயே இருப்பதற்கு மிகமுக்கிய காரணம் அவருடைய மகன் தனுஷ்தான். தனுஷ் பிறந்து 6 வயது வரை சாதாரண குழந்தைகள் போலவே ஓடி ஆடி விளையாடுவது என இருந்தாலும், அதன் பின்னர் அவருக்கு ஏற்பட்ட அரியவகை தசை சிதைவு நோயால் முற்றிலும் முடங்கி போனார். இந்த நிகழ்வு நெப்போலியன் குடும்பத்தையே புரட்டிப்போட்டு உலுக்கிவிட்டது. தன்னுடைய மகனை இந்த மோசமான அரிய வகை நோயில் இருந்து மீட்டு கொண்டு வர, ஒரு தகப்பனாக நெப்போலியன் பார்க்காத பெரிய பெரிய மருத்துவர்களே இல்லையாம். ஆனால் எதுவும் கை கொடுக்காத நிலையில்தான், ஒரு மூலிகை வைத்தியம் மூலம் தனுஷின் நிலை மேம்பட்டுள்ளது. இருந்தும் நவீன தொழில்நுட்பத்துடன் சிகிச்சை அளிக்க முடிவு செய்த நெப்போலியன் அமெரிக்கா சென்றார். அன்று தொடங்கி தன்னுடைய மகனுக்காகவே ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துவரும் நெப்போலியன், அவருக்காகவே 4 லிஃப்ட் வசதியுடன் கூடிய வீட்டையும் அமெரிக்காவில் கட்டியுள்ளார். இது தவிர தனுஷிற்கு பிடித்த நபர்களை வீட்டிற்கு அழைப்பது, விருப்பப்படும் இடங்களுக்கு அழைத்து செல்வது என ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்தி அன்புக்காட்டி வரும் நெப்போலியன், இந்த பாசத்தின் தொடர்ச்சியாகத்தான் தற்போது தன்னுடைய மகன் தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.

வீடியோ காலில் நிச்சயதார்த்தம்


திருநெல்வேலியில் வீடியோ காலில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்

25 வயதாகும் நெப்போலியன் மகன் தனுஷ் தற்போது அப்பாவின் பிசினஸை கவனித்து வருகிறார். மேலும் முன்பை விட இப்போது அவரின் உடல்நிலை ஓரளவு தேறிவரும் நிலையில், ஒரு தந்தையாக, தனது மகனின் வருங்காலத்தை நினைவில் கொண்டு அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளார் நெப்போலியன். இதற்காக திருமணம் செய்து வைக்க தீவிரமாக பெண் தேடி வந்தவருக்கு அதற்கான நல்ல பலனும் கிடைத்தது. மகன் தனுஷ் விமானத்தில் அதிகமாக பயணிக்க முடியாது என்பதால், மகன் அமெரிக்காவில் இருக்கும் நிலையில், நெப்போலியன் தன்னுடைய குடும்பத்தோடு இந்தியாவுக்கு கடந்த வாரம் வந்திருந்தார். இந்தியாவில் தன் மருமகள் குடும்பத்தாருடன் இணைந்து நிச்சயதார்த்த ஏற்பாடுகளை மேற்கொண்டு அந்த நிகழ்வையும் சிறப்பாக செய்து முடித்தார். நெப்போலியனின் வருங்கால மருமகள் அக்ஷயாவின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூலக்கரைப்பட்டி. விவேகானந்தர் என்பவரின் மகளான இவர், ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்தான். இருவீட்டாரின் முழு சம்மதத்துடன் நடைபெற்ற இந்த நிச்சயதார்த்தம் குறித்த தகவலை தனது இன்ஸ்டாகிராமில் தனுஷ் ஒருபுறம் பகிர, இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி அது தொடர்பான வீடியோக்களும் வெளியானதை தொடர்ந்து பலரும் தனுஷிற்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிச்சயதார்த்தத்தின்போது மணமக்கள் இருவருமே வெவ்வேறு இடங்களில் இருந்ததால், நிச்சயதார்த்தமானது வீடியோ காலின் உதவியுடன் நடைபெற்றது.

வாழ்த்துகளும், விமர்சனங்களும்


மகன் திருமணத்திற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திருமண அழைப்பிதழ் வைத்த நெப்போலியன்

நடிகர் நெப்போலியன் தனது மகன் தனுஷின் நிச்சயதார்த்ததை மிக எளிமையாக நடத்தியிருந்தாலும், திருமணமானது மிக பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் ஜப்பானில் நடந்து வருவதாக ஒருசிலர் கூறி வரும் நிலையில், இல்லை இல்லை அமெரிக்காவிலோ அல்லது நெப்போலியனின் சொந்த ஊரிலோதான் நடக்கும் என வேறு சிலர் கூறுகின்றனர். எனினும் தனுஷிற்கு விமானத்தில் பயணம் செய்வதில் சில சிக்கல் இருப்பதால், எங்கு நடந்தாலும் கப்பல் பயணத்தை மேற்கொண்டுதான் அவரால் வரமுடியும் என்பதை கருத்தில் கொண்டே, திருமணம் நடைபெறும் இடம் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நெப்போலியன் தன் மகனின் முதல் திருமண பத்திரிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கி கௌரவித்துள்ளதோடு, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டுக்கும் சென்று தற்போது வழங்கி வருகிறார். மன்னர் காலத்து ஓலைச்சுவடி போல உருவாக்கப்பட்டுள்ள அந்த திருமண பத்திரிக்கை தங்க நிறத்தால் ஜொலிக்கின்றதாம். மேலும் அத்துடன் வெள்ளிக் கிண்ணம் ஒன்றையும், முத்திரி, பாதம், பிஸ்தா அடங்கிய பாக்ஸ் ஒன்றையும் பரிசாக கொடுத்து அழைப்பிதழை நெப்போலியன் வழங்கி வருகிறாராம்.


நெப்போலியன் மகன் தனுஷிற்காக நிச்சயிக்கப்பட்டுள்ள மணப்பெண் அக்ஷயா

பத்திரிக்கையே இப்படியென்றால் கல்யாணம் எப்படி இருக்கும் என ஒரு சிலர் கருத்து தெரிவிக்க, வேறு சிலரோ இந்த பணத்தை வைத்துதான் பெண்ணை விலைக்கு வாங்கிவிட்டார்கள் எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர். காரணம் தனுஷிற்கு இருப்பது ஒரு மோசமான நோய் மட்டுமின்றி பரம்பரையாக கூட வரக்கூடியதாம். இதற்கு ஆங்கில மருத்துவத்தில் பெரிதாக எதுவும் செய்ய முடியாது என்றபோதும், அன்பும், நம்பிக்கையும்தான் அவருக்கு பக்கபலமாக இருப்பவையாம். அவரால் இல்லற வாழ்க்கையில் சரியாக ஈடுபட முடியாது. திருமணம் செய்து கொள்ளும் பெண் இதை தெரிந்துதான் மணக்கிறாரா? என்ற கேள்விகளெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், அன்பிற்கு முன்னாள் பணமும், ஆசையும் ஒன்றுமில்லை என்பதே பதிலாக இருக்கிறது. எனினும் இந்த நிகழ்வு ஒரு அப்பாவின் உச்சகட்ட அன்பாக பார்க்கப்பட்டாலும், ஒரு பெண்ணின் மனநிலையில் இருந்து இதனை எப்படி அணுகுவது என்பதுதான் நம் இந்திய சமூக பார்வையில் புலப்படவில்லை. உலக அளவில் இது போன்ற, இதைவிட மோசமான நோயினால் பாதிக்கப்பட்ட பல நபர்கள் சாதனையாளர்களாகவும், இல்லறவாழ்வில் சிறந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அந்த வகையில் அதே மகிழ்ச்சியும், இன்பமும் தனுஷ் வாழ்விலும் கிடைத்திட வாழ்த்தலாம்

Updated On 29 July 2024 6:16 PM GMT
ராணி

ராணி

Next Story