இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சமீபத்தில் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைப்பட வெற்றி சந்திப்பில் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ். ஜே. சூர்யா மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் பத்திரிகையாளர் ஒருவர், ‘அவ்வளவு அழகாக இல்லாத ஒருவரை, சிறப்பாக நடிக்க வைத்தது எப்படி?’ என்று கதாநாயகி நிமிஷா குறித்து கேள்வி எழுப்பவே, அதற்கு, நெத்தியடி பதிலை கொடுத்து அனைவரின் வாயையும் அடைத்தார் கார்த்திக் சுப்பராஜ். திரையில் தோன்றுவதற்கு அழகு மட்டும் போதுமா? திறமையும் முக்கியம் என்பதை உணர்த்தும்விதமாக பதிலளித்தார் அவர். யார் இந்த நிமிஷா சஜயன்? தமிழில் ஒருசில படங்களில் மட்டுமே தோன்றியிருக்கும் நிமிஷாவின் திரை அறிமுகம் மற்றும் அவரது நடிப்பு குறித்து இத்தொகுப்பில் காணலாம்.


நிமிஷாவை பிரபலமாக்கிய மலையாளத் திரைப்படங்கள்

யார் இந்த நிமிஷா சஜயன்?

மும்பையில் வசித்து வந்த கேரள தம்பதியரான சஜயன் மற்றும் பிந்து சஜயனின் மகள் நிமிஷா. இவர் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே Taekwondo என்ற கொரியன் கலையில் ப்ளாக் பெல்ட் பெற்றவர். மேலும், மகாராஷ்டிரா மாநிலம் சார்பாக தேசிய அளவிலான போட்டியிலும் கலந்துகொண்டார். மும்பையிலேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார் நிமிஷா சஜயன். பிறகு 2017ஆம் ஆண்டு ‘தொண்டி முதலும் த்ரிக்‌சாக்ஷியும்’ திரைப்படம் மூலம் மலையாளத் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் ஃபகத் ஃபாசில், சிபி தாமஸ் போன்ற பிரபலங்களும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்காக தென்னிந்திய சர்வதேச சிறந்த அறிமுக நடிகை - மலையாளத்திற்கான விருது மற்றும் டொரான்டோ சர்வதேச தெற்கு ஆசிய திரைப்பட விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றார். ஆனால், அதற்கு முன்பே, ‘C/O சாய்ரா பானு’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நிமிஷா. கதாநாயகியாக அறிமுகமான முதல் திரைப்படமே நல்ல பேரை பெற்று தந்திருந்தாலும், 2018ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு குபிரசித்த பைய்யன்’ திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் நிமிஷா. அதே ஆண்டு வெளியான ‘ஈடா’ திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். அது அவருக்கு நற்பெயரை பெற்றுத்தந்தது.


பல மொழிப்படங்களில் நிமிஷா

மைல்கல் திரைப்படம்

நிமிஷா சஜயனின் திரை கெரியரில் மைல்கல்லாக அமைந்தது 2021ஆம் ஆண்டு வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. ஜியோ பேபி இயக்கிய இத்திரைப்படத்தில் கணவன் மற்றும் ஆணாதிக்கமிக்க அவரது குடும்பத்தினருக்கு ஏற்ற, அவர்கள் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்ட ஒரு மனைவியாக இருக்க போராடும் பெண்ணாக நடித்திருப்பார் நிமிஷா. நடனக் கலைஞரான அப்பெண் சமையலறையில் சந்திக்கும் சிரமங்கள், கணவன் தன்னை புரிந்துகொள்ளாமல் இருப்பதால் ஏற்படும் தவிப்புகள் மற்றும் ஒரு கட்டத்தில் அப்பெண் எப்படி இவற்றையெல்லாம் தகர்த்து வீட்டை விட்டே வெளியேறுகிறாள் என்பதுதான் இப்படத்தின் கதை. இத்திரைப்படம் கேரள மாநிலம், தென்னிந்தியா மற்றும் தேசிய அளவில் பல்வேறு விருதுகளை பெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மலையாளப்படங்களில் நடித்துவந்த நிமிஷாவுக்கு ‘ஹவா ஹவாய்’ என்ற மராத்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பும், ‘Footprints on Water’ என்ற இந்திய ஆங்கில திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.


‘சித்தா’ மற்றும் ‘ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்’ திரைப்படங்களில்...

நிமிஷா அழகா? இல்லையா?

பொதுவாகவே தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழிகளிலும் மாறி மாறி நடிப்பவர்களாகத்தான் நடிகைகள் இருப்பார்கள். ஆனால் நிமிஷா மலையாள திரையுலகில் அறிமுகமாகி 6 ஆண்டுகளுக்குப் பிறகே தமிழ் மொழியில் அறிமுகமானார். இந்த ஆண்டு சித்தார்த் நடிப்பில் வெளியான ‘சித்தா’ திரைப்படத்தின்மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகி இருக்கிறார் நிமிஷா. அண்ணன் மகள் மீது உயிரையே வைத்திருக்கும் சித்தப்பா கதாபாத்திரத்தில் சித்தார்த் தனது உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்த, அவரது காதலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நிமிஷா. ‘சித்தா’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்’ திரைப்படத்தில் பழங்குடியினப் பெண் கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார். கொடூர ரவுடியான ஆலியஸ் சீசரின் மனைவியாக தோன்றியிருக்கிறார் நிமிஷா. ‘ஜிகர்தண்டா’ படம் வெளியாகி 9 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்’ திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்தப் படத்தில் அசால்ட் சேதுவாக அசத்திய பாபி சிம்ஹாவுக்கு இணையான நடிப்பை இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார் லாரன்ஸ்.


நிமிஷா சஜயன் குறித்து கார்த்திக் சுப்பராஜ்

கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்’ திரைப்படத்தின் சக்சஸ் மீட் நடந்தது. அதில் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ். ஜே. சூர்யா மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் பத்திரிகையாளர் ஒருவர், ‘அவ்வளவு அழகாக இல்லாத ஒருவரை, சிறப்பாக நடிக்க வைத்தது எப்படி?’என்று கதாநாயகி நிமிஷா குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு, “அழகா இல்லைன்னு எப்படி சொல்ல முடியும்? அது உங்களுடைய எண்ணத்தை பொருத்தது. ஒருவரை அழகாக இல்லை என்று சொல்வதே தவறானது. இது தவறான தீர்ப்பு. அவர் ஒரு சிறந்த நடிகை” என்று கூறவே அங்கிருந்த அனைவரும் கைதட்டி பாராட்டினர். இந்நிலையில் இந்த கருத்து சமூக ஊடங்களில் பேசுபொருளானது. நடிப்பதற்கு அழகைவிட திறமைதான் முக்கியம் என்ற கருத்துகளை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது தமிழ் அறிமுகம் குறித்து நிமிஷா பகிர்கையில், “நல்ல கதைக்காக 6 வருடங்கள் காத்திருந்தேன். மலையாளத்தில் அறிமுகமானபோது இருந்த அதே ஆர்வமும், எதிர்பார்ப்பும் முதல் தமிழ்ப்படத்தில் நடிக்கும்போதும் இருந்தது. ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்விதான் எனக்குள் இருக்கிறது” என்று கூறினார். இந்நிலையில் நிமிஷா அவ்வளவு அழகாக இல்லை என்ற நிருபரின் கருத்து அவரை பாதித்திருக்கலாம். மீண்டும் தமிழ்ப்படங்களில் நடிக்கும்போது அவர் என்னமாதிரியான கதைகளை தேர்வு செய்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.

Updated On 6 Dec 2023 1:09 PM IST
ராணி

ராணி

Next Story