இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இளம் நடிகருடன் ஜோடி சேரும் திரிஷா

சிம்ரன் நடித்த ‘ஜோடி’ படத்தில் துணை நடிகையாக அறிமுகமான திரிஷா ‘மெளனம் பேசியதே’, ‘மனசெல்லாம்’, ‘லேசா லேசா’, ‘எனக்கு 20 உனக்கு 18’, ‘அலை’, ‘சாமி’ என வரிசையாக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். ‘சாமி’ படத்தில் அவரது நடிப்பு பலரின் கவனத்தை ஈர்த்தது. அதற்கு பிறகு அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து மிக பிரபலமான நடிகையாகி விட்டார்.

இடையில் ஓரிரு வருடங்களாக அவர் நடித்து வெளிவந்த படங்கள் சரியாக போகவில்லை. இருபது வருடங்களுக்கு மேலாக திரையுலகில் நாயகியாக கோலோச்சி வரும் நடிகை திரிஷா மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்பட வெற்றி மூலம் மறுபடியும் பிஸியாகி விட்டார். அதுமட்டுமின்றி இந்திய அளவிலும் பிரபலமடைந்திருக்கிறார்.

விஜய் உடன் ‘லியோ’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் திரிஷா இப்போது ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக அந்த படத்தின் இயக்குனர் அகில் பால் சமூக ஊடகத்தில் அறிவித்திருக்கிறார். இவர் 2020 இல் வெளிவந்த மலையாள திரில்லர் படமான ‘பாரன்சிக்’ படத்தை அனாஸ் கான் உடன் இணைந்து இயக்கியவர் ஆவார். இந்த படத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். மீண்டும் இந்த கூட்டணி தற்போது ‘ஐடன்டிட்டி’ படத்துக்காக இணைந்துள்ளது. இந்த படத்தில்தான் அவர்களோடு திரிஷாவும் சேர்ந்திருக்கிறார்.


டொவினோ தாமஸ், அகில் பால், அனாஸ் கான்

இந்த படம் ஒரு ஆக்சன் திரில்லர் என கூறப்படுகிறது. எனவே இந்த படத்தில் டொவினோவுடன் ரொமான்ஸ் மட்டுமின்றி ஆக்சனிலும் திரிஷா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர்களும் நடிக்கின்றனர். இது மலையாளம் மட்டுமின்றி தமிழ், இந்தி,தெலுங்கு மொழிகளிலும் வெளிவருவதாக இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.


இயக்குநர் அகில் பால் உடன் திரிஷா

‘பிரபுவின்டே மக்கள்’ என்ற படத்தில் 2012 ஆம் ஆண்டு அறிமுகமான டொவினோ தாமஸ் அதன்பிறகு ‘ஏபிசிடி’, ‘செவன்த் டே’, ‘என்னு நின்ட மொய்தீன்’, ‘பாரன்சிக்’, ‘களா’, ‘மாயநதி’, ‘நாரதன்’, ‘வாஷி’, ‘தள்ளுமாலா’, ‘மின்னல் முரளி’, ‘2018’ என பல வெற்றிப் படங்களைத் தந்து மலையாள திரையுலகின் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக திகழ்கிறார்.

இவர் நடித்த ‘மின்னல் முரளி’, ‘2018’ ஆகிய திரைப்படங்கள் இந்திய அளவில் அவரை பிரபலப்படுத்தியது. இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி 2’ என்ற தமிழ் படத்திலும் நடித்திருக்கிறார். இவர்தான் இப்போது ‘ஐடன்டிட்டி’ என்ற மலையாளப் படத்தில் திரிஷாவுக்கு ஜோடியாகிறார்.


இதுவரை திரிஷா-விக்ரம், திரிஷா-ஜெயம் ரவி, திரிஷா-விஜய், திரிஷா-சிம்பு, திரிஷா-சூர்யா, திரிஷா-பிரபாஸ், திரிஷா-மகேஷ் பாபு, திரிஷா-கார்த்தி என திரிஷா ஜோடி ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. இதிலும் குறிப்பாக திரிஷா-விஜய் மீண்டும் இணைந்திருக்கும் ‘லியோ’ படம் திரிஷா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது. இருபது வருடத்துக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கும் திரிஷா, இதுவரை நிவின் பாலி ஜோடியாக ‘ஹேய் ஜூட்’ என்ற ஒரே ஒரு மலையாளப் படத்தில் மட்டுமே நடித்துள்ளார். அவர் மோகன்லால் உடன் நடித்த ‘ராம்’ என்ற மலையாளப் படம் என்னவானது என்று தெரியவில்லை. இப்போது இணையும் திரிஷா-டொவினோ தாமஸ் ஜோடி ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தாகுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

திரிஷா-டொவினோ தாமஸ்

Updated On 1 Aug 2023 5:02 PM IST
ராணி

ராணி

Next Story