இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

அனைவருக்கும் ராணுவப் பயிற்சி - கங்கனா ரனாவத் புதிய சர்ச்சை

நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட் நடிகையாக இருந்தாலும், தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த 'சந்திரமுகி 2' பெரிய அளவில் கவனம் பெறாத நிலையில், வருகிற 27ம் தேதி வெளிவர இருக்கும் 'தேஜஸ்' படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இயக்குநர் சர்வேஸ் மெஹ்ரா இயக்கத்தில் அன்சுல் சவ்தான், வருண் மித்ரா, ஆஷிஷ் வித்யார்த்தி, விஷாக் நாயர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை ரோணி ஸ்குருவாலா தயாரித்துள்ளார். ராணுவத்தை மையக் கருவாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கங்கனா ரனாவத் விமானப்படை பைலட்டாக நடித்துள்ளார். அடிக்கடி ஏதேனும் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து, விமர்சனங்களுக்கு ஆளாகி வரும் கங்கனா இந்த முறை படிப்பை முடிக்கும் ஒவ்வொருவருக்கும் ராணுவப் பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும் என்ற கருத்தினை தெரிவித்துள்ளார். படம் பற்றி கங்கனா கூறும்போது, படிப்பை முடிக்கும் ஒவ்வொருவருக்கும் நாட்டில் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்கினால் சோம்பேறிகளையும், பொறுப்பற்றவர்களையும் ஒழிக்க முடியும் என தெரிவித்துள்ளார். மேலும், ராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் தங்கள் உயிரை கூட பொருட்படுத்தாமல் நாட்டை பாதுகாக்கின்றனர். ஆனால், மக்கள் பலரும் முதுகுக்கு பின்னால் அவர்களை குறை கூறுகின்றனர். குறிப்பாக, சீனா மற்றும் பாகிஸ்தான் மீது பாலிவுட் கலைஞர்கள் அன்பைப் பொழியும் போதும், கிரிக்கெட் வீரர்கள் அவர்களைக் கட்டியணைக்கும் போதும் நான் மட்டும் தான் அவர்களை எதிரிகளாக நினைக்கிறேனா? அல்லது இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் பகை எனக்கு மட்டும்தானா? என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலை குறித்த உணர்வு பதிவாகத்தான் 'தேஜஸ்' படத்தை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


'தேஜஸ்' படத்தில் விமானப்படை பைலட்டாக தோன்றும் கங்கனா ரனாவத்

அஜித் பட வாய்ப்பை தவிர்க்க காரணம் - சிவராஜ்குமார் விளக்கம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார். தொடர்ந்து தனுஷுடன் 'கேப்டன் மில்லர்' படத்திலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்திற்கு முன்பே அஜித் குமாரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு சிவராஜ்குமாரை தேடி வந்ததாகவும், ஆனால் அவரால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாகவும் தற்போது அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து சிவராஜ்குமார் கூறுகையில், ஜெயிலருக்கு முன்பே என்னை தேடி தமிழிலிருந்து பட வாய்ப்புகள் வந்தது. குறிப்பாக அஜித் சார் படத்தில் நடிக்க கேட்டார்கள். இது 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது கன்னட படங்களில் பிசியாக நடித்து வந்ததால் கால்ஷீட் ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் அதற்காக அஜித்துக்கு நான் முடியாது என சொல்லிவிட்டேன் என்பதாக அர்த்தம் கிடையாது. அந்த நேரத்தில் நான் தமிழ் படத்திற்கு டேட்ஸ் கொடுத்தால் என் சக கன்னட நடிகர்கள் தவறாக நினைத்துக் கொள்வார்கள். அப்போது கன்னட மொழியான எனது தாய் மொழியை தேர்வு செய்வதுதான் எனக்கு முன்னுரிமையாகபட்டது. அதில் எந்த தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு தமிழ் பிடிக்கும். நான் அங்கு பிறந்தவன் தான். எனது ரசிகர்களையும் நான் ஏமாற்ற கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அதனால்தான் அஜித் பட வாய்ப்பை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டது. தமிழ் சினிமாவில் நிறைய ஹீரோக்கள் இருக்கிறார்கள். அதனால் நான் தமிழ் திரையுலகிற்கு வந்தால் அது ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என நினைத்தேன் அது தற்போது 'ஜெயிலர்' படத்தில் நிறைவேறிவிட்டது என அவர் தெரிவித்தார்.


நடிகர் அஜித் குமார் மற்றும் கன்னட நடிகர் சிவராஜ் குமார்

திரை நண்பர்களுக்கு கீர்த்தி சுரேஷ் வைத்த பர்த்டே பார்ட்டி!

கோலிவுட்டில் பிசியான ஹீரோயினாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். 'மாமன்னன்' படத்துக்கு பிறகு தற்போது தமிழில் இவர் நடிப்பில் 'சைரன்' திரைப்படம் தயாராகி வருகிறது. இது தவிர 'ரிவால்வர் ரீட்டா', 'ரகு தாத்தா' போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களுமே கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களாகும். மேலும் சில தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் இவர், இந்தியில் அட்லி தயாரிக்கும் 'தெறி' படத்தின் ரீமேக்கிலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் தன்னுடைய 31வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் கீர்த்தி சுரேஷ். அப்போது தனது திரையுலக நண்பர்களுக்காக அவர் ஒரு பார்ட்டி கொடுத்துள்ளார். இதில் இயக்குனர் அட்லி, அவரது மனைவி பிரியா, நடிகை பிரியா ஆனந்த், பிரீத்தா, கல்யாணி பிரியதர்ஷன், நடிகர் சதீஷ், கதிர் உள்பட பலர் கலந்துக் கொண்டனராம். பார்ட்டியில் கீர்த்தி சுரேஷின் நடனம் மிகவும் கவனம் பெற்றதோடு, அவருடன் சேர்ந்து அட்லி, பிரியா ஆகியோரும் நடனம் ஆடினார்களாம். இந்நிகழ்வில் பங்கு பெற்று தன்னை நேரில் வாழ்த்த வந்த அனைத்து திரையுலக நண்பர்களுடனும் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ள கீர்த்தி சுரேஷ், அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த பிறந்த நாள் மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாகவும், நெருங்கிய நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடி குதூாகலம் அடைந்தது மகிழ்ச்சியை தந்துள்ளதாகவும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.


பர்த்டே பார்ட்டியில் அட்லீ மற்றும் பிரியாவுடன் கீர்த்தி சுரேஷ்

தபால் தலை வெளியிட்டு மம்மூட்டியை கௌரவித்த ஆஸ்திரேலியா

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவர் தமிழிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் 300க்கு அதிகமான படங்களில் நடித்துள்ள இவர், 4 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். தற்போது 'பிரம்மயுகம்' என்ற மலையாள படத்தில் மம்முட்டி நடித்து முடித்துள்ள நிலையில், இவரது கலைச் சேவையை பாராட்டி ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு நடந்த அந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானிஸ், பிரன்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ஆண்ட்ரூ சார்டன் எம்.பி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதர் மன்பிரீத் வோரா ஆகியோர் பங்கேற்று முதல் தபால் வழங்கி வெளியிட்டார். இந்த சிறப்பு தபால் தலை ஆஸ்திரேலியா சந்தைக்கு தற்போது உடனடியாக வந்துள்ளதோடு, இந்த தபால் தலைகள் வரும் நாட்களில் தபால் சேவைகளில் பயன்படுத்தப்பட உள்ளது. இது குறித்து மம்மூட்டி கூறும்போது, ஆஸ்திரேலியா நாடு எனக்கு அளித்த இந்த கவுரவத்தை பெரும் பெருமையாக கருதுகிறேன். இது எனது நாட்டுக்கு கிடைத்த பெரும் பேராகவும் நினைக்கிறேன். இந்த கவுரவத்தை எனது ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.


நடிகர் மம்மூட்டியை கௌரவித்து ஆஸ்திரேலியாவில் வெளியிடப்பட்ட தபால் தலை

10ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தயாரிப்பாளராக களமிறங்கும் ஜிவி.பிரகாஷ்

வசந்தபாலன் இயக்கத்தில், பசுபதி மற்றும் பரத் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த 'வெயில்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ் குமார். தமிழ் திரையுலகில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருந்தாலும், திரைத்துறைக்கு வந்து இந்த 17 ஆண்டுகளில் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தி, 'ஆடுகளம்', 'சூரரைப் போற்று', ஆகிய படங்களின் வாய்யிலாக தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கும் இவர், 'சூர்யா 43' படத்தின் மூலம் தனது 100 வது படத்தினை நிறைவு செய்ய உள்ளார். இந்த நிலையில், இப்படி இசையமைப்பாளர், மிகச்சிறந்த நடிகர் என்பதை தாண்டி தயாரிப்பாளராகவும் களமிறங்கிய ஜிவி 2013 ஆம் ஆண்டு விக்ரம் சுகுமாரன் என்பவரது இயக்கத்தில் கதிர் ஓவியா நடித்து வெளிவந்த 'மதயானை கூட்டம்' என்ற படத்தினை எடுத்தார். இதனையடுத்து இசை மற்றும் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஜிவி தற்போது 10 வருட இடை வெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளராக களமிறங்கவுள்ளார். தற்போது கமல் பிரகாஷ் என்பவரின் இயக்கத்தில், பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ், ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் 'கிங்ஸ்டன்' என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். ஜீவியின் 25 வது படமான இதன் டைட்டில் லுக் போஸ்டரை அண்மையில் கமல்ஹாசன் வெளியிட்டார். தனது பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் இசை அமைத்து, ஜீ ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக 'பேச்சிலர்' படத்தில் நடித்திருந்த திவ்யபாரதி நடிக்கிறார். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.


'கிங்ஸ்டன்' பட போஸ்டர் மற்றும் நடிகை திவ்ய பாரதியுடன் ஜிவி பிரகாஷ்

ராகவா லாரன்ஸ் ஜோடியாக நிமிஷா சஜயன்

கடந்த 2014 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் 'ஜிகர்தண்டா'. இப்படத்தில் பாபி சிம்கா நடித்திருந்த சேது கதாபத்திரம் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் கார்த்திகேயன் சந்தானம், எஸ்.கதிரேசன், அலங்கார் பாண்டியன், ஆகியோர் இணைந்து தயாரிக்கும் 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகமான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தினையும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். தீபாவளிக்கு வெளியாக உள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். இதில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் வரும் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக 'சித்தா' படத்தில் நடித்திருந்த நிமிஷா சஜயன் நடித்துள்ளார். மேலும் எஸ்.திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.


ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகை நிமிஷா சஜயன்

படம் குறித்து பேசிய இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், "2014 ல் வெளிவந்த 'ஜிகர்தண்டா' முதல் பாகத்திற்கும், 2வது பாகத்திற்கும் கதை மற்றும் காட்சியில் எந்தவொரு தொடர்பும் இருக்காது. தலைவருடன் பணியாற்றி வெளிவந்த 'பேட்ட' படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்படத்தை இயக்கியுள்ளேன். நிச்சயம் இந்த படமும் ரசிகர்களின் வரவேற்பால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என நம்புகிறேன். 1975களில் இருந்த மதுரையின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்துள்ள நிமிஷா சஜயன் 'சித்தா' படத்திற்கு பிறகு மிகவும் அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோன்று எஸ்.ஜே.சூர்யாவும் திரைப்பட இயக்குனர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்" என்று கூறினார்.

Updated On 31 Oct 2023 12:17 AM IST
ராணி

ராணி

Next Story