இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்திய சினிமாவில் `பாகுபலி', `ஆர்.ஆர்.ஆர்', `காந்தாரா', `பொன்னியின் செல்வன்', `புஷ்பா', `கே.ஜி.எப்.' 'விக்ரம்', மற்றும் 'ஜெயிலர்' என்று தொடர்ந்து தென்னிந்திய திரைப்படங்கள் ஆளுமை செலுத்தத் தொடங்கி உள்ளன. அதோடு பாலிவுட் திரைப்பட உலகிலும் தென்னிந்திய நடிகைகள் ஆளும் நிலைமையும் தற்போது உருவாகி வருகிறது. ஒருகாலத்தில் இந்தி திரையுலகில் பிற மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் சென்று கோலோச்சுவது என்பது அவ்வளவு எளிதாக நடந்துவிடாது. அதிலும் 1970-90 காலகட்டங்கள் என்பது இன்னும் கடும் சவால் நிறைந்த ஒன்றாகவே இருந்தது. காரணம் அங்கிருக்கும் ஆளுமைகள் வேற்று மொழியைச் சேர்ந்த சினிமாக்காரர்களை அவ்வளவு எளிதில் அனுமதிக்க மாட்டார்கள் என்ற ஒரு பேச்சு அதிகமாகவே அப்போது நிலவிவந்தது. அப்படி தமிழ் திரையுலகில் இருந்து பாலிவுட்டிற்கு சென்று ஒன்றிரண்டு படங்களோடு சோபிக்க முடியாமல் திரும்பி வந்த இயக்குனர்கள், நடிகர்- நடிகைகள் இங்கு ஏராளம். இப்படிப்பட்ட சூழலிலும் ஒருசிலர் தமிழ் திரையுலகில் இருந்து பாலிவுட்டிற்கு சென்று அசைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு கோலோச்சி நின்றார்கள் என்றால் அது சாதாரண காரியம் இல்லை. அத்தகைய சாதனையை நிகழ்த்திக் காட்டியவர்கள், இந்திய சினிமாவையே தன் அழகால் கிறங்க வைத்திருந்த தமிழ் நடிகைகள்தான்.

வெற்றிக் கொடி நாட்டிய 'வைஜெயந்திமாலா'

தமிழ் நடிகையாக அறிமுகமாகி, பாலிவுட்டில் களமிறங்கிய முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமை பெற்றவர் வைஜெயந்திமாலா. தமிழ் ரசிகர்களுக்கு இன்றைக்கும் வைஜெயந்திமாலா என்றால், சட்டென்று நினைவுக்கு வருவது ‘கண்ணும் கண்ணும் கலந்து’ என்ற பாடலில் வரும் ‘ஜிலு ஜிலு ஜிலுவென்று நானே’என்ற வரிகளுடன் அவர் ஆடும் அற்புதமான நடன அசைவுகள் தான். 'வாழ்க்கை' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான வைஜெயந்திமாலா, முதல் படத்திலேயே வெற்றி கதாநாயகி என்ற அடையாளத்தைப் பெற்றார்.

இதே படத்தை 'பஹார்' என்ற பெயரில் இந்தியில் எடுத்து அங்கும் வெற்றிக்கொடி நாட்டியதால், அடுத்தடுத்து இந்தி திரையுலகில் இருந்து நிறைய பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இடையிடையே ஒன்றிரண்டு தமிழ் படங்களில் நடித்தாலும் பெரும்பாலும் ஹிந்தி படங்களில் மட்டும் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நாட்டியம், நடிப்பு என்று தொடர்ந்து இந்தியில் இவர் நடித்த அனைத்துப் படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்ததால் வெகு விரைவிலேயே இந்தி திரையுலக கதாநாயகிகளில் முதன்மையான ஒருவராக, முன்னணி நாயகியாக மாறிப்போனார். இது மட்டுமின்றி தமிழ்நாட்டில் இருந்து வடநாட்டிற்கு சென்று வெற்றிக்கொடி நாட்டிய முதல் நடிகை என்ற பெருமையையும் பெற்றார்.

இத்தனைக்கும் இவர் பாலிவுட்டில் அறிமுகமாகி நட்சத்திர அந்தஸ்து பெற்று வந்த அதே சமயத்தில், இவரது சமகால நடிகைகளான சாவித்திரி, பத்மினி போன்றோர் 'பஹுத் தின் ஹுவே', 'மிஸ்டர்.சம்பத்' போன்ற படங்களில் கதாநாயகிகளாக இந்தி திரையுலகில் அறிமுகமாகி கோலோச்ச முயற்சி செய்த போதிலும், இவருக்கு நிகராக அவர்களால் மிளிர முடியவில்லை. ஏன், இவர்களுக்கு அடுத்து வந்து தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகையாக வளம் வந்த சரோஜா தேவி கூட 1960-களுக்கு பிறகு தொடர்ந்து பல இந்தி படங்களில் ராஜேந்திர குமார், ஷம்மி கபூர் போன்ற உச்ச நட்சத்திரங்களோடு இணைந்து நடித்தும் வைஜெயந்திமாலாவிற்கு நிகரான பெயர் அவருக்குக் கிடைக்கவில்லை.

காரணம், வைஜெயந்திமாலாவின் இருபது வருட திரைப்பயணத்தில் பெரும்பாலும் அவர் பாலிவுட் படங்களிலேயே தொடர்ந்து நடித்ததோடு சாதனா, கங்கா ஜமுனா, தேவதாஸ் போன்ற திரைப்படங்கள் காலத்தால் அழிக்க முடியாத காவியப் படங்களாக மாறியதால் தான். குறிப்பாக, அவரது பல படங்கள் ரஷ்ய மொழியிலும் டப் செய்யப்பட்டன, அதில் மதுமதி, பியார் ஹி பியார், சங்கம், தேவதாஸ் போன்ற திரைப்படங்கள் மிக முக்கியமானவை.


நடிகை வைஜெயந்தி மாலா

கனவுக் கன்னியாகத் திகழ்ந்த 'ஹேமமாலினி'

1960-களுக்கு பிறகும் தொடர்ந்து பல தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டில் தடம் பாதிக்க முயற்சி செய்தனர். குறிப்பாக, நாட்டியப் பேரொளி பத்மினி இந்த காலகட்டத்தில் அதிகப்படியான இந்தி படங்களில் நடித்ததோடு அவற்றில் பல வெற்றிகளையும் கண்டார். பாலிவுட் சினிமாவின் பிதாமகனாக கருதப்படும் ராஜ் கபூரின் வழிகாட்டுதளுடன் அங்கு பயணித்த பத்மினி, மேரா நாம் ஜோக்கர், ஆஷிக், ஜிஸ் தேஷ் மே கங்கா பெஹ்தி ஹை போன்ற படங்களில் நடித்து முத்திரை பதித்தார். இதே காலகட்டத்தில் வேறு சில நடிகைகளும் தமிழ் சினிமாவில் கிடைத்த வெற்றியின் தொடர்ச்சியாக பாலிவுட் சினிமாவிலும் தடம் பதித்தனர். உதாரணமாக, நடிகை ராஜஸ்ரீ 1964 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற 'காதலிக்க நேரம் இல்லை' திரைப்படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

பின்னர் 1966 ஆம் ஆண்டு இந்த படத்தின் இந்தி ரீமேக்கான பியார் கியா ஜாவிலும் அதே பாத்திரத்தில் நடித்தார். இதேபோல் நடிகைகள் சாரதா மற்றும் காஞ்சனா இருவரும் 1969 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த 'துலாபாரம்' படத்தில் நடித்திருந்தனர். பின்னர் 1970 ஆம் ஆண்டு இந்த படத்தின் இந்தி ரீமேக்கான சமாஜ் கோ பாதல் தலோவில் தங்கள் பாத்திரங்களை மீண்டும் நடித்தனர். இவர்கள் தவிர அன்றை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவரும், தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவும் தர்மேந்திராவுக்கு ஜோடியாக அறிமுகமான காலம் இதே நேரம்தான். இருந்தும் இவர்களுக்கெல்லாம் கிடைக்காத பேரும் புகழும், தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் கூட கதாநாயகியாக நடிக்காத தமிழ் பெண் ஒருவருக்கு அங்கு கிடைத்தது. அவர் தான் 'ஹேமமாலினி'.

1963-ல் ஜி.என்.வேலுமணியின் சரவணா பிக்சர்ஸ் படநிறுவனம், ‘இது சத்தியம்’ என்ற படத்தைத் தயாரித்தது. அசோகன்- சந்திரகாந்தா இணைந்து நடித்த இந்தப் படத்தில், ஹேமமாலினியின் நடனம் இடம் பெற்றது. இதன்பிறகு, இயக்குனர் ஸ்ரீதர் தன்னுடைய ‘வெண்ணிற ஆடை’படத்தில், முற்றிலும் புதுமுகங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்தார். அதற்காக நடைபெற்ற கதாநாயகி தேர்வில் ஹேமமாலினி தேர்வு செய்யப்பட்டு, ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது .ஆனால் ஹேமமாலினி மிகவும் ஒல்லியாக இருந்ததால் அவர் தோற்றமும், தமிழ் உச்சரிப்பும் ஸ்ரீதருக்கு திருப்தி அளிக்காமல் நிராகரிக்கபட்டார். இதனால் ஸ்ரீதர் இயக்கத்தில் அறிமுகமாகலாம் என்று ஆவலோடு இருந்த ஹேமமாலினி ஏமாற்றம் அடைந்தார்.

இருப்பினும் ஹேமமாலினியின் நடனமும், அழகும் அவரை பாலிவுட்டிற்கு அழைத்துச் சென்றது. முதல் படத்திலேயே ராஜ்கபூருக்கு ஜோடியாக, படத்தின் நாயகியாக ஹேம மாலினி அறிமுகமான ‘சப்னோம்கி சவுதகார்’ என்ற முதல் இந்திப் படமே தோல்வியை தழுவியது. இருப்பினும் அவரது நடனத்திற்காகவே பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தன. அப்போதைய பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான, அமிதாப்பச்சன், தர்மேந்திரா, தேவ் ஆனந்த், ராஜேஷ்கன்னா, ஷம்மி கபூர் என பலருடனும் நடித்து இந்தி நடிகைகளில் ‘நம்பர் 1’ இடத்தைப் பெற்றதுடன், பாலிவுட் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் மாறிப்போனார். அதனை உணர்த்தும் விதமாக இவரின் அழகை புகழ்ந்து பாலிவுட்டில் "டிரீம் கேர்ள்'' என்ற பாடல் உருவாக்கப்பட்டிருந்ததோடு, 'ஷோலே' திரைப்படம் மற்றும் ஒருவெற்றி மகுடமாக இவருக்கு மாறிபோனது.


நடிகை ஹேமமாலினி

சூப்பர் ஸ்டாராக வலம் வந்த 'ஸ்ரீதேவி'

1970-களுக்கு பிறகு பெரிய அளவில் தமிழ் நடிகைகள் பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்த நேரத்தில்தான், மற்றும் ஒரு சூறாவளி தமிழ் நாட்டிலிருந்து இந்தி திரையுலகை நோக்கி பயணித்தது. அவர் தான் நடிகை 'ஸ்ரீதேவி'. சொல்லப்போனால் 1979-ஆம் ஆண்டில் பாரதிராஜா தனது 16-வயதினிலே படத்தை ஸ்ரீதேவியை வைத்தே ஹிந்தியில் 'சொல்வா சவான்' என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்ட போது, அப்படம் மிகப்பெரிய தோல்வியைத்தான் அங்கு சந்தித்தது. முதல் இந்தி படமே சறுக்கலை தந்ததால் கனவுகளோடும், ஆசைகளோடும் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்த ஸ்ரீதேவி பெருத்த ஏமாற்றத்தையும், வேதனையையும் அடைந்து மீண்டும் தமிழ் ,தெலுங்கு திரையுலக பக்கமே திரும்பிப் போக முயன்றார்.

இருப்பினும் விடாமுயற்சியை கைவிடாத ஸ்ரீதேவி நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜிதேந்திராவுக்கு ஜோடியாக 'ஹிம்மத்வாலா' என்ற படத்தில் நடித்தார். அந்த படம் ஹிந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகவே, தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி நடிக்கத் துவங்கினார். இந்த நேரங்களில் தென்னிந்தியாவில் இருந்து சென்று அப்போது பாலிவுட் சினிமாவில் பிரகாசித்து வந்த நடிகை ரேகா தான் முழுக்க முழுக்க ஸ்ரீதேவியை வழி நடத்தினாராம். அதன்படி 80-களில் இன்குலாப், தோஃபா, நாகினா, ஆக்ரீ ராஸ்தா, கர்மா, மிஸ்டர் இந்தியா, சாந்தினி, சால்பாஸ் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட் சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டாராக ஸ்ரீதேவி வலம் வர ஆரம்பித்தார்.

இவர் அறிமுகமான அதே சமயத்தில்தான் தென்னிந்தியாவின் மற்றும் ஒரு நட்சத்திர நடிகையான ஜெயபிரதாவும் பாலிவுட்டில் பிரகாசித்து வந்தார். இவ்விருவருக்கும் இடையே அந்த சமயம் கடுமையான போட்டி நிலவி வந்த போதிலும், பல படங்களில் இருவரும் இணைந்து நடித்து அதிலும் பல வெற்றிகளைக் கண்டனர். இதற்கு உதாரணமாக, மாவாலி, மக்ஸத், நயா கடம், மஜால் போன்ற திரைப்படங்களை சொல்லலாம்.

இவ்வாறு ஜெயப்பிரதா என்று மட்டும் அல்லாமல் ஒவ்வொரு காலகட்டத்திலும் குறிப்பாக 90-களில் ஸ்ரீதேவிக்குப் போட்டியாக அவரது இடத்தைப் பிடிக்க பல தென்னிந்திய நடிகைகளும், தமிழ் நடிகைகளும் தொடர்ந்து முயற்சி செய்தனர். அதில் குறிப்பாக தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பாலிவுட் நடிகையான மீனாட்சி சேஷாத்ரி மிக முக்கியமானவர். இவர் தவிர மாதுரி தீட்சித், திவ்யா பாரதி போன்ற பிற வட இந்திய நடிகைகளும் ஸ்ரீதேவியின் இடத்தை பிடிக்க முயற்சித்த போதிலும், கடைசிவரை அவர் தொட்ட உச்சத்தை எவராலும் நெருங்க முடியவில்லை.


நடிகை ஸ்ரீதேவி

இன்றும் பாலிவுட்டை கலக்கும் தமிழ் நடிகைகள்

1990களுக்கு பிறகும் நடிகை பானுப்ரியா மற்றும் அவரது தங்கை சாந்தி பிரியா போன்றோர் அக்‌ஷய் குமார், மிதுன் சக்ரவர்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பாலிவுட்டில் தடம் பதிக்க முயற்சித்தபோது பெரியளவில் அவர்களால் அங்கு சாதிக்க முடிவில்லை. இவர்கள் தவிர, ரம்யா கிருஷ்ணன், ரேவதி, மீனா, ரம்பா போன்ற தமிழில் மிகவும் பிரபலமான பல தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டில் ஒன்றிரண்டு படங்கள் நடித்த போதிலும் பெரிய அளவிலான மாற்றம் அவர்களது வாழ்க்கையில் நிகழவில்லை. இந்த நேரத்தில்தான் கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த 'கஜினி' திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டபோது அமீர்கானுக்கு ஜோடியாக நடிகை அசின் பாலிவுட்டில் அறிமுகமாகி மீண்டும் ஒரு அலையை ஏற்படுத்தினார். இவர் அங்கு தொடர்ந்து சல்மான்கான், அக்‌ஷய் குமார், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த போதிலும், சில தோல்விகளால் திருமண வாழ்க்கைக்குள் மிக விரைவில் நுழைந்தார்.

அசினை தொடர்ந்து தமிழ் நடிகையான திரிஷாவும் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த 'கட்டா மிட்டா' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி தனது பயணத்தை துவங்கிய போதும், தொடர்ந்து அங்கு அவர் பயணிக்க விரும்பவில்லை. இவர்கள்தவிர, நடிகை ஸ்ரேயா சரண், ஜெனிலியா டிசோசா, ஸ்ருதி ஹாசன், இலியானா டி குரூஸ், காஜல் அகர்வால், தமன்னா பாட்டியா, ராகுல் ப்ரீத்தி சிங் போன்ற தமிழில் நடித்த பல நடிகைகள் பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்தபோது பெரிய அளவிலான வெற்றி அவர்களுக்கு அங்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது பான் இந்தியா படங்களும், வெப் சீரிஸும் அதிக அளவில் வெளிவர துவங்கியுள்ளதால் மொழிகளை கடந்து மீண்டும் தென்னிந்தியாவை சேர்ந்த பல நடிகைகள் அங்கு பிரகாசிக்க துவங்கியுள்ளனர்.

ஏற்கனவே கர்நாடகாவை சேர்ந்த தீபிகா படுகோன் தற்போது பாலிவுட்டில் நட்சத்திர நடிகையாக வலம் வரும் நிலையில், நடிகை சமந்தா, நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா, பிரியாமணி, அமலாபால் உட்பட பல தென்னிந்திய நடிகைகள் மீண்டும் ஒரு அலையை பாலிவுட்டில் உருவாக்க முயற்சித்து வருகின்றனர். இருப்பினும் இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் அல்ல என்பதோடு, வைஜெயந்திமாலா, ஹேமமாலினி, ஸ்ரீதேவி நிகழ்திக்காட்டிய சாதனையை இவர்களால் எட்டிப் பிடிக்க முடியுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.


பாலிவுட்டை கலக்கும் தமிழ் நடிகைகள்

Updated On 18 Sep 2023 6:49 PM GMT
ராணி

ராணி

Next Story