
தமிழ் சினிமாவில் காதல், ஆக்ஷன் படங்களுக்கு பெயர் போன இயக்குநர்கள் நிறைய பேர் இருந்தாலும் அதில் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. காரணம் இரண்டு ஜானர்களிலும் அவர் கொடுத்த வெற்றிப்படங்களின் தாக்கம் அப்படியானது. மிகவும் மென்மையான காதல் படமான ‘மின்னலே’ தொடங்கி பல அதிரடி ஹிட் படங்களை கொடுத்த கெளதம், ஒரு கட்டத்திற்கு பிறகு இயக்கத்தை விட்டுவிட்டு நடிப்பு, தயாரிப்பு என்று களத்தில் இறங்கினார். நடிகராக அவர் தன் வெற்றி முத்திரையை பதித்திருந்தாலும் தயாரிப்பாளராக சில சறுக்கல்களையும் சந்தித்தார். இருந்தும் போராட்ட குணம் கொண்ட கெளதம் எதற்காகவும் தன் கலை பயணத்தில் இருந்து பின்வாங்காமல் தன் ரசிகர்களை மீண்டும் பழைய மாதிரி மகிழ்வித்து விட வேண்டும் என்று தொடர்ந்து இயக்குநராகவும், நடிகராகவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இன்று ( 25.02.2025) தன் 52-வது பிறந்த நாளை கொண்டாடும் கௌதமின் திரைப்பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம்.
ஆரம்பகால வாழ்க்கை
தமிழ் திரையுலகில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்யும் இயக்குநர்களில் ஒருவரான கௌதம் மேனன், 1973-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி வாசுதேவ் மேனன், உமா பிரபா கிருஷ்ணன் தம்பதிகளுக்கு மகனாக கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள ஒட்டப்பாலம் என்ற இடத்தில் பிறந்தார். இவரின் அப்பா மலையாளி. அம்மா தமிழ்நாட்டை சேர்ந்தவர். இதனால் இவர் பிறந்தது கேரளா என்றாலும் வளர்ந்தது படித்தது எல்லாமே தமிழ்நாட்டில், அதுவும் சென்னை அண்ணா நகரில்தான். கௌதமின் அம்மா உமா தன் மகன் மிகப்பெரிய உயரத்திற்கு சென்ற பிறகும் கூட தனது ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி என்று ஒரு மிகச்சிறந்த ஆசிரியராக தன்னை தகவமைத்துக் கொண்டு பல சிறந்த எதிர்கால மாணவர்களை உருவாக்கியவர். அம்மா ஆசிரியர் என்பதால் படிப்பில் ஓரளவு கெட்டிக்காரரான கெளதம் தனது பள்ளிப்படிப்பை எம்.சி.சி மேல்நிலைப் பள்ளியில் முடித்தார்.
இயக்குநர் கெளதம் மேனன் - அப்பா, அம்மா, சகோதரிகளுடன் இருக்கும் குடும்ப புகைப்படம்
பின்னர் மேற்படிப்பை திருச்சியில் உள்ள மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் தொடர்ந்தவர், அங்கு பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் சேர்ந்து இளங்கலை பட்டம் பெற்றார். சிறுவயதில் இருந்தே படிப்போடு சேர்த்து அவரது அம்மா இசை போன்ற கலை ஆர்வங்களையும் கௌதமிடம் வளர்த்து விட்டதால் அவருக்கு சிறு வயதில் இருந்தே கதை எழுதுவது, நிறைய ஆங்கில படங்களை பார்த்து அதன் கதை போக்கு குறித்த விஷயங்களில் ஆர்வம் காட்டுவது போன்ற விஷயங்களில் ஈடுபாடு இருந்து வந்துள்ளது. இது ஒரு கட்டத்தில், தான் எப்படியாவது இயக்குநராகி விட வேண்டும் என்ற எண்ணத்தை அவரிடம் விதைத்துள்ளது. தன்னுடைய அந்த ஆசையை வீட்டில் உள்ளவர்களிடமும் தெரிவிக்க அதற்கு அவர்களும் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். பெற்றோர்களின் சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து கலைத்துறைக்குள் முழுமையாக நுழைய முடிவு செய்த கெளதம் தன் முதல் படியை விளம்பர துறையில் எடுத்து வைத்தார்.
ட்ரெண்ட் செட்டர்
தமிழ் சினிமாவில் காதல், ஆக்சனில் ட்ரெண்ட் செட்டை உருவாக்கிய இயக்குநர் கெளதம் மேனன்
கெளதம் வாசுதேவ் மேனன் தனது பயணத்தை விளம்பரத்துறையில் தொடங்கினாலும், அவரது குறிக்கோள் திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதுதான். இயக்குனர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்த காலத்திலேயே, அவர் இயக்கிய ‘மின்சார கனவு’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய கெளதம், அப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் தோன்றி கூட நடித்திருப்பார். பின்னர் நீண்ட முயற்சிக்குப் பிறகு, 2001 ஆம் ஆண்டு ‘மின்னலே’ படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் இயக்குநராக அறிமுகமானார். மாதவன், அப்பாஸ், ரீமா சென், விவேக், நாகேஷ் ஆகியோர் நடித்த இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக, இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களால் இன்றுவரையும் விரும்பிக் கேட்கப்படுகின்றன. மேலும், இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜ், தமிழ்த் திரையிசை உலகையே வியப்பில் ஆழ்த்தினார்.‘மின்னலே’ படத்திற்கு பிறகு, ‘ரெஹ்னா ஹே தெரே தில் மே’, ‘காக்க காக்க’, ‘கர்ஷணா’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘யே மாய சேசவே’ என தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார் கெளதம். இந்த படங்களில் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘ரெஹ்னா ஹே தெரே தில் மே’ போன்ற சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாதிருந்தாலும், கெளதம் மேனன் மீது ரசிகர்கள் கொண்டிருந்த மதிப்பையும், அவரது படங்களுக்கான வரவேற்பையும் எந்த விதத்திலும் அது பாதிக்கவில்லை.
கௌதமின் ‘மின்னலே’ திரைப்படத்தில் மாதவன் மற்றும் ரீமாசென்
இதில் குறிப்பாக கெளதம் மேனன் இயக்கிய ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘வாரணம் ஆயிரம்’ மற்றும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த படங்கள் வெறும் வணிகரீதியான வெற்றியை மட்டும் ஈட்டவில்லை; ஒவ்வொரு திரைப்படமும் தனித்துவமான கதைக்களம், விறுவிறுப்பான திரைக்கதை, மெருகேறிய தயாரிப்பு, படத்தை உணர்வுப்பூர்வமாக உயிரோட்டமளிக்கும் நடிகர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் பெரிதும் பாராட்டப்பட்டன. அதிலும் சூர்யா, சிம்பு போன்ற நடிகர்களின் திரைப்பயணத்தில் இந்த படங்கள் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தன. குறிப்பாக, கெளதம் மேனன் படங்களில் தோன்றும் பெண் பாத்திரங்கள் சுயசிந்தனையுடன் கூடிய வலுவான கதாபாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டிருந்தன. இவரது படங்களில் இசைக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும். இதனால் மனதை கொள்ளை கொள்ளும் பாடல்கள் முக்கிய அங்கமாக எப்போதும் இருக்கும். அதற்கென்றே ஓர் அழகிய ஒளிப்பதிவு, நேர்த்தியான வசனங்கள், யதார்த்தமான மற்றும் நுட்பமான சண்டைக் காட்சிகள் போன்றவை பார்க்க தனித்துவமாகவும், தமிழ் சினிமாவிற்கு புதிய தோற்றத்தையும் பெற்று தந்தன. இவை மட்டுமல்லாமல், வெற்றி படங்களோ, தோல்விப் படங்களோ எதுவாக இருந்தாலும், கெளதம் மேனனின் படங்களுக்கென தனித்துவமான முத்திரை இன்றுவரை இருக்கிறது. அது ரசிகர்களை எப்போதும் ஈர்க்கும் தன்மை கொண்டதாகவே எப்போதும் உள்ளது.
மீண்டும் கம்பேக்
கௌதமின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் 'நீ தானே என் பொன்வசந்தம்' பட ஸ்டில்கள்
2011 ஆம் ஆண்டுக்கு பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி தயாரித்த 'நடுநிசி நாய்கள்', 'ஏக் தீவானா தா', 'நீ தானே என் பொன்வசந்தம்' போன்ற பல படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியடையவில்லை. இதன் விளைவாக, அவர் கடும் பண நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டது. குறிப்பாக, 2016ஆம் ஆண்டு வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் தயாரிப்பு மற்றும் விநியோகச் செலவுகள் அதிகரித்ததால், அவரின் கடன் சுமை கூடிவிட, அவர் மிகப்பெரிய சவால்களை சந்திக்க நேர்ந்தது. அதேபோல், 2019ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் உருவான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் வெளியீட்டில் ஏற்பட்ட தாமதங்களும், அவருக்கு தீர்க்க முடியாத பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தியது. இருந்தாலும், அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’, சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய படங்கள் தந்த வெற்றி ஓரளவு மன ஆறுதலை அவருக்கு தந்த போதும், பொருளாதார சிக்கலில் இருந்து அவர் மீண்டுவர அது உதவவில்லை. இத்தகைய நெருக்கடியின் நடுவில், விக்ரமை வைத்து உருவாக்கிய ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீட்டிலும் சிக்கல்கள் உருவாகின. குறிப்பாக, இப்படத்தின் விநியோக உரிமைகள் விற்கப்பட்ட பிறகும், அந்தத் தொகையை திருப்பி அளிக்கவில்லை என அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், அவர் மேலும் மனஅழுத்தத்திற்கும் பொருளாதாரச் சிக்கல்களுக்கும் ஆளானார்.
'விடுதலை' முதல் பாகத்தில் இயக்குநர் வெற்றிமாறனுடன் போலீஸ் அதிகாரி தோற்றத்தில் கௌதம்
பிறகு இந்த பண நெருக்கடிகளை சமாளிக்க, கௌதம் மேனன் நடிகராகவும் பணியாற்ற துவங்கினார். அதில், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘ஓ மை கடவுளே’, ‘கோலி சோடா 2’, ‘செல்ஃபீ’, ‘லியோ’, ‘விடுதலை’ போன்ற படங்களில் இவரது நடிப்பு மிகுந்த கவனம் பெற்றன. சமீபத்தில் கூட பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து ‘டிராகன்’ படத்தில் நடித்துள்ள இவர், அதிலும் பலரையும் ஈர்த்துள்ளார். இருப்பினும், எந்த காலத்திலும் தன்னை நிரந்தர நடிகராக கருதாத அவர், மீண்டும் இயக்குநராக சாதிப்பேன் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறார். அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சமீபத்தில் ‘மம்முட்டி கம்பெனி’ தயாரிப்பில், மலையாள நடிகர் மம்முட்டியை முன்னணி கதாபாத்திரத்தில் வைத்து இயக்கிய ‘டாமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், மலையாள திரைத்துறையில் அவருக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. இது தவிர விரைவில் திரைக்கு வரவுள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படமும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு பல ஏற்றத்தாழ்வுகளை எதிர் கொண்டிருந்தாலும், இயக்கத்திற்கான தனது ஆர்வத்தையும், காதலையும் ஒருபோதும் இழக்காத கௌதம் வாசுதேவ் மேனன், தொடர்ந்து புதுமைகளை தேடி பயணித்து வருகிறார். இன்று, அவரது திரைவாழ்க்கையில் சில தடுமாற்றங்கள் இருக்கலாம், இருப்பினும் எதையும் துணிச்சலோடு எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட கெளதம் இவற்றை எல்லாம் கடந்து தனது சிறந்த தரமான கதை சொல்லல் மற்றும் நேர்த்தியான இயக்கத்துடன், ரசிகர்களுக்கு இன்னும் பல மெய்சிலிர்க்கும் அனுபவங்களை எதிர்காலத்தில் வழங்குவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை!.
