(10.12.1972 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)
"வசந்தமாளிகை"யில் வசந்தமாக ஓரிரு காட்சியில் தோன்றியதோடு, "அவன்தான் மனிதன்” மற்றும் பல படங்களில் நடித்துக்கொண்டு இருப்பவர், புதுமுகம் விஜயலட்சுமி. கட்டுடல், கண்டவரை மயக்கும் கயல்விழி, எடுப்பான தோற்றம், துடிப்பான நடிப்பு இவற்றைப் பெற்றிருப்பது விஜயலட்சுமியின் தனிச்சிறப்பு! "கதைக்கு முத்தக் காட்சி தேவை என்று டைரக்டர் கருதினால், முத்தக்காட்சியில் நடிப்பது தவறு அல்ல" என்று கூறும் விஜயலட்சுமி, "கன்னத்தோடு கன்னம் சேர்த்து கட்டிப் புரளுவதைவிட, முத்தம் கொடுப்பது எவ்வளவோ மேல்" என்கிறார், துணிச்சலோடு!
நிருபர்: உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன். ஆனால், முத்தக் காட்சியை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமே!
விஜயலட்சுமி: அது வெறும் வெளிப்பகட்டு பேச்சுதான்! "தோரகா", "சரூரத்", "புனர்ஜென்மம்” ஆகிய படங்கள் தமிழ்நாட்டில் வெற்றியுடன் ஓடியதில் இருந்தே, ரசிகர்கள் எப்படிப்பட்ட படங்களை ரசிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாமே!
இருமாறுபட்ட அழகிய தோற்றங்களில் நடிகை விஜயலட்சுமி
நிருபர்: ரசிகர்கள் "கவர்ச்சி”யை ரசிக்கலாம். அதற்காக “முத்தக்காட்சி"யை ரசிப்பார்கள் என்று எப்படிக் கூறுகிறீர்கள்?
விஜயலட்சுமி: அரைகுறை ஆடைகளுடன் காதலனும், காதலியும் கன்னத்தோடு கன்னம் சேர்த்து கட்டிப் புரளும் காட்சியை ரசிக்கும் மக்கள், முத்தக் காட்சியை ஏன் அனுமதிக்க மாட்டார்கள்? மணிக்கணக்காக கட்டிப் புரளும் காதல் காட்சியே வாலிப உள்ளங்களை கெடுத்துவிடவில்லை என்றால், ஒரு வினாடியில் தோன்றி மறையும் முத்தக்காட்சி கெடுத்து விடும் என்று நான் நினைக்கவில்லை.
நிருபர்: நீங்கள் இதுவரை எந்தப் படத்திலாவது முத்தக் காட்சியில் நடித்து இருக்கிறீர்களா?
விஜயலட்சுமி: ஒரு தெலுங்குப் படத்தில் நடித்தேன். ஆனால், என்ன காரணத்தினாலோ அந்தப் படம் வெளிவரவில்லை. முத்தக்காட்சியில் நடிப்பதை நான் தவறாக நினைக்கவில்லை.
பாடல் காட்சி ஒன்றில் புன்னகையுடன் காட்சியளிக்கும் விஜயலட்சுமி
நிருபர்: இதுவரை எத்தனை படங்களில் நடித்து இருக்கிறீர்கள்?
விஜயலட்சுமி: பதினோரு தெலுங்கு படத்திலும், இரண்டு தமிழ்ப் படத்திலும் நடித்துள்ளேன். இப்பொழுது "அவன்தான் மனிதன்”, அஜாய் பிலிம்ஸ் படம் ஆகியவற்றில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். தமிழ்த்திரை உலகில் சிறந்த நடிகை ஆக வேண்டும் என்ற ஆவலில் தமிழ்நாட்டுக்கு வந்தேன். ஆனால், திறமை இருந்தும் அதை வெளிப்படுத்த சரியான வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை!!
நிருபர்: உங்கள் சொந்த ஊர் எது?
விஜயலட்சுமி: ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாதான் நான் பிறந்து வளர்ந்த ஊர். அம்மா பெயர் அன்ன பூர்ணா, அப்பா பங்கரராவ், ராணுவத்தில் காண்டிராக்டராக இருக்கிறார்.
மயக்கும் விழிகளால் ரசிகர்களை கட்டிப்போட்ட விஜயலட்சுமி
நிருபர்: நீங்கள் தனிமரமா?
விஜயலட்சுமி: ஆமாம். திருமணம் செய்து கொள்வதைப்பற்றி சிந்திக்கவே இல்லை. முதலில் ஏராளமான படங்களில் நடித்து பேரும் புகழும் அடைய வேண்டும். அப்புறம்தான் திருமணம்.
நிருபர்: உங்கள் பொழுதுபோக்கு என்ன?
விஜயலட்சுமி: நான் சிவாஜி கணேசனின் ரசிகை! நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், அவர் நடித்த படம் எங்கு நடந்தாலும் சென்று பார்ப்பேன். அவர் நடித்த படங்களைப் பார்த்தாலே நடிப்பு தானாக வந்துவிடுகிறது. சௌகார் ஜானகியின் நடிப்பும் எனக்கு அதிகம் பிடிக்கும்.
நிருபர்: நாடகங்களில் நடித்து பழக்கம் உண்டா?
விஜயலட்சுமி: இதுவரை இல்லை, நேரம் கிடைக்கும் பொழுது நாடகங்களிலும் நடிப்பேன்.