இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

1980 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கான முக்கியத்துவம் என்பது அதிகமாகவே இருந்தது. அதிலும் ரசிகர்களின் தூக்கத்தை களைத்து ரசிக்க வைக்கும் அளவுக்கு அழகிலும், நடிப்பிலும் தனித்துவம் வாய்ந்த நடிகைகள் நிறையவே இருந்தார்கள். இவர்களில் இன்று நாம் காண இருப்பது நடிகவேல் எம்.ஆர். ராதாவின் மகள், ராதிகாவின் தங்கை என்ற அறிமுகத்தோடு நமக்கெல்லாம் பரிட்சயமான நடிகை நிரோஷாவை பற்றிதான். மணிரத்னத்தின் கண்டுபிடிப்பு என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனையே தன் அழகில் மயங்கி போகும் அளவுக்கு வசீகரித்தவர். இத்தனைக்கும் ஒரு நடிகைக்கே உரிய கலரோ, உடலமைப்போ இல்லாமல் தன் திறமையால் மட்டுமே பல வெற்றிகளை அள்ளிக்குவித்த நடிகை. இவர் வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் தன் வெகுளித்தனமான நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும் நீங்கா இடம் பிடித்த திறமையாளர். சின்னத்திரையில் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடங்கி எத்தனையோ சீரியல்களில் நடித்திருந்தாலும், இன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கோமதி கதாபாத்திரம்தான் அவருக்கு மிகப்பெரிய அடையாளமாக மாறியுள்ளது. இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? அவரின் திரைப்பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை எப்படியானது? போன்ற பல சுவாரஸ்யமான நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

ஆரம்பகால வாழ்க்கை


தன் அழகால் சொக்க வைக்கும் நிரோஷா

தென்னிந்திய திரையுலகில் முத்திரை பதித்த நடிகர் எம்.ஆர். ராதா மற்றும் கீதா ராதா ஆகியோருக்கு மகளாக பிறந்தவர் நிரோஷா. ராதிகா, மோகன் ராதா, ராதா ரவி என திரையுலகின் இன்னும் சில பிரபலங்களை தன் சகோதரர்களாகக் கொண்ட நிரோஷாவின் வாழ்க்கை சினிமாவோடு ஒன்று கலந்தவாரே சிறு வயதிலிருந்தே பயணித்து வந்துள்ளது. இலங்கையின் கொழும்புவில் பிறந்த நிரோஷா, எம்.ஆர். ராதாவின் முதல் மனைவிக்கு பிறந்த சகோதரர்களுடன் இணைந்து, மிகவும் புகழ்பெற்ற குடும்பத்தில் வளர்ந்து வந்துள்ளார். சின்ன வயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் காட்டிய நிரோஷா, மூன்று வயதில் தனது தந்தையுடன் "தாலி பெண்ணுக்கு வேலி" என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அப்போது நடிப்பு பற்றிய முழுமையான அறிவு அவரிடம் இல்லாவிட்டாலும், தந்தையுடன் நடித்த அனுபவம் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும் அதுவும் நீண்ட நாள் அவருக்கு நீடிக்கவில்லை. நிரோஷாவுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது தன் தந்தையை இழந்தார். அந்த வயதில் தந்தையின் அன்பை இழந்த துயரம் அவருடைய மனதில் நீண்ட காலம் இருந்துள்ளது. நடிப்பில் மட்டுமல்லாமல் படிப்பிலும் சிறந்து விளங்கிய நிரோஷா, பள்ளி கல்வியை முடித்த பின் தனது முழு கவனத்தையும் சினிமாவில் செலுத்தத் தொடங்கினார். இருந்தும் துவக்கத்தில் அவர் நடிப்பில் ஈடுபட வேண்டும் என்ற ஆசைக்கு அவரது அண்ணன்கள் எதிராக இருந்துள்ளனர். ஆனால், இயக்குநர் மணிரத்னம் ராதிகாவிடம் பேசி, நிரோஷாவை தனது படத்தில் நடிக்க வைக்க தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வந்ததால், ராதிகா, தங்கையின் ஆசையை உணர்ந்து அவருக்கு முழு ஆதரவை வழங்கினாராம். அதன்பின், திரையுலகில் தனது பயணத்தை தொடங்கிய நிரோஷா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்ததோடு, பல வெற்றி படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் நிலையான ஒரு இடத்தைப் பிடித்தார்.

மறக்க முடியாத படங்கள்


'அக்னி நட்சத்திரம்' திரைப்படத்தில் கார்த்திக்குடன் நடிகை நிரோஷா

நடிகை நிரோஷா, மணிரத்னம் இயக்கத்தில் உருவான "அக்னி நட்சத்திரம்" திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவர் கார்த்திக்கின் ஜோடியாக நடித்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு, அவரது திரையுலக பயணத்துக்கு சிறப்பான தொடக்கமாக அமைந்தது. முதல் படமே வெற்றியடைந்ததால், அவருக்கு இரண்டாவது படமாகவே கமல்ஹாசனுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுதான் சித்ரா லட்சுமணன் இயக்கத்தில் உருவான "சூரசம்ஹாரம்". இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்ற போதும், உட்சபட்ச கவர்ச்சிக்காக சர்ச்சையிலும் சிக்கினார் நிரோஷா. இருப்பினும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து, அவரது மூன்றாவது படமான விஜயகாந்த் நடித்த "செந்தூரப்பூவே" படத்தில், ராம்கியின் ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தில் பொன்னி எனும் கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக வந்து தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்தார். குறிப்பாக இதில் வந்த ‘செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா’ பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்து இவருக்கு புகழை சேர்த்தது. அதன் பின்னர் அவர் நடித்த "இணைந்த கைகள்" படம் அவருக்கு மேலும் புகழை பெற்றுத் தந்தது. குறிப்பாக, இதில் அவர் ஜூலி என்ற கதாபாத்திரத்தில் ஆழமான மற்றும் உணர்ச்சி பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.


'பாண்டி நாட்டு தங்கம்' திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில்...

படத்தின் இறுதி காட்சியில், நிரோஷாவின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் யாரும் அன்று கண்ணீர் சிந்தாமல் இல்லை. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு இன்னும் உச்சம் பெற்றவர், அடுத்தடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிப்படங்களிலும் நடித்து வந்தார். அதேநேரம், தமிழில் "பாண்டி நாட்டு தங்கம்", "மருதுபாண்டி", "காவலுக்கு கெட்டிக்காரன்", "மனித ஜாதி", "அண்ணன் என்னடா தம்பி என்னடா", "பாரம்பரியம்", "பறவைகள் பலவிதம்" மற்றும் "மைந்தன்" உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். ஆனால், முதல் நான்கு படங்களைப் போல் அவருக்கு பெரிய வெற்றிகள் எதுவும் இப்படங்களில் கிடைக்கவில்லை. இந்த நிலையில், 1998-ஆம் ஆண்டு, நடிகர் ராம்கியை திருமணம் செய்து கொண்ட இவர் பல சிக்கல்களை சந்தித்தார். திருமணத்திற்கு பிறகு நிரோஷா சுமார் ஐந்து ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகியிருந்தார். பிறகு 2000-ஆம் ஆண்டில், ‘கந்தா கடம்பா கதிர்வேலா’ படத்தின் மூலம் திரையுலகிற்குள் மீண்டும் நுழைந்தார். அதன் பின்னர் அவர் ‘பிரியமான தோழி’, ‘சிலம்பாட்டம்’, ‘படிக்காதவன்’, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். அதன்பின் அம்மா, அக்கா, அண்ணி போன்ற துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தவரால் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மட்டும் நடிக்க முடியவில்லை என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது. தற்போது அந்த ஆசையும் நிறைவேறும் விதமாக ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அந்த கனவும் நிறைவேறி தன் திரைப்பயணம் முழுமைபெற்றுவிட்டதாக தன் நேர்காணல் ஒன்றில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நிரோஷா - ராம்கி காதல்


"சின்ன கண்ணன் தோட்டத்து பூவாக" பாடலில் ராம்கியுடன் நிரோஷா

1988-ஆம் ஆண்டு ஆபாவாணன் தயாரித்த ‘செந்தூரப்பூவே’ படத்தின் மூலம் அறிமுகமான ராம்கி-நிரோஷா, தொடக்கத்தில் படப்பிடிப்பு தளங்களில் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வார்களாம். ஆனால், ஒரு காட்சியின் போது, நிரோஷா ரயில்களுக்கு இடையே சிக்கிக் கொள்ள, ராம்கி தைரியமாக தாவி அவரை காப்பாற்றியாதால் நிரோஷாவிற்கு ராம்கி மீது நல்ல அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு நல்ல நண்பர்களாக மாறியவர்கள் ‘செந்தூரப்பூவே’ படம் கொடுத்த வெற்றியால் தொடர்ந்து பல படங்களில் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றதோடு, அவர்களின் நட்பும் கொஞ்சம் கொஞ்சமாக காதலாகவும் மாற ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில், நிரோஷாவின் குடும்பத்தினர் சினிமா நட்சத்திரங்களை திருமணம் செய்யக் கூடாது எனக் கூறி, அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, இருவரும் ஒரு சில படங்களில் மட்டுமே சேர்ந்து நடிக்க முடிந்த சூழ்நிலை வந்ததாம். இதில் ‘இணைந்த கைகள்’, `மருது பாண்டி’ போன்ற படங்கள் மிக முக்கியமானவை. 1995-ஆம் ஆண்டில், இருவரது காதலை இரு குடும்பத்தாரும் முழுமையாக அறிந்தபோது, கடும் எதிர்ப்பு கிளம்பியதாம். இதனால் இருவரும் மிகுந்த துயரத்தில் மூழ்கினர். ஆனால், தங்களது முடிவில் உறுதியாக இருந்ததால், குடும்பத்தினர் இறுதியாக அவர்களுக்காக திருமண ஏற்பாடுகளை செய்யத் தயாராகியுள்ளனர்.


அழகான தம்பதிகளாக நிரோஷா மற்றும் ராம்கி

ஆனால், திருமணத்திற்கு முன்பு இரு குடும்பத்தினருக்கும் இடையில் சில குழப்பங்கள் ஏற்பட்டதால், திருமணம் நிறுத்தப்பட்டு, நிரோஷாவை அவரது குடும்பத்தினர் இலங்கைக்கு அழைத்து சென்று வீட்டுக்குள் அடைத்துவிட்டனராம். சிலகாலம் நிரோஷா, ராம்கியின் பிரிவை சகித்துக் கொண்டு இருந்தாலும், ஒருகட்டத்தில் பிரிவு தாங்க முடியாமல், ஒரு நாள் யாரும் இல்லாத சமயத்தில் தனது பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு தப்பித்து சென்னை வந்துவிட்டாராம். இதனால் ஏற்பட்ட பிரச்சினைகள் பெரிதாகி, போலீஸ் விவகாரமாக மாற கூடாது என்பதற்காக இருவரும் இரண்டு ஆண்டுகள் திருமணமாகாமலேயே ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர், ஒரு வழியாக இரு குடும்பங்களும் சமாதானமாகி, 1998-ஆம் ஆண்டு மிகவும் எளிமையாக இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. இன்றுவரை எந்த பிரச்சினையுமின்றி, மனக் கசப்புக்கும் இடம் கொடுக்காமல், நல்ல நண்பர்களாகவும், தம்பதியாகவும் வாழ்ந்துவரும் நிரோஷா, ராம்கி இணை தொடர்ந்து படங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இன்று கோமதியாக அசத்தல்


‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடரின் போது நடிகை நளினி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவுடன் நிரோஷா

பெரிய திரையில் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருந்த அதே வேளையில் சின்ன திரையிலும் நடிக்க கேட்டு வாய்ப்பு வந்தபோது தான் ஒரு பெரிய நடிகை என்ற எந்த ஈகோவும் இல்லாமல் நடிப்பு என்பது எந்த துறையை சேர்ந்ததாக இருந்தால் என்ன என்று சட்டென்று ஓகே சொல்லி அவர் அறிமுகமானதுதான் தெலுங்கில் E-டிவியில் ஒளிபரப்பான ‘சுடி குண்டலு’ என்ற தொடர். இதனை தொடர்ந்து சன் டிவி, ஜெயா டிவி என்று தொடர்ந்து சீரியல்களில் நடிக்க தொடங்கிய நிரோஷாவுக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த தொடராக வந்து அமைந்ததுதான் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’. தன் அக்காவான நடிகை ராதிகாவின் சொந்த தயாரிப்பில் ஒளிபரப்பான இந்த தொடரில் நிரோஷாவுடன் இணைந்து நடிகைகள் நளினி, ஸ்ரீப்ரியா ஆகியோரும் நடிப்பில் பட்டையை கிளப்பியிருந்தனர். இப்படி ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்த இந்த சீரியல் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. பெரிய பாப்பா கவிதா ஆலியஸ் ஆக அனைவரது மனங்களிலும் இடம் பிடித்த நிரோஷா இதன் பிறகு சினிமாவை போலவே தெலுங்கு, தமிழ் என்று மாறி மாறி மின்னலே, சந்திரகுமாரி, ஆனந்தி, வைதேகி காத்திருந்தாள் உட்பட பல சீரியல்களில் நடித்து பிஸியான சின்னத்திரை நடிகையாகவும் வலம் வந்தார்.


'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' தொடரில் உடன் நடிப்பவர்களுடன் நடிகை நிரோஷா

ஆனாலும், சின்ன பாப்பா பெரிய பாப்பா அளவுக்கு வேறு எந்த தொடரும் அவருக்கு பிரபலமாக அமையவில்லை. அந்த குறைகளை எல்லாம் போக்கும் விதமாகத்தான் இப்போது அவர் விஜய் டிவியில் நடித்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகம் சீரியல் அமைத்துள்ளது. முதல் பாகத்தை விட மிகவும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் ஏற்கனவே நம் மனதுக்கு நெருக்கமான பல நடிகர் - நடிகைகள் நடித்து வந்தாலும் இவர்கள் அனைவரின் நடிப்பையும் ஓரங்கட்டி நிரோஷா என்ற நடிகையை மட்டுமே ரசிக்க வைக்கும் அளவுக்கு கோமதியாக, மிகவும் எதார்த்தமான நடிப்பால் அதகளப்படுத்தி வருகிறார். இத்தனை வருடங்கள் திரையுகில் எத்தனையோ பெரிய நட்சத்திரங்களும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் அதில் கிடைக்காத ஒரு திருப்தியும், பெருமையும் இந்த தொடரில் நடிப்பதன் மூலம் நிரோஷாவுக்கு கிடைத்திருப்பது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு என்று அவரே தன்னுடைய பல நேர்காணல்களில் தெரிவித்து வருகிறார். மக்கள் கொடுக்கும் இந்த அன்பு, ஆதரவு தன்னை இன்னும் நடிப்பில் மிளிர மெருகேற்றி கொண்டே இருப்பதாகவும் சொல்லி வருகிறார். இவரைப்போன்ற ஒரு எதார்த்தமான மாமியார் நமக்கு அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பலரும் ஏங்கும் அளவுக்கு மிகச்சிறந்த மாமியாராக, நல்ல அம்மாவாக, மனைவியாக என்று அனைத்து ரோல்களிலும் கனகசித்தமாக பொருந்தியுள்ள இந்த கோமதி இன்னும் பல உயரங்களை தொட்டு மகிழ வாழ்த்துவோம்.

Updated On 28 Jan 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story