இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் சினிமாவின் இன்றியமையாத நாயகன், மிக சிறந்த நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் தனுஷ். தனது தனித்துவமான நடிப்பு பாணியாலும், திறமையாலும் பரவலான ரசிகர்களை பெற்றுள்ள இவர், அவ்வப்போது சில சர்ச்சைகளிலும் சிக்கி விமர்சனத்துக்கு உள்ளாவது வழக்கம். ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் அறிமுகமாகி, ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘ஆடுகளம்’, ‘வேலையில்லா பட்டதாரி’ போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டார் தனுஷ். இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து பன்மொழி நடிகராகவும் வலம் வருகிறார். இந்த ஆண்டு வெளிவந்த ‘கேப்டன் மில்லர்’, ‘ராயன்’ ஆகிய படங்கள் சுமாரான வெற்றியையே பெற்றிருந்தாலும், அடுத்தடுத்து தனுஷ் நடிப்பில் வெளிவர உள்ள படங்கள் எதிர்பார்ப்பை எகிற வைக்கின்றன. அதுகுறித்த முழு தகவலின் தொகுப்பை இங்கே காணலாம்.

தொடரும் இயக்குநர் பயணம்


இயக்குநர் மற்றும் நடிகராக தனுஷ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது தனது நடிப்புத் திறமையை தாண்டி இயக்குநர் என்கிற புதிய அடையாளத்தையும் தனக்கென உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ‘பா பாண்டி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்கிய தனுஷ், தனது 50-வது படமான 'ராயன்' படத்தையும் தானே இயக்கி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். விமர்சன ரீதியாக இப்படம் சில சறுக்கல்களை சந்தித்திருந்தாலும், தனுஷின் இயக்குநர் பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக 'ராயன்' அமைந்துள்ளது. இப்படம் கொடுத்துள்ள உத்வேகத்தை தொடர்ந்து தனது நண்பரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இளம் தலைமுறையின் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பவிஷுடன் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர் , மாத்யூ தாமஸ் மற்றும் வெங்கடேஷ் மேனன் போன்ற பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படமானது வருகிற டிசம்பர் 21ஆம் தேதி வெளிவர இருக்கிறது.


தனுஷ் இயக்கி நடிக்க உள்ள 'இட்லி கடை' படத்தின் போஸ்டர்

இதுதவிர, தனது இயக்குநர் பயணத்தில் இன்னும் ஒரு படி மேலே செல்லும் விதமாக, தனுஷ் தற்போது 'இட்லி கடை' என்ற புதிய படத்தை இயக்கி நடிக்க உள்ளார். இந்த படம், கிராமத்து பின்னணியை கொண்ட ஒரு நகைச்சுவை கலந்த காதல் கதை என்று கூறப்படுகிறது. இதில், தனுஷுடன் இணைந்து அருண் விஜய், ராஜ்கிரண் போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குறிப்பாக, 'திருச்சிற்றம்பலம்' படத்திற்கு பிறகு தனுஷுக்கு ஜோடியாக மீண்டும் நித்யா மேனன் இப்படத்தில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனது சமூக வலைதள பக்கத்தில், 'இட்லி கடை' படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தனுஷ் அறிவித்துள்ள நிலையில், இந்த படத்திற்காக தனது தோற்றத்தில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். மீசை தாடியை எடுத்துவிட்டு மிகவும் இளமையான தோற்றத்தில் நடித்து வருகிறார். அந்த தோற்றத்தில் உள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தெலுங்கில் அடுத்த கட்டம்

தற்போது நடிகராகவும், இயக்குநராகவும் திகழும் தனுஷ், தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவரது படங்களுக்கான அறிவிப்புகள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுதவிர துருவ் விக்ரமை வைத்து 'பைசன்' என்ற திரைப்படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், தனுஷுடன் மீண்டும் இணைந்து ஒரு படத்தை இயக்க உள்ளார். 'பைசன்' படப்பணி முடிந்ததும், தனுஷ் படத்தின் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 'அமரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த கூட்டணியும் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் கைகோர்க்கும் நடிகர் தனுஷ்

இப்படி தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் தனது கவனத்தை செலுத்தி வரும் தனுஷ் ‘'வாத்தி" படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 'குபேரா' என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளிவரும் இப்படம் தனுஷின் 51வது திரைப்படமாகும். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படம், தனுஷின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படமாகும். இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.100 கோடி முதல் ரூ.120 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. ‘குபேரா’ படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, மும்பை, திருப்பதி போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது ஐதராபாத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா ஆகியோரின் கதாபாத்திர அறிமுக வீடியோவும் வெளிவந்து வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் காதல், நட்பு, குடும்பம் என பல உணர்வுகளை உள்ளடக்கியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வருகிறது.


‘குபேரா’ திரைப்படத்தில் தனுஷின் தோற்றம்

மீண்டும் பாலிவுட் ஹீரோ

2013ஆம் ஆண்டு, இந்திய சினிமா உலகில் ஒரு புதிய அத்தியாயத்தை நடிகர் தனுஷ் எழுதினார். அதுதான் இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவான 'ராஞ்சனா' திரைப்படம். தனுஷின் திறமையை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்த இப்படத்தில் சோனம் கபூர், அபய்தியோல் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். ஹிமான்சு சர்மாவின் கதை, ஏ.ஆர். ரஹ்மானின் இசை என எல்லா அம்சங்களிலும் சிறந்து விளங்கிய இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு ஆர். பால்கியின் இயக்கத்தில் உருவான ‘ஷமிதாப்’ படத்தில் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஆகியோருடன் இணைந்து நடித்து நடிப்பில் கலக்கிய தனுஷ், மீண்டும் இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு 'அட்ராங்கி ரே' என்கிற படத்தில் நடித்தார். அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் நடிப்பில் ஒரு வித்தியாசமான நகைச்சுவை கலந்த காதல் படமாக வெளிவந்த இப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றிகளைத் தொடர்ந்து, ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் புதிய படத்திற்கு 'தேரே இஷ்க் மெய்ன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.


பாலிவுட்டின் முன்னணி நடிகை கீர்த்தி சனோனுடன் ஜோடி சேரவுள்ள நடிகர் தனுஷ்

இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியாகி இருந்த நிலையில், இந்தப் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பாலிவுட்டின் முன்னணி நடிகை கீர்த்தி சனோன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தனுஷின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கூட இப்படத்தின் திரைக்கதை விவாத பணிகள் டெல்லியில் நடைபெற்றன. இதில் படத்தின் கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநருடன் கலந்து கொண்ட தனுஷ் ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்தார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி தமிழ் சினிமா மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் பாலிவுட் என பான் இந்தியா அளவில் தனது தாக்கத்தை ஏற்படுத்தி வரும் தனுஷ், தனது ஒவ்வொரு படத்திலும் புதுவிதமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இயக்குநராகவும் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தி வரும் தனுஷ், தமிழ் சினிமாவிற்கு புதிய பரிணாமத்தை கொண்டு வந்துள்ளார். இந்த ஆண்டு எதிர்பார்த்த பெரிய வெற்றி தனுஷிற்கு கிடைத்திடாவிட்டாலும், அடுத்த ஆண்டு நிச்சயம் பெரியளவில் ஜெயித்து சாதிப்பார் என நாம் நம்புவோம்.

Updated On 17 Dec 2024 12:05 AM IST
ராணி

ராணி

Next Story