இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சின்னத்திரையிலும் சரி, வெள்ளித்திரையிலும் சரி தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை மிகச்சிறப்பாக ஏற்று நடித்து மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடிப்பவர்கள் ஏராளம். அப்படி சாதாரண ஒரு கிராமத்தில், பெரிதாக சினிமா பின்புலம் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்து மேடை நாடகங்களால் ஈர்க்கப்பட்டு அதன் மூலம் நடிப்புலகில் நுழைந்து இன்று தனியொரு பெண்மணியாக கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து சாதித்து வருபவர்தான் நடிகை ஜெயந்தி மாலா. பெரிதாக படிப்பு என்ற ஒன்று இல்லாவிட்டாலும் குடும்பத்தை விட்டு சென்னைக்கு வந்து தனியொரு பெண்மணியாக சாதிக்க போராடி வரும் இவர் இதுவரை 15 படங்களிலும், முக்கியமான தொலைக்காட்சிகளில் நன்கு அடையாளம் பெரும்படியான தொடர்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், தன் திரை அனுபவங்கள், சந்தித்த போராட்டங்கள், குடும்பத்தினர் கொடுத்த ஊக்கம் என தன் திரை வாழ்க்கை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை அவரின் நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். அதன் முதல் பகுதியை இங்கே காணலாம்.

உங்களை படங்கள் மற்றும் தொடர்களில் பார்த்து இருக்கிறோம். உங்களுக்கான நடிப்பு பயணம் எப்படி தொடங்கியது?

என்னுடைய நடிப்பு பயணம் 5 வயதிலேயே தொடங்கிவிட்டது என்று கூட சொல்லலாம். என்னுடைய அத்தை, மாமா, அப்பா எல்லோரும் மேடை நாடக நடிகர்கள். அதிலும் அப்பா அந்த காலத்தில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட மதுரை பாய்ஸ் நாடக கம்பெனியில் நடித்துக்கொண்டிருந்தார். பிறகு குடும்பம் மொத்தமாக சேலத்தில் வந்து குடியேறிய பிறகு குடும்பம், குழந்தைகள் என்றானதால் அப்பா நடிப்பதை விட்டுவிட்டார். இந்த சமயம் என்னுடைய அத்தை மாமா இருவரும் ஊர் ஊராக சென்று சினிமா டென்ட் கொட்டகை என்று சொல்லக்கூடிய கேம்ப் நாடகங்களை நடத்தி வந்தனர். அப்போது அந்த நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்கிறாயா என்று அப்பா கேட்டு நடிக்க வைப்பார். அப்படி 11 வயதிலிருந்து 18 வயதுவரை மேடை நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தேன். பிறகு எனக்கு திருமணமாகி கணவர் வீட்டிற்கு சென்ற பிறகு இனி நடிக்கக்கூடாது என்று கூறிவிட்டார்கள். நானும் மனதை மாற்றிக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட்டேன். எனக்கு இரண்டு மகன்கள். அவர்கள் இருவரும் நன்கு வளர்ந்து கல்லூரி சென்ற பிறகுதான் எனக்கு நடிக்க கேட்டு மீண்டும் வாய்ப்பு வந்தது.


'அப்புச்சி கிராமம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜெயந்தி மாலா

சேலத்தில் நாடக நடிகர் சங்கம் என்ற ஒன்று உள்ளது. மாடர்ன் தியேட்டரில் நடிக்க வருபவர்கள் பெரும்பாலும் அந்த சங்க அலுவலகத்திற்கு வருவார்கள். அந்த சங்கத்தில் நானும் மெம்பராக இருக்கிறேன். ஒருமுறை அலுவல் வேலையாக வெளியே சென்றுவிட்டு அந்த சங்கத்தை தாண்டி வரும்பொழுது ஒரே கூட்டமாக இருந்தது. என்ன என்று கேட்டபொழுது ஒரு படத்திற்கான ஆடிஷன் நடப்பதாகவும், என்னையும் கலந்து கொள்ளச்சொல்லி கூறினார்கள். முதலில் நடிப்பை மறந்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் வேண்டாம் என்று நான் மறுத்தேன். ஆனால், அங்கு இருந்தவர்கள் விடாமல் கேட்டதால் நானும் அதில் கலந்துகொண்டேன். பிறகு, பத்து நாட்கள் கழித்து எனக்கு அழைப்பு வந்தது. அந்த படம்தான் எனது முதல் படமான ‘அப்புச்சி கிராமம்’ திரைப்படம். குடும்பத்தில் நடிப்புக்கு தடை சொல்ல பெரியவர்கள் யாரும் இல்லை. என் பிள்ளைகளும், கணவரும் நீ நடி என்று முழு சம்மதம் சொன்னதால் 2016-ஆம் ஆண்டு வெளிவந்த ‘அப்புச்சி கிராமம்’ படத்தில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்தேன். இதன் பிறகு சென்னைக்கு வர சொல்லி அழைத்தார்கள். ஆனால், எனக்கோ சில கடமைகள் இருக்கிறது; முடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு மகன்கள் படிப்பை முடித்து திருமணம், குழந்தைகள் என்றான பிறகு முழுமையாக சினிமாவில் இறங்கினேன். எப்போதும் என்னுடைய புகைப்படங்களை முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்வது வழக்கம். இந்த நேரம் சின்னத்திரை இயக்குநர் திருமுருகனின் ஒரு சீரியலில் நடிக்க ஆடிஷனில் கலந்துகொண்டு தேர்வும் ஆனேன். ஆனால், ஒருவருடமாக காத்திருந்தும் அழைப்பு வராத நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இருந்து வந்த அழைப்பை ஏற்று சின்னத்திரையிலும் காலடி எடுத்து வைத்தேன். இப்படித்தான் எனக்கான திரைப்பயணம் தொடங்கியது.

எங்களுக்காக உங்கள் படத்தில் இருந்து ஏதாவது வசனம் பேசி காட்ட முடியுமா?


‘பகாசுரன்’ மற்றும் ‘அழகுக்கு நான் அறிவுக்கு நீ’ படங்களில் ஜெயந்தி மாலா

மோகன் ஜி சாருடைய இயக்கத்தில், நட்டி, செல்வராகவன் நடிப்பில் வெளிவந்த ‘பகாசுரன்’ படத்தில் நட்டிக்கு அண்ணியாக நடித்தேன். அந்த படத்தில் எனது மூத்த மகள் விபசாரித்தனம் செய்துவிட்டு தூக்கு போட்டு இறந்துவிடுவாள். இதை நட்டி விசாரணை நடத்தி உண்மை என்ன என்பதை கண்டுபிடித்து எங்களிடம் கூறும்பொழுது என் கணவரிடமும், நட்டியிடமும் நான் ஒரு வசனம் பேசுவேன். “தம்பி வேண்டாம்ப்பா வேண்டாம்… என் பொண்ணு... தனம் பண்ணுனான்னு நான் வெளில சொல்ல முடியாது… எனக்கு இன்னொரு பொண்ணு இருக்குப்பா… அவ போனா போகட்டும்… விட்டுடுங்க… இல்ல நாங்க 3 பேரும் மருந்து குடிச்சு செத்துடுவோம்… இதுதான் நான் அழுதுகொண்டே பேசிய வசனம். ஒரே டேக்கில் பேசி முடித்துவிட்டேன். இது என்னுடைய நான்காவது படம். அப்புச்சி கிராமம் படத்திற்கு பிறகு இரண்டாவதாக கணேஷ் பாபு இயக்கத்தில் ‘கட்டில்’ என்றொரு படத்தில் நடித்தேன். இந்த படத்தில் பணத்தாசை பிடித்த ஒரு பெண்ணாக நடித்தேன். இதற்கு பிறகு ‘அழகுக்கு நான் அறிவுக்கு நீ’ என்ற படத்தில் பரோட்டா சூரியுடன் நடித்தேன். காமெடி கலந்த அம்மா ரோல் எனக்கு அதில் கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. இதற்கு பிறகு ‘உலகம்மை’ என்றொரு படம் நடித்தேன். இப்படத்தில் மறைந்த மாரிமுத்துவின் மனைவியாக, வில்லத்தனம் நிறைந்த அம்மாவாக நடித்திருந்தேன். இவற்றிற்கெல்லாம் பிறகுதான் ‘பகாசுரன்’ படம் வந்தது. இந்த படம்தான் என் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது. எந்தவொரு அறிமுகமும் இல்லாமல் சென்னை வந்து அக்கா வீட்டில் தங்கி பல போராட்டங்கள், புறக்கணிப்புகளுக்குப் பிறகு என்னை எப்படியோ சினிமாவில் நிலை நிறுத்தி இதுவரை சுமார் 15 படங்களில் நடித்து முடித்துள்ளேன். அதில் 10 படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. 5 படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. இதற்கிடையில் அருள்நிதியுடன் ‘மை டியர் சிஸ்டர்’ என்றொரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதிலும் வில்லத்தனமான அம்மா வேடம்தான்.

கிராமத்தில் இருந்து தனியொரு பெண்மணியாக சென்னை சிட்டிக்கு வந்து எப்படி உங்களால் சாதிக்க முடிந்தது? அந்த துணிச்சல் எப்படி வந்தது?


நடிகர் பாவா லட்சுமணன் உடன் நடிகை ஜெயந்தி மாலா

நான் பெரிதாக படிக்கவில்லை. நான்காம் வகுப்பு வரைதான் படித்துள்ளேன். அதனால் யாராவது எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் கூட தமிழில் அனுப்புங்கள்; அல்லது வாய்ஸ் மெசேஜ் போடுங்கள் என்றுதான் சொல்லுவேன். எனக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது. அப்படியிருந்தும் தனியொரு பெண்ணாக சென்னை சிட்டியில் இந்த அளவுக்கு முன்னேறி வந்து இருக்கிறேன் என்றால், அனைத்தும் என்னிடம் இருக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும்தான். அது கடவுள் கொடுத்த பரிசு என்று கூட சொல்லலாம்.

சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் என்றொரு வார்த்தை இருக்கிறது… அதுபோன்ற பிரச்சினைகளை நீங்களும் சந்தித்து இருக்கிறீர்களா? அது உண்மைதானா?

சின்னத்துரை, பெரியத்திரை என இரண்டு தளங்களிலும் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை நான் யாரிடமும் அப்படியான ஒரு அணுகுமுறையை பார்த்தது இல்லை. அதற்காக அட்ஜஸ்ட்மென்ட் இல்லையா என்றால் இருக்கிறது. ஆனால், அது சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இருக்கிறது. நீங்கள் வாய்ப்பு தேடி செல்லும்பொழுது அப்படி யாரும் உங்களை அணுகுகிறார்கள் என்றால் எனக்கு பிடிக்கவில்லை என்று அந்த வாய்ப்பே வேண்டாம் என்று சொல்லிவிட்டு போங்கள். உங்கள் திறமைக்கு யார் மதிப்பு கொடுக்கிறார்களோ அதில் மட்டும் நடியுங்கள். ஏன் உங்கள் பெயரையும் கெடுத்து, எதிரில் இருப்பவரின் பெயரையும் கெடுத்துக்கொண்டு இருக்க வேண்டும். நாம் எப்படி நடந்துகொள்கிறோமோ அதை பொறுத்துதான் எதிரில் இருப்பவர்களும் நடந்துகொள்வார்கள்.


'அப்புச்சி கிராமம்' திரைப்பட குழுவினருடன் நடிகை ஜெயந்தி மாலா

குடும்பம், நடிப்பு இரண்டையும் எப்படி சமமாக பேலன்ஸ் செய்ய முடிகிறது?

உண்மையில் நான் என்னுடைய இரண்டு மருமகள்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர்கள் மட்டும் நாங்கள் வேலைக்கு போகிறோம், நீங்கள் எங்கள் குழந்தைகளை பார்த்துக்கொண்டு வீட்டில் இருங்கள் போதும் என்று கூறியிருந்தால் என்னால் இவ்வளவு தூரம் சாதித்து இருக்க முடியாது. நான் சென்னைக்கே வந்து இருக்க மாட்டேன். என்னுடைய இரண்டு மகன்களும் சரி, மருமகள்களும் சரி நீங்கள் போய் நடியுங்கள். எங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று ஊக்கப்படுத்தி கூறிய வார்த்தைகள்தான் என்னை இதுவரை அழைத்துவந்து இருக்கிறது.

மேடை நாடகம், சினிமா இரண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?


மேடை நாடகங்களிலும் தன் பங்களிப்பை வழங்கிய ஜெயந்தி மாலா

மேடை நாடகம், சினிமா, சீரியல் இது மூன்றுக்கும் வித்தியாசம் இருக்கிறது. மேடை நாடகங்களில் நமது குறைகளை அருகில் இருப்பவர்களை தவிர வேறு யாராலும் அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது. ஆனால், சினிமா, சீரியல் எல்லாம் அப்படியில்லை. சீரியலில் நடிக்க வந்த புதிதில் இயக்குநர்களிடம் நிறைய திட்டு வாங்கி இருக்கிறேன். அதிலும் குறிப்பாக, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாவம் கணேசன்’ தொடரில் ஹீரோவுக்கு அக்காவாக நடிக்கும்பொழுது ஒரு வசனத்தை சரியாக பேசாமல் டேக் மேல் டேக் சென்று அந்த தொடரின் இயக்குநரான மறைந்த தாய் செல்வத்திடம் திட்டு வாங்கினேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் என் குருநாதர் அவர்தான். நிறைய நடிப்பு சொல்லிக் கொடுத்து இருக்கிறார். இப்படி சீரியலில் திட்டு வாங்கும் நான் படங்களில் யாரிடமும் திட்டு வாங்கியது இல்லை. காரணம் சீரியல் கொடுக்கும் அனுபவ பாடங்கள் சினிமாவுக்கு பெரிதாக கை கொடுக்கிறது.

Updated On 20 Dec 2024 3:00 PM IST
ராணி

ராணி

Next Story