
சினிமாவில் எப்படி கதாநாயகி தவிர்க்க முடியாத ஒருவராக இருக்கிறாரோ, அதேபோன்றுதான் அம்மா கதாபாத்திரங்களும். எம்ஜிஆர் காலம் தொடங்கி இன்றைய சிவகார்த்திகேயன் வரை அவர்களின் படங்களில் எத்தனையோ அம்மா கதாபாத்திரங்கள் நம் மனதை கொள்ளையடித்துவிட்டு போயிருக்கும். அதிலும் தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரம் என்றவுடன் இதற்கு முன்புவரை நம் நினைவில் முதலில் வந்து நின்றது நடிகை சரண்யா பொன்வண்ணனாக மட்டுமாகத்தான் இருந்தார். ஆனால் இன்று அப்படியில்லை. நடிகை ஸ்ரீரஞ்சனி தொடங்கி கவிதா கைலாசம் வரை பலர் அம்மா வேடங்களுக்கு மிகவும் பொருத்தமானவர்களாக, அப்படியே பொருந்திப்போகக்கூடியவர்களாக இருக்கின்றனர். அதில் இன்று மிக முக்கியமாக இருப்பது சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ பட அம்மா நாயகி கீதா கைலாசம்தான். யார் இந்த கீதா கைலாசம்? இவரின் பின்னணி என்ன? இவரால் மட்டும் எப்படி அம்மா வேடங்களிலேயே பல பரிமாணங்களை காட்டி நடிக்க முடிகிறது? போன்ற பல கேள்விகளுக்கான பதிலை அவரிடமே கேட்டு பெற்றோம். அவர் குறித்த சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பை இந்த கட்டுரையில் காணலாம்.
யார் இந்த கீதா கைலாசம்?
எங்கள் வீட்டு அம்மா… எங்க அம்மா என்ற உணர்வை தன் இயல்பான நடிப்பின் வாயிலாக நமக்கு தரக்கூடிய திருமதி. கீதா கைலாசம் சென்னையில், நாகராஜன் - காமாட்சி தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவரது தந்தை நாகராஜன் ரயில்வே துறையில் ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றியவர். சிறுவயதில் இருந்தே நாகராஜனுக்கு சினிமா தொடர்பான கலைகள் மீது அதீத ஆர்வம் உண்டாம். ரயில்வே துறையில் பணியாற்றிய காலங்களில் நடிப்பு தொடர்பாகவும் முயற்சி செய்து வந்துள்ளார். ஆனால் அவருக்கு நடிப்பு கை கொடுத்ததோ இல்லையோ அந்த கலை ஆர்வம் தமிழ் திரையுலகில் நீங்காப் புகழுக்கு சொந்தக்காரரான கே.பாலச்சந்தர் என்ற நல்ல நண்பனை கொடுத்தது. கீதா கைலாசத்தின் அப்பா நாகராஜனும், கே.பாலச்சந்தரும் நெருங்கிய நண்பர்கள். அந்த நட்புதான் கீதாவையும் பாலச்சந்தரின் குடும்பத்திற்குள் கொண்டு வந்துள்ளது. இப்படியான ஒரு குடும்ப சூழலில் வளர்ந்த கீதா தனது பள்ளிக் கல்வியை பெயின் பள்ளியில் முடித்துள்ளார். மேற்கொண்டு கல்லூரியில் சேர்ந்து இளங்கலையில் பி.காம் பட்டம் பெற்றவருக்கு 20 வயதில் நடிப்பு மீது ஆர்வம் ஏற்பட்டு சினிமாவில் தொடர ஆசைப்பட்டுள்ளார். அதற்கு அப்பா நாகராஜனும் தன் ஆசைதான் நிறைவேறவில்லை; மகளின் விருப்பமாவது நிறைவேறட்டும் என்று சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனாலும், அவருக்குள்ளாகவே நடிக்க போகலாமா வேண்டாமா? நமக்கு இது செட் ஆகுமா? போன்ற கேள்விகள் எழுந்து ஒருவித குழப்பத்தையும், தயக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரம், கே.பாலச்சந்தர் தன் மூத்த மகன் கைலாசத்திற்கு வரன் தேட, ஒரு கட்டத்தில் தன் நண்பன் நாகராஜனிடமே பேசி அவரது மகள் கீதாவை திருமணம் செய்துவைத்துள்ளார். கீதாவும் நடிப்பு ஆசையை ஓரம் கட்டிவிட்டு குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டார். குடும்ப வாழ்க்கைக்குள் சென்றாலும், அவர் வாழ சென்றது கலை குடும்பம் என்பதால் தன் கணவர் கைலாசத்தோடு சேர்ந்து தன் கலைப்பணியை ஆற்ற தொடங்கியுள்ளார். அதுவும் ஒரு கணக்காளராக.
தமிழ் சினிமாவில் அம்மா வேடங்களில் கலக்கிவரும் நடிகை கீதா கைலாசம்
அது எப்படி என்றால் அவர் கணவர் கைலாசமும் சினிமாவில் பயணிக்க முடிவு செய்து “மின் பிம்பங்கள்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் 90-களில் மக்களின் மனங்களில் நீங்காதொரு இடத்தை பிடித்த ‘மர்ம தேசம்’, ரமணி Vs ரமணி ஆகிய நெடுந்தொடர்களை தயாரித்துள்ளார். அப்போது கணவர் கைலாசத்திற்கு உதவியாக அந்த நிறுவனத்தின் கணக்காளராக பணிபுரிந்து வந்துள்ளார். இதுமட்டுமின்றி சிறுவயதில் இருந்தே எழுதுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட கீதா, சிறுகதைகள், நாடகங்கள் எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அப்படி அவர் 2019-ஆம் ஆண்டு “சில பல நிமிடமும் பேச்சும்” என்ற நாடகத்தை எழுதி, கிரிதரன் என்பவரின் உதவியுடன் அதனை மேடையேற்றியுள்ளார். அந்த நாடகத்தில் முதன்மையான லீட் ரோலில் நடிக்க ஆசைப்பட்டவர், பிறகு மொத்த டீமையும் நாம்தான் இயக்க வேண்டும் என்று ஒருபுறம் அனைவருக்கும் நடிப்பு சொல்லிக்கொடுத்து இயங்கிக்கொண்டே அந்த நாடகத்தில் அம்மா வேடத்தில் நடித்தாராம். அந்த நாடகம்தான் நம்மை சினிமா என்னும் அடுத்த கனவை நோக்கி அழைத்துச் செல்லப்போகிறது என்று அப்போது அவர் யோசித்திருக்க மாட்டார். ஆம், அவர் இயக்கி நடித்த நாடகத்தை பார்த்த எழுத்தாளரும், இயக்குநரும், நடிகருமான ஈ.வி. கணேஷ் பாபுவுக்கு மிகவும் பிடித்துபோய், தான் இயக்கிய ‘கட்டில்’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். இதனை தொடர்ந்து ‘நவரசா’ என்ற வெப் தொடரிலும் நடித்தார் கீதா.
இயக்குநர், நடிகர் ஈ.வி. கணேஷ் பாபுவின் 'கட்டில்' திரைப்படத்தில் ஒரு காட்சியில்...
விரிந்த திரைப்பயணம்
ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டோம். தன் ஆசை நிறைவேறிவிட்டது என்று அதோடு நின்றுவிடாமல் இங்குதான் தன் தேடலுக்கான பயணத்தை விரிக்க தொடங்கினார். அதற்கு அவரது குடும்பமும் முழு ஒத்துழைப்பு கொடுத்தது. கீதா கைலாசத்திற்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவர்கள் நன்கு வளர்ந்து அவரவர் பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டதால் அம்மா முடங்கி வீட்டுக்குள் அடைபட்டுவிடக் கூடாது என்று அவரை ஊக்கப்படுத்தி இனி உங்களுக்கான பாதையை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள். அதில் முட்கள் இருந்தாலும், பூக்கள் இருந்தாலும் நாங்கள் துணை நிற்கிறோம் என்று சொல்லவும், நடிப்பு என்னும் திரையில் முழு வீச்சில் இறங்கினார். அதற்காக அவர் எங்கும் வாய்ப்பு தேடி ஓடவில்லை. அவர் திறமை அறிந்து தானாகவே வந்த வாய்ப்புகளை ஏற்று நடிக்க ஆரம்பித்தார். அது எப்படியென்றால் பொதுவாகவே கீதா கொஞ்சம் கதை சொல்லலில் ஆர்வம் உள்ளவர். அப்படி ஒருமுறை அவர் இயக்குநர் பா.ரஞ்சித்தின் கூகை என்ற நூலக அமைப்பில் இருந்த போது அங்கு கதை சொல்லல் நேரத்தில் ஒரு நாடகத்தில் டீச்சர் வேடத்தில் நடித்து காட்டியுள்ளார். அன்றைய தினம் அவரின் நடிப்பை பா.ரஞ்சித்தும் நேரில் இருந்து பார்க்க நேர்ந்துள்ளது. கீதாவின் நடிப்பு அவரை கவர்ந்துவிடவே உடனே அவருக்கு ஆடிஷன் நடத்தி, தான் அப்போது இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். அதன்படி நடிகர் ஆர்யா, துஷாரா விஜயன் நடித்து 2021-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற அப்படத்தில் ரங்கன் வாத்தியாராக வரும் நடிகர் பசுபதிக்கு மனைவியாக தனக்கே உரிய உடல் மொழியில் நடித்து அசத்தியிருந்தார்.
‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் ரங்கன் வாத்தியார் மனைவியாக வரும் கீதா கைலாசம்
இதற்கு பிறகு மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘நட்சத்திரம் நகர்கிறது’, ‘வீட்ல விசேஷம்’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘அனல் மேலே பனித்துளி’ என நடித்தவருக்கு அவரது முயற்சிகள் எதுவும் சோடை போகவில்லை. ஆம், அதுவரை கீதா நடித்த படங்களில் அவர் ஏற்றிருந்த வேடங்கள் சிறியதாக இருந்தாலும், நன்கு அடையாளம் பெற்றுதந்த படமாக மாரிசெல்வராஜின் ‘மாமன்னன்’ திரைப்படம் அமைந்தது. 2023-ஆம் ஆண்டு உதயநிதியின் நடிப்பில் கடைசி படமாக வெளிவந்த இப்படத்தில் வடிவேலுவின் மனைவியாக, உதயநிதியின் அம்மாவாக வீராயி என்ற கதாபாத்திரத்தில் நடித்து நன்கு அடையாளம் பெற்றார். இந்த அடையாளமே கீதாவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை தானாக கொண்டு வந்து சேர்த்தது. அதிலும் குறிப்பாக, முக்கிய இயக்குநர்களின் படங்களில், முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்புகளை பெற்று கொடுத்தது. அப்படி 2024-ஆம் ஆண்டில் வெளிவந்த ‘லவ்வர்’ திரைப்படத்தில் நடிகர் மணிகண்டனுக்கு அம்மாவாகவும், தனுஷின் ‘ராயன்’ படத்தில் நடிகர் சரவணனுக்கு மனைவியாகவும், கவினின் ‘ஸ்டார்’ திரைப்படத்தில் கவினுக்கு அம்மாவாகவும் என இவருக்கு முன் வந்த சரண்யா பொன்வண்ணன், துளசி, ஸ்ரீரஞ்சனி போன்ற அம்மா நடிகைகளையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு இன்று உச்சம் பெற்ற, அதேநேரம் பலரின் பாராட்டை பெரும்படியான அம்மா நடிகையாக வலம் வர தொடங்கியுள்ளார்.
உதயநிதியின் 'மாமன்னன்' திரைப்படத்தில் வடிவேலுவின் மனைவியாக கீதா கைலாசம்
அமரன் தந்த உச்சம்
உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியான திரைப்படம்தான் ‘அமரன்’. மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மையான வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களிடமும் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும், அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸாக சாய்பல்லவியும் வாழ்ந்து இருக்கின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலையில், இப்படத்தில் முகுந்தாக வரும் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக, கீதா வரதராஜன் என்ற கனமான வேடத்தில் நடித்துள்ளார். இதற்காக அவர் நிறைய மெனக்கெடல்களை எடுத்துக்கொள்ளாமல், சாதாரண எல்லா அம்மாக்களும் மகனிடம் எப்படி நடந்துகொள்வார்களோ அதேபோன்று உண்மையில் முகுந்திடம் அவரது அம்மா எப்படி பேசுவாரோ அதேபோன்று பேசி தனக்கே உரிய பாணியில் நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
'அமரன்' திரைப்படத்தில் சாய் பல்லவியுடன் ஒரு காட்சியில் கீதா கைலாசம்
மருமகள் சாய் பல்லவியிடம் “அவன் ஆர்மிக்கு போயிடுவான். உன்ன கூடவே கூட்டிட்டு போவான்னு நெனச்சியா” என்று தனக்கே உரிய குறும்புத்தனங்களோடு அவர் இயல்பாக பேசும் வசனங்களாகட்டும், மகன் சிவகார்த்திகேயனிடம் “ஏன்டா இதுக்காடா உன்ன பெத்தேன்; படாத பாடுபட்டு வளத்தேன்” என்று பேசும் வசனங்களாகட்டும் அனைத்துமே ரசிக்கும் படியாக இருக்கும். மகன் மறைந்து அவரை அடக்கம் செய்யப்போகும் நிகழ்வு காட்சிகளை படமாக்கும் போதெல்லாம் உண்மையிலேயே அவர் மிகவும் உடைந்துபோய் விட்டாராம். அந்த அளவுக்கு ஒவ்வொருவரும் அவரவர் வேடங்களின் முக்கியத்துவம் அறிந்து உணர்வுபூர்வமாக நடித்ததால்தானோ என்னவோ இப்படத்திற்கு மோசமான விமர்சனம் கொடுக்க யாருக்குமே மனம் வரவில்லை. மாறாக படத்தை பார்த்து கண்ணீர்விட்டு வந்தவர்கள்தான் அதிகம். அந்த அளவுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் கீதா கைலாசமும் முக்கிய பங்காற்றி இருப்பது அவரது நடிப்பு வேட்கைக்கு கிடைத்த கௌரவம், அடையாளம் என்றே சொல்லலாம். இப்படி சத்தமே இல்லாமல் சாதித்துவரும் கீதா கைலாசம் இன்னும் அடுத்தடுத்து பல உயரங்களை தொட வாழ்த்துவோம்.
