இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் திரையுலகில் 2-ஆயிரம் ஆண்டுகளின் துவக்கத்தில் ஜோதிகா, நயன்தாரா, மீரா ஜாஸ்மின், சதா, என எத்தனையோ நடிகைகள் அறிமுகமாகி பலரையும் தங்கள் அழகாலும், ரசிக்கத்தக்க நடிப்பாலும் கிறங்க வைத்திருந்தனர். இவர்கள் யாரையும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. காரணம், இவர்கள் அனைவருமே 90-ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் ஹீரோயின்கள் என்பதால்தான். அப்படிப்பட்ட இவர்களில் மிக முக்கியமான ஒரு நடிகையாக, ரசிகர்களின் மனம் கவர்ந்த அழகு பதுமையாக இன்றும் மாறாமல் அப்படியே நம் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து போய் இருப்பவர்தான் ‘ஜில்லுன்னு ஒரு காதல்’ ‘ஐஸ்’ அதாவது பூமிகா சாவ்லா. தமிழ், தெலுங்கு, பாலிவுட் என பல மொழிகளில் நடித்து தன் அழகாலும், அப்பாவித்தனமான முகத்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டு வைத்திருந்த இவர், இன்றளவும் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாக்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது தமிழிலும் அண்மையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படத்தில் அவருக்கு அக்கவாக நடித்து மிகவும் ரசிக்க வைத்திருக்கிறார். இந்த நிலையில், அவரின் திரைப்பயணம், தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.

பூமிகாவின் துவக்க காலமும், விஜய்யுடனான அறிமுகமும்

தனது சிரிப்பாலும், உதட்டு அழகாலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையான பூமிகா, ஆகஸ்ட் 01, 1978-ஆம் ஆண்டு புது டெல்லியில் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் இளைய மகளாக பிறந்தார். இவருக்கு முன்பாக ஒரு சகோதரரும், ஒரு சகோதரியும் உள்ளனர். இவரின் தந்தை டெல்லியில் ராணுவ அதிகாரியாக பணியாற்றியவர். இதனால் தன் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அங்கேயே முடித்துள்ளார். சிறுவயதில் இருந்தே பிறர் இடத்தில் இருந்து எப்போதும் தன்னை கொஞ்சம் வித்தியாசமாக காட்டிக்கொள்ள விரும்பும் பூமிகாவுக்கு சினிமா, அதாவது நடிப்பின் மீது தீராத காதல் இருந்துள்ளது. இதற்காக படிக்கின்ற நாட்களிலேயே மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார். அதன் முதல் துவக்கமாக டெல்லியிலேயே இருந்தால் சரியாக வராது என்று 1997-ஆம் ஆண்டு மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளார். மும்பைக்கு வந்த பிறகு நிறைய விளம்பர படங்கள் மற்றும் இந்தி இசை வீடியோ ஆல்பங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். மேலும் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஹிப்-ஹிப் ஹர்ரே' என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தன் பங்களிப்பை கொடுத்துள்ளார். இந்த நிலையில்தான், யாரும் எதிர்பாராதவிதமாக தெலுங்கு திரையுலகில் இருந்து நடிக்க கேட்டு பூமிகாவுக்கு அழைப்பு வந்துள்ளது. அதுவும் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனா தயாரிப்பில் உருவாக இருந்த ‘யுவகுடு’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். 2 ஆயிரம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுமந்த் என்பவருக்கு ஜோடியாக சிந்து என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், முதல் தெலுங்கு அறிமுகப் படமான ‘யுவகுடு’ பூமிகாவுக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.


பூமிகாவின் தெலுங்கு அறிமுகப்படமான ‘யுவகுடு’

இருப்பினும் இந்த அறிமுகம் அடுத்த ஆண்டு இரண்டு வெற்றிப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை அவருக்கு பெற்று கொடுத்தது. அதுதான் தமிழில் தளபதி விஜய்யுடன் ‘பத்ரி’ மற்றும் தெலுங்கில் ‘குஷி’ ஆகிய படங்கள். பவன் கல்யாண் நடித்து 2 ஆயிரமாண்டு தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்றிருந்த ‘தம்முடு’ படத்தின் உரிமையை பெற்று தமிழில் நடிகர் விஜய்யை வைத்து எடுக்கப்பட்ட ‘பத்ரி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜானு என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இப்படத்தில் அவர் விஜய்யுடன் சேர்ந்து செய்திருந்த ரொமான்டிக் காட்சிகள், காதல் சொல்வது உதடுகள் அல்ல போன்ற பாடல் காட்சிகள் பூமிகா என்னும் நடிகையை ரசிக்க செய்தது மட்டுமின்றி முதல் படத்திலேயே அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொடுத்தது. அதேபோன்று, ‘பத்ரி’ திரைப்படம் வெளிவந்த அதே ஆண்டில் தெலுங்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வெளிவந்த ‘குஷி’ திரைப்படமும் அவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் வெற்றியை பெற்று தந்தது மட்டுமின்றி சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதையும் வாங்கி கொடுத்தது. இதனால் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்தவருக்கு அவர் நடித்த அனைத்து படங்களும் ஓரளவு வெற்றி நாயகி என்ற அந்தஸ்தையே பெற்றுக் கொடுத்தது. இன்றும் தமிழில் இவர் நடித்த ‘ரோஜா கூட்டம்’, ‘ஜில்லுன்னு ஒரு காதல்’ ஆகிய படங்களை தமிழ் ரசிகர்களால் மறக்கவே முடியாது. இதில் சூர்யாவுடன் இணைந்து நடித்து 2006-ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஜில்லுன்னு ஒரு காதல்’ திரைப்படம் பூமிகா என்னும் நடிகையை தென்னிந்திய அளவில் பிரபலப்படுத்தியது. இந்த படம் தந்த வெற்றி இவரை எங்கோ கொண்டு அமர வைக்கப் போகிறது என்று எதிர்பார்த்த நேரத்தில் ஏனோ தெரியவில்லை தெலுங்கில் கிடைத்த வாய்ப்புகள் அளவுக்கு தமிழில் கிடைக்கவில்லை.


'ஜில்லுன்னு ஒரு காதல்' திரைப்படத்தில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில்

பாலிவுட்டும், காதல் திருமணமும்

தமிழை விட தெலுங்கில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வர ஆரம்பித்த பூமிகா, 'குஷி' படத்தின் வெற்றிக்குப் பிறகு அங்குள்ள இளைஞர்களை வெகுவாக கவர்ந்ததால் தொடர்ந்து, நாகர்ஜூனாவுடன் ‘சிநேகமண்டே இத்வீர', வெங்கடேஷுடன் 'வாசு', சிரஞ்சீவியுடன் 'ஜெய் சிரஞ்சீவி', மகேஷ்பாபுவுடன் 'ஒக்கடு', ஜூனியர் என்டிஆருடன் 'சிம்ஹாத்ரி' போன்ற படங்கள் அவருக்கு நினைத்து பார்த்திட முடியாத அளவுக்கு வெற்றியை கொடுத்தது. இதுமட்டுமில்லாது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களான 'மிஸ்ஸியம்மா, சத்யபாமா, அனசூயா, அமராவதி' போன்றவையும் பூமிகாவுக்கு சிறந்த நடிகை என்ற பெயரைப் பெற்று தந்தன. இப்படியான நிலையில்தான் 2003-ஆம் ஆண்டு பாலிவுட்டில் இருந்தும் நடிக்க கேட்டு அழைப்பு வந்தது. அதன்படி, பாலிவுட்டில் அப்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த சல்மான் கானுக்கு ஜோடியாக ‘தேரே நாம்’ என்ற படத்தில் நடித்து இந்தித் திரையுலகில் நுழைந்தார். தமிழ் திரையுலகில் எப்படி பூமிகாவின் முதல் படம் வெற்றிப்படமாக அமைந்து ராசியான நடிகை என்ற பெயரை பெற்று தந்ததோ அதேபோன்று பாலிவுட்டிலும் முதல் படம் வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல கலெக்சனை அள்ளிக் கொடுத்தது. இதனால் தொடர்ந்து ‘தேரே நாம்’ படத்திற்குப் பிறகு, பூமிகா இந்தியில் ‘ரன்’, ‘தில் நே ஜிசே அப்னா கஹா’, ‘சில்சிலே’ போன்ற பல படங்களில் நடித்தார். ஆனால், முதல் படம் அளவுக்கு வேறு எந்த படமும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.


‘தேரே நாம்’ படத்தில் சல்மான் கானுடன்

இதனால் மீண்டும் தெலுங்கு திரையுலக பக்கம் வந்தவர் தெலுங்கில் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், பஞ்சாபி, போஜ்புரி ஆகிய படங்களிலும் நடித்தார். இப்படி அனைத்து மொழிப் படங்களிலும் நடித்தவர் ஏனோ தெரியவில்லை ‘ஜில்லுன்னு ஒரு காதல்’ என்ற மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு தமிழில் பெரிய பிரேக் கொடுக்கும் அளவிலான வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. சொல்லப்போனால் திருமணத்திற்கு பிறகும் கூட ‘சித்திரையில் நிலாச்சோறு’, ‘களவாடிய பொழுதுகள்’, ‘கொலையுதிர் காலம்’, ‘கண்ணை நம்பாதே’ என ஹீரோயின் என்பதை தாண்டி குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் பூமிகா நடித்திருந்தாலும், எந்த படமும் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இப்படி தமிழில் மிகவும் குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே நடித்துள்ள பூமிகா தனது யோகா ஆசிரியர் பாரத் தாக்கூரை 2007-இல் குருத்வாராவில் உள்ள நாசிக்கில் திருமணம் செய்து கொண்டனர். குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இவரின் அந்த திருமண நிகழ்வு மிகவும் எளிமையாக நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு இருவரும் நான்கு வருடங்கள் காதலித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளின் காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மகன் பிறந்தார். 2014- ஆம் ஆண்டு மகன் பிறந்த பிறகு, மிகக் குறைவான படங்களில் காணப்பட்ட பூமிகா, 2016-இல் இந்தியில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்து வெளிவந்த ‘எம் எஸ் தோனி’ படத்தில் அவரின் சகோதரியாக ஜெயந்தி என்ற வேடத்தில் நடித்து மீண்டும் கவனம் பெற்றார். தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என மீண்டும் தன் திரை பயணத்தை விரிக்கத் தொடங்கியுள்ள பூமிகா, படப்பிடிப்பு தளங்களுக்கு தனது 10 வயது மகன் யாஷையும் கூடவே அழைத்து வந்து பல படங்களில் நடித்து வருகிறார்.


‘எம்.எஸ். தோனி’ திரைப்படத்தில் சகோதரி கதாபாத்திரத்தில் பூமிகா

கம்பேக் கொடுக்குமா ‘பிரதர்’ திரைப்படம்

‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என காதல், நகைச்சுவை, குடும்பம் போன்ற எல்லாவிதமான ஜனங்களும் கலந்த பல படங்களை எடுத்து வெற்றி கொடுத்தவர்தான் இயக்குநர் எம். ராஜேஷ். நீண்ட இடைவேளைக்குப் பிறகு 2024 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவரது இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம்தான் ‘பிரதர்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன், பூமிகா, நட்ராஜ், ராவ் ரமேஷ், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி அன்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள இப்படத்தில் ஜெயம் ரவிக்கு அக்கவாக, நடிகர் நட்டிக்கு மனைவியாக ஆனந்தி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பூமிகா வழக்கம் போல் தன் எதார்த்தமான நடிப்பால் ரசிக்க வைத்திருக்கிறார். பொறுப்பில்லாமல் இருக்கும் தன் தம்பியை மாற்றி காட்டுகிறேன் என்று தன்னுடன் ஊட்டிக்கு அழைத்து சென்று என்ன மாதிரியான பிரச்சினைகளை சந்திக்கிறார்?


ஜெயம் ரவியின் 'பிரதர்' திரைப்பட போஸ்டர்

பிறகு அந்த பிரச்சனைகளை சரி செய்து தன் கணவர் குடும்பத்தினருக்கு பிடித்த நபராக ஜெயம் ரவியை எப்படி மாற்றுகிறார் என்பது தான் படத்தின் கதை. நகைச்சுவை கலந்த குடும்ப டிராமாவாக வெளிவந்துள்ள இந்த படத்தில் நிஜமாகவே ஜெயம் ரவிக்கு ஏற்ற அக்காவாக அப்படியே கனகச்சிதமாக பொருந்திப் போயிருக்கிறார் பூமிகா. நடிக்க வந்த புதிதில் 2002-ஆம் ஆண்டு மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் சிம்ரன் ஏற்றிருந்த அம்மா வேடத்தில் நடிக்க கேட்டு பூமிகாவிற்குதான் முதன் முதலில் தமிழில் வாய்ப்பு வந்ததாம். ஆனால், இப்போதே நாம் அம்மா வேடத்தில் நடித்தால் செட் ஆகாது என்று நடிக்க மறுத்து விட்டாராம் பூமிகா. ஆனால் இன்று தன் வயது முதிர்ச்சிக்கு தகுந்த அளவில் அக்கா வேடத்தில் ‘பிரதர்’ படத்தில் நடித்து சிறப்பு செய்திருக்கிறார். நிச்சயம் அவரின் இந்த முயற்சி இனி வரும் காலங்களில் அவரை அடுத்தடுத்த நிலைகளுக்கு கொண்டு சென்று மீண்டும் ஒரு வெற்றி முத்திரையை பதிக்க செய்யும் என்று நம்புவோம்.

Updated On 11 Nov 2024 11:40 PM IST
ராணி

ராணி

Next Story