இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் சினிமாவில் பாகவதர் காலம் தொடங்கி இன்றைய சிவகார்த்திகேயன் வரை அவர்களின் படங்களில் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தும் வகையில், எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்துபோனாலும் என்றும் எவர்க்ரீன் நகைச்சுவை கலைஞர்களாக நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பது என்னவோ நடிகர் கவுண்டமணி - செந்தில் இணைதான். இதில் நகைச்சுவை நடிகர் செந்தில் என்றவுடன் நமக்கெல்லாம் முதலில் நினைவுக்கு வருவது அவரின் அப்பாவிதனமான முகமும், கவுண்டமணியை வம்புக்கு இழுத்து அடிவாங்கி சிரிக்க வைக்கும் லாவகமும்தான். இப்படிப்பட்ட ஒரு நகைச்சுவை கலைஞரின் மகனான பல் மருத்துவர் மணிகண்ட பிரபு, ராணி நேயர்களுக்காக அளித்த நேர்காணலில் தன் தந்தை குறித்தும், அவருடன் இணைந்து நடிக்கும் திரைப்பட அனுபவம் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்...

திரை நட்சத்திரங்கள் அனைவரும் தங்களது பற்களை பளபளப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி உங்களிடம் சிகிச்சைக்காக வந்த நட்சத்திரங்கள் யாரும் இருக்கிறார்களா?

சாதாரண மனிதர்களான நமக்கே நம் பற்களை வெண்மை நிறம் மாறாமல் அழகாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற என்ன இருக்கும்பொழுது நிச்சயம் சினிமா நட்சத்திரங்களுக்கும் இருக்கும். என்னிடம் ஒரு சில சினிமா நட்சத்திரங்கள் பல் சிகிச்சைக்காக வருவார்கள். ஆனால், அவர்களை வைத்து பிரபலம் தேடிக்கொள்ள வேண்டும் என்று நான் நினைத்ததும் இல்லை. அவர்களுடன் புகைப்படம் எடுத்து எனது கிளினிக்கில் மாட்ட வேண்டும் என்று எண்ணியதும் கிடையாது. ஆனால், நிறைய பேர் தங்களிடம் சிகிச்சைக்கு வரும் பிரபலங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அதனை தங்களின் கிளினிக்கல் இடங்களில் மாட்டிக்கொள்வதை ஒரு டூலாகவே வைத்திருக்கிறார்கள். நான் அதுபோன்றெல்லாம் செய்வது கிடையாது.


நடிகர் செந்தில் மகன் மணிகண்ட பிரபுவின் மருத்துவமனையில்...

அப்பா செந்தில் உங்கள் கிளினிக் வந்து சிகிச்சை எடுத்துக் கொள்வார்களா? ஒரு மருத்துவராக உங்களை பார்த்து பெருமை பட்ட தருணம் எது?

பற்களில் பிரச்சினை இருந்தால் அப்பா உடனே என்னுடைய கிளினிக்கிற்கு வந்து விடுவார். என்னிடம்தான் சிகிச்சை எடுத்துக்கொள்வார். என்னுடைய கிளினிக்கில் நான் வைத்ததுதான் சட்டம் என்பதால் எதுவும் பேசமாட்டார். என்னை பார்த்து நிறைய பெருமைபட்டுக் கொள்வார். ஆனால், என் முன்பு அதனை காட்டிக்கொள்ள மாட்டார். வெளியில் அவரது நட்பு வட்டத்தில் என்னை பற்றி மிகவும் பெருமையாக பேசுவார் என்பதை மூன்றாவது நபர் மூலமாக தெரிந்து கொள்வேன்.

சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் அவர்களின் வாரிசுகள் பெரும்பாலும் சினிமாவிலேயே பயணிக்கத்தான் விரும்புவார்கள். ஆனால், நீங்கள் மருத்துவராக வேண்டும் என்பது எப்படி நிகழ்ந்தது?

அப்பாவிற்கு அவரது இரண்டு மகன்களையும் சினிமாவுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதைவிட நன்கு படிக்க வைத்து வேறு துறையில் பெரிய ஆளாக்கி விட வேண்டும் என்றுதான் ஆசை. அதற்காகத்தான் என்னை மருத்துவராகவும், தம்பியை அமெரிக்காவிற்கு அனுப்பியும் படிக்க வைத்தார். அதற்கு மிக முக்கிய காரணம் அப்பாவின் குடும்பத்தில் பெரிதாக படித்தவர்கள் என்பதை விட மருத்துவராக யாரும் இல்லை. அதனால் என்னை மருத்துவராக்கி பார்க்க ஆசைப்பட்டார். அவர் ஆசைப்படி மருத்துவராகிவிட்டேன். அப்பாவின் வம்சாவளியிலேயே நான்தான் எங்கள் வீட்டில் முதல் தலைமுறை மருத்துவர். அந்த பெருமை எனக்கு இருக்கிறது. மகனை மருத்துவராக்கிவிட்டோம் என்கிற பெருமை அவருக்கு இருக்கிறது.


இளையமகன் ஹேமசந்திர பிரபுவுடன் செந்தில் - மனைவியுடன் மூத்த மகன் மணிகண்ட பிரபு

நீங்கள் மருத்துவர் பட்டம் வாங்கும்பொழுது அப்பா சொன்ன வார்த்தை என்ன? அவருடன் அந்த தருணம் மறக்க முடியாத நினைவுகள் ஏதும் இருக்கிறதா?

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனது பட்டமளிப்பு விழாவுக்கு அவர் வரவே இல்லை. நான் தனியாகத்தான் சென்று பட்டம் வாங்கினேன். பட்டம் வாங்கிய பிறகு அதனை எடுத்துக்கொண்டு நேராக அப்பாவிடம் சென்றுதான் கொடுத்தேன். அதை வாங்கி பார்த்துவிட்டு சந்தோஷம் என்று சொல்லி முடித்துவிட்டார்.

அப்பாவின் பங்களிப்பை தாண்டி உங்களின் படிப்பு, தனிப்பட்ட விஷயங்களில் அம்மாவின் பங்களிப்பு அதிகமாக இருந்திருக்கும். அதை பற்றி கூற முடியுமா?

சிறு வயதில் இருந்தே நேரம் தவறாமல் எங்களை டியூசன் அழைத்து சென்று, கூட்டி வருவதாக இருக்கட்டும், பள்ளிக்கு அழைத்துச் செல்வதாக இருக்கட்டும் எல்லாமே அம்மாதான். மார்க் கொஞ்சம் குறைந்தாலும் சும்மா விடமாட்டார். அந்த அளவுக்கு அம்மா படிப்பு விஷயத்தில் மிகவும் கண்டிப்பு மிக்கவர். நான் இன்று மருத்துவராகி இருக்கிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் அம்மாதான்.

உங்களுக்கு நினைவு தெரிந்து தியேட்டருக்கு சென்று பார்த்த அப்பாவுடைய முதல் படம் என்றால் எது?

நான் ஸ்கூல் போகும் சிறுவனாக இருந்தபோது நிறைய படங்கள் பார்த்து இருக்கிறேன். ஆனால், முதல் படம் எது என்று எனக்கு நியாபகம் இல்லை. நினைவு தெரிந்து சொல்ல வேண்டும் என்றால் அப்பாவுடன் சென்று பார்த்த முதல் படம் சரத்குமார் சாருடன் நடித்திருந்த நாட்டாமை திரைப்படம் தான்.


நடிகர் செந்திலின் குடும்பம்

அப்பாவுடைய படங்களில் உங்களுக்கு பிடித்த காமெடி காட்சிகள் என்றால் எதை கூறுவீர்கள்?

அப்பாவுடைய படங்களில் எனக்கு பிடித்த காமெடி காட்சிகள் நிறைய இருக்கிறது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ‘நாட்டாமை’, ‘ஊரு விட்டு ஊரு வந்து’, ‘கரகாட்டக்காரன்’, ‘வில்லு பாட்டுக்காரன்’ இப்படி நிறைய இருக்கின்றன. நகைச்சுவை காட்சிகள் எழுதும் எழுத்தாளர் ஏ.வீரப்பன் அய்யாவும், அப்பாவும் சேர்ந்து செய்த காமெடி காட்சிகள் அனைத்துமே இன்றும் ரசிக்கும்படியாகத்தான் இருக்கும்.

தமிழ் சினிமாவில் காமெடின்னாலே கவுண்டமணி - செந்தில் காம்போதான். அவர்களின் இணையில் உங்களுக்கு பிடித்த காமெடி காட்சின்னா எது? அவர்கள் இருவருக்குமான உறவு எப்படிப்பட்டது?

இப்போது இருக்கும் தமிழ் சினிமாவில் இணைந்து காமெடி செய்பவர்களின் காம்போ இரண்டு, மூன்று வருடங்கள் கூட தாங்குவது இல்லை. ஆனால், அன்றைய 90-களில் தொடங்கி இரண்டாயிரத்தின் பாதிவரை கிட்டத்தட்ட 15-ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு காம்போ நகைச்சுவையில் கலக்கி மக்களை மகிழ்வித்தது என்றால் அது அப்பாவும், கவுண்டமணி சாரும்தான் இருக்க முடியும். இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஸ்க்ரீனை பகிர்ந்துகொள்ளும் விதமே அவ்வளவு அழகாக இருக்கும். அதற்கு காரணம் இரண்டு பேருக்குள்ளும் இருந்த புரிதலாக கூட இருக்கலாம். அதேமாதிரி அவர்கள் இணையில் வரும் காமெடிகள் அனைத்துமே மிகவும் ரசிக்கும் படியாகவும், கவலைகளை மறந்து சிரிக்கும் படியாகவும் தான் இருக்கும். கவுண்டமணி சாரிடம் அப்பா அடி வாங்குவதுபோல் வருவதை பார்த்து நான் என்றும் வருத்தப்பட்டது இல்லை. அவர்களின் நடிப்பை ரசித்து இருக்கிறேன். அதேபோன்று இருவருமே நல்ல புரிதல் உள்ள நண்பர்கள். இன்னும் சொல்ல போனால் இன்றுவரை நல்ல அண்ணன், தம்பியாகவே பழகிக்கொண்டிருக்கிறார்கள். நானும் கவுண்டமணி சாருடன் நேரிலும், போனிலும் நிறைய முறை பேசியிருக்கிறேன், பழகியிருக்கிறேன். எங்கள் வீட்டிற்கும் நிறையமுறை வந்து இருக்கிறார்.


காமெடியில் கலக்கிய கவுண்டமணி - செந்தில் காம்போ

நீங்களும், அப்பாவும் இணைந்து நடித்து இருக்கும் படம் எப்படி வந்திருக்கிறது? இந்த பட வாய்ப்பு எப்படி கிடைத்தது?

நடிகர் பாபி சிம்ஹா என்னுடைய நெருங்கிய நண்பர். ஒருநாள் என்னிடம் பேசுவதற்காக அவருடைய வீட்டுக்கு அழைத்திருந்தார். நானும் சென்றிருந்தேன். அப்போது என்னிடம் ஏன் நீ நடிப்பதில்லை என்று கேட்டார். நான் உடனே நடிக்கக் கூடாது என்றெல்லாம் ஒன்றும் இல்லை. அப்பா படித்து முடித்துவிட்டு உனக்கு விருப்பப்பட்டதில் கவனம் செலுத்து என்று கூறிவிட்டார். அதனால் நானும் படிப்பு படிப்பு என்று இருந்துவிட்டேன். அதற்கு பிறகு எனக்கு பெரிதாக வாய்ப்புகளும் வரவில்லை. நானும் நடிப்பதை பற்றி யோசிக்கவில்லை என்று கூறினேன். பிறகு அவர் அப்படியேதும் நல்ல கதையம்சம் உள்ள வாய்ப்புகள் வந்தால் நடிப்பீர்களா என்று கேட்டார். இருந்தால் சொல்லுங்கள் நடிக்கிறேன் என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். அதற்கு பிறகு ஒரு ஆறு மாதம் கழித்து மீண்டும் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. உனக்கு ஒரு கதை ரெடியாகி இருக்கிறது. பூஜை போட போகிறோம் வந்து கலந்துகொள் என்று சொல்லவும், பதிலுக்கு நான் என்ன அண்ணா சொல்றீங்க? நான் ஏதோ சும்மா சொல்றீங்க என்று நினைத்தேன் என்று கூறினேன். பிறகு இயக்குநர் ஒருநாள் வீட்டுக்கு வந்து அப்பாவிடம் கதையை கூறினார். அதுவரை கதையில் அவருக்கு மகனாக வரப்போவது நான்தான் என்று அவருக்கு தெரியாது. பிறகு உங்களுக்கு மகனாக நான்தான் அதில் நடிக்க போகிறேன் என்று சொன்னதும்; அப்பா அதிர்ச்சியாகி என்னத்த நீயா… அப்போ உன் தொழிலை யார் பார்த்துக்கொள்வது என்று கவலைப்பட ஆரம்பித்துவிட்டார். பிறகு என் மனைவி உட்பட எல்லோருமாக சேர்ந்து அவரிடம் பேசி சம்மதிக்க வைத்த பிறகே இதில் நானும் நடிக்க ஒப்புக் கொண்டார். இப்படித்தான் இந்த வாய்ப்பு வந்தது. படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. விரைவில் படம் திரைக்கு வந்துவிடும். படம் எப்படி வந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதில் உங்களை போன்று நானும் ஆர்வமாக இருக்கிறேன்.


'தடை உடை' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில்...

எல்லா வகையிலும் உங்களுக்கு உதவியாக இருக்கக்கூடிய உங்கள் மனைவி பற்றி கூற முடியுமா?

என்னுடைய மிகப்பெரிய பலமே என் மனைவிதான். இப்போது என்று கிடையாது. நான் படிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு பல வழிகளில் உதவியாக இருந்திருக்கிறார். அவளின் அப்பாவும் மருத்துவர்தான். அதனால் அவளுக்கு கற்றுக் கொடுக்கப்படும் பாடத்தை எனக்கும் சொல்லி கொடுப்பார். இந்த கிளினிக்கில் நான் மருத்துவம் பார்ப்பதோடு சரி. மற்ற எல்லா நிர்வாக பொறுப்புகளையும் அவர்தான் பார்த்துக்கொள்கிறார். இப்போதுவரை என் முதுகெலும்பாகவும் இருப்பது அவர்தான்.

Updated On 21 Oct 2024 3:40 PM GMT
ராணி

ராணி

Next Story