இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் சினிமாவில் காதல் படங்களின் வரவு என்பது மிகவும் குறைந்துவிட்டது. ஒரு காலத்தில் 90-களின் இறுதியில் காதல் தேசம் துவங்கி காதல் கோட்டை, காதலுக்கு மரியாதை, காதல் மன்னன் என வெறும் காதல் கீதங்களாக பாடிக்கொண்டிருந்த தமிழ் சினிமா பின்னர் குடும்ப சென்டிமென்ட் பக்கம் திரும்பி, ஆக்சனில் குதித்து, பேய்க்கு பயந்து இன்று வயலன்ஸோடு கதை சொல்லும் திரைப்படங்களே ரசிகர்களால் பெரியளவில் ரசிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் அவ்வப்போது ‘96’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘லவ் டுடே’ போன்ற காதல் படங்களும் இங்கு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்கின்றன. அந்த வரிசையில் தங்களின் படத்தையும் இணைத்துக் கொள்ளும் முனைப்புடன் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் கூட்டணியில் ‘ஒன்ஸ்மோர்’ என்கிற திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. நல்ல ஹீரோவாக, சிறந்த நடிகையாக என தங்களை நிலைநிறுத்திக்கொள்ள இருவருமே போராடி வரும் நிலையில், இப்படம் அவர்களுக்கு கை கொடுக்குமா?. ஏற்கனவே அவர்கள் நடித்திருந்த படங்கள் எந்த அளவிற்கு ரசிக்கும் படியாக இருந்தன? இருவரின் திரைப்பயணத்திலும் இருக்கும் சில ஒற்றுமைகள் என்னென்ன என்பது குறித்து இங்கே காணலாம்.

வில்லன் டூ ஹீரோ ப்ரமோஷன்

அர்ஜுன் தாஸ், இந்த பெயரை கேட்ட உடனேயே நமக்கெல்லாம் டக்கென நினைவுக்கு வருவது ‘மறுபடியும்’ திரைப்படத்தில் வரும் ஆசை அதிகம் வச்சு பாடல்தான். ‘கைதி’ திரைப்படத்தில் வரும் ஒரு ஆக்சன் காட்சியில் இந்த பாடல் பின்னணியுடன் போலீஸ் ஸ்டேஷனுக்குள் அன்று அவர் நுழைந்த போது, நம் மனதுக்குள்ளும் வில்லன் என்பதை தாண்டிய நபராக தன் நடிப்பால் அதகளம் செய்து எதிர்பாராமல் நுழைந்திருப்பார். கூட்டத்தில் எங்கிருந்தாலும் அடையாளம் காணும் அளவிற்கு வித்தியாசமான குரல் வளம் கொண்டுள்ள இவர் நடிப்பிலும் அப்படியான ஆற்றலை பெற்றவராக பார்க்கப்படுகிறார். 2012 ஆம் ஆண்டு ‘பெருமான்’ என்கிற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இவர் அறிமுகம் ஆகி இருந்தாலும், முதல் அடையாளத்தை பெற்று தந்த திரைப்படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘கைதி’ திரைப்படம் அமைந்தது. பிறகு தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் இவர் நடித்திருந்தாலும் பெரியளவில் கைகொடுக்கவில்லை. இந்த நேரம் மீண்டும் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் தாஸ் எனும் கதாபாத்திரத்தில் தோன்றியவர் அர்ஜுன் தாஸ், விஜய் சேதுபதிக்கு நிகரான பாராட்டை பெற்றார். இதன் பிறகு தெலுங்கு, தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும் வில்லன் கதாபாத்திரங்களே இவரை தேடிவந்த சமயத்தில்தான் ‘அநீதி’ திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமானார் அர்ஜுன் தாஸ்.


‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தில் அதிதி ஷங்கருடன் அர்ஜுன் தாஸ்

கடந்த ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் வணிகரீதியாக பெரியளவில் வசூலை ஈட்டி தராவிட்டாலும், விமர்சன ரீதியாக படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக திரு என்கிற திருமேனி கதாபாத்திரத்தில் நடித்திருந்த அர்ஜுன் தாஸ், கனகச்சிதமாக அந்த வேடத்தில் மிரள வைத்திருப்பார். அவருக்காகவே தைத்த சட்டையை போல கொஞ்சம் சைக்கோ தனமாகவும், அண்டர்பிளே பண்ணும் விதமாகவும் படத்தில் அவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டு இருந்தாலும், அப்பாவை நினைத்து கதறும்போதும், காதலுக்காக உருகும்போதும் முழு நடிகனாக மாறி நடிப்பில் ஸ்கோர் செய்திருப்பார் அர்ஜுன் தாஸ். இதன் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவின் மற்றொரு முக்கிய இயக்குநரான சாந்தகுமார் இயக்கத்தில் வெளிவந்த ‘ரசவாதி’ திரைப்படத்தில் சதாசிவ பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் அதிலும் தனி முத்திரை பதித்தார். காதல் தோல்வியால் துவண்டு இருக்கும் உள்ளத்தில் மீண்டும் காதல் மலர்ந்து பூக்கும்போது சூழ்நிலைகளால் சில சிக்கல் ஏற்பட்டு பல அதிர்ச்சிகரமான முடிச்சுகள் அவிழும்போது நிகழும் சம்பவே படத்தின் கதை. ஒரு சஸ்பென்ஸ் கலந்த காதல் படமாக வெளிவந்த இப்படமும் முந்தைய படத்தை போலவே விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றிருந்தது. இப்படி அடுத்தடுத்து வித்தியாசமான காதல் படங்களை தேர்வு செய்து நடித்துவந்த அர்ஜுன் தாஸ் தற்போது முழுநீள காதல் படமாக உருவாகி வரும் ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தில் அதிதி ஷங்கருடன் இணைந்து நடித்து வருகிறார்.

தனித்த அடையாளத்திற்காக வெயிட்டிங்


‘விருமன்’ திரைப்படத்தில் தேன்மொழியாக அறிமுகமான அதிதி ஷங்கர்

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் என்கிற அடையாளத்துடன் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த ‘விருமன்’ படத்தில் அறிமுகமான அதிதி ஷங்கர், முதல் படத்திலேயே கார்த்திக்கு ஜோடியாக நடித்து கவனம் பெற்றவர் ஆவார். துறுதுறுவென கிராமத்து பெண்மணியாக தேன்மொழி எனும் கதாபாத்திரத்தில் வந்தவர் பாடகியாகவும் அறிமுகமாகி மதுர வீரன் என்கிற பாடலை பாடியிருந்தார். இயக்குநர் ஷங்கரின் மகள் என்பதால் அதிதிக்கு அதிக முக்கியத்துவம் ஊடகங்கள் கொடுப்பதாக அந்த சமயம் சிலர் சொல்லிவந்த நிலையில், அவர்களின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல் படத்திலேயே அறிமுக நடிகை என சொல்ல முடியாத அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இருப்பினும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாமல் அதிதி தவித்து வந்த நேரத்தில்தான் ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. இந்திய அளவில் கவனம் பெற்ற ‘மண்டேலா’ படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் இரண்டாவதாக வெளிவந்த இப்படத்தில் நிலா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர், சிறிது நேரமே திரையில் தோன்றினாலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இருப்பினும் சிவகார்த்திகேயனை மையமாக வைத்தே படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்ததால், படம் வெற்றியடைந்தும் பெரிய பாராட்டு இவருக்கு கிடைக்கவில்லை.


ஷூட்டிங்கில் அர்ஜுன் தாஸ் & அதிதி ஷங்கர்

இப்படி அடுத்தடுத்த படங்கள் பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களாக அமைந்தும் தனித்த அடையாளம் தனக்கு கிடைக்கவில்லையே என ஆதிதி எண்ணிய நேரத்தில்தான் 90’ஸ் கிட்ஸ்களின் மிக விருப்பமான இயக்குநரான விஷ்ணுவர்தனின் அடுத்த படமான ‘நேசிப்பாயா’ திரைப்படத்தில் கமிட் ஆனார் அதிதி. ‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இரண்டாவது படமான இதில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். ஆக்சன் கலந்த ரொமான்டிக் என்டர்டெய்னர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் போர்ச்சுகல் நாட்டில் இயற்கை எழில் மிகுந்த இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முழுப்படமும் காதலை மையமாக கொண்டு உருவாகியிருப்பதை படத்தின் டீசர் உணர்த்தி இருந்தாலும், ஆக்சன் காட்சிகள் மற்றும் அதிதியின் நடிப்பு கூடுதல் கவனம் பெறுகிறது. இப்படி கிராமத்து காதல், சிட்டி காதல், வெளிநாட்டு காதல் என ஆக்சன் கலந்த காதல் படங்களாக தொடர்ந்து நடித்துவரும் அதிதி தற்போது முழுநீள காதல் படமாக உருவாகி வரும் ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

படம் ‘ஒன்ஸ்மோர்’ கேட்க வைக்குமா?


‘ஒன்ஸ்மோர்' படத்தின் டீசர் காட்சி

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் இணைந்து நடித்து வரும் படம் ‘ஒன்ஸ்மோர்’. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கும் இந்தப் படத்துக்கு 'ஹிருதயம்', 'குஷி', 'ஹாய் நன்னா' போன்ற சூப்பர் ஹிட் ரொமான்டிக் காதல் படங்களுக்கு இசையமைத்துள்ள ஹேஷம் அப்துல் வஹாப் இசை அமைக்கிறார். முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்த வாரம் வெளியானது. பார்க்க கொஞ்சம் வித்தியாசமாகவும், ஜோடி பொருத்தம் தனித்துவமாகவும் தெரிந்த அந்த டைட்டில் டீசரில் அதிதி ஷங்கர் ஏ.ஆர். ரகுமான் பிடிக்குமா இளையராஜா பிடிக்குமா என்று அர்ஜுன் தாஸிடம் கேட்பார். அதற்கு அவர் ஹாரிஸ் ஜெயராஜ் என பதில் கூறுவார். மேலும் சங்கர் பிடிக்குமா மணிரத்தினம் பிடிக்குமா என்ற கேள்விக்கு, கே. பாலச்சந்தர் என பதில் அளிப்பார். இதற்கு பிறகு மேரேஜ் பற்றிய கேள்விக்கு நோ மேரேஜ் என பளீர் பதில் தருவார். பார்க்கும்போதே ஈர்க்கும் விதமாக இருக்கும் இப்படத்தின் டைட்டில் டீசர் வைரலாகி வரும் நிலையில், இப்படம் அடுத்த வருடம் காதலர் தினத்தில் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனித்துவமான இசை மற்றும் உணர்வுபூர்வமான பின்னணியின் மூலம் இந்திய அளவில் ரசிகர்களை பெற்றுள்ள ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்றவுடனேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இது தவிர ஏற்கனவே தொடர்ந்து வேறு வேறு ஜானர்களில் காதல் படங்களாக நடித்துவரும் அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர், இப்படத்தில் ஜோடி சேர்ந்திருப்பது கூடுதல் கவனத்தை பெற்றுத்தந்துள்ளது.


நடிகர் விஜய்யுடன் 'மாஸ்டர்' படத்தில் கலக்கிய அர்ஜுன் தாஸ்

ஒரு சாதாரண நடிகராக அறிமுகமாகி பின்னர் வில்லனாக விஸ்வரூபம் எடுத்து இன்று ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள போராடிவரும் அர்ஜுன் தாஸ் போல்தான் அதிதி சங்கரும். ஏனெனில் எடுத்த உடனேயே கார்த்திக்கு ஜோடியாக டாப் கியரில் தொடங்கிய இவரது திரைப்பயணம், சில வெற்றிகளை சுவைத்தலும் இன்றுவரை தனித்த அடையாளத்தை பெற முடியாமல் தடுமாறித்தான் வருகிறார். அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் இவ்விருவருக்குமான திரைப்பயணம் என்பது வெவ்வேறு பாதையை கொண்டிருந்தாலும், வெற்றி மற்றும் தனித்த அடையாளத்தை பெற வேண்டும் என்கிற சிந்தனையில் இருவரும் ஒன்று படுகின்றனர். அப்படிப்பட்ட இவர்கள் அறிமுக இயக்குநரின் படத்தில் இணைந்திருப்பது காரணம் இல்லாமல் இருக்காது என்பதே அவர்களது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. சமீபகாலமாக முழுநீள காதல் படங்கள் வெளிவந்து வெற்றி பெறுவதே அரிதாகி உள்ள சூழலில், அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்த ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் வகையில் ஒன்ஸ்மோர் கேட்கும் விதமாக இருக்கும் என நம்புவோம்.

Updated On 21 Oct 2024 9:10 PM IST
ராணி

ராணி

Next Story