இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்தியத் திரையுலகில் மிகவும் கொண்டாடப்பட்ட, இன்றும் கொண்டாடப்படும் ஒரே நடிகர் யார் என்றால் அது நமது 'சிம்ம குரலோன்', 'நடிகர் திலகம்' என அன்போடு அழைக்கப்படும் செவாலியர் சிவாஜி கணேசனாக மட்டும்தான் இருக்க முடியும். தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் சுமார் 5 தசாப்தங்களில் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சிவாஜி கணேசன், மல்டி ஹீரோ சப்ஜெக்ட்களில் நடிக்கத் தயங்கும் சமகாலத்தவர்களைப் போலல்லாமல், பல மல்டி-ஸ்டார் படங்களிலும் நடித்து தான் ஒரு நடிப்பு பல்கலைக்கழகம் என்பதை நிரூபித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் தொடங்கி தளபதி விஜய்வரை அடுத்த தலைமுறை நடிகர்களுடன் தன் திரை இடத்தைப் பகிர்ந்துகொண்ட சிவாஜி கணேசன் தன் தனித்துவமான நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களை இன்றும் கொண்டிருக்கிறார். தன்னிகரற்ற, தன் தனித்துவமான கதாபாத்திரங்களாலும், நடிப்பாலும் சிகரம் தொட்ட சிவாஜி கணேசனின் பிறந்த நாள் இன்று. அவரின் இந்த 97-வது பிறந்த நாளில் அவரின் திரைப்பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்…

வி.சி.கணேசன், சிவாஜி கணேசன் ஆனது எப்படி?


‘பராசக்தி’ திரைப்படத்தில் நீதிமன்றத்தில் உணர்ச்சிபூர்வமாக வசனம் பேசும் காட்சியில் சிவாஜி

காலத்தால் அழிக்க முடியாத பல காவியப்படைப்புகளை நம் கலையுலகத்திற்கு விட்டுச்சென்ற நடிப்புலகின் சிம்ம சொப்பனமான சிவாஜி கணேசன், தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டையில் சின்னய்யா மன்றாயர், ராஜாமணி அம்மாள் தம்பதியருக்கு மகனாக 1928-ஆம் ஆண்டு அக்டோபர் 01-ஆம் தேதி பிறந்தார். தனது 10-வது வயதில் வி.சி.கணேசனாக மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை எழுதிய 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' என்ற மேடை நாடகத்தில் சிவாஜியாக சிறப்பாக நடித்து அந்த பாத்திரத்திற்கே உயிர் கொடுத்ததன் மூலம், அந்நாடகத்திற்கு தலைமையேற்க வந்திருந்த தந்தை பெரியாரால், 'சிவாஜி' என்று பெயர் சூட்டப்பட்டார். வி.சி.கணேசனாக இருந்தவர் அன்றுமுதல் சிவாஜி கணேசனாக மாறினார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றி கொள்ள ஆரம்பித்தவர் நிறைய மேடை நாடகங்களில் தன் திறமைகள் மொத்தத்தையும் வெளிக்காட்டி நடித்து வந்தார். இந்த நேரம் தமிழகத்தில் திராவிட இயக்கமும் வேகமாக வளர்ந்து வந்த நிலையில், நடிப்பில் பன்முகத்திறன் கொண்ட ஒரு நடிகர், ஆனால் உறுதியான டயலாக் டெலிவரியும் கொடுக்க தெரிந்தவராக திரையுலகில் தேவை என்பது காலத்தின் கட்டாயமாக இருந்ததால், சிவாஜி கணேசனை தமிழ் திரையுலகமும் அன்புடன் வரவேற்றது. அப்படித்தான் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் கை வண்ணத்தில் அதாவது திரைக்கதை வசனத்தில் உருவாகி 1952-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பராசக்தி’ திரைப்படத்தில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக திரையில் முதல் முதலாக ஒரு நடிகராக தடம்பதித்தார் சிவாஜி. அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக கருதப்பட்ட ‘பராசக்தி’ திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்களால் கொண்டாடி தீர்க்கப்பட்டது. மேலும் இப்படம் சிவாஜிக்கு முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு மொத்த திறமையையும் வெளிச்சம் போட்டு காட்டி மிச்சிறந்த கலைஞன் என்ற பெயரை பெற்றுக் கொடுத்தது. தலைமுதல் கால்வரை அவரின் அத்தனை பாகங்களும் நடிக்கும் என்பதை முதல் படத்திலேயே நிரூபித்துக் காட்டிய சிவாஜிக்கு அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

வரலாற்றில் பேசப்படும் சிவாஜியின் வேடங்கள்


‘மனோகரா’ மற்றும் ‘கர்ணன்’ திரைப்படத்தில்

மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா ஆகிய 3 முதல்வர்களுடனும் பணியாற்றிய ஒரே நடிகர் சிவாஜி கணேசன் மட்டும்தான். அவரது உரையாடல் பாணி மற்றும் நீண்ட உரையாடல்களை மனப்பாடம் செய்து சொல்லும் அவரது நினைவாற்றல் போன்றவை அவருக்கு விமர்சன ரீதியாக சிறப்பானதொரு அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. 1940 மற்றும் 50-களில் பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் இசை சார்ந்து அதாவது 7 முதல் 10 பாடல்களைக் கொண்டு வெளிவந்த காலகட்டமாக இருந்தது. இந்த நேரம், சிவாஜி கணேசனின் படங்கள் பாடல்களே இல்லாமல் கூட வெளிவந்து ட்ரெண்ட் செட்டராகவும் மாறியது. அந்த படம்தான், எஸ்.பாலச்சந்தர் என்பவரின் இயக்கத்தில் 1954-ம் ஆண்டு வெளிவந்த 'அந்த நாள்' திரைப்படம். இப்படம் பாடல்களே இல்லாமல் வெளிவந்து மக்களால் பெருமளவில் கொண்டாடப்பட்டது. இப்படி தொடங்கிய இவரின் திரைப்பயணத்தில் என்றுமே மறக்க முடியாத எத்தனையோ படங்கள் உள்ளன. அதிலும் திரையில் சிவாஜி ஏற்று நடிக்காத வேடங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மனாக, வ.உ.சிதம்பரனாராக, கப்பலோட்டிய தமிழனாக, கர்ணன், ராஜராஜ சோழன் போன்ற பல புகழ் பெற்றவர்களை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திய பெருமை சிவாஜி கணேசன் அவர்களையே சேரும். இப்படி சரித்திர புகழ் வாய்ந்த வேடங்கள் மட்டுமின்றி எதிர்மறை கதாபாத்திரங்கள், இளம் வயதிலேயே அப்பா வேடம், முக்கியத்துவம் வாய்ந்த கதையின் முதன்மை நாயகன் என தனது நடிப்புக்கு தீனி போடும் அனைத்தையும் விட்டு வைக்காமல் தன் இறுதி மூச்சுவரை நடிப்பிற்கே தன்னை அர்ப்பணித்து ஆச்சரியப்படுத்திய சிவாஜி, தொழில்நுட்பம் வளராத அந்த காலத்திலும் தனது 100-வது திரைப்படமான ‘நவராத்திரி’-யில் ஒன்பது வேடங்களை ஏற்று நடித்து அமர்களப்படுத்தினார்.


‘படையப்பா’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிகர் திலகம் சிவாஜி

அதேபோன்று வரலாற்று படங்கள் என மட்டும் இல்லாமல் ஆத்திகம், நாத்திகம் என எந்தவிதமான கேரக்டர்கள் கொடுத்தாலும் அதனையும் சிறப்புற செய்து அசத்தினார். அப்படி ‘திருவிளையாடல்’ தொடங்கி ‘திருவருட்செல்வர்’ , ‘சரஸ்வதி சபதம்’ , ‘திருமால் பெருமை’ என பல புராண காலத்து படங்களில் நடித்து மனதுருகும்படி செய்தவர், திராவிட சித்தாந்தம் கோலோச்சிய நேரத்திலும் திருக்கோயில்களின் பெருமையை பேசி வெற்றி கண்டார். இது தவிர சகோதர பாசம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை தன் தத்ரூபமான நடிப்பால் நெஞ்சுருக செய்த ‘பாசமலர்’ தொடங்கி ‘பாலும் பழமும்’, ‘பாகப்பிரிவினை ‘, ‘பார்த்தால் பசி தீரும்’ போன்ற பா வரிசை படங்களில் தொடர்ந்து வெற்றி ராஜ்யம் செய்தார். அன்பு, பாசம், பரிவு என்று மட்டும் அல்லாமல் ‘ஊட்டி வரை உறவு’, ‘கலாட்டா கல்யாணம்’ ஆகிய படங்களில் நகைச்சுவையிலும் கலக்கியவர், காதலில் பின்னிப்பிணைந்த ‘தில்லானா மோகனம்பாள், கோர முகத்துடன் புறக்கணிக்கப்பட்ட ஒரு மகனின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் ‘தெய்வமகன்’, கொலைகாரனாக வரும் ‘புதிய பறவை’ என பலவிதமான வேடங்களில் நடித்து பன்முகத் திறமையாளர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்தார். 70-களுக்கு பிறகும் ஹிந்தி திரைப்படங்களுக்கே சவால் விடும் படியாக ‘வசந்த மாளிகை’, ‘ராஜா’, ‘பாரதவிலாஸ்’ போன்ற படங்களில் நடித்தவர், ரஜினி கமல் வருகைக்கு பின்னும் தனது வெற்றியை தொடர்ந்தார். இவற்றையெல்லாம் தாண்டி ‘முதல் மரியாதை’ திரைப்படத்தில் முதுமையில் காதல் வந்தாலும் அது காமம் இன்றி எப்படியான ஒரு அன்புடன் இருக்கும் என்பதை தன் எதார்த்தமான நடிப்பால் வெளிப்படுத்தியவர், காலத்திற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொண்டார். இப்படி கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என ஒரு ரவுண்ட் வந்த சிவாஜி கணேசன், தான் நடித்த காலத்திலேயே தனது சமகாலத்து போட்டியாளர்களாக இருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் தொடங்கி ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என பலருடன் எந்தவித ஈகோவும் பார்க்காமல் நடித்ததோடு, அடுத்த தலைமுறை நடிகர்களான ரஜினி, கமல், விஜய்வரை பலருடன் இணைந்து தன் திரையை பகிர்ந்து கொண்டு நடிப்பில் ரசிக்க வைத்தார். அப்படி அவர் கடைசியாக ஒரு பெரிய ஹீரோவுடன் இணைந்து நடித்த படமாக படையப்பாவும், அறிமுக நடிகருடன் இணைந்து நடித்த கடைசி படமாக ‘பூப்பறிக்க வருகிறோம்’ திரைப்படமும் இருந்து வருகிறது.

சறுக்கிய அரசியல், சாதித்த சிவாஜி

தமிழ் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி கண்டவர்கள் மிக சொற்பம்தான். ஆனால், பெரும் கனவுகளுடன் வந்து சோபிக்க முடியாமல் போனவர்களின் எண்ணிக்கை என்பது சற்று அதிகமானது. அப்படி பெரும் கனவுகளுடன் நடிகராக இருந்து அரசியல் பயணத்தில் காலடி எடுத்து வைத்த சிவாஜியாலும் சோபிக்க முடியாமல் போனது வேதனையான ஒரு நிகழ்வுதான். தமிழ் சினிமாவையே கட்டியாண்ட ஒருவரால் அரசியல் களத்தை மட்டும் இறுதி மூச்சுவரை கட்டியால முடியாமல் போனதற்கு காரணம் அவருக்கு நிஜமான ‘அரசியல் தெரியாது’. திமுகவின் அபிமானியாக தனது அரசியல் பயணத்தை துவங்கி, மறைந்த காங்கிரஸ் தலைவர் காமராஜர் மீது கொண்ட மரியாதை மற்றும் பற்றின் காரணமாக தன்னை இந்திய தேசிய காங்கிரஸின் வலுவான ஆதரவாளராக மாற்றிக் கொண்டார். இதன் மூலம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆக்கப்பட்டார். ஆனால், அந்த அரசியல் வாழ்க்கை அவரது வெற்றிகரமான நடிப்பு வாழ்க்கையைப் போல் அல்லாமல் தோல்வியை தழுவியது. பிறகு தனியாக கட்சியும் தொடங்கி தனித்து போட்டியிட்ட சிவாஜி கணேசனால் அதிலும் வெற்றி பெற முடியாமல் ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்து முழுமையாக விலகினார். ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கூட, ‘அரசியலில் இருந்து தூக்கியெறியப்பட்டவன் என்று சொல்வதை விட, அந்த அரசியலுக்கு நான் லாயக்கு இல்லை என்று வெளியே வந்தவன்” என்று கூறியிருந்தார்.


மலர்ந்த முகத்துடன் இரு மாறுபட்ட தோற்றங்களில் நடிகர் திலகம்

ஆனால், தமிழ்நாடு அரசியல் அவருக்கு கை கொடுக்காவிட்டாலும் அவரின் நடிப்பு, உலகம் முழுவதும் பரவியிருந்ததால், எவருக்கும் கிடைக்காத புகழும் பெருமையும் சிவாஜிக்கு கிடைத்தது. 1962-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி தனது நாட்டில் நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சியில் வந்து கலந்து கொள்ளும்படி சிவாஜிக்கு அழைப்பு விடுக்க, அவரும் அந்த அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்றார். இந்தியாவின் கலை தூதுவராக சென்றிருந்த சிவாஜியை கவுரவிக்கும் விதமாக நியூயார்க்கில் உள்ள நயாகரா சிட்டியின் ஒருநாள் மேயராக சிவாஜியை அறிவித்தது மட்டுமின்றி, அவரது கையில் அந்த மாநகரத்தின் தங்க சாவியையும் கொடுத்து பெருமைப்படுத்தினராம் கென்னடி. இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் நேருவை தவிர வேறு யாருக்கும் கிடைக்காத ஒரு கவுரவம் சிவாஜிக்கு மட்டுமே கிடைத்தது தமிழர்களுக்கே உரித்தான பாராட்டுக்குரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதுவரை இப்படியொரு வாய்ப்பு வேறு எந்த தமிழ் நடிகருக்கும் இதுவரை கிடைத்தது இல்லை என்று கூட சொல்லலாம். இதேபோன்று சிவாஜிக்கு கிடைத்த மற்றுமொரு பெருமையான விஷயம் என்னவென்றால் எகிப்து அதிபர் கமல் அப்தெல் நாசர் என்பவர் இந்தியா வந்தபோது அவரை சந்தித்து உபசரிக்க அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் அனுமதிக்கப்பட்ட ஒரே ஆளுமை சிவாஜிகணேசன் மட்டும்தானாம்.

விருதுகளே பெருமைகொள்ளும் சிவாஜி


தன் சிறந்த நடிப்புக்காக விருதுகளை அள்ளிக்குவித்து அன்னை இல்லத்தை அலங்கரித்த சிவாஜி கணேசன்

தமிழ் சினிமாவை சிவாஜிக்கு முன், சிவாஜிக்கு பின் என இரண்டாகப் பிரித்து பார்த்து பேசும் அளவுக்கு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழும் நடிகர் திலகம், தன் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி படங்களில் ஒன்றான 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்திற்காக சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற முதல் இந்திய நடிகர் என்ற வரலாறு படைத்தவர் ஆவார். அதேபோன்று 1995-ஆம் ஆண்டு பிரான்ஸ் அரசாங்கம் வழங்கும் செவாலியர் விருதைப் பெற்ற முதல் இந்திய நடிகர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. மேலும் 1997-ஆம் ஆண்டில், இந்திய அரசு அவருக்கு சினிமா துறையில் இந்தியாவின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதை வழங்கி கவுரவப்படுத்தியது. இதுதவிர விருதுகளே பார்த்து பெருமை கொள்ளும் வகையில் மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன், தேசிய விருது, மாநில அரசின் சிறந்த நடிகர், கலைமாமணி என பலவற்றையும் பெற்று விருதுகளால் தன் அன்னை இல்லத்தை அலங்கரித்துள்ளார் சிவாஜி. இப்படி நடிப்பாலும், தன் ஸ்டைலாலும் ஒட்டுமொத்த ரசிகர்களின் அன்பை பெற்ற சிவாஜி தலைமுறை கடந்தும் ரசிக்கப்படுகிறார், பேசப்படுகிறார் என்றால் அது அவ்வளவு சாதாரணமான நிகழ்வு இல்லை. அதற்கு பின்னால் இருக்கும் கடினமான உழைப்பும், விடா முயற்சியுமே விண்ணை முட்டும் அளவிலான உயரத்திற்கு அவரை அழைத்து சென்றது எனலாம். தன் நடிப்பில் பல வித்தியாசமான உணர்வுகளை அழகாக நமக்கு கடத்திவிடும் சிவாஜி, நிச்சயம் காலங்கள் கடந்தும் போற்றப்படக்கூடிய தன்னிகரில்லா சிங்கம்தான். இப்படிப்பட்ட இந்த சிங்கத்தின் கர்ஜனை 2001-ஆம் ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி இம்மண்ணுலகை விட்டு மறைந்து காற்றோடு கலந்து போயிருந்தாலும், தான் ஏற்ற கதாபாத்திரங்கள் வாயிலாக இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நடிகர் திலகம் சிவாஜியின் புகழை அவரது இந்த 97-வது பிறந்தநாளிலும் பரப்பி நமது வாழ்த்துகளை தெரிவித்திடுவோம்.

Updated On 7 Oct 2024 11:56 PM IST
ராணி

ராணி

Next Story