இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(03.08.1980 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

ஷோபாவின் அப்பாவுக்கு சாதாரணமாக சினிமா என்றால் பிடிக்காது! ஷோபாவை அடிக்கடி சினிமாவுக்கு அழைத்து போனால் சத்தம் போடுவார். "என் மகளை சினிமா பைத்தியம் ஆக்கிவிடாதே” என்று கண்டிப்பார். அவரிடம் போய், "சினிமாவுக்கு போன இடத்தில் ஷோபாவை காணவில்லை என்று சொன்னால், என்ன ஆகும்! அந்தப் பயம் வேறு எனக்கு! நானும் வக்கீல் கமலக் கண்ணனும் ஷோபாவை தேடிச்சென்றோம். பஸ் நிறுத்தத்திலோ, சாலை ஓரங்களிலோ ஷோபாவை காணவில்லை. தியேட்டர் காம்பவுண்டுக்குள் சிறு கும்பல் நின்று கொண்டு இருந்தது!.

"ஸ்டில்"

அந்த கூட்டத்துக்குள் நிற்பாளோ என்று, தியேட்டருக்குள் போனோம். ரசிகர்கள் பார்வைக்காக, பட "ஸ்டில்"கள் வைத்து இருப்பார்கள் அல்லவா? அந்த போர்டு முன் சிறிதும், பெரிதுமாக ஒரு கும்பல் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றது!. நான் அங்கு ஓடிச்சென்று பார்த்தேன். ஷோபா அந்த கும்பலுக்குள்தான் நின்று கொண்டு இருந்தாள்!. கை இரண்டையும் ஸ்டைலாக பின்னால் கட்டிக்கொண்டு, கால்களை உயர்த்தி, படத்தை எட்டிஎட்டிப் பார்த்துக்கொண்டு நின்றாள். அவள் நின்ற "ஸ்டைல்" எனக்கு வியப்பை அளித்தது.

அவளை கடிந்து கொள்வதா? அணைத்துக் கொள்வதா? என்றே எனக்குத் தெரியவில்லை. "இங்கே உனக்கு என்ன வேலை? பேசாமல் கூடவே வர வேண்டியதுதானே” என்று, அவளை தரதர என்று இழுத்துக்கொண்டு, இருக்கையில் போய் அமர்ந்தோம். அதற்குள் படம் முடிந்துவிட்டது! அன்று முதல், வெளியே எங்கு சென்றாலும், நான் ஷோபாவை யாரிடமும் விட்டுவைப்பது இல்லை. நானே வைத்துக் கொள்ளுவேன். சின்ன வயதில், ஷோபா இன்னொரு முறையும் எங்களை கலங்க வைத்தாள்!


சினிமாவுக்கு போன இடத்தில் காணாமல் போன ஷோபா!

பேருந்தில்...

ஒரு நாள், பள்ளிக்கூடத்தில் இருந்து ஷோபாவை அழைத்து வரப்போன போது, அவள் வழக்கமாக நிற்க வேண்டிய இடத்தில் இல்லை. வகுப்பு அறையிலும் காணவில்லை. அழைத்துவர ஆள் போக தாமதம் ஆகிவிட்டதால், ஷோபா வீட்டுக்கு நடக்கத் தொடங்கி விட்டாளோ என்று ஷோபாவின் அப்பா சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கும் பள்ளிக்கூடத்துக்கும் பறந்தார். வழியில் எங்கும் ஷோபாவைக் காணவில்லை. இரண்டு தடவை பள்ளிக்கூடத்துக்கு போய் திரும்பிவிட்டார். எனக்கு பயம் எடுத்தது. மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து, எங்காவது வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கிறாளா என பார்த்து வருகிறேன் என்று அவர் மீண்டும் தேடிப்போனார்! அப்போது, எதிரே பஸ்சில் இருந்து இறங்கி, நடந்து வந்து கொண்டு இருந்தாள் ஷோபா. ஷோபா! அப்பா உன்னைத்தேடி எங்கெல்லாம் அலைந்து கொண்டு இருக்கிறேன் என்று சொன்னார், அவர்.

"ஸ்கூல் விட்டு கொஞ்ச நேரம் நின்று பார்த்தேன். நீங்கள் யாரும் வரவில்லை. ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பஸ்ஸில் போகலாம் வா” என்றார்கள். அதுதான் பஸ்ஸில் வந்தேன்” என்று கொஞ்சமும் பயம் இல்லாமல் சொன்னாள், ஷோபா." அவள் தோழி ஒருத்தி டிக்கெட்டுக்கு காசு கொடுத்து இருக்கிறாள்! வீட்டுக்கு வந்ததும், ஷோபா! இனிமேல் இப்படியெல்லாம் தனியாக பஸ்ஸில் வரக்கூடாது. நாங்கள் வரும்வரை "வாட்ச் மேன்” இடம் நின்றுகொண்டு இருக்க வேண்டும் என்று நான் அன்பாகச் சொன்னேன். “சரி மம்மி” என்றாள். அப்படியே கடைசிவரை நடந்துகொண்டாள். ஷோபா, நினைத்த காரியத்தை சாதிப்பதில் கெட்டிக்காரி!. என்னிடம் கேட்டு, ஏதாவது நடக்கவில்லை என்றால், மெதுவாக அப்பாவிடம் போவாள். "டாடா! கால் பிடித்து விடட்டுமா?" என்று கேட்டுக்கொண்டே, அவருடைய காலை அமுக்கிவிடுவாள். பிறகு மெதுவாக, தனக்கு வேண்டியதை கேட்பாள். அவரால் மறுக்க முடியாது!


"அவள் ஆல்பம் வைகி போயி" என்ற மலையாள படத்தில் ஷீலாவின் தங்கையாக நடித்த ஷோபா

தலைவலி

ஷோபாவின் அப்பாவுக்கு அடிக்கடி தலைவலி வரும். அதற்காக, வீட்டில் நிறைய சாரிடான் மாத்திரை வாங்கி வைத்திருப்பார். காரியம் சாதிப்பதற்கு, சிலநேரம் இந்த மாத்திரைளை பயன்படுத்தி கொள்ளுவாள், ஷோபா. அவர் ஏதாவது வேலையாக வெளியே சென்று திரும்பியதும் அவரை மாத்திரையும், தண்ணீருமாக வரவேற்பாள். அப்போது தலைவலி இருக்கிறதோ, இல்லையோ மாத்திரையை வாங்கி விழுங்கி விடுவார், அவர். மாத்திரை உள்ளே சென்றதும், "என்ன வேண்டும்" என்று கேட்பார். அவள் கேட்டதும் உடனே கிடைக்கும்!.

மகிழ்ச்சி

அப்பா கையிலோ, என் கையிலோ பணத்தைப் பார்த்தால், அவளால் சும்மா இருக்க முடியாது! உடனே வெளியே சுற்றப்போக வேண்டும். சட்டை வாங்க வேண்டும் என்பாள். எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருக்க ஷோபா ஆசைப்படுவாள்!

அழைப்பு

அப்போது ஷோபாவுக்கு 6 வயது இருக்கும். 2-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தாள். அந்த நேரத்தில், "அவள் ஆல்பம் வைகி போயி" என்ற மலையாளப் படத்தில் நடிக்க ஷோபாவுக்கு அழைப்பு வந்தது! ஷோபாவை நடிக்க வைப்பதா, வேண்டாமா என்பதில் என் கணவருக்கும், எனக்கும் மீண்டும் ஒரு போராட்டம் எழுந்தது. எப்படியோ அவரை சமாதானப்படுத்தி, ஷோபா நடிக்க அனுமதி வாங்கினேன். "அவள் ஆல்பம் வைகி போயி" என்ற படத்தில் பிரேம் நசீரும், ஷீலாவும் ஜோடியாக நடித்தார்கள். ஷீலாவின் தங்கையாக ஷோபா நடித்தாள். ஷோபாவுக்கு இது இரண்டாவது படம். அந்தப் படத்திலேயே, அவள் “குட்டி ஊர்வசி” ஆனாள்!. அது எப்படி?

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் தொடரும்…

Updated On 8 Oct 2024 12:02 AM IST
ராணி

ராணி

Next Story