இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி என்று சொன்னாலே டக்கென நமக்கு நினைவிற்கு வருவது ருசியான சமையலும், வயிறை புண்ணாக்கும் நகைச்சுவையும்தான். ஆனால் தற்போது ஒளிபரப்பாகிவரும் ‘குக் வித் கோமாளி’ 5-வது சீசனோ அவ்வாறு அமையவில்லை. இந்த சீசன் துவங்கியது முதலே பல குழப்பங்கள் இருந்துவந்த நிலையில், தற்போது பிரியங்கா, மணிமேகலை மோதல் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது. இருவரில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பது குறித்து இணையத்தில் பலரும் பல்வேறு கருத்துகளை கூறிவருகின்றனர். யார் செய்தது தவறு என்பது குறித்து அலசி ஆராய்ந்தும் வருகின்றனர்.

மணிமேகலை VS பிரியங்கா

தொலைக்காட்சிககளில் ஒரு நிகழ்ச்சி மூலமாக தொகுப்பாளராக வந்து நம்மை மகிழ்விப்பவர்கள் இங்கு ஏராளம். ஒரு நிகழ்ச்சியை மொத்தமாக தாங்கி பிடித்து செல்லும் அந்த தொகுப்பாளருக்கு பொறுப்புகள் என்பது கூடுதலாவே இருக்கும். ஏனென்றால், அந்த நிகழ்ச்சி தொடங்கி முடியும்வரை எந்த பிரச்சினையும் இல்லாமல் செல்வதற்கான மொத்த பொறுப்பும் தொகுப்பாளர் கையிலும், அந்த நிகழ்ச்சியை தலைமை தாங்கி ஒருங்கிணைத்து நடத்தும் புரொடியூசர் கையிலும்தான் இருக்கிறது. அப்படி மிகவும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, அந்த நிகழ்ச்சி வாயிலாக கிடைக்கும் புகழால் குறுகிய காலத்திலேயே அவர்கள் மக்களால் விரும்பப்படும் தொகுப்பாளராக மாறி ஒரு திரை நட்சத்திரத்திற்கு நிகரான புகழ் வெளிச்சத்தை அடைவார்கள். அப்படி புகழ் அடைந்த தொகுப்பாளர்கள் இங்கு பலர் இருந்தாலும், ஒருசிலர்தான் எப்போதும் தங்களை நிலைநிறுத்திக்கொண்டு மக்கள் விரும்பும் நட்சத்திரமாக மிளிர்கிறார்கள். அந்த வகையில், சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒரே நேரத்தில் தொகுப்பாளர்களாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக மக்களுக்கு பிடித்த தொகுப்பாளர்களாக பார்க்கப்பட்டு வருபவர்கள்தான் பிரியங்கா மற்றும் மணிமேகலை. இதில் பிரியங்கா மணிமேகலையை விட கொஞ்சம் சீனியர் என்றே சொல்லலாம். எத்திராஜ் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும்போதே, 2009-ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘தி க்ரிஸ்பி கேர்ள்’, ‘அழகிய பெண்ணே’, ‘அன்பளிப்பு’ ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தார். இதற்கு பிறகு சன் தொலைக்காட்சியில் பணியில் சேர்ந்தவர் அங்கு நான்கு வருடங்கள் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராக பணியாற்றினார். அப்படி அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் "மாமிஸ் டே அவுட்" என்பது அவரது விருப்பமான நிகழ்ச்சியாக இருந்தது. ஆனால், இத்தனை நிகழ்ச்சிகள் தொகுப்பாளராக பணியாற்றியும் பெரிதாக புகழ் பெறவில்லை. இதனையடுத்துதான் 2015-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் பணியில் சேர்ந்தவர், அங்கு இருந்த சீனியர் தொகுப்பாளர்களை தன் தனித்துவமான திறமையால் பின்னுக்குத் தள்ளி, மா.கா.பா ஆனந்துடன் இணைந்து சூப்பர் சிங்கர் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். அப்படி இருவரும் தொகுத்து வழங்கிய எல்லா நிகழ்ச்சிகளுமே சூப்பர் ஹிட் ஆனது மட்டுமின்றி , பிரியங்காவும், மா.கா.பா ஆனந்தும் இணைந்தாலே அந்த நிகழ்ச்சி வெற்றிதான் என்று மக்களே மகிழ்ந்து பாராட்டும் அளவுக்கு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினர்.


தொடக்க காலத்தில் ஒரே தொலைக்காட்சியில் தொகுப்பாளர்களாக பணியாற்றிய பிரியங்கா, மணிமேகலை

இந்த நேரம்தான் இவருக்கு ஒருவருடம் ஜூனியரான மணிமேகலையும் மா.கா.பா ஆனந்த் உதவியுடன் விஜய் தொலைக்காட்சிக்குள் நுழைந்தார். அதற்கு முன்னதாக 2010-ஆம் ஆண்டு தனது 17வது வயதில் சன் மியூசிக்கில் சேர்ந்து ‘சூப்பர் ஹிட்ஸ்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வீடியோ ஜாக்கியாக அறிமுகமானார் மணிமேகலை. இதுதவிர சன் மியூசிக்கில் கமல்ஹாசன் போன்ற பிரபலங்களின் நேர்காணல்கள் மட்டுமின்றி சில முக்கியமான ரியாலிட்டி ஷோக்களையும் தொகுத்து வழங்கியுள்ள இவர், தன் திறமையால் எளிதாக புகழ் வெளிச்சம் அடைந்து மக்கள் விரும்பும் தொகுப்பாளராக மாறினார். அதற்கு சாட்சிதான், அவர் 2016-ஆம் ஆண்டு அப்போது தமிழக கவர்னராக இருந்த கே.ரோசய்யாவிடம் இருந்து உலக மனித ஒருங்கிணைப்பு கவுன்சில் சார்பாக சிறந்த தொகுப்பாளருக்கான விருதினை பெற்ற நிகழ்வு. இதன்மூலம் ரசிகர்களால் “ஆங்கர் சூப்பர் ஸ்டார்” என்றும் அழைக்கப்பட ஆரம்பித்தார். இப்படி சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றி புகழ்பெற்ற பிறகுதான் 2019-ஆம் ஆண்டு தன் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களால் சன் நெட்வொர்க்கை விட்டு வெளியே வந்து விஜய் டிவியில் சேர்ந்தார் மணிமேகலை. அவர் பங்குபெற்ற முதல் நிகழ்ச்சியாக மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி அமைந்தது. இதில் தன் கணவர் உஸைனுடன் போட்டியாளராக பங்குபெற்றவர், அந்த நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று 2வது ரன்னர் அப் விருது பெற்றார். இதன்பிறகு அங்கு இருந்த ஒருசிலரின் வழிகாட்டுதலால் அங்கேயே சில சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கும் வாய்ப்பை பெற்று விஜய் தொலைக்காட்சியில் நிரந்தர பணியாளராகவே மாறினார். பிறகு அதுவரை தொகுப்பாளராக மட்டுமே அறியப்பட்ட மணிமேகலை, ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி இன்னும் மக்கள் மனங்களில் நிலையானதொரு இடத்தை பிடித்தார். இப்படி பிரியங்கா, மணிமேகலையின் தொகுப்பாளர் பயணம் ஒரேமாதிரியாக துவங்கி வெவ்வேறு வெற்றிகளை பெற்றிருந்த நேரத்தில்தான் அவர்களுக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த போட்டிகள், பொறாமைகள் ஒரு கட்டத்தில் எல்லோருக்கும் தெரியும் வகையில் வெளிப்பட்டு இன்று ஒட்டுமொத்த தமிழகமும் விவாதிக்கும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது.


தமிழக முன்னாள் கவர்னர் கே.ரோசய்யாவிடம், சிறந்த தொகுப்பாளருக்கான விருது பெற்ற மணிமேகலை

என்னதான் நடந்தது?

விஜய் தொலைக்காட்சியில் சமையலோடு, நகைச்சுவையையும் கலந்து மக்களை மகிழ்விக்கும் விதமாக நான்கு சீசன்களை கடந்து 5-வது சீசனாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிதான் ‘குக் வித் கோமாளி’. உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களுக்கிடையே இருக்கும் ஆர்வத்தை நாளுக்கு நாள் அதிகரிக்கச் செய்து எப்போதும் TRP ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரபல செஃப்களான தாமு மற்றும் வெங்கடேஷ் பட் தொடங்கி கோமாளிகளாக இடம்பெறும் போட்டியாளர்களையும் பிரபலமடைய செய்தது. அந்த வரிசையில், மணிமேகலை, குரேஷி, புகழ், பாடகி ஷிவாங்கி, பாலா மற்றும் சுனிதா என பலர் கடந்த நான்கு சீசன்களாக கோமாளிகளாக தங்கள் நகைச்சுவையால் மக்களை மகிழ்வித்து வந்தனர். இதில் 4-வது சீசனிலேயே, மணிமேகலை, இனி கோமாளியாக தொடர முடியாது.. எனக்கு தொகுப்பாளர் வாய்ப்பு வேண்டும் என்று கூறி வெளியேறியதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், ‘குக் வித் கோமாளி’ 5-வது சீசன் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியபோது , செஃப் வெங்கடேஷ் பட் இந்த சீசனில் இல்லை, மேலும் கடந்த நான்கு சீசன்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனமும் மாறி புதிய தயாரிப்பு நிறுவனம் களத்தில் இறங்கி பல மாற்றங்களுடன், புதிய செஃப் மற்றும் கோமாளிகளுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த முறை தொகுப்பாளர் ரக்சனுடன், புதிய தொகுப்பாளராக அதுவரை கோமாளியாக இருந்த மணிமேகலையும் களமிறங்க, விஜய் டிவியில் பல ஹிட் ஷோக்களை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா போட்டியாளராக களமிறங்கினார். ஏற்கனவே இவர்கள் இருவருக்குள்ளும் சிறுசிறு புகைச்சல்கள் இருந்துவந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களான பிறகு தினம் ஒரு மனக்கசப்பு, பிரச்சினை வெடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.


குக் வித் கோமாளியில் தொகுப்பாளராக களமிறங்கிய மணிமேகலை - குக்காக களமிறங்கிய பிரியங்கா

அதிலும் தொகுப்பாளர் மணிமேகலையின் வேலையில் பிரியங்காவின் தலையீடு அதிகம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் நீண்ட நாட்களாக தயாரிப்பு நிறுவனம், பிரியங்கா, மணிமேகலை ஆகியோரிடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும், திவ்யா துரைசாமி எலிமினேட் ஆன நாளன்று மோதல் பெரிதாகி வாய் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது . ஒரு கட்டத்தில் தயாரிப்பு நிறுவனம், மணிமேகலையிடம் எல்லாவற்றிற்கும் ஒத்துக்கொண்டுதானே நிகழ்ச்சிக்குள் வந்தீர்கள். ஒரு தொகுப்பாளராக யாருடனும் உங்களால் ஒத்துபோய் நிகழ்ச்சியை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியவில்லை என்றால், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிடுங்கள் என்று கடிந்து கொண்டதாகவும், அதனாலேயே கோபத்தில் மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததாகவும் சொல்கின்றனர். மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்து தனது இன்ஸ்டா மற்றும் யூடியூப் தளத்தில் தன்னிலை விளக்கம் அளித்தது மட்டுமின்றி தமிழர்களுக்கே உரிய தன்மானத்தையும் இதில் சேர்த்து பேசியிருந்ததால் இன்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனத்தையும் ஈர்த்து பேசுபொருளாக மாறியுள்ளது. யார் ஒருவர் தனது தரப்பு நியாயத்தை முதல் ஆளாக எல்லாருக்கும் முன்பாக விளக்க முயற்சி செய்கிறார்களோ அவர்கள் பக்கம்தான் நியாயம் இருக்கும் என்று எல்லோரும் நினைத்துவிடுவது ஒருபுறம் இருந்தாலும், மணிமேகலையின் இந்த விளக்கத்திற்கு எதிர்விளக்கம் பிரியங்கா தரப்பில் இருந்து இதுவரை வரவில்லை. அதற்கு பதிலாக அந்நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற்ற குரேஷியில் தொடங்கி புகழ் வரை பலரும் அவரவர் கருத்துகளை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். பிரச்சினை ஓய்ந்துவிடும் என்று பார்த்தால் நாளுக்கு நாள் சமூக ஊடங்களில் பேசும் ஓவ்வொருவரின் கருத்துகளால் பெரிதாகிக்கொண்டே இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு பின்னால் போட்டியும், பொறாமையும், ஆதிக்க சிந்தனையுமே காரணமாக சொல்லப்பட்டாலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இங்கு குறைந்து வருவதையும் இது உணர்த்துகிறது.


பிரியங்கா, மணிமேகலை மோதல் தொடர்பாக வீடியோ வெளியிட்டுவரும் விஜய் டிவி பிரபலங்கள்

யார் மேல் தவறு?

பொதுவாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் கமர்ஷியலாக மக்களிடம் வரவேற்பை பெறுவது ஒருபுறம் இருந்தாலும், விமர்சன ரீதியாக விவாதத்திற்கு உள்ளாவது என்பது அடிக்கடி நடக்கக்கூடிய நிகழ்வுதான். இது அன்றைய ஜோடி No.1 துவங்கி இன்றைய பிக்பாஸ் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இது அவர்களின் TRP-யை உயர்த்துவதற்கான நூதன முயற்சி என சொல்லப்பட்டாலும், பார்க்கின்ற மக்களின் BP-யையும் சேர்த்தேதான் எகிற வைக்கிறது. அதன் அடிப்படையில்தான் மணிமேகலை, பிரியங்கா விவகாரமும் இன்று சமூக ஊடகங்களின் வாயிலாக மக்களின் உணர்வுகளை தூண்டி விவாத பொருளாக மாறியுள்ளது. இங்கு யார் மேல் தவறு என்பதை ஆராய்வதற்கு முன்பாக ஒவ்வொருவரும் தங்களை தாங்களே சுயபரிசோதனை செய்துக்கொள்வது நல்லது. காரணம் இங்கு எந்த துறையில்தான் டாமினேஷன் என சொல்லப்படக்கூடிய ஆதிக்க சிந்தனை இல்லை. சாதாரண மளிகை கடை துவங்கி மாட மாளிகைவரை எல்லா இடங்களிலுமே சீனியர் ஜூனியர் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. ஏன் தமிழக அரசியல் கட்சிகளில்கூட இதே பிரச்சினை நீண்ட காலமாக தொடர்ந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. எனவே அதன் அடிப்படையில் பார்க்கும்போது மணிமேகலை, பிரியங்கா விவகாரமும் சாதாரண சீனியர், ஜூனியர் பிரச்சினைதான். இருவருமே தங்களுடைய பயணத்தை ஒரே நேரத்தில் சன் டிவியில் துவங்கி இருந்தாலும், விஜய் டிவியை பொறுத்தவரை பிரியங்காவே சீனியராக பார்க்கப்படுகிறார். எனவே அவருக்கென்று இருக்கும் பிரபலத்தை அடிப்படையாக கொண்டே விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றன. இதில் சில தனிப்பட்ட நபர்களின் ஆதரவு, TRP போன்ற விஷயங்கள் பிரியங்காவிற்கு கை கொடுத்தாலும், இங்கு எதுவுமே நிரந்தரம் கிடையாது. ஏனெனில் அன்று டிடி, பாவனா விட்டு சென்ற இடத்தைதான் பிரியங்கா இன்று நிரப்பி இருக்கிறார். நாளை நிச்சயம் வேறொருவர் நிரப்ப வருவார். ஒருவேளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா பங்கு பெறாமல் இருந்திருந்தால் இந்த விவகாரத்தில் மணிமேகலைக்கு நிகரான ஆதரவு அவருக்கும் கிடைத்திருக்கலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த நெகட்டிவிட்டியின் தொடர்ச்சியே இன்று கமெண்ட்ஸ்களாக பிரியங்காவை பதம்பார்த்து வருகின்றன.


பிரியங்கா, மணிமேகலை மோதலால் எழுந்த சர்ச்சைகள்

பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கை துவங்கி அவரது மொழி, இனம்வரை ஒவ்வொன்றின் மீதும் கற்கள் வீசப்படுகின்றன. இது இன்றைய சமூகத்தின் மீது ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. டாமினேஷன் சிந்தனை என்பது தவறே என்றாலும், ஒருவர் மீது வைக்கப்படும் எல்லை மீறிய விமர்சனமும் மோசமான ஒன்றுதான். கோபம் கொள்ள வேண்டிய பிரச்சினைகளுக்கு மௌனத்தையும், கடந்து செல்ல வேண்டிய செய்திகளுக்கு ஆக்ரோஷத்தையும் உணர்வாக வெளிப்படுத்தும் மக்களே இன்று பிரதானமாக இருக்கிறார்கள். இது சமீபகாலமாக பல நிகழ்வுகளில் நமக்கு தெளிவாக புலப்படுகிறது. தனிப்பட்ட முறையில், தான் ஏன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளி வந்தேன்? அந்த முடிவை எடுக்க காரணமாக இருந்த நிகழ்வு என்ன? போன்றவற்றை விளக்குவதற்காகவே மணிமேகலை பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனக்கு ஏற்பட்ட வலியை கொஞ்சம் ஆழமாகவும், தன்னுடைய சுயமரியாதை சிந்தனையை மிக அழுத்தமாகவும் சொன்னது பாராட்டுக்குரியதே என்றாலும், அதனை சமூக ஊடகங்களில் சிலர் வன்மத்தோடு பரப்பிய விதம் பிரியங்காவின் சுயமரியாதையை இன்று கேள்விக்குள்ளாகி உள்ளது. ஊடகங்கள் பரபரப்புக்காக பரப்பிய செய்தியை சிலர் சுய லாபத்திற்காகவும், அற்ப சந்தோஷத்திற்காகவும் விவாத பொருளாக்கியதே இங்கு தவறு என கூறலாம். மிக விரைவில் துவங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னோட்டமாக அமைந்துள்ள இந்த நிகழ்வை பார்க்கும்போது, சமூக ஊடகங்களில் வன்மத்தை கொட்டி தீர்க்கும் நபர்களை நோக்கி தேவர் மகன் படத்தின் கிளைமாக்ஸில் கமல் சொல்லும் ‘போங்கடா, போய் புள்ள குட்டிங்கள படிக்க வைங்கடா’ என்கிற வசனமே பேச தோன்றுகிறது.

Updated On 30 Sept 2024 11:50 PM IST
ராணி

ராணி

Next Story