நகரங்கள் தொடங்கி கிராமங்கள்வரை இன்று மக்களை எளிதாக சென்றடைந்து மகிழ்விக்கும் எத்தனையோ நிகழ்ச்சிகளில் பிரதானமாக இருப்பது தொலைக்காட்சி தொடர்கள்தான். அந்த தொடர்கள் மூலமாக நமக்கெல்லாம் பலர் பரிட்சயமானாலும், நம் குடும்பத்தில் ஒருவராக மாறிப்போனாலும், அத்தனை நிகழ்வுகளுக்குப் பின்னாலும் இயக்குநர் என்ற ஒருவர் இல்லையென்றால் இவை அனைத்தும் சாத்தியமில்லை. அப்படி சினிமா இயக்குநர், சீரியல் இயக்குநர் என எந்த பாகுபாடும் இல்லாமல் பணியாற்றும் இவர்களின் ஒரே நோக்கம் மக்களை சந்தோஷப்படுத்துவதுதான். அப்படி கலைத்துறைக்குள் வந்து 25 ஆண்டுகளை கடந்து இன்றும் ஒரு சிறு இளைஞனை போன்று தன் படைப்புகளை மிக நேர்த்தியாக நமக்கு வழங்கிக்கொண்டு இருப்பவர்தான் சுந்தரி தொடரின் இயக்குநர் அழகர் சாமி. ‘நீ நான் அவள்’ என்ற தொடரில் தொடங்கி ‘சரவணன் மீனாட்சி’ பாகம்-1, ‘பாசமலர்’, ‘திருமணம்’, ‘ஏழாம் உயிர்’, ‘சாக்லேட்’ என பல வெற்றி தொடர்களை இயக்கி வரவேற்பை பெற்றது மட்டுமின்றி தற்போது சன் தொலைக்காட்சியில் ‘சுந்தரி’ என்ற வெற்றிகரமான தொடரையும் இயக்கி வருகிறார் இவர். இந்த நிலையில், தன் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர் பயணம் மற்றும் தான்கண்ட வெற்றி, தோல்விகள் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை நமது ராணி நேயர்களுக்காக அவர் பகிர்ந்து கொண்டதை இங்கே காணலாம்.
உங்களுக்கான இயக்குநர் பயணம் எங்கிருந்து தொடங்கியது? வெற்றிகரமான தொடர்களை எப்படி உங்களால் தொடர்ந்து கொடுக்க முடிகிறது?
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வடுகபட்டி கிராமம்தான் எனது சொந்த ஊர். எல்லோரும் சொல்வதுபோல எனக்கு சிறுவயதில் இருந்தே நிறைய சினிமா பார்க்கும் பழக்கம் இருந்ததால், அதன் மீதுதான் அதீத ஆர்வம் இருந்தது. வீட்டில் நான் விருப்பப்படும் எதற்கும் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டார்கள். அப்போதுதான் சினிமா தொடர்பாக படிக்க ஒரு கல்லூரி சென்னையில் இருப்பது தெரியவந்தது. முயற்சி செய்து பார்த்தோம்; கிடைக்கவில்லை. அதன் பிறகு அப்பா என்னை டிப்ளமோ இன் எலக்ட்ரானிக் படிக்க சேர்த்துவிட்டார். ஆனால், கல்லூரிக்கு சென்று படிப்பதில் எனக்கு பெரிதாக ஈடுபாடு இல்லாததால், நான் தினமும் கல்லூரி செல்வதாக கூறிவிட்டு, வீட்டில் யாருக்கும் தெரியாமல் படம் பார்க்க சென்று விடுவேன். ஒரு நாளைக்கு குறைந்தது 2 படமாவது பார்த்துவிடுவேன். நான் செய்யும் இந்த திருட்டு தனத்தை என்னுடைய பாட்டி எப்படியோ கண்டுபிடித்து, இவன் சரி இல்லை... இவனை கொஞ்சம் கவனியுங்கள். கல்லூரிக்கு சென்று விசாரியுங்கள் என்று அப்பாவிடம் போட்டு கொடுத்துவிட்டார். அப்பாவும் கல்லூரிக்கு வந்து, அப்போது கல்லூரி முதல்வராக இருந்த சுவாமிநாதனிடம் விசாரித்தார். அவரும், அவனுக்கு சினிமாதான் விருப்பம் என்றால் அதிலேயே சேர்த்துவிடுங்களேன்... ஏன் விருப்பம் இல்லாத ஒன்றில் போட்டு தொந்தரவு செய்கிறீர்கள்? என்று கூறவும், அப்பா உடனே உன் விருப்பப்படியே போய் படி என்று கூறிவிட்டார். ஆனால் சென்னை வந்து கல்லூரியில் சேரவே மூன்று வருடம் போராட வேண்டியிருந்தது. கடுமையான போரட்டங்களுக்கு பிறகு நான் வணங்கிய எல்லா கடவுள்களின் உதவியுடனும் இறுதியாக 1994-ல் சென்னை அடையாறு திரைப்பட கல்லூரியில் எடிட்டிங் பிரிவில் சேர்ந்து படித்தேன். இயக்கம் மீதுதான் எனக்கு விருப்பம் என்றாலும் நான் +2 முடித்துவிட்டு வந்திருந்ததால் அந்த பாடப்பிரிவு எனக்கு கிடைக்கவில்லை. அங்கு படிக்கும்போது எனக்கு கிடைத்த நட்பு வட்டமே வேறு. என்னுடன் படித்தவர்கள்தான் ‘யாரடி நீ மோகினி’ இயக்குநர் ஜவகர், ‘ஜில்லா’ பட இயக்குநர் நெல்சன், ‘பானா காத்தாடி’ வெங்கடேஷ், சிறுத்தை சிவா ஆகியோர். இப்படி இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்.
மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த சரவணன் மீனாட்சி தொடர்
நான் எடிட்டிங் படித்ததால்தான் என்னால் எந்தவொரு காட்சியையும் கடகடவென எளிதாக எடுக்க முடிகிறது. மூன்று வருடம் படித்து முடித்து கல்லூரியை விட்டு வெளியே வந்த நான் இயக்குநர் சுசி கணேசனிடம் உதவி இயக்குநராக பணியில் சேர்ந்தேன். அவர் பிரசாந்தை வைத்து எடுத்த ‘விரும்புகிறேன்’ திரைப்படத்தில் கதை விவாதத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். அதிலும் எப்போதும் அவரிடம் உள்ள நல்ல பழக்கமே ஒரு கதையை விவாதிப்பதற்கு முன்பு அது உண்மையாக நடந்த சம்பவமா? என்பதை ஆராய்ச்சி செய்து அதை கதையாக எடுப்பதுதான். அப்படி அவரின் ‘விரும்புகிறேன்’ படத்தில் கூட அந்த தீயணைப்பு காட்சிகளை அப்போது நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில்தான் எடுத்தார். அதற்கான விஷயங்களை நாங்கள்தான் சேகரித்து கொடுத்தோம். படத்தின் கதை விவாதம்வரை நான் அதில் பணியாற்றினேன். பிறகு அப்போதே கொஞ்சம் கொஞ்சமாக தொலைக்காட்சி தொடருக்குள் வந்துவிட்டேன். இதற்கு பிறகு சிறிதுகாலம் இயக்குநர் செல்வராகவனிடம் பணியாற்றினேன். அப்போது எனது கல்லூரி நண்பரும், இப்போதைய திருச்சிற்றம்பலம் இயக்குநருமான ஜவகர் மூலமாகத்தான் நான் அவரிடம் சேர்ந்தேன். செல்வராகவனை பொறுத்தவரை அவர் ஒன்மேன் ஆர்மி மாதிரிதான். அதனால் அவரை பின்தொடர்ந்து நாமாக கற்றுக்கொள்ளலாமே தவிர, நம் சிந்தனைகளை நுழைக்க முடியாது. அதனால்தான் அவர் இன்றும் ஒரு வெற்றிகரமான இயக்குநராக தன்னை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.
சுசி கணேசனின் 'விரும்புகிறேன்' திரைப்படத்தில் பணியாற்றியது குறித்து பகிர்ந்துகொண்ட இயக்குநர் அழகர்
உங்களது நண்பர்கள் எல்லோரும் இன்று சினிமாவில் பெரிய பெரிய இயக்குநர்களாக வலம் வரும்போது, நாம் அதை தவறவிட்டு விட்டோமே என்று நினைத்தது உண்டா?
நிச்சயமாக இல்லை. அப்போது அண்ணி சீரியல் இயக்கி கொண்டிருந்த சமுத்திரக்கனி சார் கூறுவார்; சினிமாவை விட சீரியல் இயக்குவதுதான் கடினம். சினிமாவில் நிறைய ஸ்பேஸ் அதாவது இடம், நேரம் கிடைக்கும். ஆனால், சீரியல் அப்படி இல்லை. இங்குதான் சவால்கள் நிறைய இருக்கும். அப்படியிருக்கும்போது நாம் இங்கு சாதித்துவிட்டால், சினிமாவிலும் எளிதாக சாதித்து விடலாம் என்று. இன்னொன்று நான் ‘ஆடாத ஆட்டம் எல்லாம்’ என்று ஒரு திரைப்படத்தை இயக்கி இருக்கிறேன். ரஹ்மான் சார் சகோதரியும், ஜி.வி-யின் அம்மாவுமான ரெய்ஹானா மேம்தான் அந்த படத்திற்கு இசையமைத்தார்கள். மீரா ஜாஸ்மின் சகோதரி ஜெனி ஜாஸ்மின் அதில் நடித்திருந்தார். பாரதி, மன்சூர் அலிகான் போன்றோர்களெல்லாம் நடித்திருந்தார்கள். ஒரு நல்ல அறிவார்ந்த ஒருவன் போதை பொருளுக்கு அடிமையானால் என்னென்ன பின்விளைவுகளை சந்திப்பார் என்பதை அடிப்படையாக வைத்துதான் அப்படத்தை எடுத்தேன். ஆனால், அன்றைய சூழலுக்கு அதை மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆவரேஜ் என்ற நிலையில் படமும் ஓடியது. அதற்கு பிறகுதான் முழுக்கு முழுக்க சீரியல்களில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
சினிமா, சீரியல் இரண்டுக்குமான இயக்கம் குறித்து சமுத்திரக்கனி கூறியதுபற்றி மனம்திறந்த அழகர்
சீரியலுக்கான முதல் வாய்ப்பு யார் தந்தது?
எங்கள் திரைப்பட கல்லூரியின் தந்தை என்று பெருமைபட்டு கொள்ளக்கூடிய ஆபாவாணன் சார்தான் தொலைக்காட்சியில் எனக்கான முதல் வாய்ப்பை வழங்கினார். ஆபாவாணன் என்ற ஒரு மனிதர் இல்லை என்றால் திரைப்பட கல்லூரி பற்றி யாருக்கும் பெரிதாக தெரிந்திருக்காது. தொழில்நுட்பம் பெரிதாக இல்லாத அந்த காலத்திலேயே இணைந்த கைகள், உழவன் மகன் போன்ற அற்புதமான படைப்புகளை எடுத்திருக்கிறார் என்றால் சாதாரண விஷயம் கிடையாது. பிரம்மாண்டத்தின் உச்சமே அவர்தான். இப்போதும் பிரம்மாண்டம் இருக்கிறது. ஆனால், அதற்கு ஏற்றாற்போல் தொழில்நுட்பமும் வளர்ந்து இருக்கிறது. ஆபாவாணன் சார் காலகட்டங்களில், மனிதனின் மூளை ஒன்று மட்டுமே மூலதனம். அப்படிப்பட்ட அந்த ஜீனியஸ்தான் என்னை எனது கல்லூரி பேராசிரியர் ரவிராஜ் மூலமாக அழைத்து பேசினார். அப்போது விஜய் டிவியில் ‘நீ நான் அவள்’ என்ற தொடர் போய்க்கொண்டிருக்கிறது. அதில் நீங்கள் ஸ்கிரிப்ட் சைடு வேலை பார்த்து தந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். அவரிடம் எனக்கு ஸ்கிரிப்ட் எழுத வராது. நான் சினிமாவுக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லவும்; உடனே அப்போ நீ இயக்குநராக வந்துவிடு என்று சொன்னார். அந்த சமயம் நான் தெலுங்கில் வெற்றிபெற்ற ஒரு படத்தை கன்னடத்தில் புனித் ராஜ்குமாரை வைத்து இயக்க வேண்டும் என்று கதை சொல்ல தயாராகிக்கொண்டிருந்தேன். ஆனால், அந்த சமயம் ராஜ்குமார் - வீரப்பன் பிரச்சினை மேலோங்கி இருந்ததால், பிறகு புனித்தை வைத்து படம் இயக்குவது தள்ளிப்போனது. ஆபாவாணன் சாரும் விடாமல் தொடர்ந்து அவ்வப்போது வந்து இயக்கிவிட்டு போ என்று சொன்னதால் நானும் ஓகே சொல்லி இயக்க ஆரம்பித்தேன். நான் எடுத்த முதல் ஷூட்டே விஜய் டிவி நிர்வாகத்தினருக்கு மிகவும் பிடித்துவிட்டதால் என்னையே தொடர சொல்லி சொல்லிவிட்டார்கள். அதன் பிறகு எனக்கு அங்கேயே தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்துவிட்டன. அப்படித்தான், குட்டி பத்மினி மேடம் தயாரிப்பில் ‘தில்லு முள்ளு’ என்ற நகைச்சுவை தொடர், ‘காத்து கருப்பு’ என்ற ஹாரர் தொடர், ரோஜா கூட்டம் என்ற குடும்ப கதை, ‘காதல்’ என்ற நட்சத்திரங்களின் நிஜ கதை, ‘யாமிருக்க பயமேன்’ என எண்ணற்ற தொடர்களை இயக்கினேன்.
இயக்குநர் அழகருக்கு, சீரியலுக்கான முதல் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ஆபாவாணன்
இத்தனை தொடர்கள் இயக்கி இருந்தாலும், உங்களுக்கான அங்கீகாரமாக அமைந்தது சரவணன் மீனாட்சி பாகம் ஒன்றுதான். அதுபற்றி சொல்லுங்களேன்?
உண்மைதான். அந்த கதை, அதில் நடித்தவர்களின் நடிப்பு என அனைத்துமே நமது குடும்பத்திற்குள் நடப்பது போன்ற ஒரு உணர்வை தரும். எப்போதுமே என்னுடைய ப்ராஜெக்டுகளில், எந்த ப்ராஜெக்ட்டாக இருந்தாலும் ஒரு எதார்த்தம் அதாவது லைவ்லிநஸ் இருக்க வேண்டும் என நினைப்பேன். சரவணன் மீனாட்சி தொடரை அப்படித்தான் எடுத்தேன். முதலில் இந்த கதை எனக்கு எப்படி வந்தது என்றால், ரகுமான் என்பவர்தான் இந்த கதையின் ரைட்டர். அவர் திடீரென ஒருநாள் என்னை அழைத்து சரவணன் மீனாட்சி என்ற டைட்டிலில் ஒரு கதை இருக்கிறது. அதை நீங்கள்தான் இயக்கப்போறீங்க என்று கதையை விளக்கி படப்பிடிப்புக்கு அழைத்து போய்விட்டார். இன்றும் அது மக்கள் மத்தியில் பேசப்படுகிறது என்றால், அவரின் எழுத்துதான் காரணம். காமெடியாக ஒரு விஷயத்தை ஆரம்பித்து அதற்குள் ஒரு சோகம் மீண்டும் மகிழ்ச்சி என்று வித்தியாசமாக கொண்டு போயிருப்பார். அவர் கதையை என் கையில் கொடுக்கும்போது ஒருவிதமாக இருக்கும். நான் எடுத்து முடித்த பிறகு வேறுவிதமாக இருக்கும். பிறகு நான் எடுத்திருப்பதை பார்த்துவிட்டு அவரே நீங்கள் எடுத்திருக்கும் விதம் வேறுவிதமாக நன்றாக இருக்கிறது, சூப்பர் அழகர் என்று பாராட்டுவார்.