இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(20.07.1980 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது)

சோபாவுக்கு சந்திரபாபுவை நிரம்பப் பிடித்துவிட்டது. "அங்கிள்... அங்கிள்" என்று வீட்டுக்குப் போகத் தொடங்கினாள். ஷோபா வீட்டுக்குச் சென்றதும், அவளை முதுகில் உட்காரவைத்து "உப்பு மூட்டை" சுமந்து, விளையாட்டுக் காட்டுவார், சந்திரபாபு. உப்பு மூட்டை தூக்குவது என்றால், ஷோபாவுக்கு நிரம்பப் பிடிக்கும்! அவள் வீட்டில் இருக்கும் பொழுது, அப்பாவை அடிக்கடி உப்பு மூட்டை தூக்கச் சொல்லி தொந்தரவு செய்வாள். சில நேரம், நானும் அவளை உப்பு மூட்டைத் தூக்கி விளையாட்டுக் காட்டுவது உண்டு!

முயல் பூனை

சந்திரபாபு வீட்டில் முயல், பூனை, அணில், மீன் ஆகியவற்றை வளர்ப்பார். அவையும் ஷோபாவை கவர்ந்துவிட்டன. சந்திரபாபு "அங்கிளை" ஷோபா விரும்பிய அளவுக்கு மேல், அவரும் அவள் மீது அன்பு செலுத்தினார். அவள் தொடர்ந்து சில நாள் வீட்டுக்குச் செல்லவில்லை என்றால், சந்திரபாபு "போன்" செய்துவிடுவார். நாங்கள், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் இருந்தபோது, ஷோபாவின் சித்தப்பா (என் கணவரின் தம்பி ) கே. பி. அரவிந்த் மேனன் எங்களோடு இருந்தார். அவருக்கு டெலிபோன் இலாகாவில் வேலை. ஓர் அதிகாரியாக இருந்தார். அரவிந்த் மேனனுக்கு உரிய டெலிபோன் 88088 என்ற எண்ணைக் கொண்டது. அது எங்கள் வீட்டில்தான் இருந்தது!

சில நாள், நான் போனை எடுத்து "யார் பேசுவது?" என்று கேட்பேன். "ஷோபா இருந்தால் கொடுங்கள். என்னை அவளுக்குத் தெரியும்" என்று ஒரு முரட்டுச் சத்தம் எதிர் முனையில் இருந்து வரும். அவர், தலைபோகிற அவசரம் போல ஷோபாவைத் தேடுவார். நான் ஷோபாவிடம் டெலிபோனை கொடுத்து விட்டு, அருகே நிற்பேன். "அங்கிள் எத்தனை வேணும்?" என்று கேட்டுவிட்டு, "இச்......இச் இச்...!'' என்று அவர் கேட்டதை போனில் கொடுப்பாள், ஷோபா பிறகு, "வாறேன்... போறேன்" என்று என்ன வெல்லாமோ பேசிக் கொள்வார்கள்.


"தட்டுங்கள் திறக்கப்படும்" படத்தில் ஷோபாவை திரையில் அறிமுகம் செய்துவைத்த சந்திரபாபு

அழைப்பு

இந்த நேரத்தில், "தட்டுங்கள் திறக்கப்படும்" என்ற படத்தை, சந்திரபாபு சொந்தமாகத் தயாரிக்கத் தொடங்கினார். அந்தப் படத்தில் நடிப்பதற்கு, நிறைய சிறுமிகள் தேவைப்பட்டார்கள். "ஷோபாவையும், உங்கள் பேத்தியையும் (நசிரினா) படத்தில் நடிக்க வைக்கப் போகிறேன்" என்று ஒளிப்பதிவாளர் மஸ்தானிடம் சந்திரபாபு கூறியிருக்கிறார். ''எதற்கும் ஷோபாவின் பெற்றோரிடம் கேட்டுச் சொல்கிறேன்” என்று மஸ்தான் சொல்லிவிட்டு வந்துவிட்டார்.

மகிழ்ச்சி

என்னிடம் வந்து, "ஷோபாவை சினிமாவல் நடிக்க வைக்கிறீர்களா? ஓரிரு நாள்தான் படப்பிடிப்பு. இதனால் படிப்புக்கு தடங்கல் ஏற்படாது" என்று மஸ்தான் சொன்னார். அதைக் கேட்டதும். நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் நடிகையாக இருந்தவள். நடிப்பில் "ஒகோ" என்று ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டவள். ஆனால், திருமணம் ஆனதால், எனது ஆசைக் கனவுகள் நிறைவேறவில்லை. ஷோபா, பாட்டைக் கேட்டு ஆடுவதையும், அபிநயம் பிடிப்பதையும் பார்க்கும் என் தோழிகள், “பிரேமா! உன் ஆசைக் கனவுகளை, உன் மகள் நிறைவேற்றி வைப்பாள். எதிர்காலத்தில் சிறந்த நடிகை ஆவாள்” என்று கூறுவார்கள்.

அது, நடக்கப் போகிறது என்று தெரிந்ததும், எனக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. "எனக்கு விருப்பம் தான். எதற்கும் ஷோபா அப்பாவிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு சொல்கிறேன்" என்று மஸ்தானிடம் சொன்னேன். ஆனால், ஷோபாவை சினிமாவில் நடிக்க வைக்க, அவள் அப்பா சம்மதிப்பாரா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. திருமணத்துக்குப் பிறகு என்னை சினிமாவில் நடிக்கக் கூடாது என்று கண்டிப்பாக சொல்லி விட்டார், அவர். அதன் பிறகு, எத்தனையோ வாய்ப்பு வந்தும், நான் நடிக்கவில்லை. சினிமா என்றாலே அவருக்கு அப்படியொரு வெறுப்பு!. மாலையில் அவர் வீட்டுக்கு வந்ததும் பக்குவமாக பேச்சைத் தொடங்கினேன். "மஸ்தான் சொன்னார்...... சந்திரபாபுவின் சொந்தப் படத்தில் ஷோபாவுக்கு ஒரு சின்ன வேடமாம்... உங்களிடம் அனுமதி கேட்கச் சொன்னாராம்...!” என்றேன். ''சினிமா பேச்சே எடுக்காதே! அவள் படிப்பு கெட்டுவிடும்" என்று அவர் பட்டென்று சொல்லி விட்டார்.


ஷோபா சிறந்த நடிகையாக வருவாள் என சிறுவயதிலேயே பாராட்டினாராம் சந்திரபாபு

“ஒரு நாள் போனால் போதுமாம். சந்திரபாபு ரொம்பவும் விரும்புகிறார். ஷோபாவும் ஆசைப்படுகிறாள்" என்று சொன்னேன். "முதலில் இப்படித்தான் ஆசை வரும். பிறகு, அது வளர்ந்து கொண்டே போகும்... என்றார், அவர். “ஷோபா மட்டும் நடிக்கவில்லை. மஸ்தான் சார் பேத்தி நசிரினாவும் நடிக்கிறாள்" என்று நான் கூறினேன். "சரி சரி! இந்த ஒரு படம்தான். அதன் பிறகு, இந்தப் பேச்சே எடுக்கக் கூடாது" என்று எழுந்தார், அவர். அவர் இவ்வளவு சீக்கிரம் அனுமதி அளித்தது, எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

படப்பிடிப்பு அன்று, நசிரினாவுக்கு உடல் நலம் சரி இல்லை. எனவே, ஷோபாவை மட்டுமே மஸ்தான் அழைத்துப் போனார். "கண்மணி பாப்பா! மனிதன் பிறந்தது குரங்கில் இருந்துதான் என்று சொன்னது தப்பா!” என்ற பாட்டுக்கு, சந்திரபாபு சிறுமிகளை முதுகில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் காட்சியில் ஷோபா நடித்தாள். இதுதான் ஷோபா நடித்த முதல் படம். ஷோபாவோடு, இப்போதைய நடிகைகளான ஜெய கவுசல்யா, உஷா ராணி ஆகியோரும் நடித்தார்கள்.

பாராட்டு!

அன்றைய படப்பிடிப்பு முடிந்ததும், ஷோபாவை சந்திரபாபு மகிழ்ச்சியோடு தட்டிக் கொடுத்தார். "ஷோபாவை நடிக்க வைத்தால், சிறந்த நடிகை ஆவாள்” என்று பாராட்டினார். அதில் ஷோபாவுக்குக் கொள்ளை மகிழ்ச்சி! அவளுக்கு நடிப்பில் ஆர்வம் அதிகம் ஆயிற்று. ஆனால், அது கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாகிவிட்டது.

Updated On 23 Sep 2024 5:23 PM GMT
ராணி

ராணி

Next Story