தமிழ் சினிமாவிற்கும் பரத கலைக்குமான தொடர்பு என்பது அன்றைய பத்மினி, வைஜயந்தி மாலா காலம் துவங்கி வெண்ணிற ஆடை நிர்மலா, ஷோபனா, பானுப்ரியா, சுகன்யா என இன்றைய லட்சுமிமேனன் வரை தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக இவர்களில் பெரும்பாலானவர்கள் இங்கு நட்சத்திர நாயகியாகவும் வலம் வந்தவர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு அழகான நடிகையாகவும், மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞராகவும் வலம்வரும் திருமதி. சுதா ஸ்வர்ணலட்சுமி அவர்கள் தன்னுடைய திரைப்பயண அனுபவம் மற்றும் பரத கலைக் குறித்த பல கேள்விகளுக்கு நம்மிடையே பதிலளித்துள்ளார். அந்த நேர்காணலின் ஒரு பகுதியை இங்கே காணலாம்.
நீங்கள் எப்படி பரதநாட்டியத்தின் மீது ஆர்வம் கொண்டீர்கள்? உங்களின் நடன பயணம் எப்படி துவங்கியது? உங்கள் குரு மற்றும் பயிற்சியாளர்கள் யார்?
நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான வெண்ணிற ஆடை நிர்மலாதான் என்னுடைய சித்தி. நான் வளர்ந்தது அவரோடுதான். அவர் ஒரு மிகப்பெரிய நடிகையாக இருந்தபோதும், பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகளை விடாமல் தொடர்ந்து வெவ்வேறு ஊர்களில் நடத்தி வந்தார். இதனால் சிறுவயதில் இருந்தே எங்கள் வீட்டில் பரதநாட்டியத்திற்கான ஒத்திகை தினம்தோறும் நடைபெற்று கொண்டிருக்கும். இதை பார்த்தே வளர்ந்த நான் இயல்பாகவே பரதத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு, யாரும் பயிற்சிக் கொடுக்காமலேயே பரதநாட்டியத்தை நன்கு கற்றுக் கொண்டேன். சொல்லப்போனால் எங்கள் வீட்டில் நான் பரதம் காற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. ஏன் விருப்பமே இல்லை என்று கூட சொல்லலாம். நான் நன்றாக படிக்க வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. இருப்பினும் அதையும் மீறி நான் கற்றுக் கொண்டேன். அப்படி ஒருமுறை என் சித்தி வெண்ணிற ஆடை நிர்மலா அவர்களுடன் ஒரு கலை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது எங்கள் குழுவில் ஆடக்கூடிய நடன கலைஞர் ஒருவர் வரவில்லை. அந்த முறை மேடை ஏறிய நிகழ்வில் குழு நடனம் பிரதானமான ஒன்றாக இருந்தது, இதனால் கண்டிப்பாக ஒரு பரதநாட்டிய கலைஞர் தேவைப்பட்ட சூழலில்தான், நான் ஆடவா என என் சித்தியிடம் கேட்டேன். நான் முறையாக கற்றுக்கொள்ளவில்லையே என்கிற சந்தேகம் அவரிடத்தில் இருந்தாலும், கட்டாயத்தின் காரணமாக என்னையும் மேடை ஏற்றினார். ஆனால் மிக நன்றாகவே நான் நடனம் ஆடியதால் தொடந்து எனக்கு வாய்ப்புக் கொடுத்து முழு நேர பரதநாட்டிய கலைஞராகவே என்னை மாற்றினார். இவ்வாறுதான் எனது நடன பயணம் துவங்கியது.
சித்தி வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் சுதா ஸ்வர்ணலட்சுமி
உங்களின் பள்ளி பருவம் எப்படி இருந்தது? அங்கு உங்களது நடன திறமையை வெளிக்காட்டியுள்ளீர்களா?
பள்ளியில் நான் கலந்துக் கொள்ளாத நிகழ்ச்சிகளே இல்லை. போட்டிகளிலும் பங்கு பெறுவேன். அப்போது நிச்சயமாக எங்களுக்குதான் முதல் பரிசு கிடைக்கும். ஒருகட்டத்தில் நான் 9ஆம் வகுப்பு படிக்கும்போதெல்லாம் என் சித்தி வெண்ணிற ஆடை நிர்மலா அவர்களுடன் இணைந்து பல நடன நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தேன். இதனால் எங்கள் பள்ளியின் சார்பாக சில நடன போட்டிகளில் கலந்துக்கொள்ள செல்லும்போது பிற பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் என்னை பார்த்து இவள் சிறப்பு பயிற்சி பெற்ற ஆளுமைமிக்க நடன கலைஞர், இதனால் இவர் போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது என கூறுவார்கள். காரணம் நிச்சயமாக நான்தான் வெற்றி பெறுவேன் என்பதனால். இருப்பினும் பள்ளியில் என்னை பிற குழந்தைகளை போலவே சாதாரணமாகதான் நடத்துவார்கள். எனக்கென சிறப்பு முக்கியத்துவம் எதுவும் கொடுக்க மாட்டார்கள். என் பள்ளி நாட்கள் மிக மகிழ்ச்சியான தருணங்கள் என்பேன். அந்த சமயம் படிப்பிலும் சரி, நடனத்திலும் சரி எனக்கு எந்த ஒரு அழுத்தமும் இருந்தது கிடையாது.
நீங்கள் எந்தெந்த பெரிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளீர்கள்? உங்களால் மறக்கமுடியாத நிகழ்ச்சி ஏதேனும் உள்ளதா?
தனது நாட்டிய குழுவுடன் சுதா ஸ்வர்ணலட்சுமி
நான் உலக அளவில் பல பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று இருக்கிறேன். இங்கு தேசிய அளவில் கூட எங்களது நடன குழு சார்பில் பல அரங்கேற்றங்கள் நடைபெற்றுள்ளன. அப்படி ஒருமுறை என்னுடைய துவக்க காலத்தில் பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு 'பாரதி கண்ணம்மா' என்கிற பெயரில் நடன நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் தமிழக அரசு சார்பாக நடைபெற்றது. அப்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தார். அந்த நிகழ்ச்சிக்காக உலகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த சமயத்தில், குலுமணாலியில் ஒரு நடன போட்டி நடைபெற்றது. அப்போது தமிழ்நாட்டின் சார்பாக எங்கள் குழு அங்கு பங்குபெற்றதோடு, அதில் நாங்கள் வெற்றியும் பெற்றோம். அப்போது திடீரென ஒருநாள் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து எங்கள் வீட்டிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் இன்று மாலை முதல்வர் உங்கள் குழுவை சந்தித்து வாழ்த்து கூறவுள்ளதாக அவர்கள் கூறினார்கள். எனக்கோ சந்தோஷத்தை அடக்க முடியவில்லை. உடனே நாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எம்.ஜி.ஆர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றதோடு, எங்களுக்கு சான்றிதழும் தரப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இன்றும் என் வீட்டு ஹாலை அலங்கரித்து வருகிறது. இப்போதும் என் வீட்டுக்கு வருபவர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்படாமல் இருந்தது கிடையாது.
கதாநாயகியாக வர வேண்டும் என்பது உங்களின் கனவாக இருந்ததா அல்லது எதேச்சையாக நடந்த நிகழ்வா?
சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்ததே இல்லை - சுதா ஸ்வர்ணலட்சுமி
எனக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் என் வாழ்க்கையில் இருந்தது கிடையாது. அந்த வகையில் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்கிற ஆசையும் எனக்கு இல்லை. இருப்பினும் நடனத்தின் மீது மட்டும் மிகப்பெரிய ஆர்வம் இருந்தது. இந்த நேரம் என் சித்தியை பார்க்கவரும் ஒவ்வொரு பெரிய இயக்குநர்களும் என்னை பார்த்துவிட்டு படத்தில் நடிக்க வைக்குமாறு எங்கள் குடும்பத்தினரிடம் கேட்பார்கள். ஆனால் எங்கள் வீட்டில் உள்ளவர்களோ சினிமா மீது பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. இருப்பினும் ஒரு கட்டத்தில் தொடர்ந்து வாய்ப்புகள் தேடி வரவே, சரி முயற்சித்து தான் பார்ப்போம் என்கிற முனைப்பில் சினிமாவிற்குள் நுழைந்தேன். இதில் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் துளியும் கிடையாது. தானாக அமைந்து வந்ததால் நடிக்க வந்தேன்.
முதல் படமே டி. ராஜேந்தர் இயக்கத்தில் ஒரு சூப்பர் ஹிட் படம்? அடுத்த படம் கார்த்திக்குக்கு ஜோடி.. அந்த அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
டி. ராஜேந்தரின் அறிமுகம், கார்த்திக்குக்கு ஜோடி என சினிமா அனுபவம் பற்றி பகிர்ந்துகொண்ட சுதா
டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'என் தங்கை கல்யாணி' படத்தில் நடிக்கும் போது எனக்கு 17 வயது. விவரம் தெரியாத பருவம், இருந்தும் நல்ல அனுபவமாக இருந்தது. அதிலும் அப்போது டி. ராஜேந்தர் மிகப்பெரிய இயக்குநராக இருந்ததோடு, அமலா போன்ற மிகப்பெரிய நடிகைகளை அறிமுகம் செய்துவைத்து பிரபலமாகவும் இருந்தார். ஆனால் எனக்கு தெரியவில்லை எதன் அடிப்படையில் டி. ராஜேந்தர் அவர்கள் என்னை அப்படத்தில் கதையின் நாயகியாக தேர்ந்தெடுத்தார் என்று. இன்றும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. இது குறித்து அவருக்கு நெருக்கமாக இருக்கும் ஒருவரிடம் நான் எதேச்சையாக கேட்டபோது, உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையில் அவர் உங்களை தேர்வு செய்யவில்லை, அவர்மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையாலேயே உங்களை கதையின் நாயகியாக தேர்ந்தெடுத்திருப்பார் என்று கூறினார். அதுவும் உண்மையாகத்தான் எனக்கு தோன்றியது. அதே போல் அடுத்த படத்திலேயே கார்திக்கிற்கு ஜோடியாக நடித்ததும் நல்ல அனுபவமாக இருந்தது. அப்படத்தில் நடிகை சரண்யாவும் என்னுடன் இணைந்து நடித்திருந்தார். அப்போது இருவருமே என்னுடன் நல்ல நட்பு பாராட்டி இருந்தாலும், சரண்யா இன்றும் என்னுடன் தொடர்பில் உள்ளார்.
நடிகை, பரதநாட்டிய கலைஞர் என பயணித்து வந்த நீங்கள் திடீரெனெ திரையுலகைவிட்டு விலகியது ஏன்? ஏதேனும் காரணம் இருக்கிறதா?
நாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் சுதா ஸ்வர்ணலட்சுமி
தொடர்ந்து எனக்கு பட வாய்ப்புகள் வந்தன. இருந்தும் என்னால் திரைப்பிரபலம் என்கிற அந்த அந்தஸ்தை தக்கவைக்க முடியவில்லை. காரணம், விருப்பம் இல்லை என்று கூட சொல்லலாம். மேலும் நான் முன்பே கூறியதுபோல் எனக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருந்ததில்லை. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணமும் இல்லை. இதனால் சினிமாவில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு முழுக்க முழுக்க நடனத்தில் என் பயணத்தை துவங்கினேன். நான் சித்தியுடன் இணைந்து நடனம் ஆடி வந்த சமயத்தில் என்னுடன் கலா, பிருந்தா, சுசித்ரா போன்ற பிரபலமான நடன கலைஞர்களும் சேர்ந்து ஆடி இருக்கிறார்கள். பின்னாளில் அவர்கள் மிகப்பெரிய நடன கலைஞர்களாக மாறி இன்றும் ஜொலித்து வருகிறார்கள். இருப்பினும் அவர்களை போலவும் ஆக வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு தோன்றவில்லை. எனக்கு பிடித்தமான நடன பள்ளியை துவங்கி பல மாணவர்களுக்கு பரதம் கற்றுத்தர துவங்கினேன். அதேவேளையில் எனக்கு திருமணம் நடந்து குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்ததால், முழுக்க முழுக்க குழந்தைகளை பார்த்து கொள்வதிலேயே நேரம் சென்றது. இப்போது எனது இரு பெண் குழந்தைகளும் வெவ்வேறு துறைகளில் பயணித்தாலும், அவர்களும் நடனம் கற்று தேர்ந்தவர்களாகவே இருக்கிறர்கள். இதில் ஜெர்மனியில் வாழும் எனது மகள் ஸ்ரீதேவி, ஐடி துறையில் பணிபுரிந்து வந்தாலும், நடன பள்ளி துவங்கி அங்கு உள்ள மாணவர்களுக்கு பரதம் கற்றுதந்து வருகிறார்.