
அழகு என்பதற்கு எப்படி எந்த வரையறையும் கிடையாதோ… அதுபோன்றுதான் காதலும். காதல் எப்போது யார் மீது எதற்காக வருகிறது என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. அப்படியான காதலுக்கும், தமிழ் சினிமாவுக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. ஆக்சன் படமாக இருந்தாலும் சரி, காதல் படமாக இருந்தாலும் சரி அந்த படத்தில் இணைந்து நடிக்கும் நடிகர், நடிகைகள் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொள்வது என்பது காலம் காலமாக நடைபெற்று வரும் ஒன்றுதான் என்றாலும், ஒரு இயக்குநரோ, அல்லது அதே சினிமாவில் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஒருவரோ ஒரு நடிகையை திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வு என்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதற்கு பல பேர் இங்கு உதாரணங்களாக சொல்லப்பட்டாலும், அந்த வரிசையில் தற்போது நடிகை மேகா ஆகாஷும் இணைந்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிசியான நடிகையாக வலம்வரும் இவர், தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான அரசியல்வாதி ஒருவரின் மகனை காதலித்து கரம் பிடிக்கவுள்ளார் என்பதுதான் இப்போது மிகவும் ஹாட் டாப்பிக்காக உள்ளது. அந்த அரசியல்வாதியின் மகன் யார்? இவர்களுக்கான அறிமுகம் எப்படி நிகழ்ந்தது? திருமணம்வரை சென்றுள்ள இவர்களின் காதல் எப்படியான தருணத்தில் உண்டானது? ஒரு நடிகையாக மேகாவின் திரைப்பயணம் எப்படி தொடங்கியது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம்.
சினிமா எண்ட்ரி
மென்மையான பேச்சு, அழகான சிரிப்பு என எப்போதும் காட்சியளிக்கும் நடிகை மேகா ஆகாஷ், தெலுங்கில் 'லை' என்ற திரைப்படத்தின் மூலமாக தன் சினிமா பயணத்தைத் தொடங்கினார். இதன் பிறகு தமிழில் இவர் தேர்வான முதல் படம் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஒரு பக்க கதை’. இப்படத்தில் காளிதாஸ் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்திருந்த மேகா ஆகாஷை கவனித்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்தான் அப்போது நடிகர் தனுஷை வைத்து இயக்கிய ‘எனை நோக்கி பாயும்’ தோட்டா திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார். ஆனால், இவ்விரு படங்களும் வெளிவருவதில் தாமதம் ஏற்படவே மேகா ஆகாஷுக்கு தமிழ் சினிமாவில் அறிமுகப்படமாக அமைந்தது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘பேட்ட’ திரைப்படம். இப்படத்தில் அன்வர் வேடத்தில் வரும் நடிகர் சனத் ரெட்டியின் காதலியாக அனு என்னும் கதாபாத்திரத்தில் நடித்து முதல் படத்திலேயே எல்லோருடைய மனதிலும் பதிந்தார். இதற்கு பிறகுதான் இவர் தனுஷுடன் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, சிம்புவுடன் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, காளிதாஸுடன் நடித்த ‘ஒரு பக்க கதை’ ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் சிம்புவுடன் இவர் நடித்திருந்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் தெலுங்கில் நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் மற்றும் சமந்தா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற 'அத்தாரின்டிகி தாரேதி' எனும் திரைப்படத்தின் ரீமேக்காகும். தெலுங்கு பதிப்பை போலவே தமிழ் பதிப்பும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைபெற இதன் மூலம் மேகா ஆகாஷ் புகழ் பெற்று தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு தனி இடத்தை உருவாக்கினார்.
மேகா ஆகாஷின் 'லை' மற்றும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' ஆகிய திரைப்படங்களின் போஸ்டர்கள்
இதைத்தொடர்ந்து, அதர்வாவுடன் 'பூமராங்' என்ற திரைப்படத்திலும், விஜய் சேதுபதியுடன் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ திரைப்படத்திலும் நடித்தவர், சமீபத்தில் அசோக் செல்வனுடன் 'சபாநாயகன்', சந்தானத்துடன் ‘வடக்குப்பட்டி ராமசாமி’, விஜய் ஆண்டனியுடன் 'மழை பிடிக்காத மனிதன்' ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். இப்படங்களில் இவரது மென்மையான குரலும், அலட்டல் இல்லாத நடிப்பும் பலரையும் கவர்ந்தது. இதற்கிடையில் பாலிவுட்டில் ‘சேட்டிலைட் சங்கர்’, ‘ராதே’ போன்ற படங்களிலும் முதன்மையான நாயகி வேடங்களில் நடித்து அங்கும் கவனம் பெற்றார். இப்படி தென்னிந்திய அளவில் கவனிக்கப்படும் நடிகையாக வலம்வரும் நடிகை மேகா ஆகாஷ் அண்மையில், தான் ஆறு வருடமாக காதலித்துவந்த சாய் விஷ்ணு என்பவருடன் நடந்த நிச்சயதார்த்த புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்மூலம் அவர் திருமணம் செய்துகொள்ளப்போகும் நபர் யார்? அவர் எப்பேற்பட்ட ஒருவரின் மகன், இவர்களுக்கான அறிமுகம் எப்படி ஏற்பட்டது? போன்ற பல கேள்விகளும், அதற்கான பதில்களும் பேசுபொருளாக மாறி தற்போது சமூக ஊடங்களில் ட்ரெண்டாகி வலம் வந்து கொண்டிருக்கின்றன.
காதல் மலர்ந்தது எப்படி?
'மழை பிடிக்காத மனிதன்' பட வெளியீட்டிற்கு பிறகு சாய் விஷ்ணுவுடன் நடைபெற்ற மேகாவின் நிச்சயதார்த்தம்
மேகா ஆகாஷ் திருமணம் செய்துகொள்ளவுள்ள சாய் விஷ்ணு தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல்வாதியின் மகன் ஆவார். அதாவது எம்ஜிஆர், ஜெயலலிதா என மிகப்பெரிய அரசியல் தலைவர்களுடன் இணைந்து பயணித்தவர் என்பதோடு மட்டும் அல்லாமல், தொழில்துறை அமைச்சர், மத்திய இணை அமைச்சர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என பல பொறுப்புகளை வகித்த திருநாவுக்கரசரின் இரண்டாவது மனைவியின் இளைய மகன் தான் இவர். சாய் விஷ்ணு மிகப்பெரிய அரசியல்வாதியின் மகனாக இருந்தாலும் ஏனோ தெரியவில்லை தந்தை வழியை பின்பற்றி அரசியலில் போக விருப்பம் இல்லாமல் சினிமாவில் பயணம் செய்ய விருப்பப்பட்டுள்ளார். மகனின் ஆசையை நிறைவேற்றும் விதமாக தந்தை திருநாவுக்கரசரும் மகனை அமெரிக்காவுக்கு அனுப்பி ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக படிக்க வைத்துள்ளார். அந்த படிப்பை முடித்த கையோடு சென்னை திரும்பியவர் யாரிடமாவது உதவி இயக்குநராக இருந்தால்தான் ஒரு அடையாளம் கிடைக்கும் என்று இயக்குநர் பா.ரஞ்சித்திடம் சேர்ந்து ‘காலா’, ‘கபாலி’ உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இதே வேளையில் சில குறும்படங்களும் எடுத்துவந்த சாய் விஷ்ணு அதற்காக பல நபர்களை சந்தித்து ஆடிஷன் செய்து வந்துள்ளார். அப்படி அவர் எடுத்த குறும்படத்தில் நடிக்க வந்தவர்தான் மேகா ஆகாஷ். இங்கு ஆரம்பித்த இருவருக்குமான அறிமுகம் நாளாக நாளாக காதலாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட இருவரும் சந்தித்து பழக ஆரம்பித்தது 9 ஆண்டுகள் என்றாலும், காதலித்து வருவது என்னவோ கடந்த ஆறு ஆண்டுகளாகத்தானாம். ஒருகட்டத்தில் சாய் விஷ்ணு சினிமா வேண்டாம் என்று தொழிலில் கவனம் செலுத்த, மேகா தமிழ், தெலுங்கு திரையுலகில் விடாமல் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை எட்டி பிடித்துள்ளார். இந்த நிலையில், இவர்களின் காதல் இருவீட்டாருக்கும் தெரிவிக்கப்பட, அந்த காதலுக்கு அவர்களும் பச்சைக்கொடி காட்ட, தற்போது மிகவும் சந்தோஷமாக திருமண பந்தத்தில் நுழைய உள்ளனர். அந்த சந்தோஷத்தை எல்லோருக்கும் தெரிவிக்கும் விதமாக தன் நீண்டநாள் கனவு, ஆசை அனைத்தும் நிறைவேறிவிட்டதாக இன்ஸ்டாவில் நிச்சயதார்த்த புகைப்பட பதிவில் தெரிவித்துள்ளார் மேகா. இதற்கு அவரின் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
சட்டென திருமணம்
காங். மூத்த தலைவர் திருநாவுக்கரசரின் இரண்டாவது மகனை கரம்பிடிக்கும் மேகா ஆகாஷ்
இருவரும் எப்போது காதலிக்க ஆரம்பித்தார்கள் என்று எல்லோரும் ஒருபுறம் ஆச்சர்யப்பட, கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிவதை போல் சாய் விஷ்ணு - மேகா ஆகாஷ் ஜோடியின் நிச்சயதார்த்தம் கடந்த 22-ஆம் தேதி சென்னையில் எளிமையாக இருவீட்டு உறவினர்கள் முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நடிகை மேகாவும், சாய் விஷ்ணுவுடன் நடந்த நிச்சயதார்த்த புகைப்படத்தை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வெளிப்படுத்தியுள்ளார். தற்போது திருமண வேலைகளில் மிகவும் பிசியாக இருக்கும் மேகா, இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு முன்பாக கமிட்டான படங்களை நடித்து முடித்துவிட்டு, ஒரேடியாக குடும்ப பெண்மணியாக மாறிவிடலாம் என்ற யோசனையில் இருப்பதாக ஒருசிலர் கூறிவருகின்றனர். எது எப்படி இருந்தாலும் ஒரு மிகப்பெரிய அரசியல்வாதியின் வீட்டு மருமகளாகப்போகிறார் மேகா. இந்த திருமணம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி அன்று, சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அதற்கு முதல் நாள் 14-ஆம் தேதி இவர்களது திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. மேகா - சாய் ஆகாஷ் திருமணம் கலைகட்ட தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் மேகா - சாய் விஷ்ணு இருவரும் தங்களது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்று அங்கு ரஜினிகாந்தை சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்து வாழ்த்து பெற்றுள்ளனர். அப்பொழுது சூப்பர் ஸ்டாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் மேகா ஆகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மகன் சாய் - மேகா திருமண அழைப்பிதழை, ராகுலுக்கு நேரில் வழங்கிய திருநாவுக்கரசர்
இப்படி மணமகன், மணமகள் தங்கள் சினிமா வட்டத்தில் நெருங்கிய நட்பில் உள்ளவர்களுக்கு பத்திரிக்கையை வைத்து அழைப்பு விடுக்க, இன்னொருபுறமோ சாய் விஷ்ணுவின் தந்தையான திருநாவுக்கரசர் மகனின் திருமண பத்திரிக்கையை அரசியல் கட்சி தலைவர்களுக்கு கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார். அண்மையில் டெல்லியில் ராகுல் காந்தியை நேரில் சென்று சந்தித்து தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கி திருமணத்திற்கு அழைப்புவிடுத்த அவர், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட முன்னணி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தார். இவர்களை தொடர்ந்து திமுக தலைவரும், தமிழகத்தின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மைய கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் உள்பட தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மகனின் திருமண அழைப்பிதழை பதிவிட்டுள்ள திருநாவுக்கரசர், இதனையே திருமண அழைப்பாக ஏற்று அனைவரும் வந்து வாழ்த்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். சாய் விஷ்ணு - மேகா ஆகாஷின் திருமணம்தான் திருநாவுக்கரசர் வீட்டில் நடக்கும் கடைசி திருமண வைபோக விழா என்பதால் நிச்சயம் இந்த நிகழ்வு மிகவும் பிரம்மாண்டமாக நடக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
