தமிழ் சினிமாவில் ஆக்ஷன், காதல், கமர்ஷியல் படங்களுக்கு என்று எத்தனையோ இயக்குநர்கள் இருந்தாலும், இவர்களில் இருந்து தனித்துவமாக தெரியக்கூடிய ஒருவராக இன்றும் பார்க்கப்படுபவர் இயக்குநரும், நடிகருமான ஏ.வெங்கடேஷ்தான். 1996-ஆம் ஆண்டு ‘மகாபிரபு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி விஜய், அர்ஜுன், சிம்பு, பிரஷாந்த், அருண் விஜய் என அப்போதைய முன்னணி நட்சத்திரங்கள் பலரையும் வைத்து ‘பகவதி', 'ஏய்', ‘சாணக்யா', ‘வாத்தியார்’, ‘துரை’, ‘மலை மலை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர். அதிலும் குறிப்பாக காதல் நாயகன் என்ற நிலையிலேயே பயணித்துக்கொண்டிருந்த தளபதி விஜய்யை ‘பகவதி’ படத்தின் மூலமாக ஒரு மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்திற்கு உயர்த்திய பெருமையும் இவருக்கு உண்டு. இப்படி பல பெருமைகளை கொண்ட ஏ.வெங்கடேஷ், இயக்கத்தை தாண்டி ஒரு சிறந்த நடிகராகவும் தற்போது சினிமா துறையில் பயணித்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், ராணி ஆன்லைன் நேயர்களுக்காக அவர் வழங்கிய பிரத்யேக பேட்டியின் ஒரு பகுதியை இந்த கட்டுரையில் காணலாம்.
இயக்குநருக்கான பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக நீங்கள் ஒரு பத்திரிகையாளராக அதுவும் எங்களின் மாலை மலர் பத்திரிகையில் பணியாற்றி இருக்கிறீர்கள். அதுபற்றி சொல்லுங்களேன்?
எனக்கும் தினத்தந்தி குழுமங்களில் ஒன்றான மாலை மலர் பத்திரிகைக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. இங்குவந்து நான் அமர்ந்து பேட்டி கொடுப்பதற்கு அதுவும் ஒரு காரணம். என்னுடைய வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை தொகுத்து ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டிருக்கிறேன். வெளியில் அந்த புத்தகத்திற்கு நிறைய வரவேற்பு இருக்கிறது. அந்த புத்தகத்தில் ஒரு அத்தியாயம் ‘யானை போட்ட மாலை’ என்று எழுதியிருப்பேன். காரணம் என்னுடைய வாழ்க்கையில் நான் தொட்டிருக்கும் உயரங்களுக்கான முதல் மாலையை போட்டது தினத்தந்தி என்ற யானைதான். என்னை பொறுத்தவரையில், ஒருவர் சினிமாவுக்கு வர முயற்சிக்கிறார் என்றால் முதலில் நன்கு எழுதவும், நிறைய வாசிக்கவும் பழகியிருக்க வேண்டும். நான் படித்துக் கொண்டிருக்கும்போதே நிறைய சிறுகதைகள் எழுதுவேன். அந்த சிறுகதைகள் அப்போதே திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் மாலை மலர் பத்திரிகையில் வெளியாகி வந்தது. பிறகு கல்லூரி படிப்பை முடித்த நேரம் மாலை மலர் பத்திரிகைக்கு நிருபர் தேவை என்ற விளம்பரம் வந்ததை பார்த்து நானும் விண்ணப்பித்தேன்.
மாலை மலர் பத்திரிகையில் பணியாற்றியது குறித்து பகிர்ந்துகொண்ட இயக்குநர் A.வெங்கடேஷ்
எத்தனையோ ஆயிரம்பேர் கலந்துகொண்ட அந்த நேர்காணலில் நான் கலந்துகொண்டது மட்டுமின்றி, நான் சிவந்தி ஆதித்தனார் அவர்களின் ஆசியுடன் தேர்வாகி சேலம் மாலை மலர் அலுவலகத்தில் பயிற்சி பெற்று, திருச்சி எடிஷனின் நிருபராக ஒரு எட்டு மாத காலம் பணியாற்றினேன். சேரும் போதே சினிமா ஆசை எனக்கு இருக்கிறது; அதனால் எழுத்து அனுபவம் பெற்றுக்கொண்டு சினிமாவுக்கு போய்விடுவேன் என்று அய்யாவிடம் சொல்லித்தான் சேர்ந்தேன். சொன்னது போலவே ஒருவருடம் முடிவதற்குள்ளாக சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்துவிட்டேன். அந்த குறுகிய காலத்தில் எனக்கு பத்திரிகை துறையில் கிடைத்த அனுபவங்கள் என்பது அபரிமிதமானது. அந்த அனுபவங்கள் பின்னாளில் எனக்கு நிறையவே உதவின.
மீடியாவில் அன்றும், இன்றும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? இப்போது உள்ள மீடியாக்களின் அணுகுமுறை எப்படி இருக்கிறது?
எங்களுடைய காலத்தில் ஒரு செய்தியை சேகரித்து கொடுக்க நிறைய சிரமங்களை சந்திக்க வேண்டி இருந்தது. அதிலும் ஒரு செய்தியை சேகரித்து கொண்டுவந்து சரியான நேரத்திற்கு கொடுப்பதில் நிறைய பிரச்சினைகள் இருந்தன. நாம் செய்தி சேகரிக்க செல்லும் இடங்களில் கேள்விகள் கேட்பதில் கூட நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால், இன்று அப்படி இல்லை. மீடியாக்கள் மிகவும் சுதந்திரமாக செயல்பட ஆரம்பித்திருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது எல்லா துறைகளிலும் இருக்கிறது. அதனால் பத்திரிகை துறையிலும் அன்று இருந்த சிரமங்கள் இன்று இல்லை. இருந்த இடத்தில் இருந்தே இப்போது ஒரு செய்தியை எளிதாக சேகரித்து கொடுத்துவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சுதந்திரமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் நமக்கு ஒருபுறம் சந்தோஷத்தை கொடுத்தாலும், இன்னொருபுறம் எல்லோருக்கும் வேலை பளுவும் அதிகமாக இருக்கிறது. காரணம் இன்று மீடியாக்கள் அதிகமாகிவிட்டன. அதனால், போட்டிகளும் அதிகரித்துவிட்டன. இவற்றையெல்லாம் தாண்டி பத்திரிகைத்துறை என்பது ஒரு சுகமான, நிறைய அனுபவங்களை கற்றுத் தரக்கூடிய இடமாக இருக்கிறது என்பதுதான் உண்மை.
திரைப்பட இயக்கத்தின்போது இயக்குநர் A. வெங்கடேஷ்
மீடியா தொடர்பாக படித்துவிட்டுவரும் மாணவர்களுக்கு இயக்குநராக நீங்கள் சொல்லக்கூடிய விஷயம் என்னவாக இருக்கும்?
வாழ்க்கையில் ஒரு டிகிரி வாங்க வேண்டும் என்றால் ஒன்றாம் வகுப்பில் இருந்து படிப்படியாக முன்னேறி 12-ஆம் வகுப்பு முடித்தால்தான் அந்த நிலையை அடைய முடியும். அதுபோன்றுதான் சினிமாவாக இருக்கட்டும், இல்லை வேறு எந்த துறையாக இருக்கட்டும் அதில் அனுபவம் என்பது அவசியம். இப்போது சினிமாவை எடுத்துக்கொண்டால் முன்பெல்லாம் உதவி இயக்குநருக்கான தகுதி நன்கு எழுத தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான். ஆனால், இன்று தட்டச்சு, அதிலும் கணினி அனுபவமும், ஒரு வண்டியும் இருந்தால் போதும் உதவி இயக்குநராக சேர்ந்துவிடலாம். அதேநேரம், நான் ஒரு சாதாரண ஏழை குடும்பத்தில் படித்து வளர்ந்தவன். இவ்வளவுதான் எனக்கு விஷயம் தெரியும். அப்படியிருக்கும்போது நான் எப்படி சினிமாவுக்கு வருவது என்ற கேள்வி பலருக்கு வரும்.
அப்படியானவர்களுக்கு நான் சொல்லுவது ஒரு படத்தை பார்த்துவிட்டு வந்து கோர்வையாக ஒரு அரை மணிநேரம் உன்னால் விளக்க முடியுமா? அப்படி என்றால் உதவி இயக்குநருக்கான தகுதி உனக்கு இருக்கிறது என்று அர்த்தம். அதிலும், ஓடாத படம் என்று ஓரம்கட்டப்படும் திரைப்படத்தை பார்த்துவிட்டு அதை எப்படி எடுத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்ல தெரிந்தாலே போதுமானது. ஒவ்வொருவருமே தங்களது வாழ்க்கையில் கிடைத்த, சந்தித்த அனுபவங்களை திரைக்கதையாக எழுதி பழக்கப்பட்டாலே நிச்சயம் ஒரு இயக்குநராக தகுதி பெற்றுவிடலாம். புதிதாக படித்துவிட்டு உதவி இயக்குநர்களாக வருபவர்கள் எதை ஆடியன்ஸ் இதுவரை பார்க்கவில்லை; எப்படி கொடுத்தால் பார்ப்பார்கள் என்பதை நன்கு புரிந்துகொண்டு கொடுக்க முயலவேண்டும். அப்போது அதற்கென்று பயிற்சி எடுத்துக்கொண்டு வரவேண்டுமா? என்று என்னை கேட்டால் அது தேவை இல்லை என்றுதான் கூறுவேன். ஆர்வமும், அதற்கான உழைப்பும் இருந்தால் போதும். எல்லாம் தானாக வந்துவிடும்.
குறும்படங்கள் வாயிலாக நிறைய சினிமா கதவுகள் திறக்கின்றன - வெங்கடேஷ்
குறும்படங்கள் எடுத்துவிட்டால் இயக்குநர் ஆகிவிடலாம் என்ற நிலை இன்று இருக்கிறது? இது தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவியாக இருக்குமா?
நூறு சதவீதம் உதவியாக இருக்கும். என்னுடைய காலத்தில் இதுபோன்ற ஒரு முறை இருந்திருந்தால் நான் அதைத்தான் முதலில் கையில் எடுத்திருப்பேன். இன்று இருப்பது போன்ற வசதிகள் அன்று இருந்திருந்தால் நான் எப்படியாவது கடனை வாங்கியாவது வருடத்திற்கு 5 குறும்படங்களை இயக்கியாவது சமூக வலைதளங்களில் ஏற்றி இருப்பேன். சினிமாவை பற்றிய புரிதல் இல்லாத அப்போதே நான் கல்யாண வீடியோ கேமராவை வைத்து குறும்படம் எடுத்து எடிட் செய்யாமல் வைத்திருக்கிறேன். இன்றைக்கு குறும்படங்கள் எடுத்து உங்கள் திறமையை காட்ட நிறைய வழிகள் இருக்கிறது. ஒரு இயக்குநரையோ, தயாரிப்பாளரையோ பார்க்கச் செல்லும்போது நீங்கள் எடுத்த குறும்படத்தை காட்டி வாய்ப்பு கேட்கலாம். அதை பார்த்து இயக்குநருக்கு பிடித்திருந்தால் கதை விவாதங்களில் உங்களை அமர வைத்து உங்களின் யோசனைகளையும் கேட்பார்கள். இப்போது ஷாட் ஃபிலிம்ஸ் போன்ற குறும்படங்கள் வாயிலாக நிறைய சினிமா கதவுகள் திறந்து இருக்கின்றன. முன்பைவிட இப்போது அதுமாதிரியான திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
உங்களுக்கான முதல் சினிமா வாய்ப்பை எப்படி பெற்றீர்கள்? உதவி இயக்குநராக நீங்கள் பணியாற்றிய அந்த காலங்கள் எப்படி இருந்தது?
1986 மற்றும் 87-களில் தான், நான் சினிமாவுக்கான முயற்சியில் இறங்கினேன். அப்போது நான் யாரை போய் சந்திப்பது? எப்படி சினிமா வாய்ப்பை பெறுவது? என்பதெல்லாம் தெரியாமல்தான் கோடம்பாக்கத்தில் சுற்றிக்கொண்டிருந்தேன். பாக்யராஜ், பாரதிராஜா இவர்களையெல்லாம் பார்க்க முயற்சித்து பார்க்க முடியாமல் வாட்ச்மேனால் துரத்திவிடப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் இருக்கின்றன. அவர்களிடம் எப்படியாவது உதவி இயக்குநராக சேர்ந்துவிட வேண்டும் என்று ஒரு கூட்டமே தமிழ்நாடு முழுவதிலும் இருந்துவந்து சுற்றிக் கொண்டிருந்தது. இந்த கூட்டத்திற்குள் நாமும் போய் மாட்டிக்கொள்ள கூடாது என்று என்னுடைய மாமா ஒருவர் மூலமாக சினிமா அறிமுகத்தை தேட ஆரம்பித்தேன். அவருக்கு பாரதிராஜா நல்ல நண்பர் என்பதால் அவரிடம் அழைத்துப்போவதாக கூறியிருந்தார். அதற்கு முன்பாக நீ என்னென்ன புத்தகங்கள் எல்லாம் படித்திருக்கிறாய் என்று கேட்டு, பின்னர் ஒரு பெரிய லிஸ்ட் சொன்னார். அவர் சொன்ன எந்த புத்தகத்தையும் நான் படித்தது இல்லை.
இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியது குறித்து பகிர்ந்துகொண்டபோது
பிறகு ஒரு ஆறுமாத காலம் அவர் சொன்ன புத்தகங்கள் அனைத்தையும் வாங்கி படித்து முடித்த பிறகு, எனது மாமாவிடம் போய் நின்றேன். அவரோ நான் பாரதிராஜாவிடம் நேரடியாக கேட்க முடியாது. வேண்டுமானால் அவரது உதவியாளர் யாராவது படம் இயக்கினால் சொல்கிறேன் என்று பாரதிராஜாவின் உதவியாளர்களில் ஒருவராக இருந்த கே.ராஜேஷ்வர் என்பவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். நடிகர் கார்த்திக்கை வைத்து அவர் இயக்கிய முதல் படமான ‘இதயத்தாமரை’ படத்தில் நான் உதவி இயக்குநராக சேர்ந்தேன். அவர்தான் சினிமாவில் என்னுடைய முதல் குரு. அவருடைய வசனங்கள் தனித்துவமாக தெரியும். இந்த படத்திற்கு பிறகு கலைஞர் கதை வசனத்தில் அவர் எடுத்த ‘நியாய தராசு’ படத்திலும் பணியாற்றினேன். ‘அமரன்’ படம் வரை அவரிடம் உதவியாளராக இருந்தேன். பிறகு இயக்குநர் பவித்ரனின் அறிமுகம் கிடைத்து அவரிடம் 'சூரியன்' படம்வரை பணியாற்றினேன். அங்கு அஸோஸியேட்டாக பணியாற்றியவர்தான் இயக்குநர் சங்கர். அவரிடமும் ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றினேன். இந்த தருணத்தில்தான் நான் தனியாக படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இப்படித்தான் எனது சினிமா பயணம் தொடங்கியது.
நீங்கள் இயக்குநராக மாறிய பிறகு உங்கள் படங்களை பார்த்து உங்கள் குருநாதர்கள் பாராட்டிய தருணங்கள் ஏதும் இருக்கிறதா?
நான் இயக்குநராக அறிமுகமாகி எனது இரண்டாவது படத்தை தயாரித்ததே இயக்குநர் பவித்ரன்தான். எந்த இயக்குநரிடம் உதவியாளராக பணியாற்றினேனோ, அதே இயக்குநர் என்னை வைத்து படம் தயாரித்தார் என்பது எனக்கு மகிழ்ச்சியான ஒரு விஷயம். அதேபோன்று சங்கரிடம் ‘முதல்வன்’ திரைப்படம்வரை நல்லதொரு தொடர்பில் இருந்தேன். அவரை அலுவலகம் சென்று சந்தித்து பேசுவேன். பிறகு தொழில் ரீதியாக இருவருக்குள்ளும் ஒரு இடைவேளை ஏற்பட்டது. இப்போது ஏதாவது சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டால், என்ன? எப்படி இருக்கிறீர்கள்? என்று பேசும் அளவில் சென்று கொண்டிருக்கிறது. ராஜேஷ்வரையும் இடையில் ஒருமுறை நேரில் சந்தித்து பேசிவிட்டு வந்தேன். எப்போதுமே பழைய விஷயங்களை மறக்கக் கூடாது என்று நினைப்பவன் நான். என் இயக்குநர்கள் மீது எப்போதும் ஒரு மரியாதையும், அன்பும் உண்டு.
'அங்காடித்தெரு' திரைப்படத்தில் கருங்காலியாக வரும் இயக்குநர் வெங்கடேஷ்
'அங்காடித்தெரு' படத்துக்குள் வந்தது எப்படி? அப்பட வெளியீட்டுக்கு பிறகு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு எப்படி இருந்தது?
அப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு என்னை பொதுவெளியில் பார்க்கும் மக்கள் நிறையவே திட்டி தீர்த்தார்கள். அது அந்த படத்தில் என் கதாபாத்திரத்துக்கு கிடைத்த வெற்றியாகத்தான் கருதுகிறேன். இன்னமுமே பொது இடங்களில் நிற்கும்போது என்னை பார்ப்பவர்களின் ரியாக்சன் இவனா? இவன் மோசமான ஆளாச்சே! என்பதுபோல்தான் இருக்கும். எப்போதுமே சினிமாவில் நாம் என்ன ரோல் எடுத்து நடித்திருக்கிறோமோ அதற்கான இம்பேக்ட் நமது தனிப்பட்ட வாழ்க்கையிலும் இருக்கும். அந்த கதாபாத்திரத்தை போலவே நிஜ வாழ்க்கையிலும் இவன் இப்படித்தானோ என்று என்ன வைக்கும். இதுதான் எதார்த்தம்.