இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழகத்தில் சினிமா, அரசியல் என இரட்டை குதிரையில் சவாரி செய்து அதில் வெற்றி என்ற இலக்கையும் எட்டி பிடித்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அதற்கு உதாரணம்தான் மறைந்த முதலமைச்சர்களான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா ஆகியோர். இவர்களை பின்பற்றி விஜயகாந்த், சரத்குமார், கமல்ஹாசன் என பல நடிகர்கள் அரசியலுக்கு வந்த வரிசையில் தற்போது நடிகர் விஜய்யும் இணைந்துள்ளார். இந்த தலைவர்கள் மேற்கொண்ட வியூகங்களை பின்பற்றி அவர்களின் வழியில் தனது அரசியல் பயணம் என்றில்லாமல் தனக்கென்று ஒரு தனி பாதையை வகுத்து மிகவும் நிதானமாக செயல்படத் தொடங்கிய விஜய், தற்போது அதில் வேகம் எடுத்துள்ளார். என்று தன் அரசியல் நகர்வு குறித்த அறிவிப்பை வெளிப்படையாக அறிவித்தாரோ அன்றில் இருந்தே அனைவரின் பார்வையும், அவரின் ஒவ்வொரு நகர்வுகளும் கவனிக்கப்படக் கூடிய ஒன்றாக மாறிவிட்ட நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் சமீபத்தில் தனது கட்சி கொடியை தன் தொண்டர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார். அதற்கு கிடைத்த வரவேற்பு, நெகடிவ் விமர்சனங்கள் மற்றும் இனி அவரின் ஒவ்வொரு நகர்வும் எப்படி இருக்கும்? என்பது குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.

பனையூரில் பறந்த கொடி


விஜய் கட்சி கொடி அறிமுக விழாவில் கலந்துகொண்ட சந்திரசேகர் மற்றும் ஷோபா

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் துவங்கிய நடிகர் விஜய், கட்சி பெயர் அறிவிப்போடு நின்றுவிடாமல் சொன்னது போலவே 2026 சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் தன் கட்சியை ஜூன் மாதம் பதிவு செய்தார். அதற்கு பிறகு கட்சி கொடி குறித்த அறிவிப்பு எப்போது வரும், மாநாடு எங்கு நடக்கும் போன்ற பல விஷயங்கள் விவாத பொருளாக இருந்து வந்த நேரத்தில் தொடர்ந்து அமைதி காத்துவந்த விஜய், தனது பட பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். ஒருபக்கம் 'கோட்' பட ரிலீஸ், மற்றொரு பக்கம் 'விஜய் 69' படத்திற்கான விவாதம் என அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி கோடம்பாக்கமே பரபரப்பாக இருந்துவந்த அதே வேளையில்தான், விஜய் தன் கட்சிக் கொடியை அறிமுகம் செய்ய உள்ளார் என்ற அறிவிப்பும் வெளிவந்தது. இதற்காக முன்கூட்டியே நடத்தப்பட்ட ஒத்திகைக்கு பிறகு கோட்டையை பிடிக்க கொடியினை ஏற்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி பனையூர் வந்தார் நடிகர் விஜய். அவருடைய அப்பா சந்திரசேகர், அம்மா ஷோபா ஆகியோர் தவிர பெரியளவில் எந்த குடும்ப உறவுகளும் பங்கேற்காத அந்த நிகழ்வில், தன் ரசிகர்களையும், தொண்டர்களையுமே உறவாக எண்ணி மேடை ஏறினார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய அந்த நிகழ்வில் கட்சிக் கொடியையும், கொடிப் பாடலையும் அறிமுகம் செய்வதற்கு முன்பு கட்சியினர் அனைவரும் உறுதிமொழியை ஏற்றனர். "நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்'' எனக் கூறி உறுதிமொழி ஏற்க துவங்கிய விஜய், ஓவ்வொரு வரிகளாக வாசிக்க கட்சி தொண்டர்களும் அதை உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டனர்.


த.வெ.க கட்சி கொடியை விஜய் ஏற்றி வைத்த தருணம்

பின்னர் தமிழக வெற்றிக்கழக கொடியை ஏற்றி பறக்கவிட்டு, கட்சி கொடிப் பாடலையும் வெளியிட்டார் விஜய். இதன்மூலம் தமிழக வெற்றிக் கழகம் ஒரு அரசியல் கட்சியாக முழு வடிவம் பெற்றுள்ளதை அவர் உறுதிப்படுத்தினார். மேலும் கொடி அறிமுக நிகழ்வை தொடர்ந்து உரையாற்றிய விஜய், “என்னுடைய அரசியல் பயணத்தின் தொடக்கமாக கடந்த பிப்ரவரி மாதம்தான் கட்சியின் பெயரை அறிவித்தேன், நான் கட்சி பெயரை அறிவித்ததில் இருந்து அடுத்தடுத்து என்னென்ன அறிவிப்புகள் வரும்? எனது அடுத்த நகர்வு எப்படி இருக்கும்? என்று ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தீர்கள். அடுத்து இன்னொரு நாளுக்காகவும் காத்துக்கொண்டிருக்கிறீர்கள். அதுதான் கட்சியின் முதல் மாநில மாநாடு. அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. அதுகுறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன். அதற்கு முன்பாக என் கட்சி கொடியை அறிமுகம் செய்துவிட்டால், அதனை உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் ஏற்றி வைத்துக் கொள்வீர்கள் என்றுதான் இந்த நிகழ்வை செய்தேன். புயலுக்கு பின் வரும் அமைதி, ஆர்ப்பரிப்பு, ஆரவாரம் போல நமது கொடிக்கு பின்னாலும் ஒரு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. அந்த வரலாறு என்ன என்பதோடு சேர்த்து நம் கட்சியின் கொள்கை, செயல் திட்டங்கள் ஆகியவை குறித்து மாநாட்டில் சொல்வேன். அதுவரை 'கெத்தா' இந்தக் கொடியை ஏற்றிக் கொண்டாடுவோம். இதை ஒரு கட்சிக்கான கொடியாக மட்டும் பார்க்கவில்லை, அதையும் தாண்டிய ஒன்றாக பார்க்கிறேன்'' என்று விஜய் குறிப்பிட்டிருந்தார்.

வாகை பூவுடன் களமிறங்கும் விஜய்


வாகைப்பூவுடன் அறிமுகம் செய்யப்பட்ட த.வெ.க கொடி

பொதுவாக எல்லா கட்சி கொடிகளிலும் சின்னம் என்பது இருக்கும். அந்த சின்னம் அவர்களுடைய கொள்கைகளை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். அதேமாதிரிதான் விஜய் வெளியிட்ட த.வெ.க கொடியிலும், சிவப்பு, மஞ்சள் நிறத்துடன், இரட்டை போர் யானைகள், மையத்தில் வட்ட வடிவத்துக்குள் வாகைப்பூ ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதற்கு பின்னால் தமிழர்கள் குறித்த மிகப்பெரிய வரலாறு இருக்கிறது; அதுபற்றி மாநாட்டில் தெரிவிக்கிறேன் என்று விஜய் கூறியிருந்தாலும், இந்த கொடியில் இடம் பெற்றுள்ள சின்னம், கலர், ஸ்டார்ஸ் இதெல்லாம் எதற்காக என்று பலரும் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். குறிப்பாக அந்த கொடியில் இரண்டு போர் யானைகளுக்கு நடுவில் இருக்கும் வாகை மலர் மிகப்பெரிய பேசு பொருளாகி இருக்கிறது. பொதுவாக நம் சங்க இலக்கியங்களில் வாகை மலருக்கென்று நிறைய சிறப்புகள் இருக்கின்றன. அதாவது சங்க காலத்தில் போரில் வெற்றி பெரும் வீரர்கள் வாகை மலரை சூடி வந்துதான் தங்களின் வெற்றியை கொண்டாடுவார்களாம். நிறைய மருத்துவ குணங்களும் உள்ள இந்த வாகை மலர் தமிழீழத்தின் தேசிய மலராகவும் இருந்து வருகிறது. தமிழ் பண்பாட்டோடு மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் இந்த வாகை மலர் வெற்றியின் குறியீடாக பார்க்கப்படுவதாலேயே விஜய்யின் கட்சி கொடியில் இதனை இடம்பெறச் செய்திருக்கிறார்களாம். அதிலும் பூக்கள் எப்போதும் மிருதுவானவை, பெண்களுக்கு உரியவை என்பதால் அதனை வளர்க்க, பாதுகாக்க மிகப்பெரிய அரண்கள் செய்யப்படும். அதுபோல்தான் வாகை என்ற அழகான பூவும் நன்கு வளர அதனை சுற்றி வலுவான மிருகங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று இரண்டு போர் யானைகளுக்கு நடுவில் வாகை மலர் இருப்பது போன்று வடிவமைத்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

மேலும் ஏற்கனவே கட்சி பெயரில் வெற்றி என்று இருக்கிறது. அதற்கு ஏற்றார் போன்று கொடியிலும் வெற்றியின் அடையாளத்தை குறிக்கும் ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று வாகை மலரை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. விஜய் என்ற பெயரின் அர்த்தமும் வெற்றி என்பதோடு, வாகை மலரை சுற்றியுள்ள 26 நட்சத்திரங்களுக்கும் சிலர் அர்த்தம் கூறுகின்றனர். அதில் இடம்பெற்றிருக்கும் ஐந்து நீல நிற நட்சத்திரங்கள் சமத்துவத்தையும், மீதமுள்ள பச்சை நிற நட்சத்திரங்கள் தலைமைத்துவத்தையும் குறிப்பதாக சொல்லப்படுகிறது. கட்சிக்கொடி சிவப்பு, மஞ்சள் என இரண்டு நிறங்களை பிரதானமாக கொண்டிருப்பதன் மூலம் திராவிட நிறமான கருப்பிற்கு இடம் தராமல், கம்யூனிசத்திற்கும், தமிழ்த்தேசியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க விஜய் முனைவதாகவும் சிலர் கூறுகின்றனர். விஜய் வெளியிட்டுள்ள கட்சி கொடிப் பாடலிலும் பல அர்த்தங்கள் இருப்பதாக சொல்லப்பட்டாலும், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை, கோட்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளிவரும்போதே, விஜய்யின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை நம்மால் உறுதி செய்ய முடியும்.

எதிர்வினையும், அடுத்த கட்டமும்


மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் விஜய் மற்றும் நாம் தமிழர் சீமான்

விஜய்யின் த.வெ.க கொடி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு இடமாக பறக்க தொடங்கியிருக்கும் நிலையில், அவரின் இந்த அரசியல் நகர்வு குறித்து பிற கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒருபக்கம் சிலர் விஜய்க்கு தங்களின் வாழ்த்துகளையும், வரவேற்பையும் தெரிவிக்க, இன்னொரு பக்கம் யார் ஒருவர் அரசியல் கட்சி தொடங்கினாலும், கட்சி கொடி அறிமுகம், மாநாடு என்பதெல்லாம் இயல்பாக நடக்கும் ஒன்றுதான். அதே நேரம் தன் கட்சி தொண்டர்களுக்கு கட்சியின் கொள்கை குறித்து தெரிவிக்க வேண்டியதும் அவசியாமான ஒன்று. அதைத்தான் அவர் செய்துள்ளார் என்றும், அவரது கொள்கை, கோட்பாடுகள், கட்சியின் பலம் ஆகியவற்றைப் பொறுத்திருந்து பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். மேலும் சிலர் அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களை விஜய் நினைவுபடுத்துவதாகவும், அரசியலில் இதுபோன்ற போட்டிகள் அவசியமான ஒன்றுதான் என்றும் சொல்கின்றனர். அதேபோன்று விஜய்யின் இந்த அரசியல் நகர்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஒரு நடிகனாக தமக்கு ஆதரவு அளித்து இவ்வளவு உயரத்துக்கு கொண்டுவந்து தன்னை வாழவைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தவித தன்னலமும் இன்றி தொண்டாற்றிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தி, நேரடி அரசியல் களத்தில் தன் தடத்தை பதிக்கத் தொடங்கியிருக்கும் விஜய், லட்சிய உறுதியுடன் தமிழக அரசியலில் வாகை சூட வாழ்த்துகள்,” என்று கூறியுள்ளார். மேலும் தமிழக மக்களும் அவரின் இந்த அரசியல் வருகையை வரவேற்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


திரையிலும், அரசியலிலும் வேகமெடுத்துள்ள விஜய்

இது ஒருபுறம் இருக்க, விஜய்யின் கட்சி கொடியில் இடம்பெற்றிருக்கும் யானை மற்றும் வாகை மலர் குறித்த சர்ச்சைகளும் மேலோங்க தொடங்கியிருக்கின்றன. அதுமட்டுமின்றி விஜய் இதுவரை மக்களை சந்திக்காமலேயே கட்சி, கொடி என்று தன் அரசியல் நகர்வை கொண்டுபோகிறார். இது எப்படி வெற்றியை தரும் என்று தெரியவில்லை என்ற விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இந்தநிலையில்தான், மாநாடு என்ற ஒன்றின் மூலமாக தான் என்ன நினைக்கிறோம் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை விஜய் முயற்சித்து வருகிறாராம். மேலும் இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகம் எப்படியெல்லாம் பயணிக்க போகிறது என்பது பற்றியும், இதில் பேச இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் தமிழக வெற்றிக் கழகம் சந்திக்கும் முதல் தேர்தலை கூட்டணி இல்லாமல்தான் சந்திக்க போகிறது என்ற தகவலும் உலா வந்து கொண்டிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் விஜய் அரசியல் களத்தில் முழுமையாக இறங்கிவிட்டார். இருப்பினும் ‘கோட்’ படத்திற்கு பிறகு இன்னொரு படத்தை நடித்து முடித்துவிட வேண்டும்; அது முழுக்க முழுக்க கமர்சியல் படமாக இருக்க வேண்டும் என்று விஜய் நினைப்பதாகவும் சொல்லப்படுகிறது. திரையிலும், அரசியலிலும் வேகமெடுத்துள்ள விஜய் குறித்த எல்லா கேள்விகளுக்கும், யூகங்களுக்குமான பதில், கூடிய விரைவில் விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் த.வெ.க. கட்சி நடத்த திட்டமிட்டிருக்கும் முதல் மாநாட்டில் தெரிந்துவிடும் என்பதே நிதர்சனம்.

Updated On 27 Aug 2024 10:26 AM GMT
ராணி

ராணி

Next Story