‘உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படத்தில் இடம்பெற்ற “அழகிய லைலா” பாடலை, பாடகர் மனோ குரலில் எப்போது கேட்டாலும் நமக்கெல்லாம் முதலில் நியாபகத்துக்கு வந்தது கார்த்திக் மற்றும் ரம்பாவைத்தான். ஆனால், என்று ‘குருவாயூர் அம்பலநடையில்’ என்ற மலையாளப்படம் வந்ததோ அன்றில் இருந்து இப்போது வரை நமக்கெல்லாம் நினைவில் வந்து நிற்பது நிகிலா விமல்தான். மலையாளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 'வெற்றிவேல்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக உருவெடுத்து தனக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி இருந்தாலும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தது என்னவோ ‘அழகிய லைலா’ பாடலின் பிஜிஎம் மூலமாகத்தான். அப்படிப்பட்ட இந்த அழகிய தேவதை தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என நடித்து வருவது மட்டுமின்றி சில படங்களுக்கு பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருந்து வருகிறார். நடிப்பு என்றால் என்ன என்ற புரிதலே இல்லாமல் திரையுலகிற்குள் நுழைந்து, இன்று ஒரு மிகச்சிறந்த நடிகையாக உயர பறக்க தொடங்கி இருக்கும் நிகிலா விமல் தற்போது மாரி செல்வராஜின் ‘வாழை’ படத்திலும் நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளார். இந்த நிலையில், அவரின் சினிமா பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பை இந்த கட்டுரையில் காணலாம்.
13 வயதில் ஆரம்பித்த சினிமா பயணம்
தமிழில் அறிமுக நடிகையாக நிகிலா விமல் தவறவிட்ட 'எங்கேயும் எப்போதும்' திரைப்படம்
‘செய்யும் தொழிலே தெய்வம்’; அதாவது தன்னுடைய கடமையை யார் ஒருவர் கண்ணும் கருத்துமாக செய்கிறார்களோ அவர்களுக்காக சொல்லப்படும் ஒரு வாக்கியம்தான் இது. தன்னுடைய தொழிலில் அக்கறை கொண்ட ஒவ்வொருவருக்குமே இது பொருந்தும். அந்த வகையில், தான் செய்யும் வேலையை எப்போதும் நேசித்து செய்ய வேண்டும் என்பதில் தெளிவுடன் இருக்கும் நிகிலா விமல் கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள தளிபரம்பாவில் எம்.ஆர்.பவித்ரன் மற்றும் விமலாதேவி தம்பதிக்கு மகளாக 1994-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி பிறந்தார். தந்தை பவித்ரன் புள்ளியியல் துறையில் இருந்து ஓய்வு பெற்றவர். தாயார் விமலா ஒரு நடனக் கலைஞர். அவரது மூத்த சகோதரி அகிலா டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நாடகக் கலையில் ஆராய்ச்சிப் பயின்றவர். இப்படி ஒட்டுமொத்த குடும்பமும் கலை தொடர்பான விஷயங்களில் தொடர்புடையவர்களாக இருந்ததால் நிகிலாவுக்கும் அது எளிதாக வந்தது. அதனால் பரத நாட்டியம், குச்சிப்புடி, மோனோ ஆக்ட் ஆகியவற்றையும் சிறுவயதிலேயே கற்றுத் தேர்ந்தார். மேலும் நன்கு படிக்கக்கூடிய மாணவியாகவும் இருந்த நிகிலா படிப்பையும் விட்டுவிடாது தனது சொந்த ஊரான தளிபரம்பாவிலேயே பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு, மேற்படிப்பை சர் சையத் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அங்கு தாவரவியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவருக்கு அவருடைய 13-வது வயதிலேயே அக்காவின் நண்பர் மூலமாக திரைப்படங்களில் நடிக்க கேட்டு வாய்ப்புகள் வந்துள்ளன. தனக்கு நடிப்பின் மீது பெரிதாக நாட்டம் இல்லை என்றாலும் வீட்டில் உள்ள அனைவரும் விருப்பப்பட்டதற்காக தான் 8-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே ‘பாக்யதேவதா’ என்ற மலையாளப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அதுவும் நடிகர் ஜெயராமுக்கு தங்கையாக சாலி சாக்கோ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2009-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தனர். படம் நல்லதொரு வெற்றிப்படமாக அமைந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தாலும் அதை ஏற்று நடிப்பதில் நிகிலாவுக்கு பெரிதும் விருப்பம் இல்லை.
‘லவ் 24 x 7’ மலையாள திரைப்படத்தில் நடிகர் திலீப்புடன் நிகிலா விமல்
அப்படி இவர் 10-ம் வகுப்பு படித்து கொண்டிருக்கும்போது தவறவிட்ட படம்தான் தமிழில் 2011-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படம். இப்படத்தின் ஆடிஷனில் வந்து கலந்துகொண்டு தேர்வான பிறகு “நடிக்க மாட்டேன் என்னை விட்டுவிடுங்கள்” என்று அழுதுகொண்டே கேரளாவுக்கு போய்விட்டாராம். படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆன பிறகு இப்படியொரு அருமையான வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி தவறவிட்டுவிட்டாயே என்று குடும்பத்தில் இருந்தவர்களும், நண்பர்களும் திட்டினார்களாம். “நாம் என்ன தவறு செய்தோம் நடிக்க பிடிக்கவில்லை என்று சொன்னது ஒரு குத்தமா” என்று சாதாரணமாக கடந்து போய்விட்டாராம். இந்த நேரம் தமிழில் இருந்து மீண்டும் வாய்ப்புகள் வர, முதல் வாய்ப்பைத்தான் தவறவிட்டுவிட்டோம், இதையாவது வேண்டாம் என்று சொல்லாமல் நடித்துவிடுவோம் என்று கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே வரிசையாக மூன்று படங்களில் நடித்தாராம். ஆனால், அந்த மூன்று படங்களுமே வெளிவரவில்லையாம். இதனால் மிகவும் மனமுடைந்துபோன நிகிலா இதற்குத்தான் சினிமாவே வேண்டாம் என்று நினைத்தோம் என மனதை தேற்றிக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தி வந்துள்ளார். கல்லூரி இறுதியாண்டில் மீண்டும் மலையாளத் திரையுலகில் இருந்து நாயகிக்கான வாய்ப்பு வர படிப்பை முழுமையாக முடித்துவிட்டு அப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அந்த படம்தான் 2015-ஆம் ஆண்டு திலீப் நடித்து வெளியான ‘லவ் 24 x 7’ திரைப்படம். முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து வெளிவந்த இப்படத்தில் திலீப்பிற்கு ஜோடியாக, கார்த்திகா என்ற வேடத்தில் நடித்தவருக்கு அறிமுகப்படமே நல்லதொரு வெற்றிப்படமாக அமைந்தது. இதற்கு பிறகு தமிழ், தெலுங்கு என பிற மொழி படங்களில் இருந்தும் தொடர் வாய்ப்புகள் வர பன்மொழி நடிகையாக மாற ஆரம்பித்தார்.
தமிழ் சினிமா கொடுத்த நம்பிக்கை
‘வெற்றிவேல்’ திரைப்படத்தில் சசிகுமார் மற்றும் நடிகை மியாவுடன் நிகிலா விமல்
எந்த தமிழ் சினிமா முதலில் வாய்ப்பை தந்து ஏமாற்றியதோ, அதே தமிழ் சினிமாதான் ஒரு சிறந்த நடிகைக்கான அத்தனை விஷயங்களையும் கற்றுக்கொடுத்தது என்று தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் நிகிலா விமல் தெரிவித்துள்ளார். மலையாளத்தில் முதல் படம் தந்த வெற்றியால் அடுத்ததாக தமிழ் சினிமாவில் இருந்தும் அழைப்புகள் வர ஏற்கனவே கிடைத்த அனுபவத்தால் முதலில் இங்குவந்து நடிக்க யோசித்தராம். பிறகு எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று நடிக்க ஒப்புக்கொண்டாராம். அந்த படம்தான் 2016-ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளிவந்த ‘வெற்றிவேல்’ என்ற திரைப்படம். இப்படத்தில் நிகிலா நடிக்க ஆரம்பித்த முதல் 10 நாட்கள் படப்பிடிப்பு தளத்தில் கிடைத்த அனுபவங்கள் அவருக்கு சிறு கசப்பை தந்ததாம். பிறகு யூனிட்டில் இருந்து கிளம்புவதாக கூறிவிட்டு ஊருக்கு சென்றவரை படக்குழுவினரும் அழைத்து பேசவே இல்லையாம். இனி அவ்வளவுதான் நம்மை கூப்பிட மாட்டார்கள் போல, இந்த படத்தில் நாம் இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது 15 நாட்கள் கழித்து திடீரென்று ஒருநாள் படத்தின் மேலாளர் தொடர்பு கொண்டு படப்பிடிப்பில் வந்து கலந்துகொள்ள சொல்லும்போது அவருக்கே ஆச்சர்யமாக இருந்ததாம். மேலும், நீங்கள் இந்த படத்தில் இருந்து என்னை தூக்கவில்லையா என்றெல்லாம்கூட கேட்டாராம். பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டவருக்கு ஆரம்பத்தில் கிடைத்த எந்த கசப்பான அனுபவங்களும் நடைபெறாமல் மிகவும் சந்தோஷமாக சிறப்பாக நடித்தாராம். இதுதவிர அப்படத்தின் இயக்குநர், நிகிலாவின் மனநிலை அறிந்து நன்கு நடந்துகொண்டதோடு, நடிப்பு தொடர்பாக நிறைய நுணுக்கமான விஷயங்களையும் கற்றுக்கொடுத்தாராம். இப்படி பல நினைவுகளோடு வெளியான இப்படம் நிகிலாவுக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது மட்டுமின்றி படத்தில் இடம்பெற்ற “உன்னைப்போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல” பாடல் சூப்பர், டூப்பர் ஹிட் பாடலாக அமைந்து பல குடும்ப பெண்களின் மனதை வருடிவிட்டு சென்றது.
கர்ணன் படத்தில், ரஜிஷா விஜயனுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ள நிகிலா விமல்
‘வெற்றிவேல்’ படத்துக்கு முன்புவரை நிகிலா சினிமாவில் நிறைய தடைகளை கடந்து வந்ததால், பெரிதாக ஈடுபாடு இல்லாமல் கடமைக்கு என்றுதான் நடித்து வந்தாராம். இந்த படம் தந்த வெற்றியால், இதற்கு பிறகு நடிப்பை நிறையவே நேசிக்க ஆரம்பித்தாராம். எந்த சினிமா வேண்டாம் என்று நினைத்தாரோ, அதே சினிமாதான் இனி நமது வாழ்க்கையே என்று முடிவும் செய்தது இந்த தருணம்தானாம். இதற்கு பிறகு தமிழில் மீண்டும் சசிகுமாருடன் ‘கிடாரி’, ‘பஞ்சுமிட்டாய்’, ‘ஒன்பது குழி சம்பத்’, ‘ரங்கா’, ‘தம்பி’, ‘போர் தொழில்’ என வரிசையாக நடித்தார். இப்படங்களில் ‘கிடாரி’, ‘தம்பி’, ‘போர் தொழில்’ போன்றவை நிகிலாவுக்கு வெற்றிப்படங்களாக அமைந்ததை தாண்டி, அவரின் நடிப்புத்திறனை பாராட்டும் வகையிலும், அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகும் அளவுக்கும் புகழ் வெளிச்சத்தை பெற்றுக் கொடுத்தது. இதனால்தான் இவர் மாரி செல்வராஜ் என்ற மிகச்சிறந்த இயக்குநரின் கண்களில் பட்டு, அவரது இயக்கத்தில் வெளிவந்த ‘கர்ணன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ, அப்படத்தில் நடித்த ரஜிஷா விஜயனுக்கு டப்பிங் பேசும் வாய்ப்பு கிடைத்தது. நிகிலா நன்கு தமிழ் பேசி நடிப்பதால், வெகுநாட்கள் இவரை பலரும் தமிழ் என்றே நினைத்து வந்துள்ளனர். ஆனால், மலையாள மொழியை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ் படங்களில் நடிக்கப்போகிறோம் என்பது தெரிந்தவுடன் தமிழ் நன்கு எழுதவும், பேசவும் கற்றுக்கொண்டாராம். இந்த ஆர்வமே அவருக்கு ‘கர்ணன்’ படத்தில் ரஜிஷா விஜயனுக்கு டப்பிங் பேசும் வாய்ப்பையும் பெற்றுக்கொடுத்துள்ளது. ‘வாழை’ பட பிரமோஷனுக்காக கொடுத்துவரும் பேட்டிகளில் நிகிலா இந்த தகவல்களை சொன்ன பிறகே அவரிடம் இப்படியும் ஒரு திறமை இருக்கிறதா என்று அவரின் ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.
மனம் வீசும் 'பூங்கொடி'
‘மாமன்னன்’ திரைப்பட போஸ்டர் - 'வாழை' படத்தில் பூங்கொடி டீச்சராக வரும் நிகிலா
‘மாமன்னன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப்பிறகு மாரி செல்வராஜ் இயக்கி திரைக்கு வந்துள்ள படம்தான் ‘வாழை’. தன் சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தந்தை இல்லாமல் அம்மா மற்றும் அக்காவின் அரவணைப்பில் எப்படியான கஷ்டங்களையும், சங்கடங்களையும் சந்தித்துதான் வளர்ந்தேன் என்பதை மாரி செல்வராஜ் திரையில் காட்டியுள்ள இப்படம், தற்போது மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் மையப்புள்ளியாக சிறுவன் சிவனணைந்தான் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தாலும், பூங்கொடி டீச்சராக வரும் நிகிலா விமலும் கூடுதல் கவனம் பெற்றுள்ளார். முதலாளிகள் செய்யும் சுரண்டலை கம்யூனிச சித்தாந்தத்துடன் ரத்தமும், சதையுமாக வலி நிறைந்த விதத்தில் கூறியுள்ள இப்படத்தில், நிகிலாவின் கதாபாத்திரம் முற்கள் நிறைந்த காட்டுக்குள் குளிர் தென்றலாய் வருகிறது. குறிப்பாக பூங்கொடி டீச்சராக மாணவர்களுக்கே பிடித்த ஒரு ஆசிரியையாக நிகிலா வரும்போதெல்லாம் ஒலிக்கும் ரெட்ரோ பாடல்கள் கூடுதல் கவனம் பெறுகிறது. 'அழியாத கோலங்கள்' இந்துமதி டீச்சர் துவங்கி 'றெக்க' மாலா டீச்சர்வரை எத்தனையோ டீச்சர்களை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய வரிசையில், தற்போது பூங்கொடி டீச்சராக வந்து நிகிலாவும் இணைந்து நமது பால்ய நினைவுகளை அழகாக திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
'வாழை' திரைப்படத்தில் மாணவன் சிவனணைந்தானுடன் வரும் நிகிலா
எப்போதும் கொஞ்சம் முற்போக்கு சிந்தனையுடன் பேசுவது மட்டுமின்றி கதை தேர்விலும், தன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அதனை பின்பற்றும் நிகிலா தற்போது மலையாளம், தெலுங்கு, தமிழ் என மாறிமாறி நடித்து வருகிறார். கடந்த மே மாதம் மலையாளத்தில் வெளிவந்த குருவாயூர் அம்பலநடையில் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தற்போது 'வாழை' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர், கதை தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறராம். எந்த ஒரு படத்திலும் சரி, பேட்டியிலும் சரி வித்தியாசமான அணுகுமுறையையும், உடல்மொழியையும் வெளிப்படுத்தும் பழக்கம் கொண்ட நிகிலா, தனது வாழ்கையிலும் சிந்தனையில் தோன்றுவதையே மனதில் ஏற்றி செயல்படுத்தும் பழக்கம் கொண்டவர். அந்தவகையில், நிகிலாவின் தந்தை இறந்த பிறகு அவரின் அம்மா விமலா அக்காவையும், தன்னையும் தனியொரு பெண்மணியாக வளர்த்தெடுத்தார் என்பதற்காக மட்டுமில்லாமல், அப்பாவுக்கு அப்பாவாக இன்றும் நிற்கும் அவரை ஒரு மகளாக தான் பெருமைப்படுத்த வேண்டும் என்று யாரும் செய்ய நினைக்காத ஒரு விஷயத்தை தன் வாழ்க்கையில் செய்துள்ளார். அதுதான் தனது பெயருக்கு பின்னால் தன் அப்பாவின் பெயரை வைத்துக்கொள்ளாமல், அம்மா விமலாவின் பெயரை சேர்த்து நிகிலா விமல் என்று வைத்துள்ள நிகழ்வு. தந்தை வழி கோட்பாட்டை பின்பற்றும் நம் இந்திய சமூகத்தில் அம்மாவை போற்றும் விதமாக நிகிலா மேற்கொண்டுள்ள இந்த முற்போக்கு முயற்சிக்கு அப்போதே பல பாராட்டுக்கள் கிடைத்தன. பெண்மையின் மகத்துவம் பேசும் இவரது சிந்தனை மட்டுமல்ல அடுத்தடுத்த படங்களும் பல உயரங்களை தொட்டு விருதுகளை அவர் வசப்படுத்த வாழ்த்துவோம்.