இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இன்றைய சூழலில் மக்களின் பிரதான பொழுதுபோக்கு நிகழ்வுகளில் மிக முக்கியமான ஒரு அங்கமாக இருப்பது என்னவோ தொலைக்காட்சி தொடர்கள்தான். அதிலும் தொலைக்காட்சிகள் எந்த அளவுக்கு பெருகி நிற்கிறதோ, அதேபோன்றே நாடகம் என்ற கட்டமைப்பில் இருந்து புது வடிவம் பெற்ற சீரியல்களும் இன்று பல்கி பெருகி நிற்கின்றன. அந்த வகையில், தனியார் தொலைக்காட்சிகள் இன்றைய தலைமுறையினரையும் கவர வெவ்வேறு கதை சூழல்களில் சீரியல்களை எடுத்து ஒளிபரப்பி வருகின்றன. அந்த வகையில் மேடை நாடகங்கள், தூர்தர்சனில் ஒளிபரப்பான ட்ராமாக்கள், இன்றைய சீரியல்கள் என மூன்று தளங்களிலும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த மூத்த நடிகையான சுமங்கலி, தனது நடிப்பு அனுபவம் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான உரையாடல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

நடிகை சுமங்கலி என்ற உடனேயே இப்போ இருப்பவர்களுக்கு எல்லாம் நியாபகத்துக்கு வருவது சீரியலில் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க கூடிய நடிகைங்கிறதுதான். ஆனால், கிரேஸி மோகன் நாடகங்களில் நீங்கள் நடித்த அனுபவத்தை பற்றி சொல்லுங்களேன்?

அன்றைய காலங்களில் மேடை நாடகங்களில் நடிக்கக்கூடிய அனுபவம் என்பது மிகவும் புதுமையான ஒன்றாக இருந்தது. காரணம் நடித்து முடித்து அரங்கத்தை விட்டு வெளியேறும் போது ரசிகர்கள் கொடுக்கும் பாராட்டாக இருக்கட்டும், ஒவ்வொரு காட்சி முடியும் போதும் அங்கு கிடைக்கும் கைத்தட்டலாக இருக்கட்டும் அது அவ்வளவு மகிழ்ச்சியை நமக்கு கொடுக்கும். நமது நடிப்பிற்கு கிடைக்கும் அங்கீகாரத்தை நேரடியாகவே பெற்றுக்கொண்ட ஒரு ஆனந்தம் கிடைத்துவிடும். இதன் பிறகு கொஞ்சம் முன்னேற்றம் பெற்று தூர்தர்சனில் தொடர்கள் வந்தன. அந்த தொடர்கள் 11 முதல் 13 எபிசோட் என்ற அளவிலேயே முடிந்துவிடும். ஆனால் இன்றைக்கு இருக்கும் மெகா தொடர்கள் என்பது குறைந்தது மூன்று ஆண்டுகள் தொடங்கி 5, 6, 9 ஆண்டுகள் வரை கூட ஒளிபரப்பப்படுகின்றன. அதன் வாயிலாக ஒரு சிறு கதாபாத்திரம் என்றாலும் கூட மக்கள் மத்தியில் எளிதில் அடையாளம் காணப்பட்டு விடுகிறோம். இதுதவிர அன்றைய காலங்களில் மேடை நாடகம் முடிந்த உடன் வீட்டிற்கு சென்றுவிடுவோம். ஆனால் இன்று முழு நேரமும் படப்பிடிப்பு தளத்தில்தான் இருக்கிறோம். இதுவே சந்தோஷமான ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. இருப்பினும் ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால், நமது குடும்பத்தினரோடு நேரம் செலவிட முடியவில்லையே என்பதுதான்.

மாது பாலாஜி, சீனு இவர்களுடன் சேர்ந்து நடித்த அனுபவங்கள் பற்றி சொல்ல முடியுமா? அவர்களுடன் இன்னும் தொடர்பில் இருக்கிறீர்களா?

நாங்கள் அனைவரும் இன்றைக்கும் ஒரே குடும்பம்தான். ஏனென்றால் அவர்களுடன் 15 ஆண்டுகள் நான் இந்தியா முழுவதும் பயணித்திருக்கிறேன். வெளிநாடுகளுக்கும் சென்றிருக்கிறேன். அதுமாதிரியான ஒரு நாடக குரூப் வேறு யாருக்கும் கிடைத்திருக்காது. பெண்களை அவ்வளவு பாதுகாப்பாக பார்த்துக் கொள்வார்கள். காரணம் கிரேசி மோகன் அவ்வளவு நல்ல மனிதர். அவரைப்போன்ற ஒருவரை இனி பார்க்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒருவரின் குரூப்பில் நான் அத்தனை ஆண்டுகள் பயணித்தது எனக்கு பெருமையான ஒன்று. அவர் இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டு பிரிந்து போயிருக்கக்கூடாது. இன்றைக்கும் மாது பாலாஜி குழுவினருடன் தொடர்பில் இருக்கிறேன். எங்கள் வீட்டு விசேஷ நிகழ்வுகளுக்கு அவர்கள் வருவதும், அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு நான் செல்வதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.


படப்பிடிப்பு தளத்தில் நடிகை சுமங்கலியின் அழகிய தருணங்கள்

கிரேசி மோகன் நாடகத்தில் நீங்கள் ஏற்று நடித்திருந்த ஜானகி கதாபாத்திரம் எவர்கிரீன் ஹிட் என்று சொல்லலாம்... அந்த ட்ராமாக்களை இன்றைக்கு பார்த்தாலும் சிரிப்ப அடக்க முடியாது, அப்படிப்பட்ட அந்த ஜானகியோட மறக்க முடியாத அனுபவம் ஒன்னு சொல்லுங்களேன்?

நான் தெலுங்கு மொழியை பூர்வீகமாக கொண்டவள். அப்படிப்பட்ட எனக்கு கிரேசி மோகன் அவர்களுடைய நாடக கம்பெனியில் நடிக்க அழைப்பு வந்தது மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு. அதிலும் சீரியசான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த என்னை நகைச்சுவை வேடத்தில் நடிக்க சொன்னபோது கொஞ்சம் தயக்கமாக இருந்தது. பிறகு உங்களால் முடியும், பயப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை, மிக எளிதாக நடித்து விடலாம் என்று அவர்கள் கொடுத்த உத்வேகம், என்னை சிறப்பாக நடிக்க வைத்தது. அதனால்தான் இன்றைக்கும் அந்த கதாபாத்திரம் பேசப்படுகிறது. நான் நடித்ததிலேயே என் மனதில் நன்கு பதிந்துபோன ஒரு பாத்திரம் என்றால் அது ஜானகிதான். அந்த அளவுக்கு நான் மிகவும் விரும்பி ஏற்று நடித்த ஒரு பாத்திரம். அதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் இப்போது நடிக்க முடியவில்லையே, மேடை நாடகங்களை தொடர முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு அதிகமாக இருக்கிறது. அப்படி நான் மேடை நாடகங்களை தொடர வேண்டும் என்று நினைத்தால் கிரேசி மோகனுடைய நாடக குரூப்பை தவிர வேறு எதிலும் நிச்சயம் நடிக்க மாட்டேன்.

இப்போது புது நடிகர் - நடிகைகள் எல்லாம் சீரியலில் அறிமுகமாகுறாங்க, ஒரு மூத்த நடிகையா அவர்களுடன் இணைந்து பயணிப்பது எப்படி இருக்கிறது?

இன்றைக்கு புதிதாக வரக்கூடிய இளம் தலைமுறை நடிகர் - நடிகைகள் ரொம்பவே ஷார்ப்பா இருக்காங்க. அறிவுபூர்வமா யோசிக்கிறாங்க. நல்லா நடிக்கிறாங்க. ஜாலியா, சந்தோஷமா இருக்கிறார்கள். அவங்க கூட நாமும் இணைந்து நடிக்கும்போது புது அனுபவங்கள் கிடைக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. குறை சொல்வதற்கெல்லாம் ஒன்றும் இல்லை.

கிரேசி மோகன் நாடகங்களில் நடிக்கும்போது அவரிடம் திட்டு வாங்கிய அனுபவங்கள் ஏதேனும் உண்டா?

நான் திட்டு வாங்கியது கிடையாது. மற்றவர்களையும் திட்டுவார் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், எப்படி நடிக்க வேண்டும், கணீரென்று எப்படி வசனம் பேச வேண்டும். நாம் பேசும் வசனம் எப்படி மக்களிடம் தெளிவாக சென்று சேர வேண்டும் என்பதை நிதானமாக சொல்லி கொடுப்பார்.

ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நகைச்சுவை, இப்போ ‘கயல்’ சீரியலில் வில்லி, இப்படி இருவேறு கதாபாத்திரங்களில் நடிக்கும்போது அதன் அனுபவம் எப்படி இருக்கிறது?

இதில் பெரிய சிரமம் இருப்பதாக நான் என்றும் நினைத்ததில்லை. நான் எப்போதும் இயக்குநர் சொல்வதை கேட்டு நடிப்பவள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இயக்குநரின் நடிகை. என் வெற்றிக்கு முதல் காரணம் என்னை இயக்கும் இயக்குநர்கள்தான். அதற்காக என் பங்கு ஏதும் இல்லாமல் இருக்காது. நிறைய யோசிப்பேன். என் கதாப்பாத்திரத்திற்கு எது தேவை, அதனை எப்படி கையாள வேண்டும். என்ன மாதிரி உடை அணிய வேண்டும் என்பதையெல்லாம் பார்த்து பார்த்து நடிப்புக்கு தயாராவேன். அதுதான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது.


எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், திரைக்கதை ஆசிரியர் கிரேசி மோகன் மற்றும் நடிகை சுமங்கலி

இப்போது நீங்கள் சீரியல் நடிகையாக மிகப் பிரபலமாக இருந்தாலும், முதலில் அறிமுகமானது சினிமாவில்தான். அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்? எந்த வயதில் நீங்கள் திரையுலகிற்குள் வந்தீர்கள்?

நான் என்னுடைய 11-வது வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்து விட்டேன். நான் அறிமுகமானது தெலுங்கு சினிமாவில்தான். அங்குதான் நிறைய படங்களில் நடித்தேன். தமிழில் ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘தியாகம்’, ‘சின்ன முள் பெரிய முள்‘ என மூன்று படங்களில் மட்டும்தான் நடித்தேன். அதற்கு பிறகு தெலுங்கு சினிமாக்களில் மட்டும் நடித்துக்கொண்டிருந்த எனக்கு ஒரு பிரேக் ஏற்பட்டது. அப்போது நானாக விருப்பப்பட்டு தேர்வு செய்ததுதான் நாடகங்கள். மேடை நாடகங்கள், டிராமாக்கள். அப்படி பயணத்தை தொடங்கி இப்போது சீரியல்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய இந்த பயணம் மிகவும் சந்தோஷத்தை கொடுக்கிறது.

சீரியலுக்கு புதிதாக வர விரும்புபவர்களுக்கு மூத்த நடிகையாக நீங்கள் சொல்லும் அறிவுரை என்னவாக இருக்கும்?

சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வந்துவிட வேண்டும். இயக்குநர் சொல்வதை சரியாக கேட்டு செய்ய வேண்டும். ஒரு காட்சியில் நடிக்கிறதுக்கு முன்னாடி அதனை சிறப்பாக செய்துவிட வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட வேண்டும். தயாரிப்பாளருக்கு நல்ல பெயரை வாங்கித்தர வேண்டும். நான் இதைத்தான் பின்பற்றுவேன். அதைத்தான் மற்றவர்களுக்கும் அறிவுரையாக கூறுவேன்.

நீங்கள் திரையுலகில் அறிமுகமான போது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து பயணித்த அனுபவம் பற்றி சொல்லுங்கள்? அதில் மறக்க முடியாத நிகழ்வு ஏதும் இருக்கிறதா?

‘தியாகம்’ படத்தில் நடித்தபோது சிவாஜி கணேசனை பார்த்தாலே வசனம் பேச வராது. மனப்பாடம் செய்து வைத்திருந்த மொத்தமும் நியாபகத்தில் இருந்தாலும் பதற்றமாகி பேச வராமல் திணறுவேன். இப்படத்தில் நாகேஷின் மகளாக நடித்திருந்த நான் ஒரு காட்சியில் சிவாஜியுடன் இணைந்து வசனம் பேசி நடிக்க வேண்டும். அந்த முக்கியமான காட்சியில் நடிக்கும்போது “மாமா மாமா.. நான் செத்தா கூட பரவாயில்லை மாமா, நீங்க உயிரோட இருக்கணும்… நீங்க உயிரோட இருந்தா இந்த ஊர்ல இருக்குற ஜனங்க எல்லாம் நல்லா இருப்பாங்க என்று பேச வேண்டிய நீண்ட வசனத்தை ஒவ்வொரு முறையும் சிவாஜி அருகில் வரும்போதெல்லாம், அவர் கண்ணை பார்த்தவுடன் பதற்றமாகி பேச முடியாமல் திணறுவேன். இப்படி டேக் மேல் டேக் போனதை பார்த்த சிவாஜி அந்த பெண்ணை தனியாக வைத்து எடுங்கள், என்னை தனியாக வைத்து எடுங்கள் என்று கூறி பிறகு அந்த காட்சியை ட்ராலி ஷார்ட் வைத்து படமாக்கினார்கள்.

நடிகை ஜெயசுதா உங்களோட உறவினர் என்று பல பேருக்கு தெரியாது. அவங்களுடனான உங்களது உறவு பற்றி சொல்ல முடியுமா?

நடிகை ஜெயசுதா என் அம்மாவின் சகோதரர்கள் ஒருவரின் மகள்தான். அண்ணி முறை வேண்டும். ஆனால், நாங்கள் அவரை அக்கா என்று அழைத்து பழகிவிட்டோம். என்னுடைய சிறுவயதில் அக்காவோடு சேர்ந்து, அவர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு தளங்களுக்கு சென்று வருவேன். அங்கு சென்று வரும்போது மிகவும் ஜாலியாகவும், சந்தோசமாகவும் இருக்கும். பள்ளிக்கூடங்களை கட்டடித்துவிட்டு வீட்டிற்கு தெரியாமல் அக்காவுடன் ஷூட்டிங்கிற்கு சென்று வருவோம். அப்போது சின்ன வயது என்பதால் அது சாதாரணமாக தெரிந்தது. இப்போதுதான் தெரிகிறது அது எவ்வளவு கஷ்டமான வேலை என்று. ‘எலந்தப்பழம்’ புகழ் விஜய நிர்மலாவும் என் அம்மா வழி உறவினர்தான்.


'கயல்' சீரியல் வடிவு பாத்திரத்தில் நடிகை சுமங்கலி

உங்களது குடும்பத்தை பற்றி சொல்லுங்களேன்?

என் குடும்பத்தை சேர்ந்த நிறைய பேர் சினிமா துறையில் இருந்தார்கள். அதனாலேயே சினிமா மீதான ஆர்வம் எனக்கு சிறுவயதில் இருந்தே இருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டு நடிக்க வந்தேன். நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டபோது என் அப்பாவும், அம்மாவும் உறுதுணையாக இருந்தார்கள். இன்று அவர்கள் எங்களோடு இல்லாவிட்டாலும் அவர்கள் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும். என் உடன் பிறந்தவர்கள் 5 சகோதரிகள். நாங்கள் அனைவரும் இன்றும் ஒற்றுமையாக இருப்போம். எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக கலந்துகொள்வோம். அவர்கள் அனைவருமே திருமணமாகி குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நான் மட்டும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஏனோ எனக்கு திருமணத்தில் பெரிதாக நாட்டம் இல்லாமல் போய்விட்டது. நடிப்பை மட்டுமே என் உயிராக நேசித்துவிட்டேன். இருப்பினும் என் மற்ற சகோதரிகள் அவர்களின் குடும்பத்தினர் என்னுடன் இருப்பது எனக்கு மிகப்பெரிய பலம் என்று நினைக்கிறேன்.

கயல் சீரியலின் வரவேற்பு வெளியில் செல்லும்போது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

நிச்சயமாக மிகப்பெரிய வரவேற்பு. என்னை யாரும் சுமங்கலியாக பார்ப்பது இல்லை. கயல் சீரியலின் வடிவாகத்தான் பார்க்கிறார்கள். நான் வெளியில் செல்லும் இடங்களில் எல்லாம் என்னை பார்ப்பவர்கள் “ஏம்மா அந்த கயல் பொண்ண ஏன் இவ்ளோ கொடுமை படுத்துறீங்க?” என்று கேட்பார்கள். நான் உடனே, ஐயோ நான் செய்யலைங்க, இயக்குநர் சொல்வதைத்தான் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு வருவேன். அந்த அளவுக்கு வடிவு பாத்திரம் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. இதுமாதிரி நான் நடித்த அத்தனை தொடர்களிலும் நான் பல விமர்சனங்களை மக்களிடம் நேரடியாக சந்தித்துள்ளேன். அது எல்லாமே என் நடிப்புத் திறமைக்கு கிடைத்த பாராட்டாகவே எடுத்துக்கொள்வேன் .

உங்களுடைய அடுத்தக்கட்ட நகர்வு எப்படியானதாக இருக்கும்?

எனக்கு ஆன்மீகத்தின் மீது அதீத ஈடுபாடு உண்டு. நிறைய கோயில்களுக்கு சென்று வர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். இன்னும் எவ்வளவு காலம் எனது இந்த கலைப்பணி தொடரும் என்று தெரியவில்லை. எப்படியும் ஒரு கட்டத்திற்கு பிறகு எனது நடிப்பு பணியில் பிரேக் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், நிச்சயம் நீண்ட தூர சுற்றுலா மற்றும் ஆன்மிகம் போன்ற பயணங்களில் கவனம் செலுத்தி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்வேன். இல்லையென்றால் என்னுடைய பழைய நாடகக் குழுவோடு இணைந்து பயணிக்கக்கூடிய சூழல் வந்தாலும் அதையும் ஏற்று பயணத்தை தொடர்வேன்.

Updated On 1 April 2024 11:52 PM IST
ராணி

ராணி

Next Story