இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பிற துறைகளுடன் ஒப்பிடுகையில் திரையுலகை பொருத்தவரை திரை பின்னணி இல்லாதவர்களைக் காட்டிலும் வாரிசுகளுக்கு வாய்ப்பு என்பது எளிதில் கிடைத்துவிடுகிறது. ஆனால் திறமை மட்டுமே அவர்களை தக்கவைக்கிறது. இதில் பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என எதுவும் விதி விலக்கல்ல. ஆனால் இந்தியாவில் வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்பு என்பதற்கு பெயர்போன பாலிவுட் திரையுலகம் ‘நெபோடிசம் வேர்ல்டு’ என்றே அழைக்கப்படுகிறது. குறிப்பாக, பெரிய நட்சத்திரங்களின் வாரிசுகளை திரையில் அறிமுகப்படுத்துவதிலும், அவர்களுக்கு பாய்காட்டாக இருப்பதிலும் சில இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அதீத முனைப்புக் காட்டுகின்றனர். தங்களது சொந்த முயற்சியால் முன்னேறி, இப்போது ஜொலிக்கும் நட்சத்திரங்களான பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத் போன்றோர் இதுகுறித்து பல இடங்களில் வெளிப்படையாகவே பேசியிருக்கின்றனர். குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டபோது இதுகுறித்து பரவலாக பேசப்பட்டது. இருப்பினும், நெபோடிசம் என்பது குறைந்த பாடில்லை என்றுதான் சொல்லவேண்டும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, சமீபத்தில் வெளியான ‘தி ஆர்ச்சீஸ்’ திரைப்படம்.


‘தி ஆர்ச்சீஸ்’ திரைப்பட போஸ்டர்

ஓடிடி தளங்களை ஆக்கிரமிக்கும் வாரிசுகள்

பாலிவுட் கிங் கான் ஷாருக்கானின் மகள் - சுஹானா கான், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் - குஷி கபூர், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் பேரன் - அகஸ்திய நந்தா போன்ற பிரபலங்களின் வாரிசுகளை முன்னணி கதாபாத்திரங்களாகக் கொண்டு இயக்கப்பட்டுள்ளது ‘தி ஆர்ச்சீஸ்’. பெரிய திரையை மட்டுமே ஆக்கிரமித்துக்கொண்டிருந்த வாரிசுகள் தற்போது ஓடிடி தளங்களையும் விட்டுவைப்பதில்லை. பெரிய திரையில் சாதிக்க முடியாத புதுமுக இயக்குநர்களும், நடிகர்களும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த ஓடிடி தளங்களை பயன்படுத்தி வந்தனர். பல நல்ல கதைக்களம் கொண்ட திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை பிரமோஷன் செய்யமுடியாமல் திணறிய தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் இங்கு உண்டு. இந்நிலையில் மிக பிரம்மாண்டமாக நடந்தேறியது ‘தி ஆர்ச்சீஸ்’ திரைப்படத்தின் பீரிமியர் மற்றும் பிரமோஷன் ஷோக்கள். முன்னணி நட்சத்திரங்கள் பலரும் அந்த ஷோவில் கலந்துகொண்டனர்.


சுஹானா கான் - அகஸ்திய நந்தா - குஷி கபூர்

பொதுவாக திரை பின்னணி இல்லாத ஒருவர், தனக்கான ஒரு இடத்தை திரையுலகில் பிடிக்கவோ, அதை தக்கவைக்கவோ நீண்டகாலம் செல்லும். ஆனால் அவர்கள் படம் தோல்வியடைந்து விட்டாலோ அல்லது பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டாலோ அத்துடன் அவர்களுக்கு குட் பை சொல்லிவிடும் இந்த திரையுலகம். அதுவே திரை வாரிசுகள் என்றால் அவர்கள் பலமுறை மன்னிக்கப்படலாம். மீண்டும் வாய்ப்புகள் கிடைக்கும் வழிகளும் நிறையவே உள்ளன. ‘தி ஆர்ச்சீஸ்’ திரைப்படத்தில் மூன்று பிரபலங்களின் வாரிசுகளுக்குமே இது அறிமுகப்படம். ஃப்ளிப்கார்ட், மேபலின் நியூயார்க், ஸ்கைபக்ஸ், விஸ்தாரா, ஸ்டார்பக்ஸ் மற்றும் போட் போன்ற பெரிய நிறுவனங்கள் இதனுடன் இணைந்திருக்கின்றன. ஆனால் அறிமுக இயக்குநர்களும், நடிகர்களும் தங்களது படத்தை முழுமையாக முடிக்கவே திணறும் நிலை இன்றும் பாலிவுட் முதல் கோலிவுட் வரை இருக்கத்தான் செய்கிறது.


தமிழ் திரையுலகில் முன்னிலை வகிக்கும் வாரிசு நடிகர் நடிகைகள்

பிற திரையுலகுகளில் நெபோடிசம்

தென்னிந்திய திரையுலகிலும் வாரிசுகளுக்கு வாய்ப்பு என்பது சற்று சுலபமாகத்தான் கிடைக்கிறது. இருப்பினும் திறமை இருந்தால் மட்டுமே அவர்களை நடிகர்களாக அங்கீகரிக்கிறார்கள் ரசிகர்கள். வாரிசுகளாக திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், 80களில் பிரபு, கார்த்திக், ராதிகா, சுகாசினி, கனகா போன்றோரும், பின்னர் விஜய், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி போன்றோரும், அவர்களைத் தொடர்ந்து அதர்வா முரளி, ஸ்ருதி ஹாசன், வர லட்சுமி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரிய தர்ஷன் போன்றோரும் தங்கள் தனித்திறமையால் தங்களுக்கான இடத்தை தக்கவைத்து கொண்டதுடன், ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்திருக்கின்றனர்.

அதே சமயம் பெற்றோர் திரையுலகில் ஜொலித்த போதிலும், அருண் விஜய், சிபி சத்யராஜ், விக்ரம் பிரபு, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா அர்ஜுன், சாந்தனு பாக்யராஜ், சரண்யா பாக்யராஜ், அக்ஷரா ஹாசன், துருவ் விக்ரம், அதிதி சங்கர், கீர்த்தி பாண்டியன், தான்யா ரவிச்சந்திரன், விஜயலட்சுமி அகத்தியன், ராதா மகள்கள் கார்த்திகா, துளசி போன்றோர் எளிதில் வாய்ப்புகளை பெற்றாலும் அதிகம் சோபிக்க தவறிவிட்டனர். நடிப்பை தவிர்த்து, ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யா, சௌந்தர்யா போன்றோர் இயக்குநர்களாகிவிட்டனர். இப்போது விஜய்யின் மகன் சஞ்சய் விஜய் இயக்குநராக அறிமுகமாகவுள்ள நிலையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடிகராக அறிமுகமாகிறார். நடிகர் தனுஷ் தனது அக்கா மகனை திரையுலகுக்கு அறிமுகப்படுத்துகிறார்.


டோலிவுட் மற்றும் மோலிவுட்டில் பிரபலமான வாரிசு நடிகர்கள்

தமிழ் சினிமாவில் இப்படி என்றால் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரையுலகுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. குறிப்பாக, தெலுங்கில் ராமா நாயுடுவின் மகன் வெங்கடேஷ், சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யா, கிருஷ்ணாவின் மகன் மகேஷ் பாபு, மலையாளத்தில் நடிகர் சுகுமாரனின் மகன் பிருத்விராஜ், மோகன்லாலின் மகன் பிரணவ், மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான், ஜெயராம் மகன் காளிதாஸ் போன்றோர் திரையிலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம்வருகின்றனர்.

நெபோடிசம் மாஃபியா

சரி, நாம் பாலிவுட்டுக்கு செல்வோம். பிற மொழிகளில் வாரிசுகளுக்கு வாய்ப்புகளும், முக்கியத்துவங்களும் அளிக்கப்பட்டாலும், பாலிவுட் ஏன் பாரபட்சம் காட்டுவதாகவும், நெபோட்டிசம் வேர்ல்டு எனவும் அழைக்கப்படுகிறது? பொதுவாகவே, திரைத்துறை மட்டுமல்ல; வேறு எந்த துறையாக இருந்தாலும், மருத்துவரின் பிள்ளைகள் மருத்துவராக வேண்டும், டீச்சர் பிள்ளை டீச்சர்தான் ஆவான் என்ற எண்ணமே ஆண்டாண்டு காலமாக மக்கள் மனதில் பதிந்துவிட்டது. அப்படி இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் வாரிசுகளை திரையுலகுக்கு அறிமுகப்படுத்துவதிலும், அவர்களை ப்ரமோட் செய்வதிலும் பாலிவுட்டுக்கு நிகர் பாலிவுட்தான். நெபோடிசம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் ஒரு நேர்காணலில் கூறுகையில், “பாலிவுட்டில் பல சவால்கள் இருக்கின்றன. அதில் நெபோடிசமும் ஒன்று. அதை மேற்கொண்டு எனக்கு சாதகமாக்க என்னால் முடியும். ஆனால் அது நச்சு போன்றது. உயிரை பறிக்கும் அளவிற்கு ஆபத்தானது என்பதை ஒரு நட்சத்திரமான பிறகு நான் புரிந்துகொண்டேன்” என்கிறார். மேலும், பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கங்கனா, அவரை நெபோட்டிசத்தின் தந்தை என முகத்திற்கு நேரே சொல்லி கலங்கடித்தது சமூக ஊடகங்களில் வைரலானது.


கங்கனா ரனாவத் - பிரியங்கா சோப்ரா - சுஷாந்த் சிங் ராஜ்புட்

எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் பாலிவுட்டை தாண்டி தற்போது ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா இதுகுறித்து பேசுகையில், “பாலிவுட்டும் நெபோடிசமும் ஒன்றுக்கு ஒன்று இணையாகத்தான் செல்லும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அங்கும் சில சிறந்த நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கான இடத்தை உருவாக்கிக்கொண்டார்கள். அங்கு எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். பார்ட்டிகளுக்கு ஒன்றாக போவார்கள். எனக்கு யாரையும் தெரியாததால் கடினமாக இருந்தது. ஆனால் நான் ரிஸ்க் எடுக்க தவறவில்லை. எனது கேரக்டர்கள் சிறப்பாக இருக்கும்படி தேர்ந்தெடுத்தேன். ஆரம்பத்தில் எனது சில திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடிக்காத போது, நான் நெபோ பேபி இல்லையே... எனக்கு ஆதரவுக்கரம் நீட்ட யாருண்டு என்று பயந்தேன். ஆனால் இதுகுறித்து பேச அப்போது இல்லாத தைரியம் இப்போது இருப்பதால் அதுகுறித்து வெளிப்படையாக பேசுகிறேன்” என்றார். மேலும் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணமும் நெபோடிசம்தான் என அப்போதைய மீடியாக்களில் பகிரங்கமான கருத்துகள் உலாவின.

அங்கும் சிலர் சோபிக்க தவறியிருந்தாலும் சல்மான் கான், ஹிருத்திக் ரோஷன், கஜோல், ரன்பீர் கபூர், கரினா கபூர், ஆலியா பட், சஞ்சய் தத், ஷாகித் கபூர், சையிஃப் அலி கான், சோனம் கபூர், அபிஷேக் பச்சன் போன்றோர் தங்களுக்கான இடத்தை பிடித்துவிட்டனர் என்றே சொல்லலாம். திரை பின்னணி இல்லாத தீபிகா படுகோனே, கத்ரினா கைஃப், ரன்வீர் சிங், சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கீர்த்தி ஷேனன் போன்றோரும் தற்போது முன்னணி நட்சத்திரங்களாக வலம்வருகின்றனர். இருப்பினும், பிரபல இயக்குநர்கள் மற்றும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் என்றாலே முக்கியத்துவமும் முதலிடமும் கிடைப்பது என்னவோ நெபோ கிட்ஸ்களுக்குத்தான்.


பாலிவுட்டின் ‘நெபோ கிட்ஸ்’ ஸ்டார்கள்

அதிகரிக்கும் நெபோ ஆதிக்கம்

அதிலும் குறிப்பாக, பல திறமை மிக்கவர்கள் வாய்ப்புகளை தேடி அலைந்துகொண்டிருக்கும் நேரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நெபோ கிட்ஸ்களின் வருகையும் முக்கியத்துவமும் பாலிவுட்டில் மிகவும் அதிகரித்துவிட்டதாக நெட்டிசன்கள் காட்டம் தெரிவிக்கின்றனர். வருண் தவான், ஆலியா பட், ஜான்வி கபூர், இஷான் கத்தார், அர்ஜூன் கபூர், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர், டைகர் ஷ்ராஃப், அனன்யா பாண்டே போன்றோருக்கு பிரபலங்களின் வாரிசுகள் என்பதாலேயே வாய்ப்புகள் கிடைத்திருப்பதை பாலிவுட் வட்டாரங்களே உறுதி செய்துள்ளன. இந்நிலையில்தான் மேலும் ரசிகர்களின் கோபத்தைத் தூண்டும் விதமாக தற்போது ‘தி ஆர்ச்சீஸ்’ திரைப்படம் வெளியாகி இருக்கிறது. சுஹானா கான், குஷி கபூர், அகஸ்திய நந்தா போன்ற நெபோ கிட்கள் அறிமுகமாகும் அதே படத்தில், பிறருடன் அவர்களை சமநிலைப்படுத்த முயற்சிக்கும் விதமாக, வேதாங் ரெய்னா, மிஹிர் அஹுஜா, டாட், யுவராஜ் மெண்டா போன்ற திரை பின்னணி இல்லாதவர்களையும் களத்தில் இறக்கியிருக்கிறது ஆர்ச்சீஸ் குழு. பாலிவுட் ரசிகர்களை சமாதானப்படுத்த இதைவிட சிறந்த வழி என்னவாக இருக்கக்கூடும்?

Updated On 26 Dec 2023 12:59 AM IST
ராணி

ராணி

Next Story