கடந்த சில வாரங்களாக தமிழ் திரையுலகில் அதிகம் பரவிவந்த நெகட்டிவ் செய்திகளால் வருத்தம் அடைந்த ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும்விதமாக இந்த வாரம் சில சூப்பரான செய்திகள் வெளியாகியிருக்கின்றன. நீண்ட நாள் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தளிக்க பொங்கலுக்கு ரிலீஸாகிறது ‘விடாமுயற்சி’ திரைப்படம். படத்தின் டீசரே ஹாலிவுட் ரேஞ்சில் இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறிவருகின்றனர் அஜித் ரசிகர்கள். இப்படி படம் குறித்த அறிவிப்புகள் ஒருபுறம் வெளியாகிவரும் நிலையில், பிரிந்த ஜோடிகள் இணைய வாய்ப்பு, இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ஜோடிகள் பிரிவு என எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று போய்க்கொண்டிருக்கிறது கோலிவுட். இந்த வாரம் கோலிவுட்டின் சில ட்ரெண்டிங் செய்திகளை பார்க்கலாம்.
சமாதானத்திற்கு வாய்ப்பு?
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அவருடைய மனைவி சாயிரா பானுவும் தங்களுடைய 29 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்வதாக அறிவித்ததிலிருந்தே அதுகுறித்து பல்வேறு வதந்திகள் பரவிவருகிறது. இருப்பினும், தனது கணவர் ஒரு அற்புதமான மனிதர் என்றும், அவரை யாரும் தவறு சொல்லவேண்டாம் என்றும் கூறியிருந்தார் சாயிரா. இவர்களுடைய விவாகரத்து வழக்கை எடுத்து நடத்தும் வழக்கறிஞர் வந்தனா ஷா, இதுகுறித்து பேசியிருக்கிறார்.
ஏ.ஆர். ரஹ்மான் - சாயிரா பிரிவு குறித்து வழக்கறிஞர் வந்தனா ஷா
அப்போது, பிள்ளைகள் மூவரும் வளர்ந்துவிட்டதால், அவர்கள் யாரிடம் இருக்கவேண்டும் என்பதை அவர்களே முடிவெடுப்பார்கள் என்றும், சாயிராவுக்கு பணம் முக்கியமில்லை என்பதால் அவர் ரஹ்மானிடமிருந்து பெரிய தொகையை பெறுவார் என்று பரவிவரும் செய்திகள் வெறும் வதந்திதான் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த விவாகரத்து இன்னும் முடிவாகவில்லை என்றும், இருவரும் சமாதானமாக பேசி சேர்ந்துவிட வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த செய்தி ரஹ்மான் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
அர்ஜுன் கபூருடன் காதலா?
விவாகரத்துக்கு பிறகு, சினிமாவிலிருந்து சற்று விலகி உடல்நலனில் கவனம் செலுத்திவந்த சமந்தா, இந்தியில் 'சிட்டாடல்' என்ற வெப் தொடரில் நடித்தார். அதில் அவருடைய நடிப்பு மிகவும் பாராட்டப்பட்ட நிலையில் பாலிவுட்டில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. இந்நிலையில் ரூட்யார்ட் கிப்ளிங் எழுதிய கவிதை ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அந்த போஸ்ட்டுக்கு பலரும் கமெண்ட் செய்திருந்த நிலையில், பாலிவுட் நடிகரான அர்ஜுன் கபூரும், அந்த கவிதை தங்கள் வீட்டு சுவரில் மாட்டப்பட்டிருக்கிறது என்றும், தனக்கு தேவைப்படும் நேரங்களில் இன்ஸ்பிரேஷன் தந்ததாகவும் கமெண்ட் செய்திருந்தார்.
சமந்தா - அர்ஜுன் கபூர் காதலிப்பதாக பரவிவரும் வதந்திகள்
அதற்கு சமந்தா ஒரு லைக் போடவும் அவ்வளவுதான். பெரும்பாலான சீக்ரெட் காதல் ஜோடிகள் சமூக ஊடகங்களில் இதுபோல் தங்கள் காதலை வெளிப்படுத்துவதால் அர்ஜுன் கபூரும் சமந்தாவும் காதலிப்பதாக புது வதந்தியை கிளப்பிவிட்டுள்ளனர். ஆனால் இதுகுறித்து இரு தரப்பினரும் வாய் திறக்கவில்லை. சமீபத்தில்தான் பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவுடன் அர்ஜுன் கபூருக்கு ப்ரேக் அப் ஆன நிலையில் இந்த இருவர் குறித்து இப்போது வதந்திகள் கிளப்பப்படுகின்றன.
விஜய் கட்சியில் ‘வாழை’ பட சிறுவன்
விஜய் கட்சி தொடங்கியதிலிருந்தே ஒவ்வொரு அறிவிப்பும் பரபரப்பை கிளப்பி வருகிறது. 2026ஆம் ஆண்டு தேர்தலை நோக்கி பயணிப்பதாக அறிவித்து கட்சிக்கொடி, கொள்கைகள் அறிவிப்பு, முதல் மாநாடு என பரபரப்பாக செயல்பட்டு வருகிறது தமிழக வெற்றிக் கழகம். இதற்கிடையே கட்சியின் ஆள் சேர்ப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்ற நிலையில், ஆன்லைன் ஆஃப்லைன் என லட்சக்கணக்கானோர் இக்கட்சியில் சேர்ந்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ‘வாழை’ பொன்வேல்
குறிப்பாக, சினிமா துறையைச் சேர்ந்த பலர் இக்கட்சியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படும் நேரத்தில் ‘வாழை’ படத்தில் சிவனைந்தான் என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பொன்வேல் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்திருக்கிறார். இயக்குநர் மாரி செல்வராஜின் உறவினர்தான் இச்சிறுவன் என்று சொல்லப்படும் நிலையில், தூத்துக்குடி மாவட்ட தவெக நிர்வாகிகள் முன்னிலையில் கட்சியில் சேர்ந்த பொன்வேலுக்கு கட்சிக்கொடி அணிவித்து வரவேற்றுள்ளனர்.
உறுதியான தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து
கடந்த 2022ஆம் ஆண்டு திருமண பந்தத்திலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்த தனுஷும் ஐஸ்வர்யாவும் தங்களது சொந்த வேலைகளில் பிஸியாக இருந்தனர். இருப்பினும் இவர்களுடைய இரு மகன்களான யாத்ராவும், லிங்காவும் பெற்றோரை விட்டுக்கொடுக்காமல் இருவருடைய தனிப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் குடும்ப விழாக்களிலும் மாறி மாறி பங்கேற்று வந்தனர். அதுபோக, அப்பா, அம்மா இருவருடனும் தனித்தனியாக சுற்றுலாக்கள் சென்றுவந்தனர். விவாகரத்துக்கு பதிவுசெய்த பிறகு தனுஷ் - ஐஸ்வர்யா இருவருமே மூன்று முறை நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இருவரும் சேர்ந்து வாழ திட்டமிட்டிருப்பதாக பேசப்பட்டது.
முறைப்படி விவாகரத்து பெற்ற தனுஷ் - ஐஸ்வர்யா
அதேசமயம் ஐஸ்வர்யாவின் போஸ்ட்டுக்கு தனுஷ் லைக் போட்டிருந்ததால் இருவரும் ரகசியமாக சேர்ந்துவிட்டார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால் கடந்தவாரம் நீதிமன்றத்தில் ஆஜரான இருவரும் பிரிந்து வாழவே விரும்புவதாக கூறி முறைப்படி விவாகரத்து பெற்றிருக்கின்றனர். மேலும் முன்பு இருந்ததைப் போலவே பிள்ளைகள் இருவரும் அம்மா, அப்பா இருவருடனும் மாறி மாறி இருக்கலாம் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. தனுஷ் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வரும் நிலையில், அவற்றில் பல உண்மையும் இருப்பதால்தான் தனுஷை பிரிய ஐஸ்வர்யா முடிவெடுத்ததாக சொல்லப்படுகிறது.
சித்து - அதிதி மீண்டும் திருமணம்!
நடிகர் சித்தார்த்தும், அதிதி ராவும் ‘மகா சமுத்திரம்’ படத்தில் நடித்தபோது, இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டது. கொரோனா ஊரடங்கு காலத்தில் இவர்களுடைய காதல் வலுத்த நிலையில், அதன்பிறகு 2 ஆண்டுகள் பொதுவெளிகளில் ஒன்றாகவே சுற்றிவந்தனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிதி வீட்டு முறைப்படி கோயிலில் வைத்து, இருவீட்டார் மற்றும் நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது இவர்களுடைய திருமணம். இருவரும் படங்களில் பிஸியான நிலையில், திடீரென இவர்களுக்கு மீண்டும் திருமணம் நடைபெற்றிருப்பதாக புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தன.
சித்தார்த் - அதிதி ராவின் ட்ரீம் வெட்டிங்
ஏன் மீண்டும் திருமணம்? என்று ரசிகர்கள் கேட்ட நிலையில், புதுமண தம்பதிகள் தரப்பிலிருந்து அதற்கு விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. சித்தார்த் - அதிதி இருவருக்குமே ட்ரீம் வெட்டிங் என்பது ராஜஸ்தானில் வைத்து நடத்தவேண்டும் என்பதுதானாம். அதன்படி, பிஷன்கார்க் மாநிலத்திலிருக்கும் அலியா கோட்டையில் வைத்து இருவரும் மீண்டும் திருமணம் செய்துகொண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
ஒருவழியாக வெளியான ‘விடாமுயற்சி’ டீசர்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘துணிவு’ படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் எந்த படமும் வெளியாகாததால் அவருடைய ரசிகர்கள் அப்செட்டில் இருக்கின்றனர். இருப்பினும் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ உட்பட அஜித்தின் கைவசம் நான்கிற்கும் மேற்பட்ட படங்கள் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாகவே ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகிவந்த இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருந்ததால் அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’ அதற்கு முன்பே வெளியாகும் என்று சொல்லப்பட்டது.
பொங்கலுக்கு வெளியாகிறது அஜித்தின் ‘விடாமுயற்சி’
இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு ‘குட் பேட் அக்லி’ வெளியாகும் என்று படக்குழு தரப்பில் சொல்லப்பட்ட நிலையில் ‘விடாமுயற்சி’ அந்த தேதியில் வெளியாகவிருக்கிறது. ‘உன்னை நம்பு’ என்று மாஸாக வெளியாகியிருக்கும் ‘விடாமுயற்சி’ டீசரில் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. படத்தின் டீசரே ஹாலிவுட் ஸ்டைலில் மிகவும் பிரம்மாண்டமாக இருப்பதாக குஷியில் இருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.
Relentless effort meets unstoppable action! The VIDAAMUYARCHI teaser is OUT NOW. ▶️ Perseverance paves the way to triumph.
— Lyca Productions (@LycaProductions) November 28, 2024
https://t.co/ptOYpJ2LQW#VidaaMuyarchi In Cinemas worldwide from PONGAL 2025!#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran… pic.twitter.com/1u5cWYALb9