
‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் மிமிக்கிரி கலைஞராக சின்னத்திரைக்குள் நுழைந்து தன் விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் உயர்ந்து இன்று வெள்ளித்திரை நடிகர்களும் கொண்டாடும் நட்சத்திரமாக மாறியிருப்பவர்தான் நடிகர் ரோபோ ஷங்கர். இவர் தனது வாழ்க்கையில் பெறாத பாராட்டுகளும் இல்லை… சந்திக்காத விமர்சனங்களும் இல்லை. அந்த அளவுக்கு பாராட்டுகளுக்கும், விமர்சனங்களுக்கும் புகழ்பெற்ற ரோபோ ஷங்கர், சமீபத்தில் தனது ஒரே மகளுக்கு திருவிழா போல் திருமணத்தினை நடத்தி வைத்து பலரையும் பொறாமைப்பட வைத்துள்ளார். அதிலும் குறிப்பாக இன்றைய சோசியல் மீடியாக்களில் கடந்த சில நாட்களாகவே பேசுபொருளாகவும் மாறியிருப்பது இந்த திருமணம்தான். அப்படிப்பட்ட ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவின் திருமணம் குறித்தும், அதில் அரங்கேறிய பல்வேறு நிகழ்வுகள் குறித்தும், திருமணம் தொடர்பாக வந்த விமர்சனங்கள் பற்றியும் இந்த கட்டுரையில் காணலாம்.
'பிகில்' பாண்டியம்மாவின் காதல்
கடந்த 2019-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த ‘பிகில்’ படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்தான் ரோபோ ஷங்கரின் ஒரே மகளான இந்திரஜா. ‘பிகில்’ படத்தில் இவரின் நடிப்பை பாராட்டாதவர்கள் யாருமில்லை. இப்படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தை இயக்குநர் அட்லீ வடிவமைத்தபோது, அவர் கண்முன் வந்து நின்றது இந்திரஜாதானாம். பின்னர், படத்தில் அவரை நடிக்க வைக்க அணுகிய போது இந்திரஜா சொன்ன ஒரே வார்த்தை இதுபோன்ற உருவ கேலிகளால் நான் நிறையவே பாதிக்கப்பட்டிருக்கிறேன். நிச்சயம் நான் நடிக்கிறேன். அதுவும் விஜய் அவர்களுடன் அப்படியான ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு பெருமைதான் என்று கூறி சந்தோஷமாக வந்து நடித்தாராம். அப்படி வந்து நடித்த இந்திரஜா, படத்தில் சிறிதுநேரம் வந்தாலும் தன் நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தது மட்டுமின்றி, படத்தில் தான் வரும் காட்சிகள் அனைத்தையும் தனக்கான களமாக மாற்றி தனி முத்திரையையும் பதித்தார். இப்படி முதல் படத்திலேயே ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்த இந்திரஜா அடுத்ததாக கார்த்தியின் விருமன் படத்தில் சூரிக்கு ஜோடியாக, கதாநாயகி அதிதி ஷங்கருக்கு தோழியாக கொலவிக்கள் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘அர்ஜுன்’ தொகுத்து வழங்கி ஒளிபரப்பான ‘சர்வைவர்’ நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார்.

'பிகில்' படத்தில் பாண்டியம்மாவாக வரும் இந்திரஜா ஷங்கர்
இப்படி தொடர்ந்து திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் என கலந்துகொண்டு கலக்கி வந்த இந்திரஜா சோசியல் மீடியாக்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அப்படிப்பட்டவர் திடீரென மாமா என்கிற கேப்ஷன் போட்டு கார்த்திக் என்பவருடன் சேர்ந்து அடிக்கடி ரீல்ஸ்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவிட்டு வர, இதனை பார்த்த பலரும், 'இருவரும் காதலிக்கிறீர்களா?' என கேள்விகள் எழுப்ப ஆரம்பித்தனர். பிறகு அதனை உறுதிப்படுத்தும் வகையில் திருமணம் குறித்த அறிவிப்பினை 2021-லேயே குடும்பத்தினர் வெளியிட, இவ்வளவு சிறிய வயதிலேயே திருமணம் எதற்கு என்ற கேள்விகளையும் முன்வைக்க ஆரம்பித்தனர். அந்த நேரத்தில்தான், ரோபோ ஷங்கருக்கும் உடல்நிலை திடீரென மோசமடைய, இனி அவ்வளவுதான் அவர் பிழைக்க வாய்ப்பே இல்லை என்று செய்திகள் வெளியாகின. மேலும் ரோபோ ஷங்கர் உடல்நிலை மோசமடைந்ததால்தான் மகளுக்கு சீக்கிரமே திருமணம் செய்துவைக்க முடிவு செய்து இருக்கிறார்கள் என்றும் நன்கு பழகியவர்களே பல்வேறு விதமாக பேச ஆரம்பிக்க, எதனையும் பொருட்படுத்தாத ஷங்கரின் குடும்பத்தார், நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபால் உதவியுடன் ஆயுர்வேத சிகிச்சை அளித்து அவரை மீட்டு கொண்டு வந்துள்ளனர். இதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறி பழைய நிலைக்கு திரும்பிய ரோபோ தனது மகளின் திருமணத்தை விமரிசையாக செய்துமுடிக்க ஆசைப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்தனர். அந்த நிகழ்ச்சியில் ரோபோ ஷங்கருக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பிரம்மாண்டமாக நடந்தேறிய திருமணம்

திருமணத்திற்கு முன்பாக இந்திரஜா ஷங்கர் தன் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்
நிச்சயதார்த்தம் முடிந்ததும் திருமணத்திற்கான அடுத்த கட்ட வேலைகளுக்கு தயாரான இந்திரஜா `Ungal Pandiyamma' என்கிற பெயரில் புதியதொரு யூடியூப் சேனலையும் தொடங்கி அதில் மார்ச் மாதம் 24 ஆம் தேதி தனது திருமணம் நடைபெற இருப்பதாக கூறி தேதியை அறிவித்தார். இதனை தொடர்ந்து குடும்பத்தினரோடும், தனது வருங்கால கணவரோடும் சேர்ந்து பத்திரிக்கை வைக்க செல்லும் நிகழ்வுகளையும் வீடியோவாக எடுத்து அவர்களுடைய சேனலில் பதிவேற்றம் செய்து அவரது ரசிகர்கள் மத்தியில் திருமணம் தொடர்பான ஆர்வத்தினை அதிகப்படுத்தினார். இப்படி ஒவ்வொரு நிகழ்வாக சென்றுகொண்டிருந்த சமயத்தில்தான் திருமணத்திற்கு ஒருசில நாட்களுக்கு முன்பு தொடங்கும் நலங்கு வைக்கும் நிகழ்வில் ஆரம்பித்து திருமணம் முடியும்வரை, ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஒளிபரப்புவதற்கான உரிமையை தனியார் யூடியூப் சேனல் ஒன்று பெற்றது. அதன் அடிப்படையில் இந்திரஜாவின் திருமணத்தில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் ஒன்றுவிடாமல் அந்த நிறுவனம் ஒளிபரப்பியது. இதனால் ஒட்டுமொத்த சோசியல் மீடியாக்களிலும் இந்திரஜா - கார்த்திக் தம்பதிகளின் திருமணம் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி டிரெண்டிங்கிலும் நம்பர் ஒன் இடத்தில் இருந்தது. இதுதவிர திருமண நிகழ்வுகளை பார்த்த நெட்டிசன்களும், பொதுமக்களும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்க, மற்றொரு புறம் சிலர் மிகவும் நெகட்டிவான விமர்சனங்களையும் அள்ளித் தெளித்தனர். அதிலும் இந்திரஜாவின் ஒவ்வொரு வீடியோவையும் பார்த்து பாசிட்டிவாக வந்த கமெண்டுகளுக்கு சரிசமமாக சிலர், ரொம்ப ஓவராத்தான் போறீங்க., உங்க ஆட்டம் தாங்க முடியல., ஓரளவுக்கு பண்ணுங்க அப்புறோம் ஏதாவது கேட்டுடப் போறேன், அம்பானி வீட்டு கல்யாணமே பரவாயில்லை என்று நெகட்டிவான கருத்துகளையும் வெளியிட்டு தங்களது பொறுத்துக்கொள்ள முடியாத மன குமுறல்களை வெளிப்படுத்தினர். இதுமட்டுமின்றி இன்னும் ஒருபடி மேலே சென்ற சிலர் இப்ப குடும்பமா சேர்ந்து வீடியோ போட்டு ஆடுறிங்க, ஒருவருடம் கழித்து தனித்தனியாக வீடியோ போடுவீங்க, மாமாவை திருமணம் செய்துகொண்டால் பிறக்கப்போகும் குழந்தை ஏதாவது பிரச்சினையோடுதான் பிறக்கும் என்றெல்லாம் தங்களது வன்மத்தை மிகவும் கேவலமாக வெளிப்படுத்தினர்.

திருமணம் மற்றும் ஹல்தி விழாவில் கணவர் மற்றும் பெற்றோர்களுடனான இந்திரஜாவின் புகைப்படங்கள்
ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத ரோபோ ஷங்கர் குடும்பம், ஒருசில நெகடிவ் கருத்துக்களுக்கு மட்டும் குடும்பமாக சேர்ந்து நாங்க சம்பாதித்த பணம், நாங்க செலவு பண்றோம் உங்களுக்கு எங்க எரியுது என்ற நெத்தியடி பதிலை மட்டும் கொடுத்துவிட்டு அவர்களின் வேலையை பார்த்தனர். இப்படி பல விமர்சனங்களை கடந்து வந்த இந்திரஜாவின் திருமணம் கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி அன்று மதுரையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத நடிகர்களும், அரசியல் பிரமுகர்களும் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு உலக நாயகன் கமல்ஹாசன் தொடங்கி, நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, ராமராஜன், பார்த்திபன், செந்தில், பாக்கியராஜ், நடிகைகள் ரச்சிதா, ரேகா, அதிதி ஷங்கர் உள்பட ஏராளமான பிரபலங்கள் படையெடுத்து வந்து கலந்துகொண்டனர். இதுதவிர சின்னத்திரை நடிகர், நடிகைகளும் இந்திரஜாவின் திருமண வரவேற்பில் கலந்துகொண்டனர். இதனால் இந்திரஜாவின் இந்த திருமண வரவேற்பு ஒரு திருவிழா போன்று காட்சியளித்ததாக அங்கு வந்திருந்த பலரும் கூறினர். இதுகுறித்து தகவல் தெரிவித்த ரோபோ ஷங்கரும் நாங்கள் திருமணத்திற்கு அழைத்திருந்தது 3 ஆயிரம் பேர்தான். ஆனால், இங்கு வந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டும். அந்த அளவுக்கு கூட்டம் அதிகமானதால் வரவேற்பு மேடையே இரண்டு முறை உடைந்து சரி செய்யப்பட்டுள்ளது. நான் சினிமாவில் பணம் சம்பாதித்ததை விட இவ்வளவு நல்ல உள்ளங்களை சம்பாதித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.
ரோபோ சங்கரை விடாது துரத்தும் சர்ச்சை
இந்திரஜா - கார்த்திக் திருமணத்தில் மறக்க முடியாத எத்தனையோ நிகழ்வுகள் இருந்தாலும், இந்த திருமண வைபோகம் குறித்து பரப்பப்படும் நெகட்டிவ் கமெண்டுகள் ஏராளம். அதில் மிக முக்கியமான ஒன்று 16 வயது வித்தியாசம் உள்ள மாப்பிள்ளைக்கு இந்திரஜாவை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். மேலும் இந்திரஜாவின் திருமண நலங்கு வைக்கும் நிகழ்விற்கு மட்டும் 2 கோடி செலவானதாகவும், சமையலுக்கு மட்டும் லட்சக்கணக்கிலும், வரவேற்பு நிகழ்வுகளுக்கு பல கோடிகளிலும் செலவானதாகவும் தெரிவித்துள்ளனர். மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகள் திருமணம் அண்மையில் சத்தமே இல்லாமல் மிகவும் எளிமையாக நடந்து முடிந்துள்ளது. தொடக்கத்தில் இருந்தே பெரிய திரையில் பயணித்து நன்கு சம்பாதித்த ஒருவரின் வீட்டு விசேஷம் இவ்வளவு எளிமையாக நடைபெற்றிருக்கும் பொழுது, குறைந்த அளவிலான படங்கள் மட்டுமே நடித்து, டிவி நிகழ்ச்சிகளில் வரும் வருமானத்தை மட்டுமே கொண்டு எப்படி ஒருவரால் இவ்வளவு பிரம்மாண்டமாக திருமணம் செய்ய முடிந்தது? அதிலும் கடந்த சில ஆண்டுகளாக பெரிதாக வேலைக்கும் செல்லாமல் ஓய்வில் இருக்கும்பொழுது இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்றெல்லாம் சகட்டுமேனிக்கு நெட்டிசன்களும், ரோபோ ஷங்கர் வீட்டு திருமணத்தை பார்த்து வயிற்றெரிச்சல் பட்டவர்களும் கேட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த விமர்சனங்களையும் கடந்து திருமணத்தை மகள் ஆசைப்பட்டது போல் நடத்தி முடித்துள்ளார் ரோபோ ஷங்கர்.

குடும்ப சகிதமாக அழகிய தோற்றத்தில் இந்திரஜா
இந்த மாதிரியான நெகட்டிவ் விமர்சனங்கள் ரோபோ ஷங்கரை நோக்கி வருவது இது ஒன்றும் முதல் முறையல்ல. இதற்கு முன்பாக வீட்டில் ஆசை ஆசையாக வளர்த்த கிளி விஷயம் தொடங்கி, அவர் உடல்நிலை சரியில்லாமல் பல பிரச்சினைகளை சந்தித்த போதும்கூட, நன்கு பழகியவர்களே தவறாக விமர்சித்துள்ளனர். அதையெல்லாம் ரோபோ கடந்து வந்திருந்தாலும், அந்த சமயம், "என்னுடைய காமெடி நிகழ்ச்சிகள் மூலமாக எத்தனையோ பேரை நான் சிரிக்க வைத்திருக்கிறேன்", ஆனால் "இன்று என்னை பலர் அழவைத்துவிட்டனர்" என்று உடல்நிலை தேறி வந்த பிறகு நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார். எல்லா மனிதர்களின் வாழ்க்கையிலும் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு பக்கங்கள் இருக்கும். அப்படி இரண்டு பக்கங்கள் இல்லாதவர்கள் யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. அதை ரோபோ ஷங்கர் நன்கு உணர்ந்திருந்ததால்தான் அனைத்து விமர்சனங்களையும் கடந்து மகள் ஆசைப்பட்ட வாழ்க்கையை அவருக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
யார் இந்த கார்த்திக்
இந்திரஜாவை திருமணம் செய்துகொண்ட கார்த்திக் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவர், அம்மாவின் அரவணைப்பில் மட்டுமே வளர்ந்துள்ளார். ரோபோ ஷங்கரும் மதுரை என்பதால், கார்த்திக் - ரோபோ குடும்பத்திற்கு 2003-ஆம் ஆண்டிலேயே அறிமுகம் ஏற்பட்டு, ரோபோ - பிரியங்கா அரவணைப்பிலேயே சென்னையில் பயணித்துள்ளார். இதுதவிர மதுரையில் ‘தொடர்வோம்’ என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் கார்த்திக்கிற்கு பக்க பலமாக இருந்து பல உதவிகளையும் ரோபோ குடும்பத்தினர் செய்து வந்துள்ளனர். அப்படி இதுவரை 163 குழந்தைகளை உருவாக்கியுள்ள கார்த்திக்கிற்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று பெண் தேடும்போது, அவர் 23 குழந்தைகளுக்கு அப்பாவாக இருப்பதால் யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லையாம். இந்த சமயத்தில்தான் இந்திரஜாவிற்கு கார்த்திக்கை மிகவும் பிடித்துபோக அதனை கார்த்திக்கிடம் கூறியுள்ளார். இந்த பிள்ளை ஏதோ விளையாட்டாக சொல்கிறது என்று முதலில் நினைத்த கார்த்திக், பிறகு அது உண்மையைத்தான் சொல்கிறது என்று உணர்ந்தாராம். இருந்தபோதிலும், இந்திரஜாவிற்கு சரி சொல்வதற்கு முன்பாக, தான் வளர்த்து வரும் பிள்ளைகளை இந்திரஜா நன்கு பார்த்துக்கொள்வாரா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, அந்த குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச்சென்று அவர்களுடன் இந்திரஜாவை பழகவிட்டு சோதித்து பார்த்தாராம் கார்த்திக்.

வெவ்வேறு தோற்றங்களில் இந்திரஜாவின் கணவர் கார்த்திக்
இந்திரஜாவும் அந்த பிள்ளைகளிடம் பழகும் விதத்தை பார்த்துவிட்டு இவள்தான் நமக்கு சரியான பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்து அதன் பின்னர்தான் இருவரும் வீட்டில் பெரியவர்களிடம் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இப்படித்தான் இவர்களின் திருமணம் முடிவாகி இன்று தம்பதிகளாக மாறியுள்ளனர். கார்த்திக்கும் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் சினிமா துறையில் பயணித்து வருகிறார். ஏற்கனவே ஒரு படத்தினையும் இயக்கி அதன் ரிலீசுக்காக காத்திருப்பதாக தெரிகிறது. இதனால் இந்திரஜாவின் சினிமா பயணமும் தொடரும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இந்த ஜோடிகள் எப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து நீடுடி வாழ மனதார வாழ்த்துவோம்.
