இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மற்ற திரையுலகுகளுடன் ஒப்பிடுகையில் பிற மொழி நடிகர்களை ஏற்றுக்கொள்வதற்கும் நடிப்புக்கு அங்கீகாரம் கொடுப்பதற்கும் தமிழ் திரையுலகம் என்றுமே தவறியதில்லை. அப்படி தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நஸ்ரியா நசீம். என்னதான் மலையாள நடிகையாக இருந்தாலும், தமிழில் குறைந்த படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும்கூட இவருடைய க்யூட்னெஸ்க்கு தமிழ்நாட்டில் என்றுமே ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தமிழில் சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு, மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு பிரேக் எடுத்துவிட்டு மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துவந்த நஸ்ரியா, எப்போது தமிழில் கம்-பேக் கொடுப்பார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களின் ஆசையை பூர்த்திசெய்யும் விதமாக ‘சூர்யா 43’ படத்தில் இணைந்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நஸ்ரியாவின் திரைப்பயணம் குறித்த ஓர் பார்வை...


குழந்தை நட்சத்திரம் மற்றும் அறிமுகப்படங்களில் நஸ்ரியா

மலையாள குழந்தை நட்சத்திரம்

திரைப்படங்களில் அறிமுகமாவதற்கு முன்பே, டெலிவிஷன் ஷோக்கள்மூலம் நன்கு பரிச்சயப்பட்ட குழந்தை நட்சத்திரம் நஸ்ரியா. தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த நஸ்ரியா, 2006ஆம் ஆண்டு ‘பலுங்கு’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கேரளாவை பூர்விகமாகக் கொண்டிருந்தாலும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளாவிற்கு குடிபுகுந்த இவரது குடும்பம் இங்கேயே செட்டில் ஆகிவிட்டது. 2013ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் கல்லூரியில் சேர்ந்த நஸ்ரியா படங்களில் பிஸியாகி விட்டதால் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். அதன்பிறகு அதே ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘மேட் டாட்’ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து அதே ஆண்டு தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளியான ‘நேரம்’ திரைப்படம்மூலம் கோலிவுட்டிலும் அறிமுகமானார். முதல் படமே ஹிட்டானதால் அடுத்தடுத்த வாய்ப்புகள் நஸ்ரியாவைத் தேடிவந்தன. குறிப்பாக, தமிழில் ‘ராஜா ராணி’ திரைப்படத்தில் தனது க்யூட் எக்ஸ்பிரஷன்களுக்காவே தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். தொடர்ந்து, தமிழில் ‘நையாண்டி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘பெங்களூரூ டேஸ்’, ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ போன்ற படங்களில் நடித்தார். அதே நேரத்தில் மலையாளத்திலும் நிவின் பாலியுடன் இணைந்து நடித்த ‘ஓம் ஷாந்தி ஓசன்னா’ படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.


கணவர் ஃபஹத் ஃபாசிலுடன்

ஃபஹத் ஃபாசிலுடன் திருமணம்

தமிழ், மலையாளம் என இரண்டு வருடங்கள் பிஸியாக ஓடிக்கொண்டிருந்த நஸ்ரியா, 2014ஆம் ஆண்டு தனது 19 வயதிலேயே மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தன்னைவிட 12 வயது பெரியவரான ஃபஹத்தை திருமணம் செய்துகொண்டதற்காக பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார். இவ்வளவு சிறிய வயதில் திருமணம் செய்தது ஏன்? என்ற கேள்வியை பலரும் அவரிடம் முன்வைக்கவே, ‘பெங்களூரு டேஸ்’ படத்தில் நடித்தபோதே இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் நஸ்ரியாவே ஓபனாக ப்ரபோஸ் செய்ததால் ஃபகத்தும் அதை ஏற்றுக்கொண்டதாகவும் கூறியிருந்தார். மேலும், தனது வீட்டில் 25 வயதிற்கு பிறகுதான் திருமணம் என்று கூறினார்களாம். ஆனால் ஃபஹத்தை இழக்க விரும்பாததால் உடனே திருமணம் செய்துகொண்டதாகவும், இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் நஸ்ரியா நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதன்பிறகு அவ்வபோது வெளிநாட்டு பிரயாணங்கள் மற்றும் போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தார்.


கம்- பேக் திரைப்படங்களில் நஸ்ரியா

கைகொடுத்த கம்-பேக்

திருமணத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கழித்து 2018ஆம் ஆண்டு ‘கூடே’ என்ற மலையாளப் படத்தில் பிருத்விராஜுடன் சேர்ந்து நடித்து ரீ-எண்ட்ரி கொடுத்தார். அதே ஆண்டு கணவர் ஃபஹத்துடன் சேர்ந்து நடித்த ‘டிரான்ஸ்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்து தெலுங்கிலும் நானிக்கு ஜோடியாக ‘அடடே சுந்தரா’ என்ற படத்தில் நடித்தார். அந்தப் படமும் ஹிட்டானது. இந்நிலையில் தற்போது தமிழில் மீண்டும் ரீ- எண்ட்ரி கொடுக்க இருக்கிறார். நடிகர் சூர்யாவின் 43-வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் நஸ்ரியா.


சூர்யா 43 - இல் இணைந்த நஸ்ரியா

‘சூர்யா43’ -இல் நஸ்ரியா

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் கம்-பேக் கொடுக்க இருக்கிறார் நஸ்ரியா. கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘சூர்யா 43’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது. ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் மாஸ் வெற்றிக்குப் பிறகு மீண்டும் அதே கூட்டணி ஒன்று சேர்ந்திருக்கிறது. சுதா கொங்கரா இயக்கும் இந்தப் படத்திற்கு ‘புறநானுறு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மீண்டும் சூர்யா - சுதா கொங்கரா இணையும் இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே இடம்பெற்றிருக்கிறது. சூர்யா, நஸ்ரியா, துல்கர் சல்மான் மற்றும் விஜய் வர்மா போன்ற பிரபலங்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ஜி.வி பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இது அவருக்கு 100-வது படமாகும். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. பட அறிவிப்பு வீடியோவில் ‘புறநானூறு’ என்ற டைட்டிலுக்கு மேல் இரண்டு வார்த்தைகள் மறைக்கப்பட்டுள்ளதால் படத்தின் பெயர் முழுமையாகத் தெரியவில்லை. பல மொழிகளிலும் ரசிகர் பட்டாளத்தை சேர்ந்து வைத்திருக்கும் நஸ்ரியாவுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமையுமா என்பது விரைவில் திரையில் தெரியும்.

Updated On 7 Nov 2023 12:32 AM IST
ராணி

ராணி

Next Story