லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா நடித்திருக்கும் 'அன்னபூரணி' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னனி நடிகையாக இருந்து வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. பல்வேறு கதாப்பாத்திரத்தில், வித்தியாசமான கதைக்களங்களில், பன்முகத்தோடு நடித்து வருகிறார். இவரது அசத்தலான நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'ஜவான்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 'மண்ணாங்கட்டி', 'டெஸ்ட்' உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
நயன்தாராவின் 75-ஆவது திரைப்படமாக அமைந்த இத்திரைப்படத்திற்கு 'அன்னபூரணி' என்று பெயரிடப்பட்டு, கடந்த விஜயதசமி அன்று டீசர் வெளியானது. இத்திரைப்படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். மேலும் ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, குமாரி சச்சு, கார்த்திக் குமார் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட நடிகர்களும் இத்திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிகளை முதன்மை படுத்தி எடுக்கப்படும் ஒருசில திரைப்படங்களுள் இதுவும் ஒரு சிறந்த திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்னபூரணி டீசர்:
'அன்னபூரணி' திரைப்படத்திற்கான டீசர் வெளியான நிலையில் திரைப்படம் முழுவதுமாக காமெடி பாணியில் எடுக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்கத்தின் காட்சியுடன் தொடங்கப்பட்ட இந்த டீசரில் நயன்தாரா புடவையில் ஒரு எளிமையான பிராமணக் குடும்பத்தைச் சார்ந்த பெண்ணாக காட்சி படுத்தப்பட்டுள்ளார். அதோடு தெய்வ பக்தி, பூஜைகள் ஒரு புறம் வீட்டில் இருக்க மறுபுறம் வணீகம் மற்றும் தொழில் சார்ந்த புத்தகத்தை நயன்தாரா படிப்பது போன்ற காட்சி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை உற்றுநோக்கி கவனித்து பார்த்தால் உண்மையில் அவர் 'சிக்கன் டிஷ் செய்வது எப்படி?' குறித்த புத்தகத்தை வணிகம் மற்றும் தொழில் சார்ந்த புத்தகத்திற்குள் மறைத்து வைத்து படித்துக்கொண்டு இருப்பது தெரிகிறது. எனவே இது வித்தியாசமான கதைகளத்தோடு அமைந்து ரசிகளிடையே அதீத எதிர்பார்ப்பையும், கலவையான சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது.